முசாபர் தெரிசாவுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து : (sic erat scriptum- எழுதப்பட்ட படி)
என் அன்பே, நேற்று மதியம், வீட்டுச் சாவியையும் வீட்டு உரிமைப் பத்திரத்தையும் கொலாசியம் மதுக்கடை பக்கத்துலே கம்ரான் ரெஸ்டாரண்ட் வச்சிருக்கற முஷ்டக் முஹம்மதுவுக்குக் கைமாற்றினேன். ஒரே அழுகை. எனக்குத் தான். மனசுலே ஏதோ அணை உடஞ்ச மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்க, அடி வயத்துலே வலியாகக் கிளம்பி வந்தது அது. கண் இருட்டிப் போனது. கை நடுக்கம் வேறே. அந்த அழுகையோடு நான் பக்கத்திலே என், நம்மோட பிஷ் அண்ட் சிப்ஸ் கடைக்குள்ளே போனேன். அங்கே இன்னும் துக்கம் அதிகமாக, என் பழைய வீட்டுக்கு ஓடி வந்தேன். கதவடைச்சுக் கொண்டு இன்னிக்கு காலை, இதுவரைக்கும் அழுதேன். என் பிரியமான தெரிசா, நீ இனி வரப் போறதில்லே. எனக்குத் தெரியும். என் உயிரே, தெரிசா, ஏன் என்னைக் கைவிட்டு நீ இப்படிப் போனது, என் தேவதையே.
அந்த வீட்டின் வாசலுக்கு நீ எப்போ வந்து நிக்கப் போறேன்னு எவ்வளவு நாள் காலையில் காத்திருந்திருக்கேன். நான் தினம் லீட்ஸுக்கு ரயிலேற ஹர்ட்டன் தெருவுக்குப் போகிற பாதையிலே நடக்க முந்தி அங்கே நிற்பேன். சரிவா மேலே ஏறும் அந்தப் பாதையிலே மூச்சு அடைக்க ஏறுகிற போதெல்லாம் தெரிசா தெரிசான்னு தான் இருதயம் அடிச்சுக்கும். இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விடலைப் பருவத்துலே, பெண்கள் மேலே கண்மண் தெரியாமல் ஆசைப்படற பசங்க சொல்றது தான். ஆனா என்ன, நான் செஞ்சது. எனக்கு உசத்தி.
லீட்ஸ் தச்சுப் பட்டறையிலே ரம்பத்தை ஃப்ளக்கிலே செருகி மரம் அறுக்கற நேரத்திலே கவனம் கொஞ்சம் தறிகெட்டுப் போச்சுன்னா கையே போயிடும்பார் பட்டறை முதலாளி திமோத்தி கோபர்ன். என் நினைப்பெல்லாம் நீ தான். கை போனா தெரிசாவுக்காக போனதா இருக்கட்டுமேன்னு நினைப்பு. ரெண்டு தடவை உன்னைக் காற்றிலே உதட்டில் முத்தமிட்டு கைவிரலை அறுத்துக் கொண்டேன். அதுவும் ஒரு இன்பம் தான்.
என் அப்பா மளிகைக் கடையிலே வியாபாரம் கவனிக்கக் கூட்டி வந்த பங்களா தேஷ் பொம்பளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு வயசுக்கு வந்த பையன் வீட்டுலே இருக்கற நினைப்பே இல்லாம சிங்காரம் கொண்டாடி சிரிப்பும் கும்மாளமுமா கூத்தடிச்ச போது எனக்கு அந்த இடமே அந்நியமாகிப் போனது. உன் வீட்டுக்கு ஓடி வந்து, உன்னைத் தூக்கிட்டுப் போய் மலைச் சரிவிலே போட்டு, சொல்ல விடு, தயவு செய்து, அங்கே உன்னோடு மணிக் கணக்கா செக்ஸ் வச்சுக்கணும்னு ஆசைப் பட்டேன். சாரி, தப்பான வார்த்தைகள்.
அது நாளைக்கே நடக்கப் போறதுங்கற எதிர்பார்பிலே, ஆண்மை அதிகரிக்கற மருந்து, லேகியம், மாத்திரைன்னு பெஷாவர்லேயும், லாஹூர்லேயும் ஆர்டர் செஞ்சு ரெண்டு மாசம் பொறுத்திருந்து வாங்கி ஸ்டாக் பண்ணினேன். ஜிம்னாசியம் போனதும், சிகரெட்டை நிறுத்தி அதை எல்லோருக்கும் சொன்னதும், வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிப் போனதும், விடலைத் தனத்தோட அதெல்லாம் உனக்காகச் செய்யறதுன்னு எல்லோருக்கும் புரிய வைக்கத்தான். சர்ச் கல்லறை வெட்டற குறைந்த பட்ச அறிவு உள்ள ஹென்றி எபனேசர் கூட நான் உன் மேல் வெறும் பிரியம் வைக்கலே, பித்தாகப் போனேன்னு தெரிஞ்சுக்கிட்டான். அவனுக்கு எதுக்குத் தெரியணும்னு கேட்டால் எனக்கு இன்னிக்கும் தெரியாது. வெளியே தெரிந்த காதல் ஒரு போதை, தெரிசா. இந்த வயதிலும் பக்குவப்படாமல், விடலையாக இதெல்லாம் எழுதறியான்னு கேட்கறே, புரியுது. என்ன செய்ய? என் தெரிசா மேல் வைத்த அன்பு இன்னும் இறங்காத போதையாச்சே.
இந்த வீட்டு வாசல்லே நின்னு பைசெப்ஸ் எவ்வளவுன்னு புஜம் மடிச்சு காட்டிப் போவேன். நீ உள்ளே இருந்து பார்த்திருப்பே, ஓடி வர, தூக்கிட்டுப் போக தயாரா கல்யாண உடுப்போட இருப்பேன்னு நினைப்பு. கொஞ்சம் தாட்டியான அழகியாச்சே, எப்படித் தூக்கறது, அதுவும் தூக்கிட்டு மலைக்கு ஓடணும். வெயிட் லிப்டிங் அப்போ தான் போனேன். உன்னை மட்டுமில்லே உங்கப்பா ஆந்த்ரேஸையும் இங்கே வந்து உயிர் போச்சே உங்க பாட்டியம்மா தீபாளியம்மா, அதுதானே பேரு, அவங்களையும் சேர்த்துத் தூக்க தயாரா இருந்தேன்னா பார்த்துக்க தெரிசா.
