மும்முரமாக வேலையில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ஃபோன் சிணுங்கும். அல்லது முக்கியமான ஆபீஸ் மீட்டிங்கில் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அலைபேசி அலைபாய்ந்து துடிக்கும். யாரோ அவசரமாகத் தொலை பேச அழைக்கிறார்கள். டென்ஷனோடு ஃபோனை எடுத்து ஹலோ சொன்னால் ஒரு பெண்குரல் வணக்கம் சொல்லும். ‘சார், ஏபிசிடி பேங்கிலிருந்து பேசறோம். பிளாட்டினம் கிரடிட் கார்ட் எந்த வித சார்ஜும் இல்லாமல் கொடுக்கறோம். நீங்களும் வாங்கிக்குங்களேன்’.
எனக்குத் தெரிந்து பலபேர் இப்படியான ஒரு செல்போன் அழைப்பு எதிர்பார்க்காத சூழ்நிலையில் வந்தபோது எதிர்கொண்ட விதத்தை இங்கே எழுத முடியாது., கார் ஜன்னல் வழியாகக் கையை நீட்டி உள்ளே தொட்டுப் பிச்சைக்காகக் கையேந்துகிற பெண்ணைத் திட்டுகிற கனவான்களின் மொழி அதைவிட மேன்மைப்பட்டதாக இருக்கும். புழுத்த நாயும் கேட்காத வசவுகளின் பெருமழை.இந்த அவமானத்தை எப்படியோ விழுங்கி விட்டு எதிர்முனையில் இருந்து சகஜமாக அடுத்த விசாரிப்பு – ‘கிரடிட் கார்ட் வேணாம்னா போகுது சார். கார் லோன், வீடு கட்ட லோன், ஹோம் தியேட்டர் வாங்க சுலப தவணையில் வங்கிக் கடன். வாங்கிக்குங்களேன் சார்’. இந்தப் பக்கம் அதற்குள் தொலைபேசி மேஜை மேல் விட்டெறியப்படாமல் இருந்தால் இன்னொரு அசிங்கமான திட்டு எழுந்து சூழலை அசுத்தப்படுத்தும். செத்து விடலாமா என்று வாழ்க்கையின் எல்லைக்குப் போகவைக்கும் சுடுசொற்கள். ஆனால் எதிர்முனைப் பெண் அடுத்து வேறு யாரோ முகம் தெரியாத இன்னொருவருக்கு செல் வணக்கம் சொல்லத் தயாராகியிருப்பாள்.
மொபைல் தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்துக் கொண்டு இப்படி வலிய செல்போனில் அழைத்து கிரடிட் அட்டையும் கடனும் விற்பதற்கு மார்க்கெட்டிங் பெயர் ‘கோல்ட் கால்’, அதாவது குளிர்ந்த அழைப்பு. தினசரி பொழுது விடிந்து பொழுது போவதற்குள் எத்தனையோ பேரின் அமில வார்த்தைகள் அபிஷேகம் செய்ய, மனதுக்குள் வெதும்பித் திரும்பத் திரும்ப அந்த வெப்ப அனுபவங்களுக்குத் தயாராகிறது இவர்கள் அனுபவிக்கும் ஐம்பது சதவிகித துன்பம் மட்டும் தான். மீதி? இப்படிக் கூவி அழைத்தவர்களில் குறிப்பிட்ட ஒரு சதவிகிதம் பேராவது இவர்கள் பேச்சைக் கேட்டு கார்ட் வாங்க வேண்டும். அப்போதுதான் குளிர்ந்த அழைப்பு ஊழியர்கள் வீட்டில் அடுத்த மாதம் அடுப்பு எரியும். விற்காதவர்கள் வேலை இழக்கவும் நேரிடலாம். அவர்கள் குரலில் ஏறிய படபடப்பு இந்த பயத்தால் தான்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதெல்லாம் ரொம்ப சரி. பசித்த வயிற்றுக்காக இப்படி சுயமரியாதையை முழுக்கக் களைந்து நக்னமாக நடந்து பேசிப் பிழைப்பது? ஆங்கிலத்தில் ‘ஷிட் ஒர்க்’ என்று முகம் சுளிக்க வைக்கும் பெயர். ‘கிரடிட் கார்ட் வேணுமா’ என்று விசாரிப்பது மட்டும் நரகல் வேலை இல்லை. வீடு வீடாக ஏறி இறங்கி சகாய விலைக்கு சவுக்காரம், அப்பளம், வடகம், மூங்கில் குருத்து ஊறுகாய் விற்பது இதெல்லாம் கூட தன்மானத்தை ரணப்படுத்திக் கொண்டு ஈடுபட்டு அற்ப வருமானம் தேட வேண்டிய தொழில் முறைகள். நாலு வீதி சந்திப்பு ட்ராபிக் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சையாக நிறம் மாற எதிர்பார்த்து நிற்கும் கார்கள், ஸ்கூட்டர்களுக்கு நடுவே பாய்ந்து ஓடி பொம்மை போட்ட பெரிய எழுத்து ஆங்கிலப் புத்தகம் விற்கும் சின்னப் பெண் செய்வது? ஷிட் ஒர்க்.
லண்டன் பாதாள ரயில் ஸ்டேஷன் படியேறி வெளியே வந்ததும் கண்டது ஒரு கிழக்கு ஐரோப்பிய நாட்டு அகதியை. ‘குறைந்த செலவில் தங்கும் இடமும் காலை சாப்பாடும் பத்து பவுண்ட் கட்டணத்தில்’ என்று எழுதிய அட்டையைப் பிடித்துக் கொண்டு நாள் முழுக்க பனியில் நனைந்தபடி நிற்கிறவர். விசாரித்தபோது அவர் சொன்னது மொழிபெயர்க்கத் தேவையே இல்லாமல் புரிந்தது. அதுவும் மலவேலை. செர்பியாவில் முதுகலைப் பட்டம் பெற்று, இனக் கலவரத்தில் எல்லாம் இழந்து பிரான்சில் தஞ்சம் புகுந்த அவருடைய மகள் விடுதிகளில் கழிப்பறை அலம்பிக் கொண்டிருக்கிறதாகப் பக்கத்தில் மதுக்கடை விளம்பரத்தோடு நின்ற அவர் சகபாடி ஓட்டை ஆங்கிலத்தில் சொன்னான். சென்னை ரங்கநாதன் தெருவில் கையில், தலையில், தோளில் அந்துருண்டை அட்டைகள் நூலாம்படையாகத் தொங்கக் கூவி விற்றபடி நடந்த ஒருவனைக் காவலர் கழுத்தில் கை வைத்துத் தள்ளியபோது அவன் குரலில் ஒரு குடும்பமே அழுதது. அவன் தன்னோடு சுமந்து எடுத்துப் போனது அந்தக் குடும்பத்தை. இன்னொரு நரக வாழ்க்கை. நரகல் பணி.
நாலு மாடி ஏறி வந்து ஆபீஸ் வாசலில் கதர் சட்டையும் வேட்டியுமாக ஒரு பெரியவர் பொறுமையாக நின்றார். என்ன வேணும் என்று விசாரித்தபோது கையில் இருந்த கதர்ப்பையில் இருந்து பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து நீட்டினார். சத்திய சோதனை. மகாத்மா காந்தியின் சுயசரிதம். ‘நூறு ரூபா புத்தகம் உங்களுக்காக சகாய விலையாக ஐம்பது ரூபாய்க்கு’. அவரை முடிக்க விடாமல் வாயிற்காப்பாளர் கையைப் பிடித்துத் தரதரவென்று வாசலுக்கே திரும்ப இழுத்துப் போய்விட்டார்.
நரகல் வேலை இதெல்லாம் என்றால், மனிதக் கழிவைத் தலையில் சுமந்து எடுத்துப் போய் தலைமுறை தலைமுறையாக ஒரு இனமே இங்கே வாழவேண்டி இருந்ததே? இன்னும் இருக்கிறதே. என்ன கிடைத்தது அவர்களுக்கு? மலத்தைச் சுமந்தால் போதாதாம். திண்ணியத்தில் அதைத் தின்னவும் வைத்து விட்டார்கள்.