வண்ணதாசன் இரா.முருகன்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்.
பயணத்துக்கு எடுத்து வைக்கும் பட்டியலில் சஞ்சய் சுப்பிரமணியன் குரல் தன்னிச்சையாக முதலாவதாக வந்து உட்கார்ந்து கொள்கிறது. மாயாமாளவ கவுள ராகத்தில் சஞ்சய் நல்ல தோழனாகத் தோளில் அணைத்து வாங்க, போகலாம் என்று கெஞ்சுகிறார். அப்புறம், போனால் நல்லா இருக்கும், வாங்க என்று ஒரு கால் உள்ளேயும் மற்றது வெளியேயுமாக நின்று கூப்பிடுகிறார். அதற்கும் அப்புறம், முதுகில் பலமாக அன்போடு ஒரு அடி கொடுத்து, வாய்யா, போகலாம்னா வர மாட்டே நீ, கிளம்பு என்று அவசரப் படுத்துகிறார். சரி சரி என்று உடன் பட்டு, சின்னஞ்சிறு ஃப்ளாஷ் ட்ரைவில் அந்தப் பாட்டு என்றில்லை, திருமங்கை ஆழ்வாரின் ‘விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ’ ஈராக கிட்டத்தட்ட இருபத்து நாலு மணி நேரம் சஞ்சய் இசையைப் பயணப் பையில் போடும்போது தான் மனம் விழித்துக் கொள்கிறது.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள, சஞ்சய் சுப்பிரமணியனின் மாயாமாளவகௌளமும் சிந்துபைரவியும் சங்கராபரணமும் எதுக்கு?
ஆலப்புழையில், உற்ற தோழனின் திருமணத்துக்குப் போகிற மகிழ்ச்சியில் ஒரு ரயில் பிரயாணத்தின் போது பெரிய ப்ளம் கேக் வாங்கி எடுத்துப் போனேன். அவனுக்குப் பிடிக்கும் என்று சமாதானம். அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ப்ளம் கேக்கோடு நுழைந்து தோழனுக்கு ஊட்டி விடுவது உசிதமில்லை என்று பட, அந்தக் கேக்கை முழுக்க நானே உண்டபடி நாவல் படித்துக் கொண்டே பயணம் முழுக்க இருந்து, பிள்ளைக்கனியமுது வாயோடு போய் இறங்கினேன். குருசாஹரம் நாவலாக எனக்குக் கம்பெனி கொடுத்த ஒத்துப்புலக்கல் வேலுக்குட்டி விஜயன் என்ற ஒ.வி.விஜயன் மாஷ, ’இனி ஒரிக்கலும் நின்னோடு கூடி ஞான் யாத்ரய்க்கு இறங்ஙுவானில்லா’ என்று கோபித்துப் போனார். அது வேறு கதை. வண்ணதாசன் கதை இல்லையது
வண்ணதாசன் கதை பற்றி என்ன பேச? வண்ணதாசன் கதைகளை விட இன்னும் நூறு பக்கம் அதிகமாகவே பேசலாம். உரையாடலாம். விவாதம் செய்யலாம். பேசுகிறோம். பேசுவோம். எல்லாம் பேசியாகி விட்டது என்று ஒருநாளும் சொல்லப் போவதில்லை. எனின், அவர் படைப்பு குறித்து நான் பேச முற்பட்டது எல்லாம் ஏற்கனவே பேசப்பட்டு விட்டதா? அப்படித்தான் தெரிகிறது.
ஆதியில் வசனம் இருந்தது. அந்தத்திலும் அது இருக்கும். இடையில் அது இருப்பதும் மறைவதும் மீண்டும் துளிர்த்துப் புன்னகைப்பதுமாக, அகவன் மகளே என விளிக்கும் சங்க இலக்கியத்தில், உரையிடையிட்ட செய்யுளான சிலப்பதிகாரத்தில், திருவாய்மொழிக்கு அழகிய மணவாளரின் பன்னீராயிரப்படி ஈடு உரையில், விவிலியத்தின் கம்பீரமான தமிழாக்கத்தில், ஆனந்தரங்கப் பிள்ளை டயரிக்குறிப்பில், வண்ணதாசன் புனைகதையில் நிரம்பித் தளும்புகிறதே அது குறித்துப் பேசலாமா? யாராவது அதையும் பேசி இருப்பார்கள். அது குறித்து எழுதியிருப்பார்கள். இருக்கட்டும். வேறே எத்தனை தலைப்பு உண்டு, பேச. இல்லாவிட்டால் என்ன? உருவாக்குவோம். தலைப்பா முக்கியம்? நமக்குப் பேச வேண்டும். அவ்வளவு தான்.
நூறுக்குள்ளே ஒரு நம்பர் சொல்லு. எண்பத்தொன்பது. அது என் மகன் ஐபிஎல் கிரிக்கெட் மாட்ச்களில் அணியும் ஜெர்சி நம்பர். வேறே எண்? சரி, ஒன்று அல்லது நூறு. ஒன்று என் தகவல் பரப்பில் பெண் என்ற தலைப்பு. நூறு? அதுவும் பெண் தான். எல்லா எண்ணுமே பெண் தான் அங்கே. வண்ணதாசனின் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் பற்றிப் பேசலாமா? இதையும் யாராவது. ஏற்கனவே பேசி இருந்தால்? பேசினால் என்ன, மோகனாம்பள் நடு மண்டபத்தில் ஆடினால், ரமாமணியும் ஒரு ஓரமாக ஆடி விட்டுப் போகட்டுமே.
வண்ணதாசன் சித்தரிக்கும், திறமை இருந்தும் உதாசீனம் செய்யப்பட்டு கிட்டியதே இயல்பு வாழ்க்கை என்றான, அதில் நிறைவு காணப் பழக்கப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட பெண்களைக் கடந்து போகிறோம் இப்போது –
நீங்க எப்பவும் போல பட்டிமன்றம் அது இதுன்னு தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்கலாம். சேனல் இப்போ பெருத்துப் போச்சு. கல்யாணமாலையில் எல்லாம் துபாய், அமெரிக்கான்னு அவங்களே கூட்டிப் போறாங்க. காசி கேட்கிறான்.
போதும்னு தோணிடுச்சு. எனக்கே போதும்னு தோணிடுச்சு. போதும்கறதே எப்பவும் அவங்கவங்களுக்குத் தோணறது தானே. தாயம்மா சொல்கிறாள்.
அவள் மீண்டும் வருகிறாள் சுனில் அம்மாவாக –
நீங்க இங்கே வந்ததும் பி.எட் படிக்கப் போறதாச் சொன்னீங்க இலையா?
பசங்க படிச்சா சரிதாங்க
வண்ணதாசன் காட்டும் use and throw அல்லது use and keep aside பெண்கள் இன்னொரு மாதிரி –
பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாக தோசைக்கு அரைத்துக் கொண்டும், முறுக்குச் சுற்றிக் கொடுத்துக் கொண்டும், இதெல்லாம் போதாது என்று இரண்டு மூன்று பூனைக் குட்டிகளை வளர்த்துக் கொண்டும் இருந்தவள். தெருவில் எல்லோருமாகச் சேர்ந்து அவளைத் தூக்கிப் போட வேண்டிய நிலைமையில் தென்னங்கிடுகுக்காக கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறுகிறவன் அனுதாப்பட பின்னும் பெண்கள் வருவார்கள்.
வண்ணதாசனின் காயப்படுத்தப்பட்ட பெண்கள் – காதலோ, காமமோ, செய்யாதன செய்யும் குறுகுறுப்போ, ஓடிப் போய், ராத்திரி ரெண்டு மணிக்கு தூத்துக்குடி மணல் தெரு வீட்டில் கதவைத் தட்டி, டாக்சி கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, ‘ஏறு நாயி வண்டியிலே, மத்ததெல்லாம் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்’ என்று மாமா அதட்டும் பெண்.
நான் கூட நாயி என்பது நாயன் என்ற உன்னதமான, பிரியமான பதத்தின் பெண்பால் என்று ஒரு வினாடி நினைத்தேன்.
