கரையில் சைக்கிளை ஏற்றிக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்தேன். நாலரை அடிதான் உயரம். நெற்குதிர் போல உருண்ட உடம்பு. காதில் கடுக்கன் போட்டவர். மடித்துக் கட்டிய கதர் வேட்டியும், கையில் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவுமாக குளப் படியில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். ரேடியோவில் ஆய் புவான் என்று கொழும்பு நேரம் சொல்லி சிங்களப் பாட்டு உரக்கக் கேட்டது. இலங்கை வானொலியில் தமிழ்ச் சேவை முடிந்து சிங்களம் தொடரும் முற்பகல் நேரம்.
அவரை கேலரியில் உட்கார்ந்தபடி பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா கால்பந்தாட்டப் பந்தயத்துக்கும் வந்து விடுவார். காகிதக் ஆலைக் குழு விளையாடினால் நிச்சயம் அங்கே இருப்பார். அவர்களுடைய விளையாட்டு வீரர்கள் கோல் போடும்போது அவர் சத்தம் உயர்ந்திருக்கும். என்னை ஏனோ அவருக்குப் பிடிக்காது. இதுதான் என் குழு என்று நிரந்தரமில்லாமல், காசு கொடுக்கிற குழுவுக்கு தற்காலிகமாக ஆட அலைவதாலோ என்னமோ.
நான் எந்த டீமில் விளையாடினாலும், நான் சார்ந்த அணிக்கு கோல் கீப்பராக, காகித ஆலைக் குழு பெனால்டி உதையில் அனுப்பும் பந்தைத் தடுத்தால், ‘நாசமாப் போ’ என்று எனக்கு வாழ்த்து கிட்டும். அநேகமாக அவருடைய குரலாக இருக்கும் அந்த ஆசி வழங்குதல். காகித ஆலை அணியில் நான் இருந்தாலே ஒழிய அவருடைய வசவில் இருந்து தப்ப முடியாது தான். ஆனால் அந்த அணி முழுக்கவும், ஆலையில் வேலை பார்க்கும் நிரந்தர ஊழியர்களின் குழு.
நான் சைக்கிளை குளக்கரையில் நிறுத்திய போது பின்னால் கமகமவென்று வீபுதி வாசனை. தெரியும் அவர் தான்.
‘என்ன, மத்தியானம் மேட்ச் இருக்கு போல, நீங்க இப்படி குளக்கரையிலே..’
நேராக விஷயத்துக்கு வந்து விட்டார். அவருக்கு நான் யார், எங்கே இருந்து வந்தேன், இங்கே ஏன் வந்தேன் என்று எதுவும் முக்கியமில்லை. காலில் பந்தைக் கட்டிக் கொண்ட ஒருத்தன். அவருக்கு என்னைக் குறிப்பிட அது போதும்.
‘இன்னிக்கு நடக்க இருந்த மேட்ச் ஒத்தி வச்சிருக்கு சார், அடுத்த ஞாயிறு தான் இனி’
நான் கரையில் ஒரு டர்க்கி டவலை விரித்து உட்கார்ந்தேன். அவரிடம் செய்தி சொல்லும் தொனியை விட மன்னிப்புக் கேட்கிற மாதிரி சொன்னேன் என்று எனக்கே தெரிந்தது. அவர் அதிகாரத்தோடு கேள்வி தொடுத்ததால் என்னிடம் அப்படியான பணிவு வந்திருக்கலாம்.
சாயந்திரம் நாலு மணிக்கு மேட்ச் என்றாலும் கொஞ்சம் முன்னால் போய் பந்தயம் ஏற்பாடு செய்கிறவர்களோடு பேசிக் கொண்டிருப்பது என் வழக்கம். யார் யாரோடு கால்பந்துப் பந்தயத்தில் மோதினாலும் இங்கே அதை நடத்துகிறவர்கள் ஆபீசில் அதை ஒட்டி சாப்பாடு உண்டு. மேனேஜரில் இருந்து டிக்கெட் கிழித்துக் கொடுக்கிற நான்கு ஊழியர்கள் வரை எல்லோருக்கும் ஓட்டலில் பொட்டலம் கட்டி வரும் எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், வடை, வறுவல் என்று மணக்க மணக்க சாப்பாடு. கொஞ்சம் முன்கூட்டி நான் போகும்போது எனக்கும் கிடைக்கும். வயிறு சுகமாக நிறைந்து இருக்க விளையாடுவதும் ஒரு சுகம் தான். இதற்காகவே காலையில் சரியாகச் சாப்பிடாமல் வருவேன். காலையில் சாப்பிடவும் பெரும்பாலும் ஏதும் இருக்காது.
’என்ன காரணத்தாலே மேட்ச் இல்லையாம்’?
அவர் சைக்கிள் சீட்டில் கை வைத்து நின்றபடி கேட்டார். எனக்குத் தெரியவில்லை.
‘ரெண்டு டீமும் சரியா அமையலே. காசு கொடுத்து மேட்ச் பார்க்க கூட்டம் வராது. அதான் ரத்து செஞ்சாச்சு’
குளம் சொன்னது. மற்ற குளங்கள் பேசுவது பற்றித் தெரியாது. என்னிடம் மட்டும் பேசும் குளம் இது. ஆனாலும் இந்தக் காரணத்தை இவருக்குச் சொல்ல முடியாது.
’காகித ஆலையில் எல்லோரும் ரெண்டு ஷிப்ட் பார்த்து ஏதோ பெரிய டெலிவரி ஆர்டர் முடிச்சு அனுப்பணுமாம். விளையாட்டு எல்லாம் அப்புறம்தானாம்’.
இது பந்தயம் நடத்துகிற கிளப்பின் மேனேஜர் சொன்னது. நல்ல வேளையாக நினைவு வந்தது. சொன்னேன்.
அந்த மேனேஜர் சொல்லாமல் விட்டது – இன்றைக்கு கிளப் செலவில் யாருக்கும் சோற்றுப் பொட்டலம் கிடையாது. அதை நம்பி வந்து பசியோடு திரும்ப வேண்டிப் போனது.
இன்னும் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்கிற மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். நான் பையில் இருந்து பத்திரிகையை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டது அவருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். விரித்ததும் தான் பார்த்தேன். அது முந்தாநாள் தினசரி.
’மேட்ச் இல்லேன்னா கோல்கீப்பர் மேலே யாருக்கும் கோபம் வராது. யாரும் திட்ட மாட்டாங்க. ஹாய்யா முந்தாநாள் பேப்பர் படிக்கலாம். ஜிலுஜிலுன்னு குளக்கரையிலே காத்து வேறே. டிக்கட் வாங்க வேணாம். முற்றிலும் இலவசம்’.
அவர் பெரிய நகைச்சுவையைச் சொன்ன மாதிரி குலுங்கிச் சிரித்தபடி பக்கத்திலேயே உட்கார்ந்தார். காத்திரமான வீபுதி வாடை அவரிடம் கிளம்பியது
’இந்தக் குளம் எனக்கு ரொம்ப சிநேகிதம்.’.
என்னமோ தோன்ற அவரிடம் சொன்னேன். ’அப்பப்போ இங்கே வந்து உக்கார்ந்து போனா மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.’.
’உங்களுக்குமா’?
அவர் காத்திருந்தது போல் கேட்டார். சிங்களத்தில் செய்தி சொல்ல ஆரம்பித்த டிரான்சிஸ்டரை அணைத்துத் தோளில் மாட்டிய பையில் வைத்துக் கொண்டார். பையில் இருந்து ஒரு காகிதப் பையை வெளியே எடுத்தார். வேர்க்கடலை உரித்து வறுத்தது அது. எனக்கும் நீட்டியபடி சின்னதாக அள்ளிக் கொண்டார்.
’நான் இந்த ஊருக்கு குடி வந்ததே இந்தக் குளத்தாலே தான்னா நம்ப முடியறதா’?
அவர் கேட்க குளம் அவரோடு சிரித்து அலை விட்டெறிந்தது. வெறும் வயிற்றோடு திரும்ப வேண்டாம். கொஞ்சம் ஊர்வம்பும் கொஞ்சம் கடலையுமாக பொழுது போகட்டும். கால் பந்து தான் இல்லையே.
’முப்பது வருஷம் முந்தி நான் காகித ஆலையிலே தான் இருந்தேன். வேலையில் இல்லே. ஆனா அங்கே சின்னதா கேண்டீன் நடத்தினேன். ஆலை வந்த நேரம் அது. அப்போ முதல்லே சர்க்கரை தொழிற்சாலை தான் வந்தது. கரும்பு பிழிஞ்சு போட்டு வச்ச பெகாஸ் சக்கை பேய் நாத்தம் நாறும். அதைத் தான் பேப்பர் பண்ண எடுத்துப்பாங்க’
அவர் எனக்கு அறிவொளி ஏற்றும் குரலில் நிதானமாகச் சொன்னார்.
’இப்போ வெளியே வாங்கறாங்க சார். நானும் எப்போவாவது பேபி லாரியிலே லோட் அடிப்பேன்’.
’ஓ பந்து விளையாடினது போக மிச்ச நேரத்திலே? ஒரு குழுவிலே இல்லாம எதெதிலோ தலையக் காட்டறீங்க. ஆனாலும் கோல் போட விடறது இல்லே’.
அவர் சிரித்தார். இதில் சிரிக்க என்ன இருக்கு என்று கேட்டது குளம். சரிதானே.
’ஆமா சார், எல்லாத்திலேயும் நான் இருப்பேன்.. சுற்று வட்டாரத்தில் இருக்கப்பட்ட குழுக்கள் மட்டுமில்லாம, நகரத்திலே பல ஆபீஸ் குழுவிலே கூப்பிடறது உண்டுதான். ஆனா அவங்க இப்போ கிரிக்கெட் ஆடப் போயிட்டாங்க பெரும்பாலும்’ என்றேன்.
இது நான் சிரிக்க ஆன பொழுது. போதும், அவர் சொல்ல வந்ததைக் கேட்போம் என்றது குளம். அதற்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று தோன்றியது.
’’சர்க்கரை ஆலை கொஞ்சம் பெரிசாக ஆரம்பிச்ச நேரம். காகிதமும் செய்யலாமேன்னு நினைப்பு. இருபத்தைஞ்சு பேருக்கு கேண்டீன் நடத்தறவனுக்கு நூறு பேருக்கு நடத்த முடியாதுன்னு அவங்களே தீர்மானிச்சு கொஞ்சம் பெரிய கையா கேண்டீன் நடத்தக் கூட்டி வந்தாங்க’.
எசகுபிசகாக அவர் தொண்டையில் மாட்டிய கடலை தொடர்ந்து இருமலைக் கிளப்ப அவர் அவசரமாக எழுந்து நின்று இருமினார். குனிந்து டிரான்சிஸ்டர் ரேடியோவை எடுத்துக் கொண்டு ஒரு அடி நடந்து, திரும்பி வந்து அதைத் தரையில் வைத்து விட்டு, இதோ வரேன் என்று சைகை காட்டிக் குளத்திற்குள் இறங்கினார்.
’அவர் வேலை இல்லாம ஊர் ஊராச் சுத்தின போது இங்கே வந்தார். வேட்டியை அவிழ்த்து கரையிலே வச்சுட்டுக் குளிக்கற போது ஒரு யோசனை வந்தது’.
குளம் சொல்லிக் கொண்டே இருக்க, அவர் ஒரு கை தண்ணீரை அள்ளி முகத்தில் விசிறி கொஞ்சம் கொப்பளித்து ஓரமாகத் துப்பினார். இருமல் தீர்ந்த நிம்மதியோடு திரும்பப் படி ஏறி வந்தார்.
’ஏன் கேக்கறீங்க, இப்போ குளத்திலே தண்ணி அவ்வளவா இல்லே. அப்போ எல்லாம் நிறைஞ்சு பொங்கும். நான் வேட்டியையும் சட்டையையும் கழட்டி குளக்கரையிலே வச்சேன். சட்டைப் பையிலே நான் காண்டீன் நடத்தி மிச்சம் பிடிச்சிருந்த ஐநூறு ரூபா இருந்ததாக்கும். ஆனந்தமாக் குளிச்சுட்டு கரைக்கு வந்து பார்க்கறேன். வேட்டியும் இல்லே. சட்டையும் இல்லே. நான் மேல் துண்டை மட்டும் இடுப்பிலே கட்டிக்கிட்டு நிக்கறேன் அறிமுகம் இல்லாத ஊர்லே’.
ஓ என்று பஞ்சாயத்து சங்கு சத்தம்.
’அடடா நடுப்பகல் ஆயிடுத்தே. நான் கிளம்பறேன’. அவர் எழுந்திருக்க, நிறுத்திக் கேட்டேன் –
பாதியிலே விட்டுட்டுப் போறீங்களே சார்.
’உங்களுக்கு செய்ய வேண்டியது ஒண்ணும் இல்லே. எனக்கு அப்படியா’?
அவர் டிரான்சிஸ்டரைத் தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்க, நானும் எழுந்து நின்றேன். அவர் நின்றார். சங்கு ஒலித்தபடி இருந்தது.
’என்ன செய்யறதுன்னு தெரியலே. துண்டைக் கட்டியபடிக்கே அப்படியே ஊருக்குள்ளே போனேன். இப்படித்தான் நடுப்பகல் சங்கு ஊதற நேரம்’.
சங்கு ஊதி நின்றது. அவர் நடந்தார். நான் சைக்கிளைத் தள்ளியபடி அவரோடு நடந்தேன்.
’தெருவிலே இப்போ மாதிரி ஈ காக்கை இல்லே’.
குளம் பின்னால் இருந்து என்னைக் கூப்பிட்டது.
’அவர் ஊருக்குள்ளே போகிற முன்னே, காத்துலே அடிச்சுப் போய் தாழம்புதர்லே கிடந்த வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கிட்டார். ஆனாலும் அதை அப்படியே சுருட்டி கைப்பையிலே வச்சுட்டு ஈரத் துண்டோட நடந்து போனார்’.
நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன். அது குளத்தைப் பார்த்தபடி இருந்திருக்க வேண்டும்.
’இங்கே இருந்து நாலு தெரு தள்ளி, கிட்டத்தட்ட ஊர்க் கோடியிலே சின்னதா ஒரு ஓட்டல் இருந்தது அப்போ. ஓட்டல்காரர் கல்லாவிலே உக்காந்திருந்தார். நேரே போய் நின்னு சுவாமின்னேன். தலை ஈரம் உலரலே. இடுப்பிலே துண்டோட ஒருத்தன் வந்து கும்பிட்டதும் அவர் வெலவெலத்துப் போயிட்டார். ஏதாவது விரதமா பிச்சையான்னு தெரியாம எழுந்து நின்னு என் கையைப் பிடிச்சுண்டார்.
அவர் நின்று இரண்டு கையாலும் என் சைக்கிளைப் பிடித்துக் காட்டினார். குளக் கரைக்கு வெளியே நின்று இரண்டு பேரும் குளத்தைப் பார்த்தோம்.
’சுவாமி, வெளியூர்க் காரன். ஓட்டல் காரன் தான் நானும். குளத்துலே குளிக்கற போது உடுப்பும் மத்ததும் பணமும் போயிடுத்து. காப்பாத்துங்கோ’.
அவர் குரல் எடுத்துச் சொல்ல, குளக்கரைக்குப் பறந்து கொண்டிருந்த காக்கைக் கூட்டம் ஆமாமா என்று எக்காளத்தோடு கரைந்து சென்றது.
’ஓட்டல் முதலாளி எனக்கு பழைய வேட்டியும் சட்டையும் கடையிலே வேலையும் போட்டுக் கொடுத்தார். அப்புறம் அவர் பொண்ணையும் கொடுத்துக் கண்ணை மூடினார்’.
அந்தக் கடை இருக்கா? நான் கேட்டேன்.
‘நல்ல விலை படிஞ்சு வித்தாச்சு. அஞ்சு வருஷமாறது’ என்றார் குரல் கம்ம.
‘அந்தப் பொண்ணும் காலமாகிடுச்சு. வெளியூர்லே விபத்து. குளத்துலே மூழ்கிட்டா. நான் இல்லே. மகாமகக் குளம்;.
குளம் முணுமுணுத்தது. திரும்பிப் பார்த்தேன். சலனமில்லாமல் இருந்தது அது.
’அதான் சட்டை, வேட்டியை எடுத்து வந்தாரே, அப்புறமும் ஏன் ஓட்டல் காரர் கிட்டே யாசிச்சார்’? குளத்தைக் கேட்டேன்.
‘நான் தான் சொல்லச் சொன்னேன்’ என்றது குளம். ஏன் என்று கேட்டேன். ’
‘அநுதாபத்தை கிளப்பறது காரியம் சாதிக்க ஏதுவாக இருக்கும்’
‘ஆகலேன்னா’?
’அவர் ஊர்க் கோடி போய் வேட்டி, சட்டை உடுத்தி பஸ்ஸிலே போயிருப்பார்’.
‘போயிருந்தா?’
’வேறே யார் கிட்டேயோ வேறே எங்கேயோ வேறே ஒரு கதை சொல்லிட்டிருப்பார்’
அது மேலும் சொன்னது –
’காகித ஆலைக்கு பகல்லே சங்கு ஊதற நேரத்துலே வேன்லே கொண்டு போய் சாப்பாடு சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்கறாங்க’.
நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டேன்.
’சுவாமி, வெளியூர்க்காரன். குளத்தங்கரையிலே பசியோட உக்கார்ந்திருந்தேன். கால் பந்தும், வேன் டிரவிங்கும் தெரியும். காப்பாத்துங்க’.
நான் அவரிடம் கை கூப்பினேன்.
‘சமையலும் தெரியும்’ என்றது குளம். யோசித்து விட்டு அதையும் சொன்னேன். கால்பந்து மாதிரித் தானே சமையலும். கற்றுக் கொண்டால் போகிறது.
அவர் சிரித்தபடியே நடந்து போனார். வா என்று சொல்கிறது போல் அவர் கை அசைந்தது. நான் அவர் பின்னால் சைக்கிள் ஓட்டிப் போன தெரு சுற்றி வந்து திரும்பக் குளக்கரையில் நின்றது.
*** *** *** *** *** *** *** *** *** *** ***
குளக்கரையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்தேன். கெச்சலான பையன். எல்லா கால்பந்தாட்டப் பந்தயத்திலும் ஒரு அணிக்கு கோல்கீப்பராக இருப்பான். சைக்கிளில் அவசரமாகப் போய்க் கொண்டிருந்தான். என்ன ஆச்சு என்று குளத்தைக் கேட்டேன்.
’மேட்ச் ஒரு மணி நேரம் தள்ளி வச்சு அஞ்சு மணிக்கு ஆரம்பம். போய்ட்டிருக்கான்’.
நான் வேட்டியையும் சட்டையையும் கரையில் களைந்து விட்டுக் குளத்தில் இறங்கினேன்.
(அமுதசுரபி தீபாவளி மலர் 2016)
ஓவியம் : க்ளு மோனெ E bassin aux nymphéas harmonie rose Water Lily Pond Symphony in Rose (Impressionism)