ஆண்கள் மற்றும் சம்சாரிகள்

 

Kungumam column – அற்ப விஷயம்-29 இரா.முருகன்

இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு. ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும்.

1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்த ஞானோதயம் இது. மேற்படி விஷயத்தில் நம்முடைய பாட்டன், முப்பாட்டன் வகையறாக்கள் அலுப்பு சலிப்பு இல்லாமல் செயல் பட்டிருக்கிறார்கள் என்று அரசல் புரசலாகத் தெரியும். அதுவும் முன்னூறு வருடத்துக்கு முந்தி, பேரரசுகள் காணாமல் போய் பாளையக்காரர்களும் ஜமீந்தார்களும் அங்கங்கே ஊருக்கொரு ராஜாவாக செங்கோல் செலுத்திய காலத்தில் தமிழ்ப் புலவனுக்கு வேலை அதிகம்.கஷ்டப்பட்டு காப்பியம் எல்லாம் பாட வேண்டியதில்லை. லோக்கல் மகாராஜாவும் கூட்டாளிகளும் நாள் முழுக்க ரசித்து மனம் மகிழ சிருங்காரக் கவிதை இயற்றிக் கொடுத்தால் போதும். இன்றைக்கு இண்டெர்நெட்டில் கிட்டத்தட்ட இலவசமாகக் கொட்டிக் கிடக்கிற, முப்பது வருடம் முன்பு வரை ரெண்டு பக்கத்திலும் ஸ்டேப்லர் அடித்து கடை கடையாக விற்கப்பட்ட ‘அடல்ஸ் ஒன்லி’ சமாசாரம் தான் அது. சிலேடை வெண்பா, கிரீடை விருத்தம் என்று இலக்கணச் சுத்தமாக காமத்தைப் பற்றி எழுதிப் பிழைக்கப் அக்காலப் புலவர்கள் நிர்பந்திக்கப் பட்டார்கள். வீட்டில் அடுப்பு எரிவதற்காக, வத்தலும் தொத்தலுமான கவிஞர்கள் பசியோடு வளைவு நெளிவு, வடிவ மதர்ப்பு கொண்ட அழகிகளை சதா கனவு கண்டார்கள். காமத்தை நினைத்து காமத்தை சீர், தளை பிரித்துப் பாட்டாக்கி, காமாந்தர்களைக் கடவுளாகக் கண்டு நித்தியம் போய்த் தொழுது காமம் செப்பி காசு வாங்கினார்கள்.

வெள்ளைக்காரன் வந்தபோது செக்ஸ் கெட்ட வார்த்தையாகி விட்டது. விக்டோரியா மகாராணி காலத்தில் நூல் நிலையத்தில் ஒரே அலமாரியில் ஆண் எழுத்தாளர் புத்தகங்களோடு பெண் எழுத்தாளர்களின் படைப்பை வைக்கக் கூடாது என்ற அளவு இந்த வெள்ளை வானர சேனை கலாச்சாரம் சக்கைப்போடு போட்டது. ஆனாலும் இங்கிலாந்தில் அங்கங்கே ‘பேனி ஹில்’ போன்ற படைப்புகள் ஓசைப்படாமல் வெளியாக மத சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு. முழுக்கப் படித்து விட்டுத்தான் எதிர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக மேற்படி சநாதனிகள் ஒருத்தர் விடாமல் புத்தகத்தை வாங்கி வரி விடாமல் பாராயணம் செய்ய, விற்பனை பிய்த்துக்கொண்டு போனது.

இங்கேயும் ஜமீந்தார்கள் காலாவதியானார்கள். ‘அசங்கியம்’ அட்டவணையில் காமம் போய்ச் சேர, புலவர்களுக்குப் பாட பூ, நிலா இன்னபிற விஷயங்கள். அவர்களில் சிலர் பேச, பாட ஆரம்பித்த சினிமாவுக்குள் நுழைந்தார்கள். சுருதி சுத்தமாக சாருகேசி ராகத்தில் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டு வந்தது. லீலை என்ற வார்த்தையைக் கேட்டு முகத்தைச் சுளித்து உள்ளுக்குள் ரசித்து ஒரு தலைமுறையே வளர்ந்து உத்தியோகம் பார்த்து பென்ஷன் வாங்கியது.

இவர்கள் ரகசியமாக இல்லாமல் பகிரங்கமாக ரசித்த இன்னொரு விஷயம் நாடகம். நாற்பது ஐம்பது பாட்டுகளோடு ராத்திரி முழுக்க நடந்த ராஜபார்ட் நாடகக் கச்சேரிகளுக்கு அந்தக்கால சிறிசுகளின் ஒரு கூட்டம் போனால், ‘தாரா சசாங்கம்’ புராண நாடகம் பார்க்க இன்னொரு இளைஞர் அணி அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் போனது. அதில் சிக்கனமாக உடுப்பு அணிந்த தாரை தேவேந்திரனுக்கு மேடையில் எண்ணெய் தேய்த்து விடுகிற அற்புதக் காட்சியை ரசிகர்கள் அணிதிரண்டு கண்டு களிக்க சர்க்காரும் வழி செய்ததாகத் தெரிகிறது. சிறப்பு ரயில்கள் நாடகம் நடந்த ஊர்களுக்கு ரெகுலராக விடப்பட, பார்த்துக் களித்த ரசிகர்கள் நடுராத்திரி வீடுதிரும்பி சுறுசுறுப்பாகச் சந்ததி வளர்த்தார்கள்.

1937-க்குத் திரும்பலாம். செக்ஸ் பெரும்பாலும் இலைமறைவு காய்மறைவான அன்றைய இளைய தலைமுறைக்கு ஆணுறை தெரிந்திருக்குமா? அந்தக் காலப் பத்திரிகை விளம்பரத்தைப் படித்தபோது சந்தேகம் எல்லாம் போயே போச்சு.

‘இது ஒரு அதிசயமான ரப்பர் குழாய். ஆண்கள் உபயோகிக்க ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டது. ஸ்திரீ ரோகங்களை வாங்கிக் கொள்ளாமல் தடுக்க இதைவிட வேறு வழி கிடையாது. இதை சம்சாரிகளும் உபயோகிக்கலாம். கெடுதல் இல்லை. விலை ஒரு ரூபா, பனிரெண்டு அணா’. வெங்கடேச மேஸ்திரி தெரு, மதராஸ் விலாசத்தில் இதை வாங்கினவர்கள் அதே பத்திரிகையில் விளம்பரமான ‘காமலீலா வைபவம்’ புத்தகத்தையும் இரண்டு அணா விலைக்கு வாங்கிப் பயனடைந்திருப்பார்கள். ஆமாம், இதில் ‘ஆண்கள்’ எத்தனை பேர், ‘சம்சாரிகள்’ எத்தனை பேர்? அவர்களில் யார் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன