சற்றுமுன், நடைப்பயிற்சி முடித்து யோசித்தபடி பாண்டிபஜார் கடந்து வரும்போது பூ வாங்கிக் கொண்டிருந்த நண்பர் கை நீட்டிப் புன்சிரிப்போடு தாமதமான புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார். நலம் விசாரிக்கிறார்.
’முந்தாநாள் தான் பத்திரிகையிலே படிச்சேன் உங்களைப் பற்றி’ என்கிறேன். ‘ஆமாம், தி இந்துவில்’ என்று சிரிப்பு மாறாமல் பதில் சொல்கிறார்.
அவர் சங்கீத நாடக அகாதமியின் 2016-ம் ஆண்டு விருது பெற்றிருக்கிறார்.
என் காலைப் பொழுதை அழகாக மலரச் செய்த வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணனுக்கு நன்றி.
போன வாரம், நாரதகான சபாவில் காலை 8:30 கச்சேரி கேட்டு விட்டு கேண்டீன் காப்பி முடித்து அடுத்த கச்சேரிக்கு வந்து கொண்டிருந்தபோது வெளியேறிக் கொண்டிருந்த கார் என்னைப் பார்த்து நின்றது. ஓட்டி வந்தவர் 8:30 கச்சேரி செய்த இளைஞர் திரு ஸ்வர்ண ரேதாஸ். சஞ்சய் சுப்ரமணியனின் சிஷ்யர்.
‘வந்து சிறப்பித்ததற்கு மகிழ்ச்சி சார், நன்றியும் கூட’
அழகான ஆங்கிலத்தில் புன்சிரித்தபடி சொல்லிக் கடந்து போகிறார்.
சின்னச் சின்ன, ஆனால் நிறைவான சந்தோஷங்கள்