நீ மட்காஃபை கல்யாணம் செய்த போது சர்ச் வாசல்லே நின்னு கையிலே மலர் வளையத்தோடு வெறிச்சுப் பார்த்துட்டிருந்தேன். எதுக்கு நிக்கறேன்னு அமேயார் பாதிரியார் கேட்டபோது சொன்னேன் – என் சிநேகிதனோட கல்லறைக்கு போகறேன். அவன் இறந்த தினம். துக்கம் தாங்க முடியலே. அப்படிச் சொன்னதும், அவர் சொன்னார் –உனக்கு எதெது பிடிச்சிருக்கோ அதை எல்லாம் விட்டு விலகு. அதாலே வர்ற துன்பமும் இல்லாம் இருக்கும். இப்போ நீ திருமண வைபவத்துலே அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தற மாதிரி மலர்ச் வளையத்தோடு நிற்காமல் அகன்று போ, தெரிசாவை விட்டு விலகுன்னார். விலக முடியுமா என்ன? ஆனால், அதுக்கு அப்புறம் யாரையும் மனதாலும் துன்பப்படுத்த நினைச்சதே இல்லை. நமக்குப் பிரியமான அமேயர் பாதிரியார் சொல்லுக்கு மரியாதை தரணும் தானே? அதுவும் உன்மேல் பிரியம் காட்டறதாச்சே.
அவர் சொன்ன வார்த்தை எங்கே படிச்சதுன்னு கேட்க அடுத்து சர்ச்சுக்குள்ளே போனேன். நான் இதுவரைக்கும் மொத்தமே நாலைஞ்சு தடவை தான் அங்கே போயிருக்கேன். கால்டர்டேல் மசூதிக்கும் அவ்வளவு முறை தான் போயிருக்கேன். ஆனா, ஏதாவது சாக்கு வச்சு உன்னை சந்திக்க உங்க வீட்டுக்கு ஆயிரம் முறையாவது வந்து வாசல்லே நின்னிருப்பேன். உன் முகத்தை ஒரு தடவை பார்த்தா போதும்னு நிக்கறது, பார்க்க முடியாத வெறியிலே திரும்ப ஓடி, அடுத்த ஒரு மணி நேரத்திலே கால் திரும்ப அங்கே கொண்டு போய்ச் செலுத்தும்.
தண்ணியிலே ஓடுகிற அபூர்வமான காரை அரபுக் கதை போல மெட்காப் எங்கே இருந்தோ வாங்கி வந்து இந்த வீட்டு வாசலில் தான் நிறுத்தினான். ஊரே திரண்டு வந்து அந்தக் காரைப் பார்த்தபோது நீ இன்னும் என்கிட்டே இருந்து விலகினதா எனக்கு மனசிலே தோணியது. அல்பமான தண்ணீர் அடிச்சு ஊத்தி தெரு திரும்பறதுக்குள்ளே நின்னு மறுபடி தண்ணீர் நிறைத்து நகர்த்த வேண்டிய அல்பமான காருக்காக நீ அந்தக் குடிகாரனோட இருக்கணுமான்னு தீவிரமா யோசிச்சேன். நீ சைக்கிள்லேயோ உன் காரிலேயோ கடைக்கு மீன் வாங்கப் போகிற நேரத்திலே இந்த வீட்டுச் சுவர்லே தான் சாஞ்சுக்கிட்டு உனக்காக நின்னேன். பார்த்துட்டு நீ திட்டுவே, தோள்லே கடிப்பே, சத்தம் போடுவே. ஆனா, கடைசியா அவனை விட்டுட்டு ஓடி வந்துடுவேன்னு ஒரு அசட்டு நப்பாசை. விடலையாக இல்லாது போனாலும் அது எப்படியோ வந்து பலமா பிடிச்சுடுத்து.
மெட்ஃகாப் அதீதக் குடியால் கல்லீரல் அழுகிச் செத்துப் போனான்னு சேதி கிடச்சபோது நான் லீட்ஸுக்கு ரயில்லே போயிட்டிருந்தேன். ரயில்லே வந்த ஆஸ்பஸ்திரி செவிலி ஒரு மிசிஸ் ராத்போர்டு தான் சேதி சொன்னது. ரயில் வேகம் குறைஞ்ச இடமாப் பார்த்துக் குதிச்சு ரயில் பாதையிலேயே நடந்து கால்டர்டேல் வந்தேன். அதுக்குள்ள இந்த வீட்டுக் கதவு அடச்சு நீ உறங்கப் போயிட்டே. ராத்திரி பதினொண்ணு ஆகி பதினேழு நிமிஷமாகி இருந்தது அப்போது.
ராத்திரியே ப்ராட்போர்ட் போய் காஜியார் கிட்டே அனுமதி வாங்கிட்டு வந்து விடிகாலையிலே உங்க வீட்டுப் பின்னாலே இருந்து சுவர் ஏறிக் குதிச்சு உன்னை உடனே பார்த்து கல்யாணம் செஞ்சுக்க மோதிரம் மாத்திக்கலாம்னு நினைச்சேன். முன்னறையிலே மெட்காஃப் பிணம் கிடக்க நான் பின்னறையிலே உன்னை கல்யாணம் செஞ்சுக்கறது எப்படி நடக்கும்னு தெரியாது. எப்படியாவது உன்னைப் பார்த்து, உன் சம்மதம் வாங்கணும்னு பிடிவாதமா ராத்திரி பூரா அடைச்ச மீன்-வறுவல் கடை வாசலே உக்காந்திருந்தேன். வாங்கிட்டேனே.
விடிஞ்சதும் முதல் ஆளாக சவப்பெட்டி தூக்கிட்டுப் போய் வாசல்லே அமரர் ஊர்தியிலே ஏற்றி விட நான் தான் வந்தது. குரோட்டன்ஸ், போகன் வில்லா, சூரியகாந்தி இப்படி வாசலோடு கூடி பச்சைப் பசேல்னு வளர்ந்து பூத்துக் கிடந்த எந்தச் செடியோ, கொடியோ ஒடிந்து போகாம, நசுங்காம, மெட்காஃப் பத்திரமா வெளியே வந்தான். அவனை குழியில் புதைக்கற நேரத்துலே உன் பின்னாலே ஒரு பாட்டில் தண்ணீரும், ப்ளாஸ்க்லே ஆப்ரிக்க தேநீருமாக நின்னுட்டிருந்தேன். நீ ஒரு தடவை பின்னாலே திரும்பினா கொடுக்கலாம்னு. நீ பார்க்கவே இல்லே.
நீ அன்னிக்கு பார்க்காவிட்டாலும் உன் பின்னாலேயே வந்தேன். இன்னிக்கு நீ பார்க்கலேன்னா அதை மதிச்சு விலகிப் போகிறது தான் நாகரீகம்னு எனக்குப் புரியுது. ஆனால், மனசுலே முழுக்க தெரிசா தெரிசா தெரிசான்னு நீதான் இன்னும் நிறைந்து இருக்கே.
நீ கருவுற்று இருக்கறதைப் பற்றி மகிழ்ச்சி. அதைச் சொல்ல ஏன் பெரிய தப்பு செஞ்ச மாதிரி பதறணும்? மனக் குமைச்சல் எதுக்கு? என்னதுக்காக குற்ற உணர்ச்சி? நான் மலட்டுத்தனத்தை உன் கிட்டே சொல்லாமல் மறைத்து உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது போல பெரிய குற்றமா என்ன இது? உன் மனசுக்குப் பிடித்த ஒருத்தனோடு இணை சேர்ந்து கர்ப்பமானது சகஜமானது. நான் சொல்லணும்னு இல்லே. அந்த உறவை நீ கல்யாணம் மூலம் நிலை நிறுத்தினா நல்லா இருக்கும். உனக்கு எல்லாம் தெரியும். என்னைத் தெரியுமா?
உன் குழந்தையை என் குழந்தையாக சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கலாம்னு எழுதியிருந்தே. அதுக்கு என் அனுமதி எதுக்கு? உன்னோடு சேர்த்து ஏதோ விதத்தில் பேசப்படறதுக்கு எனக்கு எப்போதும் சந்தோஷம் தான். தவறான தகவல் தான், ஆனால் இன்னும் ரெண்டு தலைமுறை கழிந்து அந்தக் குழந்தை நமக்குப் பிறந்ததாகவே பொது நினைவிலும், குடும்ப வரலாற்றிலும் பதியப்படும். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. நான் மலடன்னாலும் வம்சம் வளரும். சரின்னா சரிதான். நீ என்ன நினைக்கறியோ அதுதான் எனக்கும். அது என் பிள்ளை இல்லேன்னு அப்புறம் சொன்னாலும் நான் எதுவும் சொல்லப் போகிறதில்லை. எதுக்கு சொல்லணும்? நான் நீதான் இனி.
என்ன சொல்ல வந்தேன்? ஆமா, நம்ம கடை. நீ அமோகமா வியாபாரம் நடத்தின பிஷ் அண்ட் சிப்ஸ் கடை. அதைத் திரும்பத் திறந்திருக்கேன்னு எழுதியது நினைவிருக்கும். கடையில் வியாபாரம் திரும்பவும் சூடு பிடிச்சு வர்றது. வர்ற எல்லோரும் உன்னைப் பற்றியே விசாரிக்கறாங்க. பதில் சொன்னா மனசுலே வலி வருது. அதான் அங்கே போகிறதைக் குறைச்சுட்டு ஆள் போட்டு கடை நடத்தறேன். என்ன இருந்தாலும் நீ தயார் செய்து கொடுத்த மீனும் இல்லே, வறுவலும் இல்லே இப்போ. ஆனாலும் கடை நடக்கும். உனக்கு நான் செலுத்தற அன்புக் கட்டணம் அது. அடுத்த கடிதத்தோடு கடையோட ஃபோட்டோ வரும்.
இன்னிக்கு இந்தக் கடிதத்தை எழுதறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் வீட்டுப் பத்திரத்தையும் சாவியையும் கை மாற்றின போது நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் அது. உனக்கும் வியப்பாக இருக்கலாம். இப்போ நீ இருக்கும் நிலையில் மனசுக்கு இதமாக, சந்தோஷமாக உணர வைக்கலாம். நிகழ்வையும் கற்பனையையும் நம் மனசுக்கு ஏற்றபடிதானே பார்க்கணும்?
வீட்டுக் கதவை இன்னிக்குத் திறந்த உடனே உள்ளே ஏதோ சிறகடி சத்தம். நான் ஜாக்கிரதையாக வெளியிலேயே நின்னேன். படுக்கை அறையில் இருந்து அந்த சத்தம் வந்தது. பெரிய நாலைந்து பறவைகள் பூட்டியிருக்கற வீட்டுக்குள்ளே எப்படியோ வந்து சௌகரியமாகக் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சும் பொறிச்ச மாதிரி தோணிச்சு. கதவை அவசரமாக பார்த்தேன். அடைச்சுத்தான் இருந்தது. பின்னே கூரையிலே ஓட்டை விழுந்து அது வழியாக இறங்கி இருக்குமோ? இல்லை. நம்ம வீட்டுக் கூரை, கான்க்ரீட் போட்டு நிறுத்தி, ஒரே ஒரு அறை மட்டும் முதல் மாடியில் இருக்கற பெண்ட் ஹவுஸாக கட்டுமானம் உள்ளதாச்சே. இங்கே நம்மைத் தவிர எலி, பெருச்சாளி கூட வர முடியாதே. கரப்பான் பூச்சி வரும்தான்.
நான் ஓரமாகப் போய் நின்னு பெட்ரூம் கதவைத் திறக்கறேன். சட்டுனு பெரிய நீலத் தோகையும் பொன் நிறத்திலே அங்கங்கே காசு காசாக வாரித் தெரிச்ச சிறு தோகையுமாக ஒரு பெரிய மயில் உள்ளே இருந்து ஒரு ஆரவாரமும் இல்லாம, கம்பீரமாக வெளியே நடந்து வந்தது. நான் இருக்கறதையோ கதவு பாதி திறந்து இருக்கறதையோ லட்சியம் செய்யலே அது. நான் ஏதோ பெரிய மனுஷருக்கு, உனக்கு கதவைத் திறந்து வைத்துக் கடந்து போகக் காத்திருந்த மாதிரி காத்திருந்தேன். அந்தப் பறவை பதட்டமே இல்லாமல் என்னைக் கடந்து வாசலுக்குப் போனது. நான் அவசரமாக வாசலுக்கு ஓடினேன். மயிலும் இல்லை, வாசல்லே எந்தப் பறவையோ, விலங்கோ, மனுஷனோ யாரும், எதுவும் இல்லை.
ஆனாலும் நான் நம்பறேன். என்னோட மயில் என்றைக்காவது வரும். என்னைத் தேடி கடல் கடந்து பறந்து வரும். நீ வரும்போது உனக்காக என் வீட்டுக் கதவு திறந்திருக்கும். நான் இங்கே இந்த துனியாவிலே இல்லேன்னா, என் கல்லறையிலே ஒரு மாடம் நீ ஓய்வெடுக்கக் குழித்து வச்சிருக்கும். வா.
அமேயர் பாதிரியாரிடம் இருந்து கடிதம் வந்து நாலு மாதமாச்சு. வாடிகன்லே அவர் சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பார். உடல் ஆரோக்கியமும் மன சமாதானமுமாக அவர் என்றென்றும் அங்கே இருக்க நீயும் நானும் படைத்தவனை வேண்டிக் கொள்ள வேண்டியது.
மாறாத அன்புடன்,
முசாபர் அலி,
கால்டர்டேல், மேற்கு யார்க்ஷயர்,
பிரிட்டன்
************
தொலைபேசி அழைப்போடு காலை விடிந்து கொண்டிருந்தது. இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டால் முசாபராகத்தான் இருக்கும். ஐந்தரை மணி நேர வித்தியாசம் இந்த ஊர் நேரத்துக்கும் இங்கிலாந்து நேரத்துக்கும். கால்டர்டேலில் நடு ராத்திரி இப்போது. தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு உட்கார்ந்து கூப்பிடுகிறான். அவன் கடிதம் நேற்றுத்தான் வந்து சேர்ந்தது. இதுவரை பத்து தடவை அதை தெரிசா படித்து விட்டாள். எழுத்து கண்ணில் பற்றி நிற்க, வரிகள் அவற்றின் எழுத்து, இலக்கணப் பிழையோடு மனதில் ஏறி விட்டன.
ஏய் பொண்ணு, எப்படி இருக்கே
இது சங்கரன். தில்லியில் வீட்டில் இருந்து தைரியமாக இப்படிப் பேசுகிறானா என்ன? தெரிசா விளங்காமல் பார்க்க, அவன் கல்கத்தாவுக்கு உத்தியோக முறையில் ஒரு வாரம் வந்திருப்பதாகச் சொன்னான்.
என்ன வேலையோ சாருக்கு?
சங்கு வளையல் செய்யற குடிசைத் தொழிலுக்கு மானியம் கொடுக்க.
சங்கு?
ஆமா, பெரிசு பெரிசா இருக்கும். கையிலே பிடிச்சு பூம்பூம்னு.
வேண்டாம், காலங்கார்த்தாலே.
அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.
சரி, வேண்டாம், உனக்கு இதெல்லாம் ரசிக்காது.
உனக்கு ரசிச்சா போதும் என்றாள் தெரிசா
எனக்கு ரசிச்சது உன்.
அவன் தனியாக இருந்து, நேசிக்கிற பெட்டையிடம் தொலைபேசியில் கதைக்கும் விடலைத்தனமான லகரியில் பேசிக் கொண்டே போனான்.
ஏய், சீ இத்தனை தூரத்தில் இருந்து கூப்பிட்டு இதைச் சொல்லவா போன்?
அதுக்கு மட்டுமில்லே, நீ என்னிக்கு வாரணாசி போறேன்னு கேட்கவும்தான்
கேட்டு, வரப் போறியா என்ன?
அங்கே திருப்தியா சாப்பாடு கிடைச்சா வரலாம்னு உத்தேசம்
சாப்பாடுக்கு என்ன, நல்ல சப்பாத்தி.
தெரிசா குரல் பாதியில் நின்றது. கள்ளன், கேட்பது வேறே என்று புரிய இன்னொரு தடவை பொய்க் கோபம் காட்டினாள்.
சரி இந்த மனப் போக்கில் இருக்கும் போதே சொல்லி விடலாம் என்று தீர்மானித்தாள் தெரிசா
ஷங்க்ஸ். ஒரு ஹாப்பி நியூஸ்,
என்ன, நீ கல்கத்தா வர்றியா?
இல்லே, நான் முழுகாம இருக்கேன். மூணு மாசம்.
எதிர் முனையில் அமைதி.
அப்புறம் உற்சாகமாக, அல்லது போலி உற்சாகத்தோடு –
முசாபருக்கு என் வாழ்த்துகள். உனக்கும்.
மறுபடி அமைதி. திரும்பக் குரல் –
சரி, வெளியே போய்ட்டிருக்கேன். சாயந்திரம் பேசறேன். கவனமாக இரு
அமைதியில் நிலைத்த டெலிபோன் ரிசீவரை ஃபோன் மேல் வைத்தபடி தெரிசா மூச்சை இழுத்து விட்டாள். இறுக்கம் தளர்கிற மாதிரி இருக்கிறது.
மடையா, அது உன் குழந்தை
சங்கரன் கேட்காவிட்டால், அவனுக்குத் தெரியாவிட்டால், அவனால் புரிந்து கொள்ள முடியாமல் போனால் பரவாயில்லை. அவள் குழந்தை. அது போதும் அவளுக்கு. மகனா, மகளா, இன்னும் ஆறு மாதம் போனால் தெரிந்து விடும். அதற்குள் செய்ய வேண்டியது அவள் நிச்சயம் செய்திருந்தபடி, வாரணாசிக்குப் பயணம்.
நாளை மறுநாள் ஹரித்துவாருக்கும் அங்கேயிருந்து வாரணாசிக்கும் யாத்திரை புறப்பட ஏற்பாடாகி இருக்கிறது. திரும்பி வந்தபின் ராமேஸ்வரம் யாத்திரை இருக்கிறது.
தெரிசா மிகுந்த பலகீனமாயிருக்கிறாள் என்றாலும் போய்த் தான் ஆக வேண்டும். நிச்சயம் செய்தாகி விட்டது.
அவளுடைய இருப்பையே புரட்டிப் போட்ட தீர்மானங்களில் அதுவும் ஒன்று. ஒரு வம்சமே, அவள் அறியாத எல்லாத் தலைமுறைகளும் குவிந்து ஒருங்கிப் பகிரும் மரபணு நினைவாக அவளுக்குள் படர்ந்து, அவளைச் செலுத்திக் கொண்டிருப்பதாக உணர்கிறாள் அவள்.
சாவியை எடுத்துப் போகட்டா மதாம்மா?
திலீப் வாசலில் குரல் கொடுத்தான். அவன் வந்த ஆட்டோ ரிக்ஷா அங்கே தான் நின்றது. அவனுடையது தான் அது. தெரிசா வலுக்கட்டாயமாக வாங்கிக் கொடுத்தது. போன மாதம் நடந்தது அது. சைக்கிளில் பஸ் நிறுத்தத்துக்கு அகல்யாவைக் கூட்டிப் போவதைப் பார்த்து, வேணாம் என்று என்று தடுத்தாள் தெரிசா. ஏன் என்று கேட்டான் திலீப் சைக்கிளைக் கால் ஊன்றி நிறுத்தி.
ஏனா, மூணு மாசம் கர்ப்பம் தாங்கியிருக்கா. இந்த நேரத்திலே தான் நீ அவளை பத்திரமாகப் பார்த்துக்கணும். எங்கேயும் பார்த்து பதமா கூட்டிப் போகணும்.
சைக்கிள்லே தானே போறேன். ஊர்ந்து தான் போகும் அது, மதாம்மா.
சைக்கிள் இந்த ஊர்த் தெருவிலே குதிச்சுக் குதிச்சுப் போகும். கால்டர்டேல் மாதிரி சீரான பாதை எதுவும் இங்கே இல்லை. பேசாம ஒரு கார் வாங்கிடேன்.
திலீப் கார் வாங்க இன்னும் இருபது வருடமாவது ஆகும் என்று ஏதோ மனதுக்குள் கணக்குப் போட்டுச் சொன்னான்.
அவன் மோட்டார்பைக் வாங்கலாம் என்றபோது மறுபடி தடுத்தாள் தெரிசா. அது ஒரு பெரிய சைக்கிள். அவ்வளவுதான் என்றாள் கையசைத்து திலீப்பின் யோசனையை நிராகரித்தபடி.
வேறே என்ன வழி மதாம்மா?
நீ தான் சொல்லணும் திலீப்பே.
படகு தான் வாங்கணும் காயல்லே ஓட்டிப் போய் ஆலப்புழையிலே விட்டுட்டு வந்துடலாம். ஆனால் படகு விலைக்கு ஒரு கார், பழைய லாரியே வாங்கிடலாம்.
அப்போ நீ ஒரு மூணு சக்கர டெம்போ வாங்கு. சந்தோஷத்துக்கு குறைவிருக்காது.
தெரிசா ஒரு வழிகாட்டியின் தெளிவோடும் தீர்க்கதரிசியின் எல்லாம் அறிந்த புன்சிரிப்போடும், முகம் மலர்ந்து சொன்னாள். ஆட்டோ ரிக்ஷாவை வாங்கி என்ன செய்ய என்று கேட்டான் திலீப்.
நீ ஆலப்புழை வரை ஓட்டி போகலாம். பத்திரமா ஓட்டிப் போனா அகல்யாவை பூ போல அங்கே சர்க்கார் மீன் ஆபீஸ்லே விட்டுடலாம். அப்புறம் நீ ஓட்டல் கல்லாவிலே உட்காரும் போது ஆட்டோவை ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டுடு. காய்கறி வாங்கி வர, பலசரக்கு வாங்க, பார்ட்டி ஆர்டர் எடுத்து சப்ளை கொண்டு போக எல்லாம் உபயோகமாகும்.
சொல்லிக் கொண்டு வரும்போதே தெரிசா மனதில் வேறு ஏதோ தீர்மானமாக, அவள் முடித்தது இப்படி இருந்தது –
நீ எதுக்கு ஆட்டோ வாங்கணும். ஓட்ட மட்டும் படிச்சுக்கோ. நான் வாங்கித் தரேன்.
அடுத்த வாரம் அவள் கொடுத்த ஆர்டர் பிரகாரம் கோயம்புத்தூரில் இருந்து லாரியில் வந்து இறங்கிய ஆட்டோ தான் தெரிசா வீட்டு வாசலில் நிற்கிறது.
தெரிசா படித்துக் கொண்டிருந்த காகிதத்தைத் திரும்ப மடித்து உறைக்குள் பத்திரமாக வைத்தாள். உறையை மேஜை அடுக்கில் வைத்து விட்டுச் சுவரில் மாட்டி இருந்த சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
மதாம்மா, குட் மார்னிங்க்.
இது அகல்யா.
சொல்லியபடி, அவள் ஆட்டோவில் இருந்து இறங்க முயற்சி செய்வது தெரிசாவுக்குக் கண்ணில் பட, அவசரமாகக் கை காட்டி அவளை நிறுத்தினாள்.
ஆட்டோ அருகில் போய் அகல்யாவின் தோளில் கை வைத்துக் குனிந்து கன்னத்தில் இதமாக முத்தமிட்டாள்.
மகள் விளையாடறாளா?
அகல்யா அவள் கையில் மறுமுத்தம் அளித்துச் சொன்னாள் –
மதாம்மா, உங்க மகன் அங்கே என்ன பண்றானோ அதான் பண்றாள் இவளும்.
தெரிசாவின் மேடிட்ட வயிற்றில் இதமாக வருடியபடி அகல்யா சொல்ல, கண் மூடி ரசித்தாள் தெரிசா.
வரேன் மதாம்மா, போய் எஸ்தப்பனை அனுப்பிட்டு கல்லாவிலே உக்காரணும். சாயந்திரம் இவளைக் கூட்டி வந்து விடறேன். கூடிக் குலாவிக்கிட்டு இருங்க.
திலீப் ஆட்டோ ரிக்ஷாவைக் கிளப்ப, தெரிசா சொன்னாள் –
எல்லாம் சரிதான். அந்த மதாம்மா தான் ஒத்து வரலே.
மதாம்மாவை மதாம்மான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடறதாம் என்றான் திலீப். அதானே என்றாள் அகல்யா சிரித்தபடி. ஆட்டோ மெல்ல நகர்ந்தது.
சாரதான்னு கூப்பிடுங்களேன். தெரிசா மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுக்குப் பிடித்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் எல்லோரும் அப்படித்தான் கூப்பிடப் போகிறார்கள். ஹரித்துவாரில் அந்தப் பெயர் மாற்றம் நடக்கும்.
உள்ளே வந்து மேஜை மேல் பிரப்பங்கூடையில் இருந்த ஸ்டெயின்லெஸ் அடுக்கைப் பார்த்தாள் தெரிசா. உள்ளேஎ பாந்தமாக தட்டு மூடி, கீழே பச்சைப் பசேல் என்று ரெட்டை வாழை இலை வைத்து வந்திருந்த பாத்திரங்களில் காலைச் சாப்பாடு காத்திருந்தது. கிட்டாவய்யன் ஈட்டரீஸ் என்று வாசலில் மலையாளத்திலும் தமிழிலும் பெயர்ப்பலகை வைத்த உணவு விடுதியில் இருந்து கொண்டு வந்து வைத்துப் போன உணவு. நல்ல சூடும் பசியைக் கிளப்பும் வாடையும் ருசியுமாக கிட்டாவய்யன் ஈட்டரீஸில் சமைத்து இறக்கி, கொதிக்கக் கொதிக்க அனுப்பியது. அவளுக்குச் சொந்தமான விடுதி அது.
பொங்கலும் வடையும் பாதி சாப்பிட்டு வைத்து விட்டாள் தெரிசா. இன்னொரு மாதம் வயிற்றுப் புரட்டல் காலையில் ஏற்படும் என்றும் அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்றும் லேடி டாக்டர் கேதரின் நம்பியார் அவளிடமும் அகல்யாவிடமும் சொல்லி இருக்கிறாள். தெரிசா முஸ்தபர் என்று பெயர் எழுதிய கோப்பு அவள் மேஜைக்கு அருகே அலமாரியில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. பிறக்கப் போகும் குழந்தை, அன்னை பற்றிய விவரங்கள் அதிலுண்டு. அகல்யா திலீப் மோரே என்ற கோப்பும் கூட அங்கே உண்டு.
கை கழுவி மேஜை அடுக்கில் இருந்து கவரை மறுபடி எடுக்கக் கை நீட்டியபோது வாசலில் திரும்பவும் சத்தம்.
ஆடி அசைந்து மணிகள் குலுங்க வந்து நிற்கும் குதிரை வண்டி அது.
உள்ளே இருந்து அரசூர்த் தியாகராஜன் வெளியே தலை எக்கிப் பார்த்து வண்டிக்காரனிடமும் அது போதாதென்றுபட, வழியோடு போன ரெண்டு பேரையும் வந்து சேர்ந்த இடம் சரியானது தானா என்று விசாரித்து உறுதி செய்து கொண்டு, குதிரை வண்டிக்குள் தலையை மறுபடி இழுத்துக் கொண்டார். ஒரு நிமிடம் கடந்தது. பொறுமையின்றி குதிரை சேணம் குலுங்க அசைந்து முன்னால் நகர உத்தேசித்தது. வண்டிக்காரன், வண்டியோட்டிகளுக்கே உரிய பொறுமையோடு சும்மா பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். வண்டிக் கூட்டை அடைத்த குறுக்கும் கம்பி விலகியது.
உள்ளே இருந்து முதலில் இறங்கிய பெண்ணை தெரிசா அறிவாள். அரசூரில் புத்தக வெளியீடு நடந்தபோது சந்தித்திருக்கிறாள். தியாகராஜ சாஸ்திரிகளின் வீட்டுக்காரி. அவள் திண்ணென்று அடி எடுத்து வைத்து இறங்கிக் கையை உள்ளே நீட்ட அடுத்து அந்தக் கையைப் பற்றியபடி தியாகராஜன் இறங்கினார். அவரை விட வீட்டுக்காரி ஒரு அடி தாராளமாக உயரம் கூடுதல். அவரை விட வாட்ட சாட்டமான உடம்பு. நிலை குலைந்து தரையில் விழப் போன தியாகராஜ சாஸ்திரியை வீட்டம்மா தான் கைகொடுத்து இழுத்து நிறுத்தினாள்.
வண்டிப் படியில் மறுபடி ஏறி நின்றபடி தியாகராஜனின் வீட்டுக்காரி கையைத் தாராளமாக உள்ளே நீட்டியதைத் தெரிசா வீட்டுக்குள் இருந்தே கவனித்தாள். அவள் இறங்கும் போது இரண்டு கையிலும் வயதான ஒரு மூதாட்டியைச் சுமந்தபடி வந்தாள். விதவைக் கோலத்தில் மொட்டைத் தலையோடு இருந்த அந்த முதுபெண் சாஸ்திரிகளின் அம்மாவாக இருக்கும்.. தலையில் இருந்து சரிந்த முக்காட்டை அவசரமாக மேலேற்றி, கொத்துக் கொத்தாகச் சிலிர்த்திருந்த வெள்ளை முடிக் கற்றைகள் வெளியே தெரியாதபடி மறைத்தபடி தரைக்கு வந்தாள் மூதாட்டி. தெரிசா வாசலுக்கு வந்து நின்றாள்.
எங்கம்மா.
தெரிசாவை ரெண்டு கையும் கூப்பி வணங்கியபடி தியாகராஜ சாஸ்த்ரிகள் சொன்னார்.
நடக்க முடியாது. ஊர்ந்து ஊர்ந்து தான் ஆத்துக்குள்ளேயே நடமாட்டம். ஆனா வாரணாசின்னதும் எழுந்து உக்காந்துட்டா. அம்பலப்புழைன்னதும் சுவரைப் பிடிச்சுண்டு நடக்கறா. அவளோட மேரேஜ் ஆன புதுசிலே பகவதிப் பாட்டியம்மா கல்யாணம்னு இங்கே வந்தாளாம். நல்ல ஞாபக சக்தி இந்த வயசிலேயும். டிட்டோ ஜீர்ண சக்தி. காது தான் சுத்தமா அவுட்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிழவி இரைய ஆரம்பித்தாள்.
குளிச்சுட்டு கோவில் போகலாம். மசமசன்னு நிக்காதே. விழுப்பு துணியை எல்லாம் உடனே உடனே துவைச்சு காயப்போடு. காசிக்கு போயிண்டிருக்கோம். சுத்தம்கறதே கிடையாது. ஊழல் பண்டாரம் நம்மாத்துலே எல்லோரும். நாலு சொம்பு தலையிலே ஜலம் விட்டுண்டு ஓடி வா. எனக்கு வென்னீர் போடு.
தியாகராஜ சாஸ்திரிகளும் வீட்டம்மாவும் ஆளுக்கொரு பக்கமாகத் தூக்கி வரப் பாட்டித் தள்ளையின் அதிகாரம் தூள் பரந்தது.
வேலைக்காரப் பெண் கொண்டு வந்து போட்ட நாற்காலிகள் வேண்டாம் என்று சொல்லி தியாகராஜ சாஸ்த்ரிகள் மொசைக் தரையில் கால் நீட்டி உட்கார, அவர் மனைவி பாட்டியம்மாளையும் பொம்மை மாதிரி சுவரில் சாய்த்து உட்கார வைத்துவிட்டு தெரிசாவோடு உள்ளே போனாள்.
எங்கே போறா உன் பொண்டாட்டி?
கிழவி கேட்க, அற்ப சங்கை போறா என்றார் சாஸ்திரி. அதென்ன என்று திரும்ப குதற, ரீசஸ் போயிட்டு வருவா என்றார்.
ரயில்லே இருந்து இறங்கறபோது போனாளே. அப்புறம் என்ன இன்னும்? பாட்டி குறைச்சல் பட்டாள் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு.
போற இடத்துலே எல்லாம் குடம் குடமாப் போய் வைக்கணுமாக்கும்.
அவள் வன்மையாகக் கண்டிக்க, தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது.
யாத்ரைன்னு கிளம்பினா, எனக்கு முன்னாடியும் பின்னாடியும் தானே கட்டுப்பட்டு வந்துடும். போனவிசை வந்தபோது சுசீந்திரத்திலே ஒரு நாள் முழுக்க, விடிகாலம்பற நாலு மணியிலே இருந்து ராத்திரி பத்து வரைக்கும் மூத்ரம் போகவே இல்லே பார்த்துக்கோ. ஒண்ணுக்கு போறதுக்கா யாத்ரை வரோம்? பகவத் தியானத்திலே இருக்கறச்சே மலமூத்ராதிகள் அண்டுமோ?
தியாகராஜ சாஸ்திரிகள் எழுந்து அந்தாண்டை போக, தெரிசா சிரிப்பு அடங்காமல் தலையைக் குலுக்கிக் கொண்டாள்.
டீ எடுக்கட்டா என்று நல்ல மலையாளத்தில் கேட்டாள் தெரிசா. அந்த மொழி ரொம்ப நாழிகை வெளியே போயிருந்த அம்மா திரும்பி வந்ததும் ஒட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி வெகு சீக்கிரம் அவள் நாவில் புகுந்து கொண்டது.
வேணாம். ஸ்டேஷன்லே இவர் பாடாவதி காப்பி குடிச்சுட்டார். எனக்கும் வாங்கிக் கொடுத்தாச்சு. குளிச்சுட்டுத்தான் இனிமேல் கொண்டு நல்லதா சிராங்காய் காப்பி உங்காத்திலே குடிக்கணும்.
வீட்டுக்காரி சொல்ல, தியாகராஜன் தப்புச் செய்த குறுகுறுப்போடு அவளைப் பார்த்தார். காப்பி இருந்தால் சாப்பிடலாமே. அதுக்கு ஒரு தோஷமும் இல்லே என்றாள் பாட்டியம்மாள்.
காப்பி போடலாம் என்று தெரிசா தீர்மானிக்க, கிழவியிடம் சொல்ல வேண்டிய தகவலாக அவளுக்குப் பட்டதைச் சொன்னாள் – நான் கிறிஸ்தியானி அம்மா. எங்க வீட்டுலே காப்பி பலகாரம் சாப்பிடுவீங்க தானே?
நாலு தடவை அவள் சொல்லி, ஒரு முறை தியாகராஜ சாஸ்திரிகளும் மனசே இல்லாமல் ஒலிபரப்ப, அவள் காதுக்குச் சேதி போய்ச் சேர்ந்தது.
காப்பிக்கு எந்த தடசமும் இல்லை. டிபன் வகையறா ஒண்ணும் வேணாம். பாவம் உனக்கும் கஷ்டம் என்றாள் கிழவி. என்ன கஷ்டம் என்று அவளும் சொல்லவில்லை. தெரிசாவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஓட்டலில் சிற்றுண்டி வரவழைத்துக் கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும். கிட்டாவய்யன் ஓட்டல் ஆச்சே? அம்பலப்புழை பிராமணன் உயிரோடு இல்லாவிட்டாலும் அவன் பெயர் இருந்தாலே சகல தீட்டும் போய் விடுமே.
அவர்களை ஐந்து நிமிடம் சிரம பரிகாரம் செய்த பிறகு நான்கு வீடு தள்ளி இருந்த எம்ப்ராந்திரி வீட்டுக்கு அழைத்துப் போனாள் தெரிசா.
எம்ப்ராந்த்ரி சாய்வு நாற்காலியில் இருந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி நாராயணியம்மா அந்தர்ஜனம் அவர்களை உட்காரச் சொல்லி சாயா எடுத்து வந்தார்.
குளி இன்னும் கழியலே என்றார் சாஸ்திரி. பரவாயில்லே, குளிச்சுட்டு மடியா இன்ணொண்ணு குடிச்சுக்கலாம் என்றாள் அவர் அம்மா. எங்கே குளிக்க என்று கேட்டபடி எதிரே கோவில் குளத்தை ஆசையோடு பார்த்தாள் சாஸ்திரி மனைவி.
அங்கே போய்க் குளிக்கலாம். தண்ணி கொஞ்சம் பாசி வாடை அடிக்கும். அப்புறம், அந்தத் தண்ணி ஜில்லுனு இருக்கும். வென்னீராக்க வசதி இல்லை. நம்ம மனையிலே அதுக்கு கீஸர் இருக்கு. இங்கேயே ஸ்நானம் வச்சுக்கலாமே.
நாராயணியம்மா சொன்னதற்கு உடனடி ஒப்புதல் வழங்கப்பட்டது. பாட்டியம்மாளுக்கு திருப்தி முகத்தில் தெரிந்தது. மலையாள பிராமண வீடு. சுத்தமாகவும் இருக்கிறது. நம்மூர், நம்மாம் மாதிரி இல்லை என்றாள் அவள்.
பாட்டியை உட்கார வைத்துக் குளிப்பாட்ட முக்காலியை வாங்கி பாத்ரூமில் போட்டு விட்டு எம்ப்ராந்திரி பக்கத்தில் இருந்த மாத்ருபூமி தினப் பத்திரிகையைப் பிரித்து அதை சாவகாசமாகப் புரட்டினார் தியாகராஜன். ஏதோ ஆயுசு பரியந்தம் மலையாளத்தில் பேசி, மூச்சு விட்டு, சாப்பிட்டு, படித்து, உறங்கின லாகவம் அவர் பத்திரிகையைப் பிடித்து அதைப் பார்த்த போக்கில் தெரிந்தது. என்ன, மலையாளம் சுத்தமாகத் தெரியாது அவருக்கு. அவ்வளவே.
எம்பிராந்திரி கண் விழித்தார். எதிரே நாற்காலியில் உட்கார்ந்திருப்பது யார் என்று தெரியாமல் விழிக்க, உற்சாகமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் தியாகராஜன்.
ஹிந்தி தெரியுமோ திருமேனி?
எம்ப்ராந்திரி சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தபடிக்கு விசாரித்தார்.
ஸ்பஷ்டமா சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்லுவேன். அது போறாதா.
அது சரி, தலை வலிக்கு மெடிகல் ஷோப்பிலே கோடாப்ரின் வாங்கணும்னு போனா, என்ன ஸ்லோகம் சொல்வீங்க?
அதெதுக்கு கவலைப் படணும். நெத்திப் பொட்டுலே ரெண்டு கையும் வச்சு அபிவாதயே சொல்ற மாதிரி பிடிச்சுண்டு நிறுத்தி நிதானமா, உரக்க அஷே அஷே மன்மத வருஷேன்னு சங்கல்ப ஸ்லோகம் சொன்னா போதும். எல்லா அர்த்தமும் போய்ச் சேர்ந்துடும்.
மதாம்ம.
இன்னொரு குரல். எம்பிராந்தரி வீட்டு வாசலில் இருந்து கேட்டது இது. தெரிசாவைத் தேடி யாராவது வந்து விடுகிறார்கள். இது ஓட்டல் க்ளீனர் செக்கன்.
மதியச் சாப்பாடு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று கேட்க, ஓட்டலில் இருந்து பையனை அனுப்பியிருந்தான் திலீப். அவன் கோணல்மாணலாக ஆட்டோவை ஓட்டி வந்து நிறுத்த, தெரிசா சத்தம் போட்டாள் –
ஏண்டா பயலே, ஓட்டக் கத்துக்கிட்டுத்தானே வண்டி எடுத்தே?
நான் கொல்லத்துலே வண்டி ஓட்டினவன் மதாம்மா என்றான் அவன். கொல்லத்தில் இவன் மேல் கோபத்தோடு ஒரு பெரிய ஜனக்கூட்டமே அலைந்து கொண்டிருக்கும் என்று நினைக்க தெரிசாவுக்கு கலவரமானது.
மதாம்ம, உச்சைக்கு ஊணு.
தியாகராஜ சாஸ்திரி குடும்பம் வந்த காரணத்தால் வெங்காயம், பூண்டு போடாத சாப்பாடாக நாலு பேர் சாப்பிடும் அளவு எல்லாம் அனுப்பச்சொல்லு.
எம்பிராந்திரி எழுந்து நடந்தபடி சொன்னார் –
ஏன் நாங்க ஹஸ்பெண்ட் ஒய்ப் கிட்டாவய்யர் ஈட்டரி ஊண் கழிக்க மாட்டோமா?
சந்தோஷமாக ஆறு பேர் சாப்பிட, மூணு டிபன் காரியர்லே எடுத்து வா என்றாள் தெரிசா. மூணு காரியர் இல்லை, ரெண்டு உண்டு என்றான் பையன். மீதியை எல்லாம் நாலைஞ்சு பாத்திரத்தில் வச்சு இன்னொரு செக்கனை பிடிச்சுக்கச் சொல்லி எடுத்துவா என்றாள் தெரிசா.
புதிதாக ஆரம்பித்த ஓட்டல். ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் இது வந்து. நல்ல வரவேற்பு கூட. இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதத்தில் நடத்திக் கொண்டு போவது எப்படி என்று தெரிசாவுக்குப் பிடிகிட்டி விடும். திலீப்புக்கு அந்த அறிவு போய்ச் சேரும். அதுவரை கேள்வி கேட்டு, நேரே போய்ப் பார்த்து, இருந்து, பேசக் கேட்டுத்தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதை விடப் பெரிய தோதில் பிஷ் அண்ட் சிப்ஸ் கடை அமோகமாக வைத்திருந்த அனுபவம் கை கொடுக்கிறது, கொடுக்கும்.
ஆமா, ஏன் இன்னிக்கு இப்படி நேரம் கழிச்சு, பதினொரு மணிக்குத்தான் வர்றே? உறங்கிட்டியா?
இல்லே மதாம்மா, அங்கே ஓட்டல் சமையல்கட்டுலே காலையிலே ஒரு கூச்சல், குழப்பம்.
என்னது அது என்று கேட்டாள் மதாம்மா. முப்பாட்டனார் வேதய்யன் காலத்தில் கண்ணூர் ஓட்டலில் வேலை பார்த்த ஒரு பட்டன் யாருடைய குறியையோ கடித்துத் துண்டித்ததாகக் கதை சொல்வார்களே, அது மாதிரி ஆனதோ?
அவள் ஏக கவலையில் இருந்தாள். தக்கபடி கேள்வி கேட்க, ஓட்டல் ஊழியர்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்து சேரவில்லை என்று தெரிந்தது.
அப்புறம் என்ன?
காலையிலே அடுப்பு மூட்டி காப்பியும் சாயாவும் உண்டாக்கும்போது ஒரு சின்னப் பெண் விறுவிறு என்று உள்ளே வந்து சொல்லச் சொல்லக் கேட்காமல் காய்கறி நிறைத்து வைத்த அறைப் பக்கம் போனாளாம். யார் என்ன என்று ஓட்டலில் இருந்தவர்கள், காப்பி சாப்பிட வந்தவர்களும் கேட்டார்களாம். நான் இந்த இடத்துப் பொண்ணு தான் என்றபடி அவள் காய்கறி நறுக்கி வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாளாம். அங்கே போகக்கூடாது என்று யாரோ சொல்ல, இது அம்மிணிகுட்டி வீடாக்கும், அவள் இனிமேல் கொண்டு இங்கே தான் இருப்பாள் என்றபடி கதவை அடைத்துக் கொண்டாளாம். திறந்து பார்த்தால் அந்த அம்மிணிக்குட்டி வந்த சுவடே இல்லையாம்.
அம்மிணிக்குட்டியா, யார் அது? ஒன்றும் புரியாமல் கேட்டாள் தெரிசா.
அம்மிணிக்குட்டி இல்லே. குட்டியம்மிணி. குஞ்ஞம்மிணி.
எம்பிராந்திரி மனைவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
(தொடரும்)