New Short Story : வைக்கோல் கிராமம் இரா.முருகன்

( விருட்சம் – 100 சிறப்பிதழில் பிரசுரமானது – அக்டோபர் 2016)

இரண்டாவது முறையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். கனவுகளில் இந்த ஊரைக் கடந்து போவது நிறைய நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் ஊர்ப்பொதுவுக்கு மேலே பறந்து, அவசரமாகக் கடந்து, கடலும் நதியும் சந்திக்கும் முகத்துவாரத்துக்குப் போய் விடுவேன். போன வாரம் கூட நடுநிசிக்கு ஆளில்லாத இந்த ஊரைக் கனவில் கடந்தபோது, புதிதாக முளைத்த வைக்கோல் பொம்மைகளைப் பார்த்தேன். அவை எல்லா நிறத்திலும் பளபளத்து நிற்பவை.

எத்தனையோ வருடம் முன்னால் இளைஞனாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். என் சொந்த ஊரில் தேரோட்டம் முடிந்த அடுத்த நாள் அது. அப்போது நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். பட்டப் படிப்புக்காக இல்லை. புகுமுக வகுப்பு. பள்ளிக்கூடத்தை விட எல்லா விதத்திலும் மாறுபட்டது கல்லூரி என்பதையும் பையன்கள் படிக்குமிடம் பள்ளி என்றால் இளைஞர்கள் படிக்கக் கல்லூரி என்பதையும் உணர்த்தவோ என்னவோ ஓராண்டே நடக்கும் புகுமுக வகுப்பு. ஒரு சௌகரியத்துக்காக ஆண்களை மட்டும் உதாரணம் சொன்னேன். புகுமுக வகுப்பில் பள்ளியிறுதி வகுப்பு முடித்து வந்த பெண்களும் இருந்தார்கள்.

முதல் தடவை வந்தபோது ஆளில்லாத இந்த ஊர்த் தெருக்கள் அச்சமூட்டின. அதுவும் கடல் போலக் கூட்டம் பெருகி வந்த தேரோட்டத்தில், எல்லாத் திசையிலும் சந்தோஷமாகச் செலுத்திப் போகப்பட்டு, கும்பல் மெல்ல வடியும் காலை நேரத்தில் புறப்பட்டு இங்கே வந்தபோது, அந்தச் சத்தத்தையும் நெரிசலையும் ஒருமித்து எழும்பிய வியர்வை வாடையையும் மனதில் எடுத்து வந்திருந்தேன். இங்கே மனுஷர்கள் யாருமில்லை. பூசணிக்காய் காய்த்த வயல்களில் நீள மூங்கிலில் சார்த்தி நிமிர்த்தி உயர்த்திய வைக்கோல் பொம்மைகள் மட்டும் கண்ணில் தட்டுப்பட்டன. வீடுகளுக்குப் பின்னாலும் சின்னத் தெருக்கள் முடிந்து திரும்பும் இடத்திலும் வயல்களும், செழித்து வளர்ந்து கிடந்த சாம்பல் பூசணிக்காய்களும், வைக்கோல் பொம்மைகளும் மட்டும் கண்ணில்பட அமைதியாகக் கிடந்தது ஊர். என்னமோ மனதில் தோன்ற, குரல் எடுத்து அழுதேன் அப்போது. புகுமுக வகுப்பு படிக்கும் இளைஞன் செய்யக் கூடியதில்லை அழுவது. ஆனால் வெற்றுவெளி ஏங்கி விதும்ப வைத்து விட்டது.

அப்போதுதான் தான் கவனித்துக் கேட்டேன். வீடுகளில் இருந்து பேச்சுக் குரல் எழுந்தது. நான் தான் தவறாக முடிவு செய்து விட்டேன். யாருமில்லாமல் ஊர் இருக்குமா என்ன? என்ன காரணமோ, எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். பேசுகிறார்கள். வெளியே வராமல் இருக்க என்ன காரணம்? வெட்டுக் கிளிகளின் தாக்குதலாக இருக்குமோ?

அப்போது, பயத்தோடு நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். வெட்டுக்கிளிகள் வந்திருக்கவில்லை. அவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால்?

போன தடவை இங்கே முதல் தடவையாக வந்திருந்தபோது உடலில் வலு இருந்தது. இருபது வயதுக்கே உரிய வலிமை அது. உண்பது எல்லாம் உடம்பில் வலு ஏற்றுகின்ற காலம் அது. அரிசிச் சோறு மட்டும் என்றில்லாமல் வரகரிசி, கேழ்வரகு, கம்பு என்று ஆக்கிக் கொடுத்ததை எல்லாம் ரசித்துத் தின்பேன்

அப்போது. சாப்பாடு மட்டுமில்லை, எது எது, என்ன என்ன என்று முழுக்க ஆராய்ந்து சொந்த அனுபவத்தில் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இருந்தது. ஆளில்லாத இடத்தில் குரல்கள் எங்கிருந்து வந்தன என்று தெரிந்து கொள்ளவும் அதே ஆவலோடு அந்த வீடுகளில் முதலில் இருந்ததற்குள் ஓடினேன்.

சுத்தமான, வெளிச்சம் மிகுந்த, காற்றோட்டமான வீடு அது. சிறிய மனையும் கூட. வீட்டுக்குள் நுழைந்ததுமே ஹாலில் ஈரத்துணி வாடை. பெருமழை பெய்வதால் துவைத்த துணிகளை வீட்டுக்குள்ளேயே கொடி கட்டி உலர்த்த வேண்டிய கட்டாயத்தின் பேரில் ஏற்படுத்தியது போல, குறுக்கும் நெடுக்குமாகக் கொடிகள். அவற்றில் துவைத்து உலர்த்தி இருந்தவை வகை வகையான ஆனால் எல்லாமே பழைய உடைகள். சலவைக்கு பயன்படுத்திய சவுக்காரத்தின் வாடை வீட்டுக்குள் பலமாக மூக்கில் குத்தியது. பேசும் ஒலிகள் திரும்பக் கேட்டன.

நான் மகாராஜன் சலவை சோப்பை உபயோகிக்கத் தொடங்கி விட்டேன் என்று பெண் குரல் மகிழ்ச்சி பொங்கச் சொன்னது. விலை அதிகம் என்று ஆண் குரல் குறைப்பட்டுக் கொண்டது. மற்ற சவுக்காரம் போலச் சீக்கிரம் கரையாது, ஒரு சவுக்காரப் பாளம் ஒரு மாதம் வரும். ஆதலால் செலவு கம்மி என்று பதில் சொன்னது பெண். வெள்ளை வெளேரென்று சலவை வருமா என்று சந்தேகம் கேட்கிற ஆணுக்கு, கண்ணைப் பறிக்கும் சலவை, தாழம்பூ வாசனையும் கூட சேர்ந்து வருகிறது என்று தொடரும் மகிழ்ச்சியில் பெண் அறிவிக்கிறாள். அப்படியானால் இன்னும் ஒரு வருடம் பயன்படுத்த மகாராஜன் சவுக்காரத்தை இதோ வாங்கி வருகிறேன் என்று சைக்கிள் மணி ஒலிக்கச் சொல்லி ஆண்குரல் தேய்கிறது. பனிரெண்டு பாளம் மகாராஜன் சவுக்காரம் வாங்கினால் குங்குமச் சிமிழ் பரிசு. மேலும் குலுக்கல் முறையில் தங்கச் சங்கிலி வெல்ல வாய்ப்பு. பெண் குரல் பின்னும் மகிழ்ச்சியோடு சொல்ல, நான் அந்தக் குரல்கள் எங்கே இருந்து வந்தன என்று அப்போது கண்டு பிடித்திருந்தேன்.

கூடத்துச் சுவரில் நல்ல உயரத்தில் ஒரு விசாலமான மாடப்பிறை இருந்தது. மற்ற சில ஊர்களில் வயோதிகத்தில் உடல் சுருங்கிய வீட்டுப் பெரியவர்களை இங்கே உட்கார்த்தி, படுக்க வைத்து ஒரு மாதிரி மற்றவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் என்னமோ ஒச்சை அடிக்கும் அந்த மாடப்பிறைகளை அடுத்துப் போய்ப் பார்க்கத் தோன்றியதே இல்லை. தெருவின் முனையில் குவித்து வைத்த பழத் தோலும், எச்சில் இலையும், அழுகிய தக்காளிகளும் ஒரு நாள் மழையில் ஊறி எழுப்பும் துர்வாடை அது. ஒரு கல்யாணத்தில் வயசன் ஒருத்தன் சோற்றில் மோரைப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதே நாற்றம் மூக்கில் பட்டது. வயதானவர்களையும் கல்யாண விருந்தையும் புறக்கணிக்க அப்போது முடிவு செய்தேன். மாடப்பிறையிலும் அதே வாடை . குரல் வந்த இடம் அந்த மாடப்பிறை தான். வாடை ஒவ்வாமல் போனாலும் மேலும் கவனிக்க நினைத்தேன். சொன்னேனே, அப்போது நல்ல யௌவனமாக இருந்தேன். வீட்டுக் கூடத்தில் கதவுகள் திறந்து உள்ளே ஒன்றுமில்லாமல் இருந்த மர பீரோவை இழுத்து அதன் மேலேறி மாடப்பிறைக்குள் பார்த்தேன். அங்கே பெரிய டிரான்ஸிஸ்டர் ரேடியோ ஒன்று சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மகாராஜன் சோப் விளம்பரம் அதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்டபடி இருந்தது. வெளியே வந்து அடுத்த வீட்டில் புகுந்தேன். அங்கேயும் கொடிகள், ஈரத் துணிகள். மகாராஜன் சோப் விளம்பரத்தோடு டிரான்சிஸ்டர் ரேடியோ. பாடல்கள் ஏதும் ஒலிக்கவில்லை.

இதெல்லாம் இருபது வருடம் முன்பு இங்கே முதல் தடவையாக வந்த போது. ஆளில்லாத, டிரான்சிஸ்டர் ஒலிக்கும் இந்த் ஊரில் அப்போது பகல் சாப்பாட்டு நேரம் வரை இருந்தேன். எடுத்துப் போயிருந்த பகல் உணவை சைக்கிள் கேரியரில் இருந்து எடுத்துக் கொண்டு சுற்றிலும் சிறிதும் பெரியதுமான வயல்களில் வைக்கோல் பொம்மைகள் நிற்கும் பரந்த வெளியில் ஒற்றை மரத்துக்குக் கீழே அமர்ந்தேன். உலர்ந்து போயிருந்த இட்டலிகளைச் சாப்பிடும் போது அந்த பொம்மைகள் ஒரே நேரத்தில் தலை சாய்த்து என் பக்கம் பார்த்தபடி இருந்தன. அவை ஒரே குரலில் மகாராஜன் சவுக்காரத்தை வாங்கச் சொல்லி என்னிடம் மன்றாடின அப்போது. சொன்னேனே, இருபது ஆண்டு முன்.

இப்போது இங்கே இருக்கிற வைக்கோல் பொம்மைகள் எப்போதும் பேசாதவை, யாரோடும் எதுவும் கோரிக்கை வைக்காதவை என்று உணர்ந்து கொண்டேன். அவை உடுத்திருந்த துணிகள் ஆடம்பரம் மிகுந்தவை. பழைய பொம்மைகள் போல் கிழிந்த, உடுத்திக் கழித்த கால் சராய்களையும், நைந்து போன சட்டைகளையும் அணிந்து நிற்கிறவை இல்லை இவை. ஒன்றிரண்டு, விலையுயர்ந்த காலணிகளையும் அணிந்திருந்தன. அவை நின்ற வயல்களை அடுத்து இருந்த வீடுகள் புது வர்ணம் அடித்ததாக இருந்தன. அழுத்தமான பழுப்பும் வெளிறிய மஞ்சளும், கத்தரி நிறமுமாக உடுத்து நின்ற அந்த வைக்கோல் பொம்மை ஒன்று கூட வயிற்றுப் பக்கமோ பிருஷ்டத்திலோ துணி பிய்ந்து வைக்கோல் வெளியே தெரியவில்லை. ஆச்சரியமான விஷயம் இது – அவற்றில் சீராக உடுத்த பெண் பொம்மைகளையும் முதல் தடவையாகப் பார்த்தேன். தலை குளித்து உலர்த்திக் கொண்டிருக்கும், ஜீன்ஸ் அணிந்தவர்கள்.

வெட்டுக்கிளிகளின் பெரிய திரள் என் பின்னால் பறந்து வருவதாக பலமாக ஒரு நினைப்பு வந்து கவிய விதிர்விதிர்த்துத் திரும்பிப் பார்த்தேன். எதுவும் இல்லை.

பத்து நாள் முன்பு, ஏன், ஒரு மாதத்துக்கு முன்பு என்றே சொல்லலாம், மலைச் சரிவில் ஒரு சிறு கிராமத்தில், ஊர்ப்பொதுவில் எல்லோரும் வந்திருந்த ஒரு சாயந்திர நேரத்தில், வெட்டுக்கிளிகளின் மிகப்பெரும் திரள் வந்து இறங்கியது. அரை மணி நேரம் சென்று அவை பறந்து போகும் வரை அந்தக் கிராமத்தில் இருந்து கூட்டமாகப் பலர் அலறும் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தாலும் நாங்கள் அங்கே போகவில்லை. ராத்திரி ஊர் திரும்ப பஸ் வராத இடம் அது.

அடுத்த நாள் காலையில் அந்த வழியாக நகரத்துக்கு பஸ் ஏறிப் போனவர்கள் சொன்னார்கள் – கண்கள் இருந்த இடங்களில் துளைகள் மட்டும் எஞ்சிய, உடல் சதை பெரும்பாலும் அரிக்கப்பட்டு எலும்புகளே மிச்சமிருந்த பலரை அங்கே கண்டோம். கொண்டாட்டம் போல் இருக்கிறது. நன்றாக உடுத்தியிருந்தார்கள் அவர்கள் எல்லோருமே. தாள வாத்தியங்களும் நாயனங்களும் கிடந்தன அங்கே.

சதை போய் எலும்பு மட்டுமிருக்க, உயிர் இல்லாமல் போனவர்கள் உடுத்திய ஆடைகளைப் பாரட்டத் தேவை என்ன என்று எனக்குப் புரியவில்லை இன்னும்.

அந்த உடுப்புகள் மிக நேர்த்தியானவை. பாராட்டப்பட வேண்டியவை.

என் வழியிம் அருகே ஓங்கி உயர்ந்த மூங்கிலில் சார்ந்து நின்ற வைக்கோல் பொம்மை மெல்லிய குரலில் என்னிடம் சொன்னது. நான் வெய்யில் கண்ணில் பட நிமிர்ந்து பார்த்தேன். அது ஒரு பெண் பொம்மையாக இருந்தது.

நான் இந்த ஊருக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன்.

ஏனோ அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றச் சொன்னேன். அப்போது நான் பிறந்திருக்கவில்லை என்றாள் அவள். போன மாதம் என்னை உருவாக்கி நிறுத்தினார்கள் என்றும் கூட்டிச் சேர்த்தாள்.

எந்த நாளில்? சொன்னாள். அவள் கூறிய நாள் வெட்டுக்கிளிகள் மலைச்சாரல் ஊரை அழித்த தினம்.

அவர்களில் இரண்டு பேர் அணிந்த உடைகளே நான் அணிந்திருப்பது.

அவள் சிரித்தபடி சொல்ல நான் அரண்டு போய்ப் பார்த்தேன்.. இந்த உடைகளுக்கு உள்ளே வெட்டுக்கிளிகள் ஊர்ந்து சதையைப் பிய்த்தெடுத்து உண்டிருக்கின்றன. வெளியேறிக் கண்களை அகழ்ந்தெடுத்துத் தின்றுள்ளன.

எனில், அது இனி நடக்காது. சதை இல்லை உள்ளே. வைக்கோல் தான்.

அவள் சொல்ல எனக்கு வருத்தமாக இருந்தது. வைக்கோலைப் பார்க்க என்ன இருக்கிறது? சதை பிடித்த உடலோடு அவளைக் கற்பனை செய்ய, ஒரே நேரத்தில் வீடுகளுக்குள் இருந்து சத்தம் உயர்ந்தது. எனக்குத் தெரியும், சவுக்கார விளம்பரம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆர்வம் இல்லாமல் கேட்டேன்.

இது சவுக்கார விளம்பரம் இல்லை. தொடர்ந்து அடர்ந்து மேலேறும் இசையும் நடுநடுவே சங்கு முழங்கும் ஒலியும், மணிகள் ஒலிப்பதும், பெண்களின் சிரிப்பும் எல்லாம் சவுக்காரத்தைக் கொண்டு துணி துவைப்பதோடு ஒத்துப் போகாதவை.

பெண் வைக்கோல் பொம்மை இருந்த வயலுக்கு அடுத்த வீட்டுக்குள் நுழைந்தேன். முன்பு போல் உள்ளே ஆர்வத்தோடு ஓடவில்லை. அங்கே யாரும் இருக்கப் போவதில்லை என்று தெரியும். மாடப்பிறையில் இருக்கும் டிரான்சிஸ்டர் ரேடியோவை மட்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது. இந்தப் பத்தாண்டுகளில் எங்கும் ஒரு ரேடியோ கூடக் கண்ணில் பட்டதில்லை.

வீட்டுக் கூடம் துடைத்து விட்டது போல் கிடந்தது. ஆனால் துணிகள் உலர்த்திய கொடிகள் அங்கே இல்லை. பார்வையை உயர்த்தினேன். மாடப்பிறை இருந்த இடத்தில் சுவர் முழுமையாக எழும்பி இருந்தது. அங்கே ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டி சத்தத்தோடு இயங்கிக் கொண்டிருந்தது. கனைக்கும் குதிரைகளும், மெல்ல ஊரும் தேர்களும், கச்சை அணிந்த மாதரும், நீண்டு வளர்ந்த வெண் தாடி முதியவர்களுமாக நிகழ்ச்சி.

தாடியைத் தடவிக் கொண்டு ஒரு முதியவர், கட்டுக் குலையாமல், பக்கவாட்டுத் தோற்றத்தில் அடுத்து நின்ற இளம் பெண்ணிடம் நமுட்டுச் சிரிப்போடு சொன்னார் –

புகையிலைக் காரத்தைப் பன்னீரில் கழுவி அகற்றி, தங்கத்தைச் சுட்டுத் தேனோடு கலந்து இந்தத் தாம்பூலப் பொடி செய்ய எனக்குப் பழைய அறிஞர்களின் ஓலைச் சுவடிகள் பயன்பட்டன. பெண்ணே, உன் முதலிரவுக்கு இது உன் கூட இருக்கட்டும். அப்புறம் தினம் தினம் முதலிரவு தான்.

அந்தப் பெண் நாணத்தோடு பதில் சொல்கிறாள் –

என் அவர் வெற்றிலை கூட மெல்லுவதில்லை.

தாடிக்காரர் பின்னும் விஷமமாகச் சிரித்தபடி ஒரு சிட்டிகை ஏதோ பொடியை வாயில் போட்டுக் கொண்டு லகரியோடு அரைக்கண் மூடிப் பேசுகிறார் –

ஐந்து விரல் நீள, உள்ளங்கை அழுத்தித் தொடத் தடவி விரித்துச் சுவைக்க வெற்றிலையும் வேண்டாம், இது இருந்தால்.

திரை முழுக்க ஊரும் பெட்டகத்தில் ஜர்தா பான்- புகையிலப் பொடி என்று எழுதி இருக்கிறது.

அந்தப் பெண் முகம் நேராக எனக்குத் தெரிந்தது. வாசலில் செருகி வைத்த வைக்கோல் பொம்மை அவள் தான். என்னோடு பேசியவள் இப்போது என்னை விழுங்குவது போல் பார்க்கிறாள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு என்று என்னிடம் அவள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருந்து புகையிலைப் பொடியை நீட்டுகிறாள். நான் வேண்டாம் என்றபடி வெளியே ஓடி வந்தேன்.

ஒரு பெரிய திரளாக வெட்டுக்கிளிகள் வாசலை அடைத்து எனக்காகக் காத்திருக்கின்றன. அந்தப் பெண் வைக்கோல் கை நீட்டி என்னை வாசலுக்கு பத்திரமாக இழுத்துப் போகிறாள். தசைக்குத் தான் அவை வரும், வைக்கோலுக்கு இல்லை என்கிறாள், நகமில்லாத விரல்களால் என் கன்னத்தை வருட, வெட்டுக்கிளிகள் இல்லாத வெளியில் சூரிய ஒளி தகதகக்கிறது.

நன்றி சொல்லி விட்டு நான் நகர, என் கால்கள் முன்னால் போக மறுக்கின்றன. நான் குனிந்து பார்க்க, இடுப்பைச் சுற்றி, இடுப்புக்குக் கீழே வைக்கோல் அடைத்து கால்சராயும், காலணியும் விளிம்பு பிதுங்கி நிற்கின்றன. வயிற்றுக்கு மேலும் வைக்கோல் நிறைந்து கொண்டிருக்கிறது. சதை இன்னும் இருக்கிறது.

உன்னை உயர்த்தப் போகிறோம்.

என் தலையைத் தடவி, தாடிக்காரக் கிழவர் கருணையோடு சொல்கிறார். நான் கண்கள் பனிக்க நன்றி சொல்கிறேன் அவருக்கு

வயதானாலும் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜர்தாபான் வேண்டாமென்றால் பரவாயில்லை. என்னோடு பக்கத்தில் வந்து இரு.

அழகான அந்த வைக்கோல் பெண் சொல்ல, என்னைத் தாடிக்காரர்கள் பத்மாசனத்தில் அமரச் சொல்கிறார்கள்.

இதை மென்று கொண்டிரு. அவள் வயது உனக்கும் வரும்.

கையில் கொட்டப்பட்ட ஜர்தாபான் பொடியை ஆர்வமாக மெல்லுகிறேன் நான்,

என்னை மெல்ல உயர்த்தி வைக்கோல் பெண்ணுக்குக் கண் மட்டத்தில் வைக்க இன்னும் கொஞ்சம் ஜர்தாபான் கேட்டுக் கீழே பார்க்கிறேன். கூர்மையான மூங்கில் என் கால்களுக்கு இடையே நீண்டு மேலே வந்து கொண்டிருக்கிறது.

ஜர்தாபான் ஜர்தாபான் என்று எல்லா வீட்டிலும் இருந்து பாட்டு சத்தம். இந்த மெட்டு எனக்குப் பிரியமானது. எனக்கும் என்கிறாள் பக்கத்தில் அவள்.

அழுக்கும் துர்வாடையும் போகத் துவைத்து, வெளுத்து, உலர்த்தி, உடுத்து வந்த இந்தத் துணிகளை அணிந்து தான் நான் வெட்டுக்கிளிகளுக்கு உணவாவேன்.

அவளிடம் சொல்லும்போது என் உதடுகளில் முத்தமிடும் அவள் உதடுகள் வெட்டுக்கிளி போல் கூர்மையாகப் படிகின்றன. என் கண்களைக் குறிவைத்து நீளும் கரங்களிலும் பிரம்மாண்டமான வெட்டுக்கிளிகள் சவுக்காரம் மணக்கும் சிறகுகளோடு அமர்ந்து என்னைப் பார்த்தபடி இருக்கின்றன.

கழுமுனை உள்ளே துளைத்துப் பாய்ந்து மேலேறிக் கொண்டிருக்கிறது.

(இரா.முருகன்
ஜூன் 2016)

painting credit :Concept done by Dvigatiel, found this over at conceptart.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன