New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 43 இரா.முருகன்

இப்படித்தான் திடுதிப்புனு வந்து நிப்பியா?

திலீப் குரலில் போலி அதிகாரமும் அதன் பின்னே ஒரு குவளை சுண்டக் காய்ச்சிய பால் பாயச இனிமையும் தட்டுப்பட்டது.

அகல்யாவை அங்கே பார்த்தபோது சம்பந்தமே இல்லாமல் ஓர் அழுகை தொண்டைக்குழியில் இருந்து புறப்பட, வாய் கோணக் குரல் கீச்சிட்டு அழச் சொன்னது மனசு. பின்னாலேயே இன்னொரு மனம் அதட்டி ஆண்மகன் அழுதல் நன்றன்று என்று கட்டுப் படுத்த வாயை இறுகப் பொத்திக் கொண்டு, விரைப்பாக வைத்த கைகள் மேலே உயர, அவசரமாகப் புன்னகை செய்தான்

ஆப்பீசரே, நான் போய் சாயா கொண்டு வரேன்.

வயசன் உள்ளே தெர்மாஸ் பழுதுபட்ட பிளாஸ்கின் கூட்டைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு இங்கிதம் கருதி உடனே படி இறங்கிப் போனான். நிதானமாக அவன் பின்னால் நடந்து கதவடைத்து திலீப் உள்ளே வந்தான்.

மேஜை, நாற்காலி, நிரம்பி வழியும் குப்பைக்கூடையில் அர்ஜுனன் ஆடும் அடுத்த பாட்டு என்று பகுதி டைப் அடித்துக் கசக்கிப் போட்ட காகிதம், ஜாடி நிறைய யாரோ எடுத்து வைத்த அந்துருண்டை, பாதி திறந்த அலமாரியில் இங்கிலீஷ்காரர்கள் பரத நாட்டியம் பற்றி இங்கே பிறந்தவர்களுக்கு விளக்கிக் கடைத்தேற்ற எழுதிய புத்தகங்கள் என்று காகிதமும், மரமும், தெருத் தூசியும் மண்டிய சூழலில் அகல்யா இரண்டு மாதம் இடைவெளிக்கு அப்புறம் திலீப்பின் அணைப்புக்குள் ஒடுங்கினாள்.

லண்டி மிண்டே, கிழவியை ஈசுவரான்னு விட்டுட்டு ஓடி வந்திட்டியாடி?

அவள் மூக்கை நிமிண்டியபடி அகல்யா மேலே அடித்த ரயில் வாடையை ரசித்தான் திலீப்.

போடா ராட்சசா, உன்னைப் பாக்கணும், இனி எப்பவும் உன்னோட கூட ஒட்டிண்டு கட்டிண்டு இருக்கணும்னு ஓடோடி வந்தா, மிண்டைங்கறே. நீ குத்துக்கல்லா இருக்க, நான் எப்படிடா கழுவேறி, மிண்டை ஆக முடியும்?

அவள் கை அவசரமாக இயங்கியது.

ஏய், வேணாம், வலி பிராணன் போறது. மூக்கைப் பிடிச்சா மூக்கைத் திரும்பப் பிடி. அது ஒண்ணுக்கொண்ணு பரோபர். வேறே எடத்துலே பேய்ப் பிடுங்கலா இப்படி அழுத்தினா.

அவன் அம்மாஞ்சி போல சிரித்தபடி நெளிந்தான்.

அழுத்தினா வேண்டியிருக்கோ?

குறுகுறுவெனப் பார்த்தபடி கேட்டாள் திலீப்பின் பெண்டாட்டி.

வலி வேறே. மத்தது வேறே.

அவன் சமாளித்தான்.

என்னாக்க?

சொல்றேன். வயசன் சாயாக்காரப் பையனோட வந்து சேர இன்னும் அரை மணிக் கூறாவது ஆகும். அது வரைக்கும் சிரம பரிகாரம் பண்ணிக்கலாமேன்னு.

திலீப் ஆசையோடு பார்த்தான்.

நினைத்தால் உடனே காமம் எப்படி இந்த ஆண்களுக்குக் கண்ணில் ததும்பி உடம்பே அதிர ஆரம்பித்து விடுகிறது.

நீட்டிய அவன் கையில் படாமல் அகல்யா ஒதுங்கினாள். பின்னால் நகர்ந்து வளைத்துப் பிடித்து ஆபீஸ் மேசைக்கு மாற்று உபயோகம் கற்றுக் கொடுக்கத் தீர்மானித்தது போல் திலீப் அவளை தூக்கி மேஜை மேல் மெதுவாக இட்டான்.

ப்ராந்தா. உச்சி வெய்யில் நேரத்துலே யாராவது இப்படி செய்யறதுண்டா.

கண்டிப்போ அன்போ ரெண்டுமோ சேர்ந்தோ கேட்டுச் சிரித்தபடி அவள் அவசரமாக இறங்கினாள்.

சதா சிரிப்புத்தான். இப்போதோ அது கூடுதலாகப் பொங்கி வழிந்து முகத்தை மத்தாப்பு கொளுத்தியது. வாசல் பக்கம் கரகரவென்று சத்தம் வர திலீபும் விலகி நின்றான். கதவின் தாழ்ப்பாள் சத்தத்தோடு கீழே இறங்கியது.

திடுமென்று கதவு திறக்க பளபளவென்று சுத்தமாக்கிய ஸ்டீல் தட்டில் இரண்டு கோப்பை தேநீரும், நீண்ட சதுரமான பழுப்பு பிஸ்கட் சில்லுகளுமாக அரைநிஜார்ப் பையன் ஒருத்தன் அவசரமாக உள்ளே நுழைந்தான்.

உச்சி வெய்யில் நேரத்துலே யாராவது இப்படி செய்யறதுண்டா? திலீப்புக்கு நடாஷா நினைவு வந்தது. இன்றைய பகல் நேரம் அவனுக்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக ஏதேதோ நடந்தேற இப்படியாக நகர்கிறது. நடாஷாவிடம் இன்னொரு மானசீக மன்னிப்புக் கேட்டான் அவன்.

ஏட்டா, மதாம்மைக்கும் உருப்படாத வெட்டி ஆப்பீசருக்கும் முத்தச்சன் சாயா கொடுக்கச் சொல்லிட்டுப் போனார். மதாம்மை இவங்களா?

வந்த பையன் குரலை ஏற்றாமல், இறக்காமல், மிக வேகமான மலையாளத்தில் விசாரித்தபடி நக்கலாக திலீப்பை பார்த்தான்.

எடோ செக்கா, வெட்டி ஆபீசர் என்ன பண்ணுவார்னு தெரியணுமா? இதோ பாரு.

திலீப் அவன் கையில் பிடித்திருந்த ட்ரேயை அகற்றி மேஜையில் வைத்து விட்டு சட்டென்று திரும்பி, அவனுடைய பின்புறத்தில் விளையாட்டாக உதைத்தான்.

ஐயோ மானம் போறது. சாயக்காரப் பையனை எல்லாம் மிதிச்சு ஏடாகூடமா ஏதாவது ஆகிடப் போறது.

அகல்யா நிஜமாகவே மிரள, அந்தப் பையன் கெக்கே என்று சிரித்து ஓடினான்.

கற்பகம் பாட்டியை என்னடி செஞ்சே கண்ணம்மா?

டீ குடித்தபடி அவளைச் சீண்டினான் திலீப்.

சுண்ணாம்பு தேச்சு தின்னாச்சு. கேட்டேளா?

காலி கிளாசை மேஜை மேல் வைத்தபடி சொன்னாள் அகல்யா. சீக்கிரம் இந்த ஆபீஸ் அறையில் இருந்து வெளியே போகணும். வீடு பார்த்துக் குடி போக அவசரம் தான். மற்றதெல்லாம் இருக்கட்டும். இன்னொரு சாந்தி முகூர்த்தம் ஃபைல்கள், டைப்ரைட்டர், காகிதங்கள் இடையில் அவளுக்கு நடக்க வேண்டாம்.

கற்பகம் பாட்டி புறப்பட்டு போய்ட்டா.

கண்ணாடி கிளாஸ் டீயை சந்தோஷமாக ருசித்தபடி அகல்யா தொடர்ந்தாள். என்னமோ இந்த இடம், இந்த சூழ்நிலை அவளுக்குப் சகஜமாகிப் போன ஏற்பு அவள் கண்ணில் தெரிந்தது.

பாட்டி போய்ட்டான்னா? ஒரேயடியாவா?

கொஞ்சம் பதைபதைப்போடு கேட்டான் திலீப்.

அழகான பொண்ணுதான். ஆனாலும் வளர்த்தப்பட்ட சூழ்நிலை ஒருவேளை மனசில் ஈரமில்லாது ஆக்கியிருக்குமோ? கிழவியை சாக விட்டு விட்டு வேடிக்கை பார்த்தபடி பேல்பூரி தின்று கொண்டிருந்தாளோ.

கல் மனசாக இருந்தால் அதில் எப்படிக் காதல் பிறக்கும்? தேவ் ஆனந்தைக் காதலித்து அவன் கிடைக்காமல் திலீப்புக்கு ரீ-டிரக்ட் செய்து அனுப்பிய போஸ்ட் கார்ட் இல்லையா அந்த பிரேமை, இஷ்க், பிரியம், ஆசை, லவ்? ஏதோ பெயரில் வந்து ஈஷிக் கொள்கிற அசட்டுத்தனம். அது மனசில் இருக்கப்பட்ட யாரும், இருக்கும் வரைக்கும் குரூரமாக இருக்க முடியாது. திலீப் படித்திருக்கிறான். மராத்தி நாவல் பலதும் இதைச் சுற்றித்தான் சுழல்கிறது.

சர்வமங்கள் சால்-லே, பக்கத்து பில்டிங் ரெண்டாம் மாடி எஸ் டூ எச் எட்டாம் நம்பர் கோபாலசாமி ஐயங்கார் இருக்கார் இல்லே?

அகல்யா மேஜை ஓரமாக உட்கார்ந்தபடி அடுத்த பேச்சுக்கான முஸ்தீபாக அவனிடம் அடையாளம் சொன்னாள்.

யாரையும் தெரியாது எனக்கு. வீம்பாகச் சொன்னான் திலீப்.

உங்களுக்குத் தெரியணும்னு அவசியம் இல்லே. எனக்குத் தெரிஞ்சா போதும்.

அப்படியே ஆகட்டும் மகாராணி. மேலே சொல்ல திருமனசு உத்தரவாகணும்.

ஐயங்கார் ரயில்வே எம்ப்ளாயி இல்லையா. அவர் குடும்பத்தோட பர்ஸ்ட் கிளாஸ் பாஸில் ஏதோ விசேஷத்துக்கு மதராஸ் போறதா ப்ளான். ஐயங்கார் மாமி நம்ம வீட்டுலே வந்து சொன்னா. ஐயங்காருக்கும் நுங்கம்பாக்கம் பக்கம் மாம்பலத்திலே தானாம் சொந்த வீடு இருக்கறது. இதோ வந்தேன் வந்தேன்னு பாட்டி அவாளோட கிளம்பிட்டா. ஐயங்கார் மூலமா பணம் அடைச்சு பர்ட்ஸ் கிளாஸ் டிக்கெட் ஏதோ ரயில்வே கோட்டாவிலே ரிலீஸ் பண்ணி ஜாம்ஜாம்னு மெட்றாஸ் பயணம் கிளம்பிட்டா. கேட்டேளா.

கேட்டேனே.

ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்துச் சிரித்தான் திலீப். எண்பது சில்லறை வயசுக் கிழவிக்கா இவ்வளவு அடம்? தஞ்சாவூர்க்காரியாச்சே என்று அப்பா சொல்வது நினைவில் இருக்கிறது. தஞ்சாவூர் மனுஷர்கள் இப்படித்தான் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தன் போக்கில் போய்க் கொண்டிருப்பார்கள் போல

அவ தான் கிளம்பறான்னா நீ அப்படியே விட்டுடறதா?

அகல்யாவை சீரியஸாகவே கேட்டான் அவன். அந்தக் கிழவி வீடு போய்ச் சேரும்வரை அவளுக்குத் துணை இருந்திருக்கும் என்று என்ன நிச்சயம்? இந்தத் தள்ளாத வயசில் அவளுக்கு இன்னொரு அலைச்சல் தேவையா? மதராஸில் இருந்து பம்பாய்க்கு அவளை வலுக்கட்டாயமாகத் தானும் ஜனனியும் கூட்டி வந்தபோதே அவள் அனுபவித்த பிரயாண சங்கடங்களுக்கும், அலைச்சலுக்கும் ரெண்டு பேருமே வருத்தப்பட்டதை மறக்கவில்லை திலீப். தனியாக அவளை மதராஸில் விடாமல் இங்கே எல்லா துணையும் ஆதரவுமாக இருத்தி வைக்கப் போட்ட திட்டம் அள்ளு கந்தலாக, பாட்டி தன் மருமகள் உசிர் பிரியும் வரை அவளுக்கு சிஷ்ருசை செய்து இன்னும் ஓய்ந்து தான் போனாள். இப்போது பாட்டியம்மாவே தீர்மானித்து நடத்திக் கொண்ட இன்னொரு பயணமா?

பாட்டித் தள்ளை பம்பாயிலே இருந்தா அவளோட மினிஸ்டர் பிள்ளை மெட்ராஸ் வீட்டை ஓசைப்படாம வித்துடுவாராம். நீங்களும் அவருக்கு கூட்டுக் களவாணியாம். யாரையும் நம்ப மாட்டாளாம். ஆனாலும் நீங்க பாவமாம். சொல்றா கிழவி. ஏய், களவாணி. உன் கை எங்கே போறது பாரு. எடு அதை.

இன்னொரு கையும் தப்புக் காரியத்தில் கூட்டுக்குச் சேர அவன் விசாரித்தான் – உன் கிட்டே வேறே என்ன சொல்லிட்டுப் போனா கற்பகம்?

இங்கே வந்த காரியம் முடிஞ்சுது. என் நாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தாச்சு. பேரன் கல்யாணம் பண்ணி பேரன் பொண்டாட்டின்னு நீயும் வந்துட்டே. அவனை நீயும் உன்னை அவனும் கவனிச்சுக்கட்டும். நான் என் வீட்டைக் கவனிச்சுக்கப் புறப்படறேன்.

அகல்யா ஆபீஸ் போன பின் தனியொருத்தியாகப் பாட்டி நறுவிசாக மூட்டை முடிச்செல்லாம் கட்டி பயணம் கிளம்பும் முன் அகல்யாவிடம் சொல்லியதாம் இது.

வேறே ஒண்ணுமே சொல்லலியா? திலீப் அவளை இடுப்பில் கை கோர்த்தபடி கேட்டான்.

தோசை மாவுக்கு உப்புப் போட மறக்க வேண்டாம்னு ஏழெட்டு தடவை ஞாபகப் படுத்தினா. கக்கூஸிலே ப்ளஷ் ரிப்பேர் பண்ணிடுன்னா. எதிர்த்துண்டு வருதாம்.

ரெண்டு பேரும் சிரித்து ஓய்ந்த போது அகல்யா கேட்டாள் –

டாய்லெட் சுத்தமா இருக்குமா இங்கே?

சட்டென்று யதார்த்தமான சூழ்நிலை திலீப் மனசில் அறைந்தது. இங்கே கழிப்பறை அடிப்படை சௌகரியமான அளவில் கூட இருக்காது என்பது இருக்கட்டும். அதை சகித்துக் கொள்ளத் தயார் என்றாலும், இவளை எங்கே தங்க வைப்பது? கோவில் குளத்தில் குளித்து, இங்கே புத்தகத்தோடு புத்தகமாக கீழ்த் தட்டில் உடுப்பு இஸ்திரி செய்து வைத்து உடுத்திக் கொண்டு, ஓட்டல் சாப்பாடும், ராத்திரி ஆபீஸிலேயே ரெண்டு பெஞ்ச் இழுத்துப் போட்டுத் தூங்குவதும் அவனைப் போல, அவளுக்கும் எப்படி சரிப்படும்? குடும்பம் நடத்தவா ஆபீஸ்?

இந்த சூட்கேஸ் சின்னது இல்லியோ? வேணும்கற எல்லாத்தையும் எடுத்து வச்சுண்டு, ஊர் விட்டு ஊர் நிரந்தரமா மாறி வர, இது மட்டும் போதுமா என்ன?

அவன் கேட்டே விட்டான்.

நாலு ஜோடி டிரஸ், சீப்பு, சோப்பு, பிரஷ், பேஸ்ட்.

போதுமா?

அதான் நீங்க இருக்கேளே மத்ததுக்கெல்லாம்.

அகல்யா அவன் தோளில் மறுபடி சரிந்தாள். வியர்வை மணத்தோடு இறுக்கி இன்னொரு அணைப்பு. இன்னொரு முத்தம்.

நான் இருக்கேன் தான் ராஜாத்தி. ஆனா, திடுதிப்புனு வீடு பார்த்து, அட்வான்ஸ் கொடுத்து, குடி போய், கட்டில், நாற்காலி வாங்கிப் போட்டு, பாத்திரம் வாங்கி, அடுப்பு வாங்கி.

அவன் சொல்லும்போதே மலைத்துப் போய்விட்டான். இது எல்லாவற்றுக்கும் மேல், அவனுக்குக் கிடைக்கிற சம்பளத்தில் இவர்கள் ரெண்டு பேரும் இந்த ஊரில் குடித்தனம் நடத்த முடியுமா?

பெரியம்மா தயவு நீடிக்கும் வரை அவனுக்கு உத்தியோகம். அது எத்தனை நாள், மாசம் வரும்? வருடக் கணக்காக நீடிக்கும் என்று நம்ப அவன் தயாரில்லை தான்.

இந்த வருமானத்தை நம்பி, அகல்யா கட்சி ஆபீஸில் மாசம் சுளையாக ஐநூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த கட்சி ஆபீஸ் அசிஸ்டெண்ட் மேனேஜர் உத்தியோகத்தை வீசியெறிந்து விட்டு வந்திருக்கிறாளா? என்ன நடக்கிறது?

வீட்டுக்குள்ளும் அவன் கயிற்றில் ஆடும் பொம்மை தானா? கூட ஆட அகல்யா உண்டு. அந்த நிம்மதி அவனுக்குப் பெரிசு.

அகல்யா சுவரைப் பார்த்துத் திரும்பி நின்று கொண்டு தாலிக் கொடியில் ஏதோ தேட திலீபுக்கு அவள் முன்னால் போய் உற்று நோக்கக் கால்கள் பரபரத்து, வேணாம் என்று விலகி நின்றான்.

அகல்யா கழுத்தில் சேப்டி பின் தூக்கு மாட்டித் தொங்கிய சூட்கேஸின் சாவியைப் பத்திரமாக எடுத்துப் பெட்டியைத் திறக்க, முதலில் கீழே விழுந்த முலைக்கச்சை பிரியமாகப் பாய்ந்து எடுத்து கைக்குள் பொத்தி வைத்து அணைத்துக் கொண்டான் திலீப்.

கிடக்கறது கிடக்கு கெழவியை மணையிலே உக்காத்துன்னு பாச்சிக் கட்டு ஊருக்கு முந்தி வந்து விழுந்தாச்சு. அதைக் கட்டிப் பிடிச்சுண்டு போய் படுங்கோ.

அவள் கிண்டலாக திலீப்பிடம் சொல்லி விட்டு பெட்டியின் மேல் பக்கத்தில் அழுத்தமாக ஜிப் போட்டு மூடியிருந்த இடத்தைத் திறந்து அரசாங்க முத்திரை போட்டிருந்த ஒரு கவரை வெளியே எடுத்தாள்.

எனக்கு கட்சியிலே டிக்கெட் கொடுத்திருக்காளா?

அவன் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் கேட்டபடி அதைக் கையில் வாங்கிக் கொண்டான். அப்படி ஒரு ஆசை இன்னும் இருக்கிறது உள் மனசில். அதான் போட்டி போட மாட்டேன்னு எழுதிக் கொடுத்தாச்சே. ஆனாலும் ஆசை வைக்க வேண்டாம் என்று எங்கே எழுதியிருக்கிறது? இந்தக் கவரிலா? இது திலீபுக்கு வந்தது இல்லை.

கவர் திறக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு ஆபீஸில் இருந்து வந்தது. அழுக்கு கலரில் சிங்க முத்திரை அச்சடித்த தபால் தலைகள் ஒழுங்கில்லாமல் ஒட்டி அலங்காரம் செய்து வந்திருக்கும் உறை அது. அகல்யாவுக்கு வந்தது.

எனக்கு செண்ட்ரல் கவர்ன்மெண்ட் போஸ்டல் டெலிக்ராப் டிபார்ட்மெண்டிலே அசிஸ்டெண்டா வேலை கிடைச்சிருக்கு. சர்வீஸ் கமிஷன் பாஸ் ஆகிட்டேன்ன்.

அவனை நெருங்கி நின்றபடி அகல்யா கூவென்று காதில் கூவிச் சொன்னாள்.

குப்பென மனதில் சந்தோஷம் கவிந்து பற்றிக் கொள்ள, கவரை வாயில் கவ்வியபடி அவளை அப்படியே தூக்கிச் சுற்றி ஆடினான் திலீப். கொச்சுக் குழந்தை மாதிரி அவன் அணைப்பிலும் சுமந்து சுற்றுவதிலும் ஆனந்தம் கண்டு ஐயோ வேணாமே என உதடு சொல்ல அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, ஓவெனச் சிரித்தபடி இருந்தாள் அகல்யா.

எப்போ ஜாயின் பண்ணனும்? எங்கே ஆபீஸ்?

திலீப் கேட்டபடி அகல்யா கொண்டு வந்த கவரைப் பிரித்து நியமன உத்தரவில் சம்பள விவரம் பார்த்தான். முழுசாக ஆயிரத்து நூறு ரூபாய். அவனுக்கு பெரியம்மா கொடுக்கும் சம்பளம் போல் ரெண்டு மடங்கு.

கொஞ்சம் போல் பொறாமை. அது அடுத்த வினாடி, அகல்யா முதுகோடு கை பிணைத்து அடுத்த அணைப்பில் அவனோடு சேர, ஓடியே போனது. ஆக, வருமானம் ஒரு உத்தரவாதத்தோடு கிடைக்கும். அதுவும் சர்க்கார் உத்தியோகம். தில்லியோ, பம்பாயோ, டேராடூனோ, கல்கத்தாவோ எங்கே இருந்தாலு என்ன? ரெண்டு பேர் அடிப்படை சௌகரியத்தோடு இருக்க இந்தப் பணம் போதும்.

எப்போ ஜாயின் பண்ணனும்னு சொல்லுடா செல்லக் குட்டி.

அவன் மறுபடி கேட்க, முடியுமானால் நாளைக்கே என்றாள் அகல்யா. செல்லக்குட்டி விளி அவளுக்குப் பிடித்திருந்தது என்று மலர்ந்த முகம் சொன்னது.

எப்போ வேலையிலே சேரணும்கறது இருக்கட்டும். எங்கே உத்தியோகம்னு கேட்க மாட்டேளா?

அகல்யா அவன் விரலை அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரின் மேற்பகுதிக்கு நகர்த்தினாள். ஆலப்புழை தலைமை தபால் அலுவலகம் என்றது அந்த அரசு உத்தரவு. இன்னொரு சந்தோஷம் மனசில் திரும்ப வந்து நிறைந்தது. இங்கே தான் உத்தியோகம். பழகத் தொடங்கி இருக்கும் பிரதேசம். அதிகச் செலவில்லை. இங்கேயே இருக்க, இனி எல்லா நல்லதுக்கும் பிள்ளையார் சுழி போட்ட அகல்யாவை இன்னொரு தடவை தூக்கிச் சுற்றலாம் தான். சுற்றினான்.

ஆலப்புழையில் இப்போதைக்கு ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கிக்கலாம். நான் உடனே வீடு பார்த்து.

அகல்யா ஓட்டல் ரூம் என்றதும் தயங்கினாள். ரொம்ப ஆகுமே என்று ஒரு கவலை. நியாயமானது தான் அது. ஆனால் அடுத்த விசாரம் பம்பாய்க்காரி பெண்ணுக்கு வந்தது ஆச்சரியம் தான்.

யார்யாரோ வந்து தங்கி என்னென்னமோ செஞ்சிருப்பா ஓட்டல் ரூம்லே. தலகாணி உறை கூட மாத்தியிருக்க மாட்டான். அந்த பாஷாண்டத்துலே நாமளும் போய் கலக்கணுமா? நரகத்துக்குப் போற கும்பல் அதெல்லாம்.

அவள் வெகுளியாகச் சொன்னாள்.

இதை மட்டும் ஸ்டார் ஓட்டல், வெறும் ஓட்டல் மேனேஜர், முதலாளின்னு யாராவது கேட்டா, தூக்குப் போட்டிண்டிருப்பா.

திலீப் அவள் பின்புறம் பலமாகத் தட்டியபடி அறிவித்தான்.

இது என்ன காவாலித் தனம்? இங்கே இருக்கப்பட்ட ஸ்திரிகளுக்கு எல்லாம் இப்படித்தான் ஹலோ சொல்ற வழக்கமோ?

அவள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள். டாய்லெட்டின் கதவு சரியாக பொருந்தாததால், அங்கே போகவே மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.

நான் மட்டும் தானே இருக்கேன் என்றான் திலீப். திடுதிப்புனு யாராவது வந்துடுவா, வேண்டாம். இனி எப்போ போகமுடியுமோ அப்போ போய்க்கறேன் என்றாள் அவள் தீர்மானமாக.

நம்ம பம்பாய் சர்வமங்கள் குடியிருப்பை காலி பண்ணியாச்சா? ஞாபகம் வர அவசரமாக திலீப் கேட்டான்.

அங்கே தேவையானதை எடுத்து அங்கே இருந்து எங்க வீட்டுலே அப்பா ஒரு ரூமில் போட்டுப் பூட்டி வச்சுட்டார். பார்த்துண்டு காலி பண்ணலாம்கிறார்.

பேசியபடி தலையை வாரி முடிந்து, வாஷ்பேசினில் முகம் கழுவி அவனிடம் துண்டு வாங்கித் துடைத்து விட்டுப் பெரிய சிவப்புப் பொட்டு இட்டுக் கொண்டாள் அகல்யா. போகலாம் என்றான் திலீப்.

வெடிவழிபாட்டு வயசனிடம் ஆபீஸ் கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்லி விட்டு அகல்யாவின் சூட்கேஸைத் தோளில் மாட்டிக் கொண்டான் திலீப். எங்கே என்று தெரியாமல் பார்த்தாள் அகல்யா.

உங்க பெரியம்மாவைப் பார்க்கத் தானே?

இல்லே.

கோவிலுக்கா?

குளிக்காமலா? நிச்சயம் இல்லை.

பின்னே யாரைப் பார்க்க?

எம்பிராந்திரி மனைக்குப் போறோம்.

எம்பிராந்திரியின் மனவி சந்தோஷமாக வரவேற்றாள்.

மூப்பர் அம்பலத்தில் போயில்லா, இஸ்ஸி சுகக்கேடு.

எம்பிராந்திரி சந்தியாகால பூஜைக்குக் கோவிலுக்குப் போகாமல் சாயந்திர நேரம் வீட்டு சாய்வு நாற்காலியில் இருந்ததற்குக் காரணம் சொன்னவள் அகல்யாவோடு நேசம் வெளிப்படப் பேச ஆரம்பித்தாள். அகல்யாவின் மலையாளம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. பம்பாயின் தமிழும், இந்தியும் மராத்தியும் ஏகத்துக்குச் சேர்த்த மலையாளமாக, பேசவும் கேட்கவும் இடைஞ்சல் எதுவும் இல்லாத கலவை மொழி அது.

வீடு பிடிக்கணும். எங்கேன்னு தெரியலே. யார் கிட்டே கேட்கணும்னு தெரியலே.

திலீப் தயங்கித் தயங்கி பேச்சுக்கு நடுவே குறுக்கிட்டான்.

அந்த ப்ரோப்ளம் சால்வ்ட். தீர்ன்னு போயி.

எம்ப்ராந்தரி மனைவி உற்சாகமாகச் சொன்னாள்.

எம்பிராந்திரி வீட்டு காம்பவுண்டில் நேர்த்தியான ஒரு மர வீடு உண்டு. அவருடைய மகன் பத்மன் நம்பூத்ரி இருந்து படிக்க, எழுத என்று உபயோகப்படுத்திய ஒற்றை அறை வீடு அது. திலீப்பும் அகல்யாவும் வேறு வீடு பார்க்கும் வரை அங்கேயே தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள் எம்பிராந்திரியின் மனைவி.

வாடகை எவ்வளவு தர வேண்டியது என்று திலீப் தயக்கத்தோடு இழுக்க, சாய்வு நாற்காலியில் படுத்திருந்த எம்பிராந்தரி எழுந்து வந்து விட்டார்.

இங்கே தங்கறதுக்கு வாடகை என்னன்னா, அந்தச் சின்னப் பொண்ணு காலையிலே அஞ்சு மணிக்கு அம்பலத்துலே நிர்மால்ய பூஜைக்கு களபம், அதான் சந்தனம் அரைக்கணும். சிரத்தையோட நாலரை மணிக்கு குளி கழிச்சு சுத்த வஸ்திரம் உடுத்தி வந்து செய்யற காரியம் அது. முடியுமா சொல்லு குட்டி.

அகல்யா இருகை கூப்பி மெய்மறந்து நின்றாள்.

அம்பலத்திலே தொழப் போறதே அதுவும் தினம் தொழக் கொடுப்பினை இருக்கறதே எவ்வளவு பெரிய விஷயம். இப்படி மணக்க மணக்க சந்தனம் அரைச்சு கிருஷ்ணனுக்கு சார்த்தக் கொடுக்கற மாதிரி ஒரு அனுபவம் கிட்ட, இன்னும் அதிகமா போன ஜன்மத்துலே கொடுத்து வச்சிருக்கணும்.

அவள் சொல்லியபடி திலீப்பைக் கண்காட்ட அடுத்த வினாடி இருவரும் எம்பிராந்திரி தம்பதிகள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்கள்.

ரெண்டுங்கெட்டான் நேரம். பசியா இருப்பே. இந்தா சாப்பிடு.

எம்பிராந்திரி மனைவி கோவில் உன்னியப்பம் நாலைந்தும் ஆளுக்கு ஆழாக்கு கோவில் பால் பாயசமும் விளம்ப, உள்நாக்கு வரை இனித்தது என்றாள் அகல்யா. இந்த ஊர் அவளுக்கு இனிக்க ஆரம்பித்தது என்பதை திலீப் அறிவான்.

மாலை மங்கி வரும்போது, போதும் என்றே தோன்றாமல் குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் குளித்து, எம்பிராந்திரி மனைவி கொடுத்த இளம் மஞ்சள் மலையாளிப் புடவையும் நெற்றியில் சந்தனமுமாக அம்பலம் தொழக் கிளம்பினாள் அகல்யா.

அசல் நாடன் மலையாளிப் பெண்ணு அல்லே.

எம்ப்ராந்தரியிடம் முதுபெண் கேட்க, அந்த செக்கன் முகத்தில் மாத்ரம் மராத்திக் களை தான் இருக்கு என்றார் அவர்.

தணுத்த காற்று உலவி வரும் பாதையில் அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது உலகம் ஒரு நியதியில் இயங்கத் தொடங்கி இருப்பதாக திலீப்புக்குப் பட, அகல்யாவோடு அதைப் பகிர்ந்து கொண்டான். எந்தப் பிரச்சனையும் இல்லாத மகிழ்ச்சி மட்டும் நிறைந்த உலகம் அது. இதுவரை திலீப்புக்கு வாய்க்காதது. இனி அது தான் நிலைக்கும். அவன் அறிவான்.

ஒரு டாக்சி வேகமாக பக்கம் வந்து ப்ரேக் அடித்து நின்றது. கார் எல்லாம் வேணாம். நடக்கிற சந்தோஷமே போதும் அவனுக்கும் அகல்யாவுக்கும்.

திலீப்.

சத்தமாக ஒரு பெண்குரல்.

மிரண்டு போய்ப் பார்த்தாள் அகல்யா. ஆஜானுபாகுவாக ஆறரை அடி உயரத்தில் ஒரு ஐரோப்பிய இளம்பெண் காரில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

அவள் அகல்யாவைப் பார்த்தபடி திலீப் முன் நின்றாள்.

ஏய், நான் போகறேன்.

திலீப் புரியாமல் பார்த்தான். எங்கே போகறே? அவன் முணுமுணுப்பாகக் கேட்டான்.

அப்பாவை சைபீரியா கொண்டு போயிட்டாங்களாம். என்னை கண் மறைவா இருக்கச் சொல்லி மாஸ்கோவில் இருந்து தொலைபேசி அழைப்பு. தில்லி போறேன்.

அப்புறம்? இன்னும் விளங்காமல் திலீப் விசாரித்தான் வந்தவளிடம்.

அப்புறம் என்னவோ, கடவுளுக்குத் தான் தெரியும். ஒரு உதவி மட்டும் பண்ணு.

என்ன செய்யணும் நடாஷா?

என் அறையிலே ஆராய்ச்சிக் கட்டுரை பிரதி, டேப் ரிகார்டர் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. எடுத்து வச்சுக்கிறியா? எப்பவாவது வந்து தொடரலாம். என் நல்ல நண்பன் இல்லியோ நீ.

தன் கணவனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, தலையில் வாஞ்சையாக முத்தமிட்டுப் போகும் பெண் யாரென்று தெரியாமல் மலைத்துப் போய் நின்றாள் அகல்யா.

அம்மே நாராயணா. தேவி நாராயணா. நமோ நாராயணா.

முன்னால் போன பெண்கள் ஸ்மரித்தபடி போனார்கள். அகல்யாவும் நாமம் சொன்னாள்.

சாந்த்ரானந்தா வபோதாத்மகம் அனுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசடசஹஸ்றேண நிர்பாச்யமானம்

அம்பலத்து உள்ளில் இருந்து நாராயணீயம் பாடும் சத்தம் காற்றில் எழுந்து வந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன