Vaarthai Column – Feb 2009 இரா.முருகன்
தைமாத நடுவாந்திரத்தில் மார்கழியை அசைபோடுவதை அன்பர்கள் மன்னிக்க வேண்டும். மாதப் பத்திரிகைக்குப் பத்தி எழுதும்போது சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து, விட்டு விலகி நின்று அவதானித்துப் பிரித்து மேய்ந்து வழி செய்வதால் இந்த time lag-ம் வேண்டுவதே இம்மாநிலத்து.
கடந்து போன மார்கழியில் புத்தியில் உறைத்து இறும்பூது எய்த வைத்த முதல் விஷயம் என்ன என்றால் சென்னை சங்கீத சபாக்களின் மேடைகள் அழகிப் போட்டிக்கான முதல் கட்ட அணிவகுப்பு தலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. எத்தனை எத்தனை அழகான பெண்கள். முன்பெல்லாம் அற்புத சரீர ஆரணங்குகள் சபாவில் பரதநாட்டியமும், குச்சிப்புடியும் ஆடுவார்கள். அதியற்புத சாரீர நடுவயது, பாட்டியம்மா பாடகிகள் மூன்று மணி நேரம் கச்சேரி செய்வார்கள். இப்போது பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் நடுவே குறில், நெடில் இடம் மாறி இருக்கிறது. மார்கழிக்கு வெகு முன்பிருந்தே ஆங்கில பத்திரிகைகளின் தினசரி இணைப்புகளில் அதிகம் இடம் பெற்றவர் பாடகி சுதா ரகுநாதன் தான். பட்டுப் புடவை விளம்பரத்துக்காக கண் நிறைந்த மிடில் ஏஜ் அழகோடு அவர் டி.வியில் காடு மலை ஏரிக்கரை எல்லாம் நடந்த நேரம் போக, சுதா பாடிய கச்சேரிகளும் முதல் தரம் என்பதோடு அரங்