குழலி நடக்க ஆரம்பிக்கிறாள். விசில் சத்தம் தான் கணக்கு. அது கேட்டதும் பிரகாசமான இந்த வெளியில் ஒரு அன்னிய புருஷனோடு கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். ஐந்து அடி நடந்ததும் வலது புறம் திரும்ப வேண்டும். சந்தோஷமாக இருப்பதை அறிவிக்கப் புன்னகை பூக்க வேண்டும். அப்படியே அவன் கையை மெல்ல உயர்த்தி, பின் தாழ்த்தி, இறுகப் பற்றியபடியே தொடர்ந்து நடக்க வேண்டும். அவன் பெயர் தான் என்ன?
நீளமாக இன்னொரு முறை விசில் ஊதுகிறது. நிற்க வேண்டும். எங்கே இருந்தாலும் சிலை போல உடனே நிற்க வேண்டும். குழலி மட்டுமில்லை, அவளோடு போகிறவன், அவர்களுக்கு ரெண்டு அடி முன்னால், கருப்புத் திரவம் கிடந்த தகரக் குவளையை லகரியோடு பற்றிப் பிடித்து வாய் வைத்துச் சுவைத்தபடி ஆடி ஆடிப் போகிற ரெண்டு பேர், உதடு பெருத்த, சோனியான ஒரு பெண்ணுக்குத் தன் குவளையில் இருந்து அதே கருப்பு திரவத்தை ஊட்டி, இடுப்பில் கைபோட்டு அழைத்துப் போகிற இன்னொருத்தன், கையில் பிரம்மாண்டமான ப்ளாஸ்டிக் மல்லிகைப் பூப்பந்தோடு, வார்னிஷ் வாடை அடிக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து விந்தி ஆடியபடி சிரிக்கும் வெள்ளைப் பாவாடைப் பெண்கள், ஊஞ்சலுக்கு முன்னால் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து ஒருத்தியை ஒருத்தி அணைத்துக் கன்னத்தில் முத்தமிடும் நீல உடைப் பெண்கள், ஓரத்தில் நாட்டிய கம்பத்தில் ஏற முயலும், இடுப்பில் சிவப்புத் துண்டு அணிந்த அழகி எல்லோரும் இயக்கம் நிலைக்க வேண்டும்.
’முந்தானையை இப்படியா போட்டுக்க சொன்னது’?
கொசகொசவென்று தாடி வைத்து சதா ஜர்தா பான் மென்றபடி வரும் தடியன் கருப்பு நிஜாரில் கை தாழ்த்தி அசௌகரியமான இடத்தில் சொரிந்தபடி குழலியைக் கேட்கிறான். குழலியைக் கை பிடித்து நிற்கிறவன் இதுவும் கடந்து போகும் என்பது போல பார்க்க, குழலி அவசரமாக முந்தானையை விலக்கி மேலே இழுத்துக் கொள்கிறாள். குனிந்து பார்க்கிறாள். மார்பு புடைத்து முன் தள்ளிப் பக்கவாட்டில் உருண்டு திரண்டு தெரியும். அந்த நிச்சயத்தோடு தடியனும் திருப்தியாகப் பார்த்து ஒரு அடி முன்னால் போய்த் திரும்புகிறான்.
’கஸ்டமரைப் பார்த்து சிரிக்கறபோது வான்னு கண்ணாலே கூப்பிடணும். விலாங்கு மீன் மாதிரி வாயை ஓஓஓன்னு தொறக்கக் கூடாது’.
ஜடமாகக் நின்ற குட்டையனின் கையை ஆசையாகப் பற்றிக் கட்டிலுக்கு அழைக்கும் பார்வையோடு குழலி சிரிக்க, மேலாக்கு திரும்பக் கீழே விழுகிறது. நிஜார்த் தடியன் நகர்ந்து விட்டிருக்கிறான்.
அவன் கருப்பு கோலாவை உறிஞ்சத் தயாராக முன்னால் நின்ற ரெண்டு பேரையும் அதட்டுகிறான் – ’ஆஸ்பத்திரி மருந்து குடிக்கற மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டா போகச் சொன்னது? முன்னே பின்னே குடிச்சதில்லையா’?
இன்னும் கொஞ்சம் முன்னால் போய் சோனியான பெண் இடுப்பில் கைபோட்டு அவளுக்கு கோலா ஊட்டியபடி நடந்தவனிடம் ஏதோ பேசும் முன் அந்தப் பெண் வாயில் வைத்த கோலா புரையேறி இருமுகிறாள், அவளை அதட்டி அடக்குகிறான் நிஜார்த் தடியன். சோனிப் பெண்ணுக்குக் கோலா ஊட்டியவனின் கை அவள் இடுப்பில் மண்ணுளிப் பாம்பு போல ஊர்கிறது. அதை சற்றே உயர்த்தி அவள் வயிற்றின் மேல் பரத்தி வைத்துவிட்டு அங்கே நின்றபடி குழலியின் மார்பைப் பார்வையிட்டுத் திருப்தி அடைந்ததாகத் தலையசைக்கிறான் நிஜார்த் தடியன். விசில் ஓங்கி ஒலிக்கிறது.
குழலி அவசரமாகப் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வந்து நிற்கிறாள். அடையாளத்துக்காகப் பக்கத்தில் இருந்த குத்து விளக்கை மனதில் வைத்திருந்தாள். அதை நகர்த்தி இருக்கிறார்கள் என்று திரும்பி வந்து நின்றதும் தான் படுகிறது. அதற்குள் தடியன் இரைகிறான். நிஜார்த் தடியன். மார்பு பார்த்துப் பார்த்துப் பசியாறாத விசில் தடியன். கூச்சலிடும் தாடிக்காரத் தடியன். அரையில் சதா சொரிந்து கொள்ளும் சீக்குக்கார வெறுந்தடியன் இரைகிறான் –
’புறப்பட்ட இடம் கூடத் தெரியாதா, என்ன பொம்பளை நீ? சாணி போட்ட மாடு மாதிரி நடை வேறே’.
எல்லாத் திட்டையும் வாங்கி, அது மேல் தோலில் மோதியதும், குரல் வராத நாலு கெட்ட வார்த்தை வசவோடு மனதுக்குள்ளேயே புதைத்து விடுகிறாள் குழலி.
சொரிந்துச் சொரிந்து உன் அரைக்குக் கீழே இருப்பதெல்லாம் அழுகிச் சீழ் வைத்து அறுந்து விழட்டும்.
சாபம் குழலி மனதில் புறப்பட்டுப் பறக்கிறது. சகதியில் ஊறிய உளுத்த மரப் பலகை போலப் பக்கத்தில் வந்து நின்ற கஸ்டமர் ஜடம் மறுபடி சுவாதீனமாக அவள் கையைப் பற்றிக் கொள்கிறது. நிஜார்த் தடியன் வயிற்றைப் பற்றிக் கொண்டு குனிந்து நிமிர்கிறான். அதற்குள் அறுந்து விழுந்திருக்காது.
தரையில் உட்கார்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த பெண்கள் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு உதட்டுச் சாயத்தைத் தீற்றியபடி திரும்ப அவர்களுக்கு விதிக்கப் பட்ட காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.. ஒரு தடவை கன்னத்திலும் மற்றொரு தடவை உதட்டிலும் முத்தமிடும் படி அவர்களுக்குச் நிஜார்த் தடியன் புது உத்தரவு போட்டது உடனடியாக அமலாக்கப் படுகிறது.
பாட்டு உயர்ந்து எழுகிறது. இங்கிலீஷ்காரியை சிவகங்கை வாரச் சந்தையில் கத்திரிக்காய் விற்க அனுப்பியது போல சிவந்து நின்ற ஒரு இளம்பெண், தாவணியை இழுத்துச் சொருகிக் கொண்டு மாமா என்று இசையோடு பெண் குரல் அழைக்கும் இடத்தில் எல்லாம் பார்வையில் உருகி வழிந்து அசைகிறாள். ஊஞ்சல் பெண்கள் அவள் மேல் மோதாமல் சிரித்தபடி விந்தி விந்தி ஆடுகிறார்கள். குட்டையனோடு திரும்பி நடக்கிறாள் குழலி. அவன் ரொம்ப வியர்த்து வாடை வீசத் தொடங்கி இருக்கிறான். கஸ்டமர் நாற்றம். சினிமா ஷூட்டிங் நாற்றம். ராத்திரி நாற்றம்.
’டேக் போகலாம் சார்’.
தடியனும் இதரர்களும் காமிரா பின்னால் உட்கார்ந்திருந்த துடிப்பான இளைஞனிடம் சிபாரிசு செய்ய, ஒன் டு ஒன் டு டு ஒன் ஒன் டு என்று விடாமல் காலடி எடுத்து வைக்கச் சொல்லி இங்கிலீஷ்காரியை சித்திரவதை செய்தவனும் திருப்தியாகி, போகலாம் சார் என்கிறான்.
குழலி திரும்ப விளக்குப் பக்கம் நின்று கஸ்டமர் கையைப் பிடிக்க, குப்பென்று அவனுடைய கஷ்கத்து வியர்வை நாற்றம் முகத்தில் அறைகிறது. வயிறு உம்மென்று காலையில் இருந்து மலச் சிக்கலில் அவதிப் படுவதை நினைவு படுத்திப் பிணங்கி நிற்கிறது. பழநியப்பன் அவளை வற்புறுத்தி அனுப்பிய போது அவனிடம் இதைச் சொல்ல வெட்கமாக இருந்ததால் சொல்லவில்லை.
’கைக் குழந்தையைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா என்ன? பசிச்சா பால் கொடுத்துடறேன். மாவு இருக்கு இல்லே’?
பால்மாவு பற்றாக்குறை. வாங்கக் காசு இல்லை. வாங்குகிற பசும்பாலில் பாதி சிசுவுக்காக எடுத்து வைத்து விடுகிறாள். அது அரை லிட்டர் இருக்கும். அவ்வளவு தான். வளர்கிற குழந்தை, சின்ன வயிறு நிறைய எடை கட்டின பாலையும் கொஞ்சம் போல் பால் மாவையும் போட்டுப் புகட்டி விட்டு, தாய்ப் பால் கொடுக்கிறாள். அது ஏமாற்று வேலை தான். பால் வற்றி வரும் மார்பகங்களை வெறுமனே இழுத்துச் சுவைத்து ஏமாற்றத்தோடு உறங்கிப் போகிறது அது. என்றாலும் பால் சுரப்பு அடியோடு நிற்காததால் பூரித்து நிற்கும் ஸ்தனங்களை நிஜார்த் தடியன் கேமராவுக்குக் காட்டச் சொல்கிறான்.
பழநியப்பனுக்கு இதெல்லாம் தெரியாது. தெரிந்தாலும் கவலைப்பட மாட்டான். கூடப் படிக்கிற காலத்தில் இருந்த அந்த அலட்சியம், கூடப் படுக்கிற போது இன்னும் மூர்க்கமாகிறது. அந்த விழைவு தான் குழலியை வேர் பறித்து சென்னையில் இருந்து ஆந்திரத் தலைநகருக்குக் குடி பெயர்த்தி இருக்கிறது. எல்லா வேலைக்கும் மனுப் போட்டு எதுவும் இன்னும் அமையாமல் ஜூனியர் ஆர்டிஸ்ட் அட்டை வாங்கிக் குட்டை ஜடத்தோடு நடக்க வைக்கிறது.
டேக் நம்பரை இயந்திரம் போல் சொல்லி கட்டையால் அடித்து டிராலியில் கேமரா நகர்கிறது. பின்னாலேயே நிஜார்த் தடியனும் இன்னொருத்தனும் ஆதரவாகப் பிடித்தபடி ஓடுகிறார்கள். டைரக்டர் பின்னால் பருந்துப் பார்வை பார்த்து நிற்க, கண்ணாடி போட்ட கேமிராமேன் தீவிழி விழித்தபடி டிராலியில் நகர்ந்து போக, இங்கிலீஷ்காரி இடுப்பு வளைத்து மாமனை அழைக்க, குழலி காமெராவின் வினாடி நேரப் பார்வைக்கு மார்பை திமிர்த்துக் காட்டி, காசுக்கு உடம்பு விற்கிற சிரிப்போடு குட்டைக் கஸ்டமர் கைபற்றி நடக்கிறாள். அவள் வயிறு திரும்ப இரைகிறது. கேமரா நிற்கிறது.
பிரேக் அறிவித்ததும் முதலில் கழிப்பறை போக வேண்டும் என்று தோன்றுகிறது. மூத்திரம் முட்டி நிற்கிறது. வயிறு கனத்தோடு அழுத்த, கால் வீங்குகிறது போல உணர்ச்சி. இன்னும் எத்தனை நேரம் இப்படி நடக்க வேண்டுமோ தெரியவில்லை. வேசையர் இல்லத்தில் புதுப் பெண்கள் வாடிக்கையாளர்களை ஆடி மயக்க, குழலி என்ற சற்றே வயதான வேசி ஜடமான குட்டையனை மயக்கி இழுத்துப் போகிறதும் பின்னணியில் ஒரு துளியாகக் காட்சி நீள்கிறது.
குழலியை இழுத்து வந்தவன் குட்டை இல்லை. ராஜா மாதிரி இருப்பான். பழநியப்பனுடைய ஓங்கு தாங்கான ஆறடி உயரமும், முகத்தில் தெளிவும், கணீரென்ற குரலும் அவளைப் புரட்டித் தான் போட்டன. அவனோடு கூட பிரஞ்சு படிக்கப் போகாமல் இருந்தால் அப்படித் தலை குப்புற விழாமல் வெகு இயல்பாக இன்னேரம் வேறே மாதிரி ஜீவித்துக் கொண்டிருப்பாள். அந்த உலகத்தில் கணக்கு வழக்கும், தணிக்கையும், ரிட்டர்ன் ஃபைல் செய்வதும், வரி கணக்கு செய்து கம்ப்யூட்டரில் பதிவதும் தான் உண்டு. காமர்ஸ் படித்து முடித்து சார்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வு எழுத யத்தனங்கள் செய்திருந்த காலம் அது. ரொம்ப முன்னால் எல்லாம் இல்லை, ஒரு மூணு வருஷம் முந்தித்தான்.
ஆர்ட்டிகிள் க்ளார்க் ஆக பிரசித்தமான ரெண்டு ஆடிட்டர்களிடமிருந்து வரவேற்புக் கடிதம் வந்தது குழலிக்கு. சம்பளம் என்றெல்லாம் ஏதும் கிடையாது. அப்படியே இருந்து, சி.ஏ முடித்தால் போட்டிக் கடை போட்டு விடலாம். அழகான ஆர்டிகிள் கிளார்க் பெண்கள், ஆடிட்டருக்குப் புது வாடிக்கையாளார்களைச் சம்பாதித்துக் கொடுப்பார்கள். ஆடிட்டர்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் குட்டைக் கஸ்டமர் போல குழலி கையைப் பிடித்தபடி, வேசை வீட்டு நடனத்திற்கு பிருஷ்டத்தை ஆட்டிக் கொண்டு நடக்க மாட்டார்கள். கோடி கோடியாகச் சொத்தில் புரள்கிறவர்கள். அதற்கு ஆகக் குறைவாக வரி கட்டவோ, முடிந்தால் ஒரு சல்லி கூடத் தராமல் அனுபவிக்கவோ முனைந்தவர்கள். குழலி என்ற சார்டர்ட் அக்கவுண்டண்டுக்கு அவர்கள் மூலமே அல்லது அவர்களாகவோ வாழ்க்கைத் துணை கிட்டியிருக்கும். ராத்திரி ஸ்டூடியோ வெப்ப வெளிச்சத்தில் மலச் சிக்கலோடு நிஜார்த் தடியன்கள் சொல்லியபடி மாராப்பை விலக்கி ஊருக்கு உலகத்துக்கு மாரைக் காட்டச் சொல்லி அவர்கள் கேட்க மாட்டார்கள்.
குட்டையன் இன்னும் குழலி கையை விடாமல் நிற்கிறான்.
‘யோவ் கையை விடு’.
எங்கேயோ அந்தகார இருட்டில் வெறித்தபடி நிற்கிறான். அவன் கையை உதறி விட்டு கழிவறைகள் இருக்கும் இடத்துக்கு நகர்கிறாள் குழலி. ஆண்கள் பகுதியில் இருந்து கழிவறை வேலை முடித்துக் கை கழுவாத அசுத்த ஆண்கள் செட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதோ பெண்கள் பகுதி.
கொஞ்சம் முன்பே வந்திருக்க வேண்டும். குழலி போல ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளும், சாப்பாடு பரிமாறுகிற, மேக்கப் உதவி செய்கிற, நடனம் ஆடும் பெண்களுக்கு ஒத்தாசை செய்கிற என்று சகல விதமான பெண்களும் மொத்தம் இரண்டே கழிப்பறைகளைப் பங்கு வைக்க வேண்டும். இங்கே இடம் கிடைத்துத் திரும்புவதற்குள் நிஜார் தடியன் விசிலை ஊதிக் கூப்பிட்டு விடுவான்.
எதிரே வெள்ளையும் சள்ளையுமாக பளிங்குக் கல் இழைத்த கழிவறைகள் தட்டுப் பட்டன. அவை சதா பூட்டி வைத்திருப்பவை. இன்று ஏனோ திறந்திருந்தன. குழலி அதில் ஒன்றுக்குள் அவசரமாக நுழைகிறாள்.
வயிற்றில் அடைப்பு சகல விதமான சத்தமாகவும் வெளியேற முயற்சி செய்து தோல்வி கண்டு வயிற்றுக்குள்ளேயே கொஞ்சம் கீழிறங்கி ஆயாசமளித்தது. கூடவே சனியனாக, எந்த நேரமும் மாதவிலக்கு வந்து விடலாம். கைப்பையில் நாப்கின் வைத்திருந்த நினைவு. பார்க்க வேண்டும்.
போனதை விடக் களைத்துக் கண் இருளக் குழலி திரும்பி வரும்போது பின்னால் கழிப்பறைப் பெண்களிடம் வேகமாக இந்தியில் புகார் சொல்லிக் கொண்டிருந்தவள் கறுப்புப் பட்டுத் தாவணி அணிந்த, வெளுத்த நாட்டியக்காரி.
’கண்டவங்க எல்லாம் வந்து போகற இடமா ஆக்கிட்டீங்க. நான் ஷெட்யூல் தவற விடக் கூடாதுன்னு இங்கே சொந்த செலவிலே ஃப்ளைட்லே வந்து எல்லா கஷ்டத்தையும் சகிச்சுட்டிருக்கேன். டாய்லெட் கூட சுத்தமா இல்லே இங்கே. டைரக்டர் எங்கே? இப்பவே சொல்லியாகணும்’.
நடந்தபடி ஓரக் கண்ணால் குழலி பார்க்க, வெள்ளைத் தோல் வெறுப்பை அவள் மீது உமிழ்ந்தது தெரிகிறது. குழலி ஒரு வினாடி நின்று பதில் சொல்வதற்குள் இங்கே சத்தம் கேட்டு நிஜார் தடியன் நேரே வந்து சேர்ந்து விட்டான். பெண்கள் கழிப்பறைப் பிரதேசம் என்ற நினைவு இல்லாமல் அவன் அங்கே நின்று வெள்ளைக்காரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கக் குழலிக்கு ஒரு ஆசுவாசம். இவன் போய்த் தான் விசிலை ஊத வேண்டும். அதற்குள் குழலி செட்டுக்குள் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விடுவாள்.
’அறிவு இல்லையா? மெயின் ஆர்ட்டிஸ்ட்க்குன்னு வச்சா கால்நடை மாதிரி நீ போய்ட்டுப் போறியே. கண்ணு எங்கே பிடரியிலா இருக்கு? முன்னே பின்னே சினிமாவிலே நடிச்சிருக்கியா இல்லே மத்தது செய்ய கிடைக்காமே வந்தியா’?
குழலிக்கு அழுகை பொங்கி வருகிறது. அடக்கிக் கொள்ள வேண்டிய தருணம். பழநியப்பனுக்காக எது எதுவோ பொறுத்துக் கொண்டாகி விட்டது. இது அவள் இல்லை. அவளுடைய பிரஞ்ச் அறிவு இங்கே பயன்படாது. அமேலி, டெலிகாட்டஸன், லா ரெக்லெ தூ ஷு என்று பிரஞ்சு சினிமாக்களை அலசிக் கலந்துரையாடும் திறமைக்கு இங்கே வேலை இல்லை. அமேலியில் மளிகைக் கடைக்காரனாக நடித்த உபேன் கான்ஸலியை பேட்டி கண்டு இலக்கியப் பத்திரிகையில் எழுதியதும் பிரஞ்சு டைரக்டர்களோடு கலந்துரையாடலாகத் தென்னிந்திய சினிமாவையும் ப்ரஞ்ச் சினிமாவையும் ஒப்பிட்டதும் இங்கே ஒப்பேறாது.
பட்டப் படிப்பு சான்றிதழ் கூட இல்லாமல் உடுதுணியோடு வந்தவளுக்கு பிரஞ்சு மொழி கனவாக, சினிமா சோறு போடுகிறது. துணை நடிகையாக்கி நடக்கச் சொல்லிச் சிரிக்கிறது. நடந்தால் தான் தாக்குப் பிடித்து நிற்கலாம். நட.
கண்ணை முந்தானையால் அழுந்தத் துடைத்தபோது குழந்தை நினைவு வருகிறது. அவமானம் எல்லாம் பொறுக்க வேண்டியது அவனுக்காகத் தான் முதலில். பழனியப்பன் எக்கேடும் கெட்டுப் போகட்டும். கிடைத்த அட்வான்ஸில் அவள் பால் மாவு வாங்கி வைத்திருக்கிறாள். மீதிப் பணம் நடித்து முடித்து விடிகாலையில் கிடைத்ததும் குழந்தைக்கு ஒரு சட்டையும் பொம்மையும் வாங்கியது போக மீந்ததைத் தான் பழநியப்பனுக்குத் தருவாள்.
விசில் ஒலித்ததும், புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை காம்பவுண்ட் சுவர்ப் பாறாங்கல்லில் தேய்த்து அணைத்து பாக்கெட்டில் போட்டபடி குட்டை ஜடம் ஓடி வருவதைப் பார்த்தபடி உள்ளே ஓடுகிறாள் குழலி. அவன் பிடித்த சிகரெட் நெடியோடு அணைத்து வைத்திருப்பதின் மகா நெடியும் குமட்டப் போகிறது.
அவன் குழலிக்கு வலது பக்கம் வந்து இடது கை விரலை அவள் பற்றிக் கொள்ள நீட்டுகிறான். இந்த ஷாட்டுக்கு கேமிரா அவளுடைய இடது மார்பை வெறிக்கும். பழநியப்பன் சிலாகித்த மார்பகம் இது.
’லெஃப்ட் ப்ரொஃபைல்லே ஹாலிவுட் ஸ்டார் மாதிரி இருக்கே. இதே செழிப்பு தான்.. என் முதல் சினிமாவிலே வர்ற ஹீரோயின் இப்படித் தான் பொங்குற மார்போடு இருப்பா. நீயே நடிச்சா வேறே யாரையும் தேடிப் போக வேண்டாம்’.
’மாட்டேன் எனக்கு ஆனதில்லே அது. எழுதறேன். உங்களோடு சேர்ந்து திரைக்கதை, உரையாடல் ரெண்டும் எழுதறேன். இதுவரைக்கும் தமிழ்லே இல்லாத மாதிரி, நேரேடிவ், வாய்ஸ் ஓவர்னு சுவாரசியமா அமேலி மாதிரி ஒரு படம் எடுப்போம். அமேலி கிடைப்பா. தேடினா நிச்சயம் கிடைப்பா’.
அமேலி முந்தானையை ஒதுக்கிக் கொண்டு, பாத்ரூம் போய்க் கை கழுவாத ஜடங்களின் அசுத்தமான விரல்களை மென்மையாகப் பற்றிக் கொண்டு அவர்களைக் காதல் பார்வை பார்த்தபடி ராத்திரி பத்து மணிக்கு அபத்தமான ஒரு சினிமா செட்டுக்குள் சுற்றிச் சுற்றி வரமாட்டாள்.
சின்னதாக ஊதி ஓய்ந்த விசில். அறிவிப்பு. ’சாப்பாடு கொண்டு வந்த வேன் சின்ன விபத்துக்குள்ளாயிடுச்சு. கொஞ்சம் தாமதமா வரும். இன்னொரு டீ, காப்பி கொடுக்கப்படும். குடிச்சுட்டு தெம்பாக வேலை பாருங்க எல்லோரும்’.
’காலையிலே இருந்து பிஸ்கட்டும் டீயும் தான். ராத்திரியாவது வயறு நிறையச் சாப்பிடலாம்னு பார்த்தா நம்ம அதிர்ஷ்டம்’.
குட்டைக் கஸ்டமர் தான். பேசிய குரல் தளர்வாக நடுங்கி வந்ததால் ஜடம் என்று கூடச் சேர்த்து விளிக்கக் குழலிக்கு ஆகவில்லை. ரிஜிஸ்தர் ஆபீசில் கையெழுத்துப் போட்டு மாலை மாற்றிக் கைப்பிடித்துப் பழநியப்பன் கல்யாணம் செய்து கொண்டதற்கு மேல் இன்னொரு தடவை அவளைக் கைப்பிடிக்கிறவனாக அவனைப் பார்த்தபடி நகர்ந்தாள் குழலி. சரிகை வேட்டியும் பிணத்துக்குப் போர்த்திய மாதிரி கொழகொழவென்று வடிந்த வெல்வெட் சட்டையும், கஷ்கத்தில் வியர்வையுமாக மணமகன்.
’நீயாவது எனக்குப் பொறுப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவாயா’? அவனைக் கேட்கிற ஒற்றை வரி வசனம் பேசுவதாகக் கற்பனை செய்ய ஒரு வினாடி சிரிப்பு முகத்தில் கீறி மறைந்தது. பழநியப்பனின் இடத்தில் இவனா?
நல்ல சினிமா, இலக்கியத் தரமான சினிமா, நானே எழுதுவேன், நானே எடுப்பேன், நானே பெயர் வாங்குவேன், தமிழில் இல்லாவிட்டால் தெலுங்கில், அங்கே இல்லாவிட்டால் குஜராத்தியில், போஜ்பூரியில் என்று பிடிவாதம் பிடிக்காத கணவனாக இவன் இருப்பானா? எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தெலுங்கு தேசத் தலைநகருக்குக் குடியைக் கிளப்பி வந்து தாற்காலிக இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளத் துணை நடிகர் சப்ளை ஏஜண்டாக வேலை பார்க்க உட்கார்வானா இவன்?
இவன் ஏற்கனவே ஏஜண்ட் வேலை செய்து வருவானாக இருக்கும். பழநியப்பன் இடத்தில் இருந்தால் இவனும் அவளை நடிக்கப் போகச் சொல்வான். யார் யாரோ இஷ்டப்பட்டபடி பிதுக்கி முன்னால் நிறுத்தி செயற்கையாக பூரித்து இப்படி.
நீள விசில் ஒலிக்கிறது. என்ன பேச்சு வாங்கணுமோ இப்போ. குழலி மிரண்டு போய் நிற்கிறாள்.
நிஜார் தடியன் இந்தத் தடவை சுமுகமாகச் சிரித்தபடி அவளைக் கடக்கிறான். பெரிய பீங்கான் ஜாடி போல லேசான மரத்தால் செய்த மது ஜாடியைத் தோளில் சுமந்தபடி போகிற கிழவி நடிகை மேல் அவன் கவனம் விழுகிறது.
’வேகமா போகச் சொன்னா அன்னநடை நடக்கறியே. அப்படியே நடந்து வீட்டுக்குப் போயிடு. தண்டக் கருமாந்திரம்’.
’ஐயா, உடம்பு சரி இல்லே. இனிமே சரியா நடக்கறேன்’.
அந்தக் கிழவியைப் பார்க்கக் குழலிக்குப் பரிதாபமாக இருந்தது. இது அவள் தான். எதிர்காலத்தில் இருந்து வந்த குழலி. பழநியப்பன் எதுவும் சாதிக்காது போன எதிர்காலமாக இருக்கும் அது.
ஆஸ்கார் கனவு, தேசியப் பரிசுக் கனவுகள், உள்ளூரில் நாலு காலைக் காட்சிகள், தீவிர இலக்கிய, சினிமாப் பத்திரிகைகளில் காரசாரமான விமர்சனங்கள்.
இதெல்லாம் பழநியப்பனுக்கு இந்த ஜன்மத்தில் கிட்டும் என்று தோன்றவில்லை. அவன் துணை நடிகர் சப்ளையில் இந்த வாழ்க்கையைக் கழித்து விடுவான். எழுதுகிற உலகைப் புரட்டிப் போடக்கூடிய ஸ்க்ரிப்டுகளை தோல்பெட்டியில் பத்திரமாகச் சேமிப்பான். குழலி தோளில் ஜாடி சுமக்கிற கிழவியாக காமிராவுக்கு முன் எறும்பு போல வலிந்து தெம்பாக நடந்தபடி உயிரை விடுவாள். குழந்தை? அவன் பிரான்ஸுக்குப் போய் நல்லா வருவான்.
நாலு ஷாட் எடுத்தாகி விட்டது. அவளுக்கு எந்தப் பக்கத்து முந்தானை எப்போது விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாடமாகி விட்டது. செயற்கைச் சிரிப்போடு பாந்தமாகத் தலையைச் சாய்த்தபடி நடக்கிறாள். மனதில் கற்பனை தறிகெட்டு ஓடுகிறது.
’வாட் அ மார்வெலஸ் ஸ்மைல் யு ஹேவ்’.
இது யாருடைய வசனம்?
குட்டை கஸ்டமர் அதைச் சொல்லியபடி நடக்கிறான். இரு, இன்னும் இருபது வருஷத்தில் காந்தித் தாத்தா மாதிரி பொக்கைவாய்ச் சிரிப்பு தான் இருக்கும்’ என்கிறாள் குழலி. அப்பவும் உன் விரலைப் பிடிச்சுட்டு ஸ்டூடியோ செட்டுலே சுத்துவேன். சுத்து ஆனா, ஒண்ணுக்கு போய்ட்டு கையலம்பாம வராதே.
தேவையில்லாத இடத்தில் சிரித்து விடுகிறாள் குழலி. அடுத்த விசில் ஒலிக்கிறது. திட்டு நிச்சயம். அவள் கண்ணை மூடிக் கொண்டு சுவாசத்தை இழுத்து விடுகிறாள். எந்தக் கூச்சலும் கிளம்பவில்லை.
நாலைந்து பேர் செட்டில் நுழைய டிராலியில் ஏறி இருந்த டைரக்டர் மரியாதையோடு கையாட்டிக் கீழே வருகிறார்.
’இதெல்லாம் சென்சார்லே போயிடுமே’.
வெள்ளைக்காரியின் துணி இல்லாத மார்பைச் சுட்டிக் காட்டி அவள் ஏதோ விலங்கு என்கிற மாதிரி பாவத்தோடு வந்தவர் கேட்கிறார்.
’போகாது சார். ரொம்ப முரண்டு பிடிச்சா மொசாய்க் போட்டுக்கலாம்’.
டைரக்டர் சிரித்தபடி சொல்கிறார்.
’இது மொசாய்க் போட வேண்டிய இடமா? தங்கத்தாலே இழைக்கணும்பா’.
இங்கிலீஷ்காரி கியா கியா என்று மிழற்ற மற்றவர்கள் சிறந்த நகைச்சுவையைக் கேட்டது மாதிரி சிரிக்கிற சத்தம் பின்னால் கேட்கிறது.
புரொடியூசராக இருக்கும் என்று குழலி ஊகித்து, புறப்பட்ட இடத்துக்குத் குட்டைக் கஸ்டமரோடு திரும்ப நடக்கிறாள். வயிறு கனமான கனம். இறுக்கமும் வியர்வையும் பொங்கி வழிகிறது. கஸ்டமருக்கு அவளுடைய உடம்பு வாடை அருவறுப்பை உண்டாக்கும். உண்டாக்கட்டும். அவளுக்கென்ன?
மலச்சிக்கலோடு இருக்கிற கதாநாயகி, காதலனிடம் காமம் சொல்வது, கடைக்குப் போய் சானிடரி நாப்கின் வாங்குவது, வேலைக்குப் போவது இப்படிக் காட்சிகள் உள்ள பிரஞ்சு சினிமா இருக்கா? தமிழுக்குப் புது வரவாக நான் எடுப்பேன். பழநியப்பன் நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறான். மூத்திரம் நனைந்த குழந்தையின் இடுப்புத் துணியைக் கூட எடுக்க மாட்டான் அவன்.
’இன்னிக்கு டான்ஸ் சீன் முடிஞ்சுடுமில்லே’?
புரொடியூசர் விசாரித்தபடி நடந்து வந்து குழலி நிற்கிற இடத்துக்கு முன்னால் குனிகிறார். வேசை வீட்டு முற்றத்தில் தட்டில் வைத்த திராட்சைப் பழத்தில் ஒன்றைப் பிய்த்து முகர்ந்து பார்க்கிறார்.
’ஸ்ப்ரே போடலியா’?
அவர் முகத்தைச் சுளித்துக் கேட்டபடி அதிருப்தியோடு பார்க்கிறார்.
‘இப்படியே வச்சா தின்னு தீத்துட்டு இன்னும் வாங்க வேண்டிப் போகும். ஜே எஸ் படம் ஷூட்டிங்க்லே இப்படித் தான் மைசூர்பாக் வாங்கி வச்சது. போக வர அவரோட ஆளுங்க தின்னுட்டானுங்க. படை பட்டாளமா வந்து இறங்கிடறாங்கப்பா. நம்மாளு இன்னும் அவ்வளவு பெரியவராகலே. பொழச்சோம். நல்லா அடிப்பா. பெட் ரூம்லே நீ அடிக்கற மாதிரி இத்துணூண்டு எல்லாம் போறாது. எதுக்கு நீட்டமா வச்சிருக்கு? ஓங்கி அடி’.
இதுக்கும் பெரிய அலையாக எழுந்த சிரிப்பு.
குப்பென்று வயிற்றைப் புரட்டும் கொசு மருந்து நாற்றம். சிரிப்பு நாற்றம். குழலிக்கு விலகி நிற்க வேண்டும் போல இருக்கிறது. அசையக் கூடாது.
’ஸ்டாச்சூ’.
குழந்தைக்கு முன்னால் விளையாட்டுக்காகக் கூவுவாள். அது கலகலவென்று சிரிக்கும். பழநியப்பன் ஒரு வினாடி நிற்கச் சொன்னால் தலை போகிற வேலை இருப்பது போல் உள்ளே போய் விடுவான். அவளே தான் நிலைத்து நிற்க வேண்டும். நடக்க வேண்டும். குழந்தை புரிந்து கொண்ட மாதிரி சிரிக்கும். தண்ணீர் தாராளமாக ஊற்றிய பாலை அமுதம் போல அது அவசரமாக உறிஞ்சிக் குடிக்க குழலிக்குக் கண்ணீர் வரும்
என்ன செய்கிறதோ அந்தப் பிஞ்சு. பழநியப்பன் வேளாவேளைக்கு புகட்டி இருப்பானா? அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் தூக்கி வைத்துக் கொண்டு சாஞ்சாடம்மா ஆடி இருப்பானா? அரையில் துடைத்து, பவுடர் போட்டு துணி மாற்றி இருப்பானா?
நீள விசில் அவளை கஸ்டமரோடு கைகோர்க்க விரட்டியது
மாற்றி மாற்றி விசில் முழக்கி, அவ:ள் அறையைச் சுற்றி வந்தபடி இருந்தாள். காலில் வழிந்து சிதற எந்நேரமும் மூத்திரம் பெய்து விடலாம் என்ற பயம் கூடிக் கொண்டே போக அடுத்து நடந்தவனைப் பார்த்தாள். அவன் காலையும் சேர்த்து நனைக்கக் கூடிய பயம் கனமாகக் கவிந்தது.
இது எப்போது முடிந்து கையில் இன்னொரு இருநூற்றைம்பது கிட்டுமோ. அட்வான்ஸாக வந்த பணத்தில் கொஞ்சம் பத்திரமாகக் கைப்பையில் உண்டு. அதை அவ்வப்போது சோதிக்க வேண்டும் என்பதை ஏன் மறந்தாள்?
நடுராத்திரிக்கு நீள விசில் ஒலித்து சாப்பாடு என்று அறிவிக்கப் பட்டது. கால் கெஞ்சியது உட்காரச் சொல்லி. வயிறு மன்றாடியது கழிவறைக்கு ஒரு நடை போகச் சொல்லி. வேறே வழியில்லை. ஜாக்கிரதையாக ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கான கழிப்பறைக்கு ஒரு நிமிடம் காத்திருந்து நுழைந்தாள். தாழ்ப்பாள் இல்லாத இடம். எக்கி முன்னால் குனிந்து கையை வைத்துக் கையை வைத்துக் கதவைப் பிடித்துக் கொள்ளும் போது மலச் சிக்கல் வாயுவாக வயிற்றை ஊத வைத்திருப்பதைக் கண்டாள். கண் இருள மறுபடி மனம் எல்லாப் பக்கமும் ஓடியது.
கர்ப்பிணி வேசி கஸ்டமர் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் சென்சார் சம்மதிக்குமா? புரொடியூசர் கேட்கிறார். இது எனக்குச் சம்பந்தமில்லாத கர்ப்பம் என்கிறார் டைரக்டர் ட்ராலியில் ஏறியபடி. இவ உடுப்பை கழற்றி எறிஞ்சுட்டு முழுக்கக் காட்டினா எல்லாம் சரியாயிடும், கீழே வேணுமானா மொசைக் வச்சு மறைச்சுடலாம் என்கிறான் நிஜார்த் தடியன்.
மொசைக் இல்லை, கருங்கல் பாளங்களை வரிசையாக அடுக்கி அவளை மறைக்க, பழநியப்பன் அவள் விம்மல் கேட்காமல் தீவிரமாக ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். குழந்தை பாலுக்காக, அவளுக்காக அழுகிறது.
சட்டென்று விழிக்கிறாள். கழிவறையில் உட்கார்ந்தபடிக்கு எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று பயம் திண்ணென்று எட்டிப் பார்க்கிறது. கைக் கடியாரத்தில் நேரம் பார்த்தாள். அது நின்று போயிருக்கிறது.
அவசரமாக வெளியே வருகிறாள். சாப்பாட்டு நேரம் தான். மிஞ்சிப் போனால் ஐந்து நிமிஷம் தூங்கி இருப்பாளாக இருக்கும் என்பதில் அலாதி நிம்மதி.
சாப்பாட்டுக்கு க்யூ நிற்காமல் எல்லாரும் கைநீட்ட அவள் போய்ச் சேருவதற்குள் குவிந்து காகிதத் தட்டுகளை நிரப்பிக் கொண்டு விலகி விட்டார்கள்.
சோறு இல்லே. சப்பாத்தி மட்டும் இருக்கு. குருமா உண்டு.
சோற்றுப் பாத்திரத்தில் வழித்துப் போடச் சொல்கிறாள் குழலி பணிவோடு. சாப்பாட்டை நிர்வாகம் செய்த தடியன் கோணலாகச் சிரிக்கிறான். நடு ராத்திரி கழிந்து ஒரு பொறுப்புள்ள ஆண்பிள்ளை சிரிக்கிறது இல்லை இது.
காலைப் பிடிச்சு தூக்கி விடுறேன். அண்டா உள்ளே போய்ப் பாரு.
அவனை உடனே தவிர்த்து அங்கே பக்கத்தில் கொட்டாவி விட்டபடி நின்றவளிடம் போகிறாள் குழலி. அவளும் அரை நிமிடக் கனவில் இருப்பாள்.
மூணு சப்பாத்தி சின்னதாக நடுவில் கரிந்து கிடைத்தது. காரசாரமாக ரெண்டு கரண்டி குருமா மேலே விழுந்து அந்த கோதுமைப் பிண்டங்களை மூடியது.
’சீக்கிரம் ஆகட்டும்’.
கையில் தட்டோடு சுற்றி வந்து கொண்டிருந்த நிஜார் தடியன் கோழிக் காலை சுவாரசியமாகக் கடித்தபடி யாரென்று இல்லாமல் விரட்டிக் கொண்டிருக்கிறான். தெய்வங்களுக்குக் கோழியடித்துப் படைத்திருக்கிறார்கள் போல. அந்த வெள்ளைக்காரச்சியும் கோழி தின்று விட்டு மாமோய் என்று ஊஞ்சல் பக்கம் நின்று விரக தாபத்தில் துடிப்பாள். துடிக்கட்டும். குழலிக்கு அது வேண்டாம். வெள்ளைக்காரி உபயோகிக்கும் கக்கூஸ் அடைத்துக் கொள்ளட்டும். அவள் மாமனைக் கூப்பிட்டு முடித்து ஓடி வருவாள். பொது டாய்லெட்டுக்கு வராதேடி. செடிக்குப் பக்கம் போய் உக்காரு என்பாள் குழலி.
வெந்தும் வேகாமலும் இருந்த ரெண்டு சப்பாத்தியை குருமாவில் அமிழ்த்தி எப்படியோ சாப்பிட்டு முடித்தாள். ஏதோ அவசரம் என்கிறது போல் கைப்பை வைத்த இடத்துக்குத் தட்டோடு போய் உள்ளே கை விடுகிறாள். அணைத்து வைத்த மொபைல் ஃபோன், வீட்டுச் சாவி ரெண்டும் இருக்கிறது. எஸ்ரா பவுண்டின் நாவல் ரொம்ப நாளாக அங்கே உண்டு. நல்ல வேளை நாப்கினும் உண்டு. என்ன கதியில் இருக்குமோ. சட்டென்று கையில் ஏதோ இடற என்ன என்று அரை இருட்டில் பார்க்கிறாள். குழந்தையின் கிலுகிலுப்பை. விளையாட்டு மும்முரத்தில் அது கையில் பற்றி வீசியிருக்கிறது எப்போதோ.
அதிகமாக இருந்த சப்பாத்தியில் குருமா நனைக்கவில்லை என்பதைக் கவனிக்கிறாள். அப்படியே அதை எஸ்ரா பௌண்டின் நாவலில் ரெண்டு பக்கங்களுக்கு நடுவே பொத்தி மறுபடி கைப்பையில் வைக்கிறாள்.
கை அலம்பி வரவும் விசில் சத்தம் கேட்கவும் சரியாக இருக்கிறது.
நடக்க வேண்டாம் இனி என்று தெரிகிறது. வார்னிஷ் மணக்கும் மரச் சுவரில் மெல்லச் சாய்ந்து உட்கார வேண்டும். கஸ்டமரின் காலைப் பிடித்து விட்டு சிருங்காரமாக முந்தானையை ரெண்டு மார்பகங்களுக்கும் நடுவே போட்டுக் கொண்டு அவனை ஏக்கத்தோடு பார்க்க வேண்டும்.
ரெண்டு ஒத்திகை ஒழுங்காகப் போகிறது. அவள் வரையில் பிரச்சனை இல்லை என்பதை நிஜார் தடியன அவளைக் கவனிக்காமல் வேறே யாரை எல்லாமோ திட்டித் தீர்த்து நகர்வதில் புரிந்து கொள்கிறாள். கஸ்டமர் கூட திட்டு வாங்குகிறான் –
‘பொண்ணு உன் காலைப் பிடிச்சு விட்டா ஆஹான்னு அனுபவிக்கணும். சுகம் முகத்திலே தெரியணும். நீ உக்காத்தி வச்ச பொணம் போல இருக்கே’.
ஷாட்டுக்குப் போகும்போது டைரக்டருக்கு ஆயிரம் வாட்ஸ் போட்டது போல் அறிவு ஒளிவீச, ஆம்பிளை பொம்பளையோட காலைப் பிடிச்சு விடட்டும் என்று உத்தரவிடுகிறார். ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் காமிரா நிலைக்கும் அந்தக் காட்சியில் அப்படி என்னதான் மாய்ந்து மாய்ந்து சரி பார்த்துத் திருத்த என்று புரியவில்லை குழலிக்கு.
நீள விசில் ஒலித்ததும் கஸ்டமர் முரட்டுத் தனமாக அவளுடைய கால்களைப் பிடிக்க ஐயோ என்று வீரிடுகிறாள் குழலி. விசில். திட்டு. குழலிக்கும் உண்டு.
மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் கஸ்டமர்.
’அவளுக்கு நடக்க முடியாம எலும்பு முறிஞ்சு கிடக்கா. ஜெனரல் ஆஸ்பத்திரியிலே கட்டில் இல்லாம தரையிலே போட்டு வச்சிருக்காங்க. ஓடி நடந்து வேலை செஞ்சவ. என் வீட்டுக்காரி. ஒரு நாள் ஒரு அஞ்சு நிமிஷமாவது கால் பிடிச்சு விட்டிருக்கேனா? கிரகம்’.
அவன் குரல் உடைய விதிர்விதித்துப் போகிறது குழலிக்கு. கஸ்டமருக்கும் ஒரு குடும்பம் உண்டு. ஓர் உலகம் உண்டு.
மனம் பொங்கியது. வயிறு கூடவே ஓலமிட்டது. என்ன கண்றாவி இந்த நேரத்தில் வயிறைக் கலக்கிக் கொண்டு?
இது பசியால் இல்லை. காரமாகச் சாப்பிட்ட குருமா வேலையைக் காட்டுகிறது. வயிற்றில் இறுகக் கட்டிய அசுத்தம் எல்லாம் வெளியே வருவேன் என்று அடம் பிடிக்கிறது. கஸ்டமர் ஜாக்கிரதையாக அவள் காலைப் பிடித்து விடுவதில் அன்னிய புருஷனின் தொடுதலை முதல் முறையாக உணர்ந்த வெட்கம் கூடுகிறது. அதையும் கடந்து வயிற்றின் ஓலம்.
இன்னொரு டேக் போகிறார்கள். இன்னும் ஒன்று. அடுத்தது சரியாக இருக்கணும் என்று டைரக்டர் தூக்கம் விழித்துச் சிவந்த கண்ணோடு நிஜார்த் தடியனையும் மற்றவர்களையும் விரட்ட அசட்டுச் சிரிப்போடு அவன் அருகே வருகிறான்.
குழலி எழுந்து நின்று வெட்கத்தை விட்டுக் கேட்கிறாள்.
’அவசரமா டாய்லெட்டுக்குப் போக வேண்டியிருக்கு. ரெண்டே நிமிஷம்’.
’அதெல்லாம் ஷாட் முடிஞ்சு தான்’.
அவன் அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டு நடக்கிறான்.
டைரக்டர் இன்னொரு பெரிய அட்டை பீரோவை ஓரமாக நகர்த்தச் சொல்கிறார். அது நகரும் போது கீழே விழ கதவுகள் பிய்ந்து விழுகின்றன. தச்சர் ஒருத்தர் உளியால் தட்டி இழுத்துக் கொண்டிருக்க கஸ்டமரிடம் நேரம் கேட்கிறாள் குழலி. ராத்திரி மூன்று மணி.
எழுந்து ஓடுகிறாள் அவள். ஷாட் எப்போது வேண்டுமானாலும் எடுக்கட்டும். எந்தத் தடியனும் என்ன திட்டு வேண்டுமானாலும் பொழியட்டும்.
எல்லாக் கழிப்பறைகளும் அடைத்து வைத்திருக்கிறது. வெள்ளைக்காரிச்சி சண்டை போட்டு உரிமை நிலைநாட்டியதும் கூட.
திரும்பி ஓடி வருகிறாள் குழலி. இன்னும் பீரோ ரெடியாகவில்லை. விசில் சத்தம் இன்னும் கிளம்பவில்லை. நிஜார்த் தடியன் ஊளையிடுவது கேட்கிறது.
மது சுமந்து போய் ஷாட் முடிந்த பெரிய பாத்திரம் அனாதையாக நாற்காலிக்குப் பின்னால் கிடக்கிறது. யாரும் வராத இடம். இருட்டில் யாருக்கும் தெரியாது. மொபைல் மூலம் ஒரு வினாடி டார்ச் அடித்து நிச்சயப் படுத்திக் கொண்டு குழலி அந்தப் பாத்திரத்தை அருகே நகர்த்துகிறாள். இருட்டில் இடது கைப்புறம் தண்ணீர் பாட்டில் இருப்பதையும் உறுதி செய்து கொள்கிறாள்.
அதற்கு அரை மணி நேரம் சென்று பேக் அப் ஆனது. பணப் பட்டுவாடா உடனே நடந்து முடிய குழலி ஓட்டமும் நடையுமாக வெளியே ஓடுகிறாள்.
கஸ்டமர் சங்கடமாகச் சிரிக்கிறான்.
‘ஆஸ்பத்திரி போறேன், அந்தப் பக்கம்னா வாங்க, கொண்டு விட்டுப் போறேன்’.
அவள் போக வேண்டிய இடத்தைச் சொல்கிறாள். அவன் போகும் வழிதான்.
இருட்டில் தடுக்கி விழாமல் இருக்க அவன் கையைப் பற்றியபடி மௌனமாக நடக்கிறாள் குழலி.
’என்னய்யா இங்கே ஒரே கெட்ட வாடையா இருக்கு எங்கே இருந்து வருது’?
டைரக்டர் நிஜார்க்காரனைக் கேட்டபடி நாற்காலியில் உட்கார்கிறார். கை ஒடிந்த மர நாற்காலி அது.
’கார் வந்துடுத்து’
நிஜார்க்காரன் சொல்ல டைரக்டர் எழுகிறார்.
’செட்டே நாறுது’.
சொன்னபடிக்கு அவர் வெளியேற நிஜார்த் தடியன் சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறான்.
’என்ன சிரிக்கறீங்க’? கஸ்டமர் கையை விட்டு விட்டுக் கேட்கிறான் குழலியை.
’ஒண்ணும் இல்லே அண்ணா’.
(இரா.முருகன் 2016)
Photo courtesy : Henri Cartier-Bresson – ‘Geisha, looking at a kabuki show’ – 1965
A version of this short story was published in Kalki Deepavali Malar 2016