New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 45 இரா.முருகன்


ஆலப்புழையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி மதுரை சந்திப்புக்கு ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது கொச்சு தெரிசாவுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகப் போனது.

சரியான நேரத்துக்கு அது வந்திருந்தால் நடுராத்திரி கழிந்து அதிகாலையாக இன்னும் நிறைய நேரம் பாக்கி இருக்கும் பின்னிரவு ரெண்டு மணிக்கு கொச்சு தெரிசா இங்கே ரயிலை விட்டிறங்கி இருப்பாள்.

மதுரை இருபத்து நாலு மணி நேரமும் கண் விழித்துப் பரபரப்பும் கலகலப்புமாக எப்போதுமிருக்கும் அபூர்வ நகரம் என்பதால் அவளுக்கு சிரமம் ஏதும் இருந்திருக்காது தான். ஆனாலும் உறக்கம் விலகாமல், பிறந்து நாலு மாதமே ஆன சிசு போலத் தூங்கிக் கொண்டே தான் அவள் பிரவேசித்திருப்பாள்.

முசாபரோடு சென்னை போய்ச் சேர்ந்தது கிட்டத்தட்ட இதே நேரம் தான். ரயிலில் இருந்து இறங்க மாட்டேன் என்று தான் அடம் பிடித்தது நினைவு வந்தது அவளுக்கு. முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் ரயில் தாலாட்டத் தாலாட்ட சுருண்டு படுத்து உறங்கிய அந்த ராத்திரி திரும்ப வர அவள் எவ்வளவு வேண்டுமானாலும் யாருக்கும் தரத் தயார். அதெல்லாம் யார் விற்கிறார்கள்.

வாங்கினாலும் முசாபர் சக பயணியாக வரப் போவதில்லை. கூடவே, பரம சாதுவும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறவருமான அமேயர் பாதிரியாரும் இனி அவளோடு பயணம் செய்யப் போவதில்லை. என்றென்றைக்கும். அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்க்கையைப் புரட்டிப் போடக் கூடிய தீர்மானங்களையும் முடிவுகளையும் எத்தனை விளையாட்டாக அவள் இந்த ஒரு வருடத்தில் எடுத்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பின்னால் இருந்து, தர்க்கத்தையும் சூழ்நிலையையும் கவனிப்பிலிருந்து விலக்கி, மனமே சகலமானதையும் வழி நடத்த வகை செய்வது யார்? அவள் மட்டும் தானா?
,
முசாபரை கால்டர்டேல் கடையை மறுபடி திறக்கச் செய்யத் தோதாக, அவள் கையெழுத்திட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிமை மாற்றம் ஏற்படுத்தி வைத்ததும் அந்த இயக்கத்தின் பகுதி தான். முசாபர் ஐயாயிரம் பிரிட்டீஷ் பவுண்ட் பணத்தை அவளுடைய இந்திய பேங்குக் கணக்குக்கு மாற்றி இருக்கும் தகவல் நேற்றுக் கிளம்பும்போது தான் கொச்சு தெரிசாவுக்குக் கிடைத்தது. போதும் போதும் என வேண்டினாலும் அவன் பணம் தராமல் இருக்க மாட்டான். பிரியம் வைக்காமல், அதைச் சொல்லித் திரியாமல் இருக்கமாட்டான்

கடையோடு ஒட்டி இருக்கும் வீட்டுக்கு நல்ல விலை கேட்டுச் சிலர் வந்திருப்பதாகவும், அது படியும் பட்சத்தில், அதிகம் போனால் இன்னும் மூன்று மாதத்தில் விற்று வந்த தொகை அனுப்புவதாகவும் கூட முசாபர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். கொச்சு தெரிசா அவனுக்குக் கொடுத்த அதிகாரப் பத்திரம் இன்னும் எட்டு மாதம் உயிரோடு இருக்கும் என்பதால் நல்ல விலை வருவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தான் அவன். பத்து பக்கம் கடிதத்தில் ஒன்பது பக்கம் அன்பும் பிரியமும் பரிமாறி, உனக்கு ஏமாற்றத்தைத் தவிர நான் இதுவரை எதுவும் தரமுடியாததை மன்னித்துக் கொள் என்று எதற்கோ அங்கங்கே திரும்பத் திரும்ப வருந்தி, முடிக்கும் போது அவன் சொல்லியிருந்த காசு பணம் பற்றிய தகவல் இது.

