பெயரில் என்ன இருக்கு

 

‘பசுமாட்டுக்குப் பெயர் வைத்து அன்போடு கூப்பிட்டால் பால் அதிகம் கறக்கும்’. பாட்டியம்மா சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து டிவியில் பழைய ‘கோமாதா’ சினிமா பார்த்துக் கொண்டு, வெற்றிலைச் சீவலை சாஷேயில் இருந்து வாயில் கவிழ்த்தபடி சொன்னால், ‘உங்களுக்கு வேறே வேலை இல்லை. ஆவின் ஆபீசுக்கு வேணும்னா எழுதிப் போடுங்க’ என்று டிவி சானலை மாற்றும் இளசுகள் அதிகம். பாட்டி இல்லை. வெள்ளைக்காரன் அறிவித்திருக்கிறான். இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக் கழகம் நடத்திய லேடஸ்ட் ஆய்வு முடிவு – பசுவுக்குப் பெயரிடுங்கள்.

அடுக்குமாடி கலாசாரம். நகர எல்லைக்குள் ஆடுமாடு வளர்க்கக் கட்டுப்பாடு இப்படியான தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டணத்தில் அடுத்த தலைமுறை அநேகமாக பசு மாட்டை நேரில் பார்க்கப் போவதில்லை. வீட்டில் தொழுவம் வைத்து மாடு, கன்று வளர்ப்பது அபூர்வமாகும் போது பசுவுக்குப் பெயர் வைப்பது பற்றி யாரும் யோசிக்கவும் போவதில்லை. பயோ சில்லில் டிஜிட்டல் எண் பதிந்து பண்ணைப் பசு உடம்பில் பொருத்தி அடையாளம் காணும் வருங்காலத்தில், கூடக் குறைய இருந்தாலும் தானியங்கி யந்திரங்கள் தான் பால் கறக்கப் போகின்றன.ஆத்தா ஆடு வளர்த்தாலும் கோழி வளர்த்தாலும் அதற்கெல்லாம் பெயர் வைத்ததில்லை. ஆனால் பசு விஷயம் தனி. இன்னும் கிராமத்தில் வீட்டுப் பசுக்கள் தவறாமல் பெயர் சூட்டப்படுகின்றன. ஓட்டலில் நுழைந்து உத்தேசமாக ‘மணி’ என்று கூப்பிட்டால் ஒரு சர்வராவது ‘என்ன சார்’ என்கிறது போல, ‘லட்சுமி’ என்று அழைத்தால் மேய்ச்சலுக்குப் போகும் வீட்டுப் பசுக்களில் பலதும் நெருங்கி வந்து குசலம் விசாரிக்கக் கூடும். பால் வற்றிய லட்சுமியைக் கேரளத் தரகனிடம் அடிமாட்டு விலைக்கு விற்கிறபோது மட்டும் பெயர் மறைந்து விடும்.

பசுவுக்குப் பெயர் வைத்தாலும் எருமை மாட்டுக்குத் திருநாமம் இடுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்திருக்கிறார்கள். எருமைகள் மட்டும் வளர்க்கிற வீடுகள் இருந்த தெருக்கள் பலதும் எருமைக்காரன் தெரு என்று இருபது முப்பது வருடம் முன்பு வரை சர்வசாதாரணமாக அழைக்கப்பட்டன. அந்த மாதிரித் தெரு ஒன்றில் ஒரு சகா எருமை வாங்கி வந்து கட்டியதோடு அதற்கு ‘தனபாக்கியம்’ என்று பெயரும் வைத்துவிட்டார். தெரு விலக்கு நடத்தாத குறையாக எதிர்ப்பு கிளம்பி அடங்கியபோது தனபாக்கியமும் செத்து ஏழு ஜோடி வார்ச் செருப்பாகி விட்டது.

பசுமாட்டுக்குப் பெயர் வைக்கிறார்களோ என்னமோ நாய்க்கும் பூனைக்கும் பெயர் சூட்டுவதை ஒரு கலையாக வளர்த்தெடுத்து வைத்திருக்கிறார்கள் மேல்நாட்டில். நாய்க்கு நாலாயிரம் பெயர்கள் என்று இண்டர்நெட்டில் இதற்காகவே தகவல் தரும் தளங்கள் நிறைய உண்டு. நம்ம ஊரில் சீசர், டாமி, ஜிம்மி போன்ற பொதுப் பெயர்கள் தான் நிறைய. வித்தியாசமாக இப்போது ஆங்கிலத்தில் இஞ்சி, பூண்டு என்று நாகரீகமான பலசரக்குப் பெயர் வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் நண்பர் வீட்டு இங்கிலீஷ் கலப்பின நாய்க்கு வைத்த பெயர் சிங்காரி.

வீட்டுப் பிராணிகளுக்குப் பெயர் வைப்பதை விட சுவாரசியமான விஷயம் சக மனிதப் பிராணிகளுக்குப் பெயரிட்டு அழைப்பது. கணக்கு வாத்தியாருக்குப் பிள்ளை பிறந்து இப்போதைக்கு எக்ஸ் என்று வைத்துக் கொண்டாலும் நர்சரி போவதற்குள் நாமகரணம் ஆகிவிடுகிறது. பாட்டன் பெயரைப் பேரனுக்குச் சூட்டுகிற கலாசாரம் உலகம் முழுக்க இருந்தாலும் இதை வைத்து உயிரை வாங்குகிற இம்சை அரச பரம்பரைக்கே மொத்தக் குத்தகையானது. சார்லஸ் ஒண்ணு, எட்வர்ட் ரெண்டு, ஜேம்ஸ் மூணு என்று நம்பர் மட்டும் ராஜ வித்தியாசம் காட்டுகிறது மேற்கில் என்றால், இங்கே குப்தர், மௌரியர், சோழர், பல்லவர் அதேபடி. மலையாள பூமி அரச வம்சத்தை இந்த விஷயத்தில் மட்டுமாவது பாராட்டியே ஆகவேண்டும். அரசர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து சித்திரைத் திருநாள், ஆயில்யம் திருநாள் என்று பெயர் வைத்து குழப்பத்தைத் தீர்த்திருக்கிறார்கள். வால் நட்சத்திரத் திருநாள் பற்றி ஏனோ யோசிக்கவில்லை.

வைத்த பெயரை ஏதேதோ காரணத்துக்காக அரசாங்க கெஜட்டில் அறிவிப்பு கொடுத்து மாற்றிக் கொள்வது அடிக்கடி தட்டுப்படுகிற ஒன்று. தினசரி பத்திரிகைகளில் ‘இந்தத் தேதியில் இருந்து இப்படியான என் பெயரை அப்படி மாற்றிக் கொள்ளப் போகிறேன். எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கவும்’ என்று வெளியாகும் அறிவிப்புகளை யாரும் படிக்கிறார்களா, என்ன காரணத்துக்காகவாவது எதிர்த்துக் கடிதாசு போடுகிறார்களா என்று தெரியாது.

கெசட் பக்கம் போகாமல் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்தாலே பெயர் மாற்றம் எந்தக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்குத்தான் நடிப்புக்கு ஊதியமாக செக் தருவோம் என்று தயாரிப்பாளர்கள் தீர்மானம் எடுத்தால் எத்தனையோ செக்குகள் எழுதப்படாமல் போய்விடும். இல்லாவிட்டால் மட்டும் இதெல்லாம் கேஷ் ஆகிக் கைக்கு வந்து சேருமா என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன