மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள் விரிந்த பழைய வீட்டை அடையாளம் காண அவள் சிரமப்படவில்லை. அரசூரில் அவள் பார்த்தது. பூட்டி வைத்திருந்தது. உள்ளே வாசல் திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்து கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று பாடிக் கொண்டிருந்த வீடு. அது சங்கரனின் வீடு என்று தெரியும் அவளுக்கு.
கட்டிலில் அவளோடு அடுத்திருந்த சங்கரன் பார்வை அவனும் அங்கே இருப்பதைச் சொன்னது. இரண்டு பேரும் வாசலில் நிற்கத் திறந்து கொள்ளும் பூட்டுகள். உள்ளே நுழைகிறார்கள். உள்ளே புழுதி நெடியும் பறந்து தாழ இறங்குவது போல் போக்குக் காட்டி மேலே உயரும் வௌவால்களின் துர்க்கந்தமும் மூக்கில் பட, கொச்சு தெரிசா நடுநடுங்கி அவன் தோளைப் பற்றி இறுக்கிக் கொள்கிறாள். க்ரீச் என்று ஒலியெழுப்பி வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் மெதுவாக மழைக் காற்றில் அசைகிறது. சங்கரன் கருத்துச் செழித்த தாடியும், பிடரிக்கு வழிந்து குடுமி கட்டிய தலையுமாக ஊஞ்சலில் இருந்தபடி கொச்சு தெரிசாவைத் தன்னருகில் இழுக்கிறான். அவள் தரைக்கு மேலே சற்றே உயர்ந்து பறந்து ஊஞ்சலைச் சுற்றி வர, பின்னாலேயே அவள் இடுப்பில் கை வைத்து அணைத்தபடி மறுபடி இழுக்கிறான் சங்கரன்.
குருக்கள் பொண்ணே, வாடி. வார்த்தை சொல்லிண்டிருப்போம்.
நீ எனக்கு நாலு தலைமுறை இளையவண்டா அயோக்கியா. ஏன் இப்படி அலைக்கழிக்கறே அறியாப் பொண்ணை? இதெல்லாம் போதும், ஆமா சொல்லிட்டேன். வேணாம். முடியலே. சொன்னாக் கேளு. போதும். வேணாம். ஏய்.
கொச்சு தெரிசா வேறு யாரோவாக அவளுக்குப் பரிச்சயம் இல்லாத மொழியில் லகரி கொண்டு பிதற்றி மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள்.
படுடீ.
மாட்டேன் போடா, சாமிநாதா.
வா
சாமா, என்னை விட்டுடு. நான் இனி வரலே.
ஏண்டி மாட்டேங்கறே? இனிமேல் கூப்பிடலே, இப்போ வா. செல்லமில்லையோ.
மாட்டேன் போடா, நூறு வருஷம் உனக்கு மூத்தவ நான். ஆவி வேறே. உனக்கு உடம்பு இருக்கு. எனக்கு?
திரும்பவும் யாரோ பேச வேண்டியதை, பேசியதை கொச்சு தெரிசா பேசுகிறாள். யார் கேள்வியையோ அவள் கேட்கிறாள். யாரிடமோ.
உடம்பா? இதோ பாரு, இது மட்டும் நான். இதோ, இது மட்டும் நீ.
சாமிநாதன், சாமா என்று கொச்சு தெரிசா அழைத்த சங்கரன் விரல் சுண்டிக் காட்டுவது அவளை நாணம் கொள்ளச் செய்கிறது. பார்க்க மாட்டேன் என்று கண்ணை இறுக மூடி இருக்க சாமிநாதன் தெரசாவாகவும், ஆவி ரூபத்தில் வந்த பெண் சங்கரனாகவும் மாறும் கணங்களில் இருவரும் கலந்து கரையத் தொடங்குகிறார்கள்.
மழைச் சாரலின் ஈரம் நனைந்த தலையணைகளும், இரண்டு நாளாக மாற்றப்படாத மெத்தை விரிப்புகளும், சதா காற்றில் அடித்துத் திறந்து கொள்ளும் கழிப்பறையிலிருந்து புறப்பட்டு எங்கும் சூழ்ந்திருக்கும் மெல்லிய பினாயில் வாடையும் அடர்ந்த சூழலில் அவர்கள் முயங்கிக் கிடந்தார்கள்.
கதை என்றாலும் கைகொட்டி நகைத்து, இப்படியும் நடக்குமா என்று எக்காளம் மேலேறிச் சிரிக்க வைக்கும் சூழல் மெய்ம்மைப்பட, இரண்டே நாள் இடைகலந்து பழகிய இருவர் காலமெல்லாம் பிணைந்து கிடந்தது போல் கலவி செய்தார்கள்.
நேற்றைய நினைவுகளைக் காலம் உள்வளைந்து உருப் பெருக்கி நீட்டிய வெளியில் நாளையும் மறுநாளும் இனி எப்போதும் இது மட்டுமே நிலைக்கும் எனும் நிச்சயம் மேலிழைந்து இறுகப் போர்த்த, வியர்த்து உறவு கொண்டார்கள்.
மரபணுக்களில் பதித்த தேடல் இலக்குகளைப் புலன்கள் தொட்டு காலம் உறைய, பனித் திரளாகச் சுட்டு, வெப்பமாகக் குளிர்ந்த உடலும் உயிரும் கூடின.
இந்தக் கணத்தை இறுகப் பிடித்து நிறுத்தும் முயற்சியில் சங்கரன் தோற்றான். கொச்சு தெரிசாவின் கால் விரல் நகங்கள் கோடு கிழித்த விலாவில் இனிய வலி மூண்டது. காமம் உயிர்த்து, இணையைத் தேடியடைந்த விலங்காக, பறவையாக, இழிந்து சுவரில் ஊறும் நத்தையாக ஒருமித்துச் சுருண்டு ஒன்றிப் புணர்தலே இயக்கம், போகமே மூச்சு எனச் செயல்பட்டான் அவன். சங்கரனை இறுக அணைத்துக் கிடந்த கொச்சு தெரிசா அழத் தொடங்கினாள். அவளால் அப்படித்தான் மடையுடைத்துப் பெருகிய உணர்வு நதியோடு போக இயலும்.
பற்றிப் படர்ந்து மேலெழும் எல்லாப் புனைவுக்கும் தோற்றங்களுக்கும் சாட்சியாக அந்த ஊஞ்சல் அசைந்தபடி இருக்கிறது.
எந்த ஊஞ்சல்?
ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.
(Painting Ack: Apollo and Daphne – John William Waterhouse – Pre Raphael – English 1849 – 1917)