’நாயி, நீ மெட்ராஸ் ரேடியோவிலே கச்சேரி கொடுக்கப் போனபோது, பைரவியிலே உபசாரமு வாசிச்சியே, அதை இப்போ வாசி’ என்று நாகசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை புல்லாங்குழல் இசைக்கலைஞர் டி என் நவநீதம்மாளைக் கேட்க, பூர்ண கர்ப்பிணியான நவநீதம்மா வாசிக்க கேட்டு ஆசிர்வதித்ததாக என் சிநேகிதர் தினமணி சிவகுமார் சொன்ன நிகழ்ச்சியில் வந்த நாயி தானா இந்தக் காயப்படுத்தப்பட்ட சாலாச்சியின் மாமா விளிப்பது? இல்லை, இது புழுத்த நாய் குறித்த வசவு. அவர் அடுத்துச் செய்வது பெண்ணை மலினப்படுத்தும், marginalizing the woman செயல் – அழுது கொண்டிருந்த சாலாச்சி கழுத்தில் கையை வைத்து, வைத்து கூட இல்லை, கையைக் கொடுத்து, இப்ப என்ன கள்ள அழுகை என்று காருக்குள் தள்ளுவார். உடலாலும் மனதாலும் காயப்படுத்தப்பட்ட அந்தப் பெண் அப்புறம் ஆறு விரல் மாப்பிள்ளையைக் கல்யாணம் கட்டிக் கொண்டு உயிர்த்துப் பெருகும் ஜீவ சமுத்திரத்தில் கரைந்து தான் போவாள். யாருக்கும் இங்கே ஆறு விரல் இல்லையே இப்போது. எல்லோரும் ஏடிஎம் வரிசையில் நின்று ஏமாறி அடுத்த ஏடிஎம் தேடிப் போகும் ஒற்றை முகம் கொண்ட zombieகள் ஆகிப் போனோமே.
அந்தப் பெண்கள் கிட்டி போல ஆண் துணை வந்து சேரக் காத்திருப்பவர்கள். காத்திருந்து? டாக்டரிடம் போக வேண்டும். அவர்களின் உறவு தொடர்பான அந்த ரகசியம் ஊகிக்கப் படக்கூடியது. அந்தப் பெண்ணை மட்டும் உடல் ரீதியாகப் பாதித்து, மனதை அலட்டும் அது. காத்திருக்கிறவள் வெட்ட வரும் வாட்களைக் கண்டு மிரண்டு ஓடுவாள். தலை ஒரு புறமும், கை ஒரு புறமுமாகச் சிதறுண்டு வீழும்படியாக உயர உயர எழுகிற வாட்களை வைத்திருப்பது யார்? அந்த வாள் எதை வெட்ட வருகிறது. என்னைத் தானா? அவள் மிரண்டு ஓடி மனிதச் சங்கலியில் இணைவாள். வலமும் இடமும் கரங்கள் பற்ற மனிதம் இன்னும் கொஞ்சம் போல உயிர்த்திருக்கும், கிட்டிக்கு ஆதரவு அளிக்க. கிட்டிக்கு மட்டுமில்லை. கணவன் இறந்து அல்லது அவன் இருக்கும்போதே அவனைத் துறந்து, அவன் தம்பியையோ, வேறு யாரையோ அடுத்துக் கூடியிருந்து, அதைத் தவறாகப் பார்க்கும் உறவுகளை எதிர்கொண்டு மனதளவில் காயப்படுத்தப்படும் கோவில்தர்மம் என்ற விநோதமான பெயர் கொண்ட பெண்ணாகவும், தில்லிக்குப் போன பாண்டியம்மாளாகவும் அவர்கள் வருகிறார்கள். மாமு ஆச்சி போல் இந்த சுவர பேதத்தைப் பொருட்படுத்தாத பவ்ய ஜீவன்களும் உண்டுதான். எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கிறது.
வண்ணதாசன் காட்டும் பெண்கள் sexually uninhibited ஆக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் sexually repressed ஆன ஆண்களோடு இடைகலந்து பழகி, sex பற்றிய இயற்கையான விழைவை, எல்லோருக்கும் பெய்யும் அன்பு மழையில் கரைத்துக் கள்ளமில்லாத பிரியமாக மடை மாற்றித் தீர்க்கிறவர்கள் தாம் அவர்கள் பெரும்பாலும்.
வாசல்லே நிக்கிறாரு. குடிச்சிருக்கார். வந்து யாருன்னு பாருங்க அத்தான் என்று தம்பி மனைவி ஒரு விதமான பயந்த குரலில் படுக்கையறைக்கு வெளியே நின்று பேசினாள். வெற்றுடம்போடு இருந்து அவளுக்கு முன் சட்டை மாட்டுவதில் சின்னக் கிளர்ச்சி இருந்தது. இதற்கு அப்புறம் கதை சொல்லி இந்தத் தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் மூக்குத்தி போட்டிருக்கிறவள் இவள் மட்டும்தான் என்று tangential ஆகப் பறந்து அந்த வட்டத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்.
அதிலும் அந்த ’ஒருவிதமான’ பயந்த குரல், ஒரு விதமான, சங்கடத்தைச் சுட்டுகிறதாக நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன். Catharsis with conditionalities. இத்தனை சொன்ன கல்யாண்ஜிக்கு அது என்ன விதம் என்றா சொல்ல வராது? சொல்லியே ஆக வேண்டும், ஆனால் அதில் அமிழக் கூடாது, கிளர்ச்சி சின்னதாகவே மடியட்டும் என்ற கல்யாண்ஜியின் பொறுப்புணர்வு புரிகிறது.
வண்ணதாசன் காட்டும் சில பெண்கள் கல்யாணத்தையும் இனக் கவர்ச்சியையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதில்லை.
’மலையாளப் பட ஷூட்டிங். ஜெயராம், ஷோபனா நடிக்கறாங்க. ஜெயராம் எவ்வளவு அழகா இருக்கார் தெரியுமா? நல்ல சிவப்பு. சிரிச்சா கன்னத்திலே குழி விழுது.
அப்படியே ஜெயராம் கூடப் போயிட வேண்டியது தானே. கரும்பு ஜூஸ் குடிக்கலாமா அக்கா? உங்க ஜெயராம் ஆப்பிள் ஜூஸ் தானே குடிப்பாராம். நாமளும் அதையே குடிக்கலாமா? போங்கக்கா, என்னை விட நீங்க தான் அவரை நினைச்சுட்டிருக்கிற மாதிரி இருக்கு. அவங்க வந்தா அவங்க கிட்டேயும் சொல்லுவேன். எதை, ஜெயராம் பத்தியா? சொன்னா என்ன?
பாசமும் பரிவும் நேரத்துக்கு உணவும் தந்து குழந்தை, கட்டியவன், அவன் தந்தை என்று மூன்று தலைமுறையைப் போஷித்துப் பராமரிக்கிறவர்கள் கல்யாண்ஜி காட்டும் இன்னும் சில பெண்கள். அந்தப் பொறுப்பு அவர்களை மேலும் ஆண்களிடையே மேலதிகக் கவனம் பெறச் செய்கிறது. அவர்களுடைய தன்மை பற்றிய பிரியத்தால் உருப்பெருக்கிய தோற்றங்களைக் கட்டி நிறுத்துகிறது.
ஒரு அறைக்குள் இருந்து வெளியேறி இன்னொரு அறைக்குள் நுழைகிற போதெல்லாம் மேலும் சற்று அழகாகவும், தீர்க்கமாகவும் ஆகிறார்கள் அவர்கள், பகவதியைப் போல.
தைப்பூயத்தன்று வீடு கழுவி விட்டு, ரேடியோவோடு ‘ரோஜா மலர் வேணுமா, நல்ல ஜாதி மலர் வேணுமா’ என்று ராஜி என் கண்மணி படப் பாடலை பாலசரஸ்வதி போல் பாட இன்னும் கொஞ்சம் பளிச்சென்று கழுவி விட்டது போல் இருக்கிறது வீடு. அவர்கள் வசிக்கும் இல்லத்துக்கு விலாசம் விசாரிக்கத் தேவையில்லை. ‘அட்ரஸை வேறே விசாரிக்கணுமாக்கும். வாத்தியார் மகள் வீடு இதுதான் இதுதான்னு வாசல்லே போட்டிருக்கிற கோலம் தான் வீட்டுக்குள் கூப்பிடுதே’.
அந்த எவ்வுயிருக்குமான தாய்மை செழுமைக்கும் வளத்துக்கும் ஏங்க வைக்கிறது இந்தப் பெண்களை.
மழை பெய்யுதா இப்போ? சாகிற வரைக்கும் எங்க அம்மை இதைத்தான் கேட்டுக்கிட்டிருந்தா. மழை பெய்யுதா, மழை பெய்யுதான்னு அவ ராத்திரி எல்லாம் கேட்கிற சத்தம் ரொம்ப நாளைக்குக் காதிலே விழுந்துக்கிட்டே இருந்தது எனக்கு. மழைச் சத்தத்தைக் கேட்காமலேயே மண்டையைப் போட்டா.
தள்ளாத வயதில் கோலூன்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி மாமரச் சுவட்டுக்கு பதைபதைத்து ஓடி வரும் அன்பு அந்தப் பெண்களில் சிலரால் உருவகிக்கப் படுகிறது.
இது யாரப்பா மரத்தாண்ட? குச்சியெ ஒடிக்கிற வாசனை வந்துச்சே. துளிர் எது, முத்தினது எது, பிஞ்சு எது, பழுத்தது எதுன்னு தெரிய வேண்டாமா, பறிக்கறவனுக்கு? அரற்றி விட்டு, அலை கரையைத் தொட்டு உள்வாங்குவது போல் தரையை எல்லாம் உருவிக் கொண்டு அந்தக் கிழவி திரும்பப் போகிறாள்.
காமமே உடலாக, அதுவே மனமாக, தானாக உருமாறி, காருண்யமும், மனிதமும் இறந்த பெண்களும் அபூர்வமாகக் கல்யாண்ஜியின் சித்தரிப்பில் வருகிறார்கள். மிக வேகமாக fast forward செய்து அதெல்லாம் அவசரமான flash back ஆகிறது.
ஆக்சிடெண்ட்லே காசிப் பாண்டியன் செத்துட்டான். பொண்டாட்டிக்காரி பொழச்சுட்டா. அதுக்கு அப்புறம் காசி குடும்பத்தோடு குடும்பமாத்தான் இருந்தேன். எங்களுக்கு ஒரு பொம்பளைப் புள்ளை பிறந்துச்சு. சரோஜான்னு கூப்பிடுவோம். உனக்கு மதி கெட்டுப் போச்சுன்னா நீ எவன் கூடயும் போ. பீடிக் கம்பெனிக்காரன், சிகரெட் கம்பெனிக்காரன்னு எவன் கூடேயும் எக்கேடும் கெட்டுப் போ. அதுக்கு அந்தப் பச்சைப் பிள்ளையைப் போய் ஏன் இடைஞ்சலா நினைக்கணும்? இன்னைக்கு, பெத்த பிள்ளையை பச்ச நாவியெக் கொடுத்துக் கொல்லணும்னு தோணியவளுக்கு நாளைக்கு என்னையும் கொல்லணும்னு தோணறதுக்கு எத்தனை நாளாகும்?உன்னை விட்டு வைக்கலாமா? வெட்டிப் பொலி போட்ட ஆண்மை தன் நியாயம் பேசுகிறது. அவள் குழந்தையோடு பீடிக்கம்பெனிக் காரனுடன் போயிருந்தால் உயிரோடு இருந்திருப்பாளோ?
ஹாட்லி துரையின் மனைவியான வெள்ளைக்கார துரைச்சானி, இந்தப் பெண்களிலிருந்து வேறுபட்டவள். உடம்பில் சத்தே கிடையாது. ஆனால் கட்டிலில் சிறுத்தை போன்று இருந்தவள். பெரிய ஆயனோடு, இரண்டு சிறுத்தைப் புலிகள் கவ்விக் கவ்விப் புரள்வது போல் கலவி செய்தவள் அவள். அந்த சுகம் வாய்க்கப் பெற்ற பெரிய ஆயன் அதற்கு அப்புறம் தன் மனைவி மேல் பிரியம் வைக்க உதவிய காமக் கடும்புனல் அது. நற்பெருங் காமமும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
வண்ணதாசனின் கதைகளில் வல்லமை படைத்த, சாதித்துக் காட்டும் துணிச்சலான பெண்கள் அபூர்வமாகக் காணக் கிடைப்பதுண்டு. ஆனந்தவல்லி இந்த empowered women ஜாதி. அவள் அழகானவள் என்பதற்கும் அப்பாற்பட்டவள். அவளுடைய வலிமை அவளுடைய இருத்தல் சார்ந்தது. உடல் கவர்ச்சி கொஞ்சம் போல அவளை கண்டோர் விரும்பும் வல்லியாக்க உதவி இருக்கலாம். லேசாக எண்ணெய் பூசிய மாதிரி, முளை முளையாகக் கன்னத்தில் பருக்கள் இருக்கிற முகம் அவளுடைய கணவனுக்கு மட்டுமில்லை, வீட்டில் வைத்து அவளை, சரி, அவளையும் அவள் கணவனையும் புகைப்படம் எடுக்க வந்தவனுக்கும் பிடித்த ஒன்று. பரு இல்லாவிட்டால் அவங்க முகத்துக்கு இந்த க்ரேஸ் வந்திருக்க மாட்டாது என்று கணவன் ஃபோட்டோ எடுக்க வந்தவனுடன் சகஜமாகப் பகிர்ந்து கொள்ளும் பெருமை வல்லியின் ஆளுமை சம்பந்தப்பட்டது. இந்திரா காந்திக்கு வாய்த்த க்ரேஸ் அது.
அந்த ஆளுமை ஆளை அடித்துக் கட்டிப் போடவும் செய்யக் கூடியது. கனகு சங்கரபாகத்துக்குச் செய்த மாதிரி. அவர் ஆற்ற முடியாமல் அரற்றியது போல –
உலகத்தில் இருக்கற ஒரு பொம்பளையைக் கூட ஏறிட்டுப் பார்க்க முடியாமப் போச்சு. பஸ் ஏறப் பக்கத்திலே நிக்கறது, டிரெயினில் நம்ம கம்பார்ட்மெண்டில் வர்றது, கல்யாண வீட்டுலே சரசரன்னு பட்டுப் புடவையும் பூவுமாப் போறது.. இவ்வளவு ஏன், ஆக்சிடெண்ட் ஆகி சதசதன்னு ரத்தத்துலே ரோட்லே கிடக்கறது..எந்தப் பொம்பளையையும் நான் பார்க்க முடியாமப் போச்சு. எங்கே திரும்பினாலும் ஆம்பளை ஆம்பளை மீசை தாடி சிகரெட் வேர்வை விஸ்கி.
பாஸிங்ஷோ சிகரெட் பிடிக்கும் மூதாட்டி empowered-ஆ என்று தெரியவில்லை, ஆனால் சுருட்டைப் பற்ற வைத்துக் கங்கு வாய்க்குள் இருக்கப் புகை விடும் சில ஆந்திரப் பெண்மணிகள் போல் அவள் வித்தியாசமானவள் தான்.
இதெல்லாம் இருக்கட்டும். இந்தப் பெண் கடலில் கல்யாண்ஜி நுட்பமாகப் பதிவு செய்து கொண்டே போகிற இன்னொரு மகா அனுபவம் உண்டு. அது ஸ்பரிசம்.
உயிரினங்கள் ஒன்றை ஒன்று இடைகலந்து பழக சந்திக்கும்போது தொட்டும், தட்டியும், அணைத்தும், பற்றியும், நெருங்கியும் அண்மை பாராட்டுதல் அது. அம்மா பிள்ளையைத் தொட்டு உச்சி முகர்ந்து ஆசி தரும் அண்மையோ, தந்தை தன் செல்ல மகளில் தன் அன்னையைக் கண்டு பிள்ளையாகத் தஞ்சம் புகும், கண்ணை நீர் மறைக்கும் ஸ்பரிசமும் இல்லை அது. ஆணும் பெண்ணும் பழகியிருக்கும் மெல்லிய காமம் கலந்த தொடுதல் கூட இல்லை தான்.
வண்ணதாசன் வாசகர் தோளில் அணைத்து மஹேஸ்வரி கதையில் சொல்வார் – நூலகங்களில் புத்தக முதுகைப் பார்த்து விரல்களால் தள்ளிக் கொண்டே வருவோமே, அது போல புடவை அடுக்கைத் தள்ளிக் கொண்டிருந்தாள் செஞ்சுலெட்சுமி- என்று. அந்த ‘வருவோமே’. அப்படியான அன்பின்பாற்பட்ட inclusivity ஸ்பரிசம் குறித்த கல்யாண்ஜியின் சித்தரிப்பு. அது முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் பரஸ்பரம் ஸ்பரிசித்துக் கொள்ளப் பிறந்தவர்கள். கல்யாண்ஜிக்கு இஷ்டமான கொன்றை மலர்கள் போல, என்றால் நாகலிங்கப் பூக்கள் போல அவர்கள் ஸ்பரிசத்தால் அழகானவர்கள். அந்த உரிமை மறுக்கப் பட்டால் அவர்கள் மரித்துப் போகலாம்.
கதை சொல்லிப் பெண் நடைப்பக்கம் போய் மீனாளின் உச்சந்தலையைத் தொடுகிறாள். மீனாள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு முத்துகிறாள். ருக்கி அம்மா என்ற ருக்மணி சொல்கிறாள் – பக்கத்தில் வா என்று சொல்வது போல தலையசைத்து அவள் வந்ததும் அவளுடைய இடது கையைப் பற்றிக் கொண்டேன். ஆரஞ்சு நிற ரப்பர் வளையல்களின் கீழ் வெதுவெதுப்பும் ஈரமுமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு, அப்படிப் பற்றின நேரத்தின் கூச்சத்தில் உருவிக் கொள்ள யத்தனிக்கிற கையை மேலும் இறுக்கி, விரல்களைக் கோர்த்துக் கொண்டு கேட்டேன் – பாட்டு பாடுவாங்களா, பாட்டு படிப்பாங்களா?
அது பார்வதி அக்கா தையல் மிஷினை நிறுத்தி விட்டு வந்து செய்தது. குஞ்சம்மா தலையை ஒரு தடவை, இரண்டு தடவை கோதி விட்ட பிரியம் அது.
கனவு கண்டு மருளும் அந்தப் பெண் பாலாவுக்கு அக்காவின் கண்களில் முத்தமிடத் தோன்றும். அக்காவின் கண்கள் அழகானவை. அக்காவின் மார்பு அழகானது. அக்காவே அழகானவள் தான். அக்காவின் கண்களால் ஒரு சுற்று வருடி, வருடின விரல்களைக் கொண்டு தலையும் கோதிவிட்ட பிறகு போர்வையை இழுத்துக் கொண்டு அவள் பக்கத்தில் துயில்வாள் பாலா.
அக்காவைத் தொடாமப் பேசேன் என்று எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பெண் தன் பெண்ணான சிறுமியிடம் சொன்னதைச் சோகத்துடன் பார்த்தேன் அண்மையில். மேற்கு மாம்பலம் ராஜு நாயக்கன் தெருவில் அது போல அனுபவப்பட்டுத்தான் நம்மருமை வண்ணதாசன் நெல்லைக்குத் திரும்பியிருப்பாராக இருக்கும். நாம் இனியும் மேற்கத்தியக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் நம் உறவுகளைக் கட்டமைத்துப் போவோம். என்ன செய்ய!
ஆமா, இதெல்லாம் நான் படிக்காமல் பேசியிருக்கலாமோ? வண்ணதாசன் சொல்வது போல், நேரில் ஒருத்தரோடு ஒருத்தர் பேசுவதை விட காகிதத்தில் தாராளமாக நாலு வார்த்தை அதிகமாகப் பேசுவோம். அல்லது பேசாமல் இருப்போம். பேசாமல் என்ன செய்வது இந்தக் கூட்டத்துக்கு வந்து, மேடை ஏறி?
ஸென் குரு சீடர்களுக்குப் பாடம் சொல்ல மரத்தடியில் அமர்ந்தார். சீடர்கள் ஒவ்வொருவராக அவர் முன் வந்து உட்கார்ந்தார்கள். அப்போது மரத்தில் ஒரு பறவை பாடியது. பாடி முடிக்கும் வரை அமைதியாகக் கண் மூடி இருந்தார் குரு. அப்புறம் சொன்னார் – இன்றைய பாடம் முடிந்து விட்டது. போய் வாருங்கள்.
நான் பேசாமல் இருந்தால், சஞ்சய் சுப்ரமணியனின் நாச்சியார் திருமொழி பாடலை இங்கே எல்லோரும் கேட்க இசைக்கச் செய்திருப்பேன். நல்ல ரசானுபவமாக அது இருந்திருக்கக் கூடும்.
மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே. (நிறைவு)