அவன் வைத்த பிரியம் அலாதியானது. முசாபரும் அப்படியே. அலாதியான விகாரம் இல்லாத எளிமையான மனுஷன் அவன். அவள் தான் வழி மாறி வந்து விட்டாள். இனித் திரும்ப மனதும் இல்லை. வந்த வழியையும் அவளே பிடிவாதமாக அடைத்து விட்டாள்.

அந்தக் கடைக்கு ஐயாயிரம் பவுண்ட் அதிகம் என்று கொச்சு தெரிசாவுக்குத் தெரியும். ஆனாலும் முசாபர் பிடிவாதமாக அதை வாங்கிக் கடை நடத்தப் போகிறான். அவள் மூச்சுக் காற்று இன்னும் அடர்ந்திருக்கும் இடம் அது என்றும் அங்கே சுற்றித் திரிந்து புழங்கவே எனக்கென்று உள்ள சொத்து எல்லாம் எழுதி வைப்பேன் என்றும் அவன் எழுதியிருந்தான். அவனுடைய பிரியம் கொச்சு தெரிசாவை நெகிழ வைக்கிற ஒன்று. அவனை விட்டுப் பிரிந்தாலும் அவனை நேசிக்கிறாள். அது மட்டும் இனி எப்போதும் அவளோடு இருக்கப் போவது.

அம்மா, பெட்டியை இறக்கிடலாமுங்களா?

போர்ட்டர் மரியாதையோடு கேட்க, சரி எடுங்கள் என்று கையைக் காட்டினாள் கொச்சு தெரிசா. கொச்சு தெரிசாவின் லெதர் பையையும், பூட்டுப் போட்ட பெட்டியையும் இறக்கி வைத்த போர்ட்டர் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தார். அவள் அனுமதித்தால் அவற்றைச் சுமந்து கொண்டு குதிரை வண்டி நிற்கும் இடம் வரை வந்து வழியனுப்பி வைப்பார் அவர். அவள் சம்மதம் முக்கியம். தமிழ் பேசுகிற இந்தப் பகுதியில், தன்னிச்சையாகத் திமிர்த்து எதையும் யாரும் செய்வதில்லை என்பதை கொச்சு தெரிசா அறிவாள். ஆலப்புழையிலும் அம்பலப்புழையிலும் அது இல்லை மனுஷர்கள் புழங்க அனுசரிக்கும் வழிமுறை.

வாங்கோ. சௌக்கியம் தானே? ட்ரெயின் டிரைவர் ஞாபக மறதியா மங்களூருக்கு விட்டுட்டானான்னு பார்த்தேன். ரெண்டு மணி நேரம் லேட் ரொம்ப ஜாஸ்தி.

சிரித்துக் கொண்டே முன்னால் நின்றவரைத் தலை நிமிர்த்திப் பார்த்தாள் கொச்சு தெரிசா. தியாகராஜ சாஸ்திரி. இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லி விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

சங்கரனின் உயிர்த் தோழர் இவர். போன தடவை வந்தபோது நல்லது நினைக்கிற, செய்கிற ஒரு ஆத்மா என்ற அளவில் தான் தெரியும் என்பதால் சுபாவமாகப் பழக முடிந்தது. சங்கரனோடு ஏற்பட்ட புது உறவு இந்த சிநேகிதத்துக்கும் ஆழம் கூட்டுகிறது. அவனுக்கு வேண்டியவர். நெருக்கமானவர். அவரைப் பார்த்த சந்தோஷத்தோடு சின்னப் பெண் போல ஒரு நாணம். மட்டும் அல்லாமல், சங்கரன் பற்றிய நினைவுகளையும் மனம் மேலெடுத்து வந்து நிறுத்த, அவனுக்கும் தனக்குமான நெருக்கம் இந்த நட்பையும் இன்னும் அதிகப்படுத்தும் என்ற ஊகம். இவரிடம் என்ன உதவியும் கேட்கலாம். இந்த தியாகராஜ சாஸ்திரி நம்மவர் என்று அழுத்தமாக முத்திரை விழுந்து விட்டது.

சாமி ஜாமாஞ்செட்டை எடுத்துக்கலாமில்லையா?

போர்ட்டர் ஒரு தடவை கேட்டு விட்டு, மறுப்பு இல்லாமல் போகவே பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு, லெதர் பையைக் கையில் பிடித்தபடி அவர்களுக்கு முன்னால் ஓட்டமும் நடையுமாகப் போனார்.

எங்கே போகணும்னு தெரியுமா?

தியாகராஜன் ஒப்புக்கு விசாரித்தார். குதிரை வண்டி நிறுத்துமிடத்தைக் கடந்து தெருவோடு நடக்கவா போர்ட்டர்?

கூலி பேசியாச்சோ?

அதொண்ணும் இல்லை என்றாள் கொச்சு தெரிசா. என்ன, சொத்தையா எழுதித் தரச் சொல்லிக் கேட்பான். மிஞ்சிப் போனால் ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ.

காலேஜ் ஹவுஸிலே உங்களுக்கு ரூம் போடச் சொல்லிட்டேன் என்றார் சாஸ்திரிகள். அவர் கண்கள் அயர்ச்சியோடு இருந்ததை கொச்சு தெரிசா கவனிக்கத் தவறவில்லை. நன்றி சொன்னாள். அதெதுக்கு என்று விலக்கினார்.

எப்போ இருந்து இங்கே ஸ்டேஷன்லே காத்திருக்கீங்க? தெரசா கேட்டாள்.

அவர் பரவாயில்லை என்பது போல ஒரு சிரிப்பு சிரித்து, நேத்து சாயந்திர பஸ்ஸிலே அரசூர்லே இருந்து வந்தேன். மேலமாசி வீதி ராயன் கடையிலே ரெண்டு இட்லியை உதுத்துப் போட்டுண்டு காலாற இங்கே வரும்போது கடிகாரம் பத்து மணி அடிச்சுது. ராத்திரி பத்து.

அட பாவமே, ராத்திரி முழுக்க நீங்க காத்திருந்தீங்களா? நான் பாட்டுக்கு சாவகாசமா விடியற நேரத்துலே வந்து நிக்கறேனே.

தெரிசா அனுதாபத்தோடு சொன்னாள். அவளால் செய்ய முடிந்தது ஏதும் இல்லை என்பதோடு அவரை சிரமப்படுத்தியது பற்றியும் வருத்தமாக இருந்தது.

இந்தாங்கோ, காலேஜ் ஹவுஸ் ரூம் சாவி. சிரம பரிகாரம் பண்ணுங்கோ. ஸ்நானம் முடிச்சுக்கலாம். அப்புறம் ஆகாரம் கழிச்சுட்டு பேப்பர் வாசிச்சிண்டிருங்கோ. நான் வந்துடறேன். ஏற்பாடுகள் எப்படி ஜோராப் போயிண்டிருக்குன்னு வந்து விவரம் சொல்றேன். ஒரு அவசரமுமில்லே.

கொச்சு தெரிசா கை கூப்பினாள்.

எல்லாம் அவா பார்த்துப்பா.

தியாகராஜ சாஸ்திரிகள் வானத்துக்குக் கை காட்டி அவரும் சேவித்தார்.

உறவும் நட்பும் முன் கூட்டி ஏற்பாடு செய்து வைத்து கால நேரம் கவனித்து உருக்கொளவது இல்லை என்று கொச்சு தெரிசா எல்லோருக்கும் சொல்வாள். முக்கியமாக முசாபருக்கும் சின்னச் சங்கரனுக்கும். இந்த தியாகராஜ சாஸ்திரிக்கும். சின்னச் சங்கரன் இல்லாமல் இருந்தாலும், முசாபர் திரும்பிப் போகாமல் அவளோடு கூட இன்னும் இருந்தாலும் இந்த புரோகிதர் சிநேகிதமாகப் பழகியிருப்பார் தான். அவரையும் வழி நடத்துவது யாரோ தான்.

நானே வந்து லாட்ஜ் வாடகைக்கு எடுத்திருப்பேனே என்றாள் கொச்சு தெரிசா.

போன தடவை முசாபர் தானே ஏற்பாடு செய்வதாகச் சொல்லி கீகடமான இடத்துக்கு அழைத்துப் போகப்பட்டது நினைவு வந்தது. இந்த ஊரில் எங்கேயும் இப்படித்தான் விடுதி இருக்கும் என்று என்னமோ இங்கேயே பிறந்து வளரந்து இருப்பது போல் சமாதானம் சொல்லி அறை எடுத்திருந்தான் அப்போது. தியாகராஜ சாஸ்திரிகள் தான் ஒரே நாளில் அதை காலி செய்ய வைத்து, மீதி ஒரு வாரம் காலேஜ் ஹவுசில் சௌகரியமாகத் தங்கி இருக்க வழி செய்தவர்.

நான் இந்தத் தடவை தனியா வரேன். ரூம் ரிசர்வேஷன் கிடைக்குமா?

கடிதம் எழுதித் கொச்சு தெரிசா அவரைக் கேட்டிருந்தாள். இங்கே எல்லாம் ரூம் ரிசர்வேஷன் கிடையாது என்று எழுதினார் சாஸ்திரி. எனினும் வரப் போகும் தேதி குறிப்பிட்டு கொச்சு தெரிசா எழுதிய கடிதம் கிடைத்ததுமே நேரே வந்து, அவள் தங்கி இருக்க எல்லா ஏற்பாடும் ஓசைப்படாமல் செய்து விட்டார் அவர்.

இன்னும் நேரம் நிறைய இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துண்டு, ஒரு ஏழரை எட்டு மணிக்கு ரெடியா இருங்கோ. போனேன் வந்தேன்னு நான் ஓடி வந்துடறேன்

நீங்களும் ஒரு ரூம் எடுத்துக்கலாமே அண்ணா? பணம் பற்றி கவலை ஏதும் வேணாம். இது கூட ஒரு சகோதரியா நான் செய்ய மாட்டேனா?

உள்ளபடிக்கே அவரைப் பிரியமாக சகோதரனாக வரிந்தாள் கொச்சு தெரிசா.

நானா, ரூமா? எதுக்கு? நம்ம ஊர் தானே. இப்படியே காலாற வைகைக் கரைக்கு போய் ஒரு முழுக்கு போட்டுட்டு எங்கம்மா மீனாட்சியை ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வந்துடறேன். மத்ததெல்லாம் அப்புறம் தான். சொக்கனைப் பார்க்கலேன்னாலும் பாதகமில்லை. இவளைப் பார்க்காம இருக்கவே முடியாது.

ஒரு ஆணாக இருப்பதின் சௌகரியங்களும் சலுகைகளும் இங்கே தனி தான். இருக்கிற வட்டத்துக்குள்ளே தான் ஒரு பெண்ணாக சுகம் கொண்டாடிக் கொண்டு, நிலை நிறுத்திக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அது சரி, ஓடுகிற நதியில் போய் ஒரு நிமிடம் அமிழ்ந்து குளிக்கக் கூட முடியாதா?

நான் ஆற்றங்கரைக்கு வந்தா குளிக்க இடம் இருக்குமா? கேட்டே விட்டாள்.

சாஸ்திரி யோசித்தார்.

மணல் எதேஷ்டமா உண்டு. ஆனா தண்ணி தான் வரத்து கம்மி. அடிச்சு பொரண்டு ஓடினா, ஸ்திரிகளும் ஓரமா நின்னு ஆத்துலே இறங்கறது உண்டுதான். ஆனால், இப்போ ஊற்றுத் தோண்டி இல்லையா குளியும் மத்ததும்?

குதிரை வண்டி ஸ்டாண்ட் வந்திருந்தது. முதல் வண்டியில் கொச்சு தெரிசாவின் பெட்டியும் லெதர் பையும் ஏற்றிய போர்ட்டர் கூலிக்காக சண்டையை எதிர்பார்த்தோ என்னமோ தியாகராஜ சாஸ்திரிகளைப் பார்த்தபடி நிற்க, முழு பத்து ரூபாய் எடுத்து நீட்டினாள் கொச்சு தெரிசா. மதுரைக்கு வந்ததும் கொச்சு தெரிசாவுக்குக் கிடைத்த முதல் வாழ்த்து போர்ட்டரிடம் இருந்து வந்ததுதான்.

தியாகராஜ சாஸ்திரி குதிரை வண்டிக்காரனையும் கொச்சு தெரிசாவையும் பொதுவாகப் பார்த்துக் கொண்டு முக்கிய நியாயத் தீர்ப்பாகச் சொன்னார்-

பக்கத்துலே தான் டவுண்ஹால் ரோடுன்னு தெரியும்’பா. ஆனாலும் இவங்க மூட்டை முடிச்சோட மூச்சு வாங்க நடக்க வேண்டாம்னு தான் வண்டி சவாரி. ரெண்டு ரூபா கொடுங்கோ குதிரை வண்டிக்கு. போதும். சில்லறை இருக்கோ?

இருக்கு என்றாள் கொச்சு தெரிசா. ஆனால் டவுண்ஹால் ரோடு ஹோட்டல் வாசலில் இறங்கும் போது பத்து ரூபாய்த் தாளை எடுத்து வண்டிக்காரரிடம் கொடுத்து மதுரை நகரத்தின் அடுத்த வாழ்த்தையும் பெற்றாள் அவள்.

காலேஜ் ஹவுஸில் சிப்பந்திப் பையனில் இருந்து கீழே உணவு விடுதி சர்வர்கள் வரை அவளைப் போன பயணத்தில் இருந்து நினைவு வைத்திருந்தார்கள். போகும்போது கை நிறைய டிப்ஸ் கொடுத்துப் போனதால் மட்டும் வந்ததில்லை இது. வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு மதாம் அம்மை கனிவாக உள்ளூர்க் காரர்களோடு பேச, பழக, அவர்களோடு சாப்பிட, காப்பி குடிக்க என்று இருக்கும் சகஜம் காரணம் வந்தது. அவர்கள் எல்லோரும் நண்பர்கள் இல்லாவிட்டாலும் அவளுக்கு வேண்டி நல்லதை நினைக்கிற, பரிச்சயமான நல்ல மனுஷர்கள்.

அரை மணி நேரத்தில் குளியல் முடித்து சுங்குடிப் புடவை பாந்தமாக உடுத்தி, அறையில் இருந்து கிளம்பி விட்டாள் கொச்சு தெரிசா. கீழே உணவு விடுதியில் டம்ளரில் ஊற்றி தலைகீழாக காலி டபராவில் அழுத்தி சீல் செய்த காப்பியைப் பார்த்ததுமே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. டம்ளரை மிக மிக மெதுவாக, காப்பி பீறிட்டு மேஜையில் சிதறாமல் டபராவில் நிறைத்தபோது இன்னும் கூடுதல் சந்தோஷம். பக்கத்து மேஜையில் வெள்ளைத் தோலும், ஸ்கர்ட்டும், தொப்பியுமாக யாரும் உண்டோ? இல்லை கொச்சு தெரிசா நீ டபராவை வாய்க்கு உயர்த்தி ரோமானியர்கள் மதுபானம் செய்கிற தோதில் காப்பி குடி.

உதய கால நேரம் நாலே முக்கால் மணி தான் ஆகியிருக்கிறது. ஏழரை மணிக்கு தியாகராஜன் வரும்வரை என்ன செய்யலாம்?

கோவிலுக்குப் போய் வாங்க அம்மா. விடிகாலை தரிசனம் விசேஷமா இருக்கும். கூட்டமும் அவ்வளவு அதிகமா இருக்காது இப்போ. வழி தெரியாதா? மதுரையிலே என்ன வழி விசாரிக்க? கோவிலைச் சுத்தி தாமரைப் பூ மாதிரி சுருண்டு சுருண்டு ஊர். அடுக்கு அடுக்கா வீதி. அம்புட்டுத்தான்.

சர்வர்கள் ஏகக் குரலில் தீர்மானம் நிறைவேற்றி அவளை கிளம்ப வைத்தார்கள். குதிரை வண்டி கொண்டு வரச் சொன்னாள் கொச்சு தெரிசா.

என்னத்துக்கு? இது டவுண்ஹால் வீதி.நேரே நடந்து போனா ஆவணி மூல வீதி. அது மேலக் கோபுரத்துக்கு கொண்டு போய் விடும். மிஞ்சிப் போனா பத்து நிமிஷம். தெரு வேடிக்கை பூரா பார்த்துக்கிட்டு போங்க. கேமரா உண்டுதானே?

நல்ல யோசனை தான். நடக்கத் தலைப்பட்டாள் கொச்சு தெரிசா. காமிராவை எடுத்து வந்து போகிற இடம் எல்லாம் படம் பிடிக்கும் சுற்றுப் பயணிகளுக்கான ஆவலும் ஆர்வமும் போன இடம் தெரியவில்லை. சொந்த ஊரில், சொந்த வீட்டில் மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்து வைத்துக் கொள்வார்களா என்ன? யாருக்குக் கொண்டு போய்க் காட்ட அதெல்லாம் வேண்டியிருக்கிறது?

கடை வாசல்களைக் கூட வீட்டு வாசல்கள் போல், கரிசனத்தோடு கூட்டிப் பெருக்கி, குளிரக் குளிரத் தண்ணீர் எடுத்து விசிறித் தெளிப்பதும், நீர் நனைத்த படிகளில் நேர்த்தியாகக் கோலம் போடுகிறதும் கண்ணில் பட கேமிராவை எடுத்து வந்திருக்கலாமே என்று தோன்றியது கொச்சு தெரிசாவுக்கு. படம் எடுத்து எதற்கு வேற்று மனுஷர்களுக்குக் காட்டி ஆனந்தப்பட வேணும்? தானே பார்த்து மகிழலாமே.

இன்னும் திறக்காத கடை வாசலில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பவரை எப்படியோ கொச்சு தெரிசா அறிவாள். தேஜா உ தானா என்றால் தெரியாது. இந்தக் கடைத் தெருவும், வாசல் தெளிக்கும் பெண்கள் இழுத்து வார்த்தைகளை நீட்டிப் பேசும் குரலும், புல்லாங்குழலும், மண்ணில் நீர் பட்டு எழும் வாசமும் எல்லாம் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவை. எங்கே?

மேலக் கோபுர வாசலில் மணக்க மணக்க அல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்த இளம்பெண் கொச்சு தெரிசாவைப் பார்த்தாள். ஒரு வினாடி பூத்தொடுப்பதை நிறுத்தி இன்னொரு பூவாக மலர்ந்து சிரித்தாள் அவள்.

அக்கா, பூ வாங்கி வச்சுட்டுப் போங்க. மனசுக்கு நிறைவா மனோரஞ்சிதம் இது.

கொச்சு தெரிசா பூ வாங்கினாள்.

இதைக் கையிலேயே வைத்துக் கொண்டு கோவிலுக்குப் போய் அப்புறம் கண்காணாத இடத்தில் போட்டு விடலாம் என்று நினைப்பு. கண்ணில் தட்டுப் படுகிற பெண்கள் எல்லோரும் தலையில் பூச்சூட்டி இருக்கிறார்கள். இந்த மிதமிஞ்சிய வாசனையோடு நடக்க முடியுமா, சுவாசித்துக் கொண்டிருக்க முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கைப்பையில் கைவிட்டுத் தேட, மூன்று பத்து ரூபாய் தாள்கள், கிட்டத்தட்ட பத்திரிகையை எட்டாக மடித்த வடிவத்தில் பெரிசு பெரிசாகத் தட்டுப் பட்டன.

இது போதுமா இருந்துதுன்னா வச்சுக்கோ. இன்னும் வேணும்னா சொல்லு.

பூத்தொடுக்கும் பெண்ணிடம் சொல்ல, அவள் செல்லமாக கொச்சு தெரிசாவைக் கோபிக்கிறவளாக உதட்டைச் சுழித்தபடி அவளையே பார்த்தாள். அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு கூடப் பிறந்தவள் போல, உயிர்த் தோழி போல கொண்டாட வேண்டும் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றியது.

அக்கா, இந்தப் பூவுக்கு நீங்க கொடுக்கற காசு நான் விலை வைச்சு விக்கறதை விட ரொம்ப ரொம்ப அதிகம். இவ்வளவு எல்லாம் கொடுத்து என்னைக் கெடுத்திடாதீங்க நாச்சியா. ரெண்டு ரூபா கொடுங்க, போதும் மகராசி.

அவள் இரண்டு விரலை நீட்டியதைப் புரிந்து கொண்டு இன்னும் இரண்டு பத்து ரூபாய் நீட்டினாள் கொச்சு தெரிசா. பூக்காரிப் பெண் டூ ரூபீஸ் டூ ருபீஸ் என நினைவு வந்த இங்கிலீஷில் தடுமாற, இது கொச்சு தெரிசா சிரிக்கும் வேளை.

அந்தப் பெண் எழுந்து நின்று கொச்சு தெரிசாவை அருகில் கூப்பிட்டாள்.

அக்கா பெயர் என்ன?

கொச்சு தெரிசா.

நான் மீனு. மீனம்மா.

மீனு கொச்சு தெரிசாவைத் திரும்பி நிற்கச் சொல்லி விட்டு அவள் கூந்தலில் பாந்தமாக அவள் வாங்கிய பூவைச் சூட்டி விட்டாள்.

உங்க தலைமுடிக்கு இன்னும் கூட வைக்கலாம். கதம்பம் ஜோரா இருக்கும். இருங்க அக்கா.

அவளாகப் பரிசாகக் கொடுப்பதையும் கொச்சு தெரிசாவுக்கு வைத்து விட்டாள்.

விழுந்துடாம நடப்பீங்களா அக்கா? நீங்க இல்லே. தலையிலே பூவு

ரொம்பப் புரிந்தது போல் தலையாட்டினாள் கொச்சு தெரிசா.

எங்கே, சொன்னா மட்டும் ஆச்சா, விழுந்துடும் இதெல்லாம். எதுக்கு வம்பு? யக்கா, செத்தெ நில்லுங்க

அந்தப் பெண் வில்லில் அம்பு எய்வது போல் அபிநயித்து தன் தலையில் வைத்திருந்த ஹேர்பின் இரண்டை உருவி எடுத்து கொச்சு தெரிசா தலைக்கு இடம் மாற்றினாள்.

கொச்சு தெரிசாவுக்கு குளிப்பாட்டித் தலை துடைத்து விட்ட தீபஜோதிப் பாட்டித் தள்ளை நினைவு வந்து நீங்கிப் போனாள்.

இந்த ஹேர்பின்னுக்கு காசு? கொச்சு தெரிசா மென்று விழுங்கினாள். பூக்காரி அவளை வேடிக்கையாகப் பார்த்தாள். அவள் பின்னலைப் பிடித்து இழுத்து விட்டுச் சொன்னாள் –

இப்போ அம்சமா இருக்கு அக்கா.

கொச்சு தெரிசா தேங்க்ஸ் சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினாள்.

நில்லுங்க. நில்லுங்க.

அவசரமாகக் குனிந்து புது ரோஜாப் பூ ஒன்றையும் பூத்தட்டில் இருந்து எடுத்து அவள் காதோரம் சாய்வாகச் செருகி, தான் செய்த அலங்காரத்தைத் தானே ரசித்துச் சிரித்துத் தலையாட்டினாள் பூக்காரிப் பெண். கொச்சு தெரிசா கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சொல்லி அவள் வழி அனுப்பியது –

கோவிலுக்குப் போய்ட்டு வரும்போது ஞாபகமா ஹேர்பின்னை கொடுத்துடணும் அக்கா. ஒன்ணொண்ணும் ஒரு கோடியே அம்பதாயிரம் ரூபாய் விலை.

விடிகாலையில் பூவும் நாருமாகத் தட்டில் போட்டுக் கொண்டு தெரு ஓரத்தில் பூக்காரி ஒருத்தி சிரித்துக் கொண்டிருப்பதை உள்ளூரோ, வெளியூரோ, கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்த ஒருத்தர் விடாமல் ரசித்தபடி போனார்கள்.

சிரிப்புக்கு ஈடுபாட்டைத் தாராளமாகக் காட்டாமல் எதற்கு மனசைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேணும்? விடிகாலை நேரத்தில் மனதை சுத்தமாகப் பெருக்கித் தெளித்துக் கோலமிட்டு சம்மணமிட்டு உட்கார்ந்து புல்லாங்குழல் வாசிப்பது இல்லையா அந்தச் சிரிப்பு.

கொச்சு தெரிசா நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் இன்னும் சிரிப்பு ஓயாமல் கையாட்டினாள்.

வெளிப் பிரகாரக் கடைகளில் கூப்பிட்டுக் கூப்பிட்டு தட்டு வாங்கிப் போகச் சொன்னார்கள். தேங்காயும், நாட்டு வாழைப்பழமும், வெற்றிலையும், ஒரு கண்ணி பூவுமாக இருந்த தட்டுகளை அர்ச்சனைக்கு எடுத்துப் போய்த் திருப்பும் போது காசு கொடுத்தால் போதும் என்று சுமார் ஆங்கிலத்தில் ஒரு கடைக்காரர் சொன்னார். கூடவே இந்தியிலும் அவர் பக்கத்தில் இன்னொரு கடைக்காரர் நிதானமாகக் கூறினார். எல்லா மொழியிலும் பேச, வியாபாரம் செய்ய, சிநேகம் பாராட்டத் தயாராக, அதிகாலையிலேயே சுறுசுறுப்பாக நிற்கும் நகரத்தை எத்தனை முறை தான் வியப்பது.

ஒரு தட்டு போதும் என்றாள் கொச்சு தெரிசா.

இல்லே அக்கா, ரெண்டா வாங்கணும். முதல்லே மீனாட்சி ஆத்தாளுக்கு. அப்புறம் சொக்கநாதன் சுந்தரேசன் அப்பாருக்கு. ரெண்டு பேரும் நமக்கு வேணுமில்லே.

இரண்டு பனையோலைத் தட்டுகளில் ஆராதனைக்குப் பொருள் பரப்பி ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு கொச்சு தெரிசா பிரகாரம் சுற்றிப் போனபோது முன்னால் தியாகராஜ சாஸ்திரிகள் வேகவேகமாகப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

தியாகராஜன் அண்ணா.

அவள் இரண்டு தடவை குரலை உயர்த்திக் கூப்பிட, யாராரோ பார்த்தபடி போனார்கள். அவளுடைய இங்கிலீஷ் கவனம் ஈர்த்த காரணமாக இருக்கலாம்.

படிந்து விலகிய வெட்கத்தோடு நடையை எட்டிப் போட்டு அண்ணா, நில்லுங்க என்று மறுபடி சொல்லியபடி தியாகராஜ சாஸ்திரிகள் பக்கம் நடந்தாள். அவரானால், நேரே பார்த்தபடி கால் சற்றே விந்தி நடந்து கொண்டிருந்தார். ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தபோது சாதாரணமாகத் தானே இருந்தார். அப்புறம் காயம் பட்டுக் கொண்டிருப்பாரோ.

தியாகராஜன் அண்ணா. அரசூர் தியாகராஜ சாஸ்திரி அண்ணா?

சந்தேகம் சற்றே குரலில் தெறிக்கக் கொச்சு தெரிசா கேட்டாள். அவரே தான்.

நான் அரசூர் தான், ஆனா தியாகராஜன் இல்லே. சுந்தரேசன். சுந்தர கனபாடிகள்னு சொல்வா வாத்சல்யமா. பிரியமா அண்ணான்னு வாய் நிறைய அழைக்கறே. நான் கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா உனக்கு. தாயே பரதேவதே. அன்னபூரணி. மீனாக்‌ஷி. விசாலாக்‌ஷி. ஷேமமா இருடீம்மா.

அவரை அப்புறம் கொச்சு தெரிசா எங்கேயும் பார்க்கவில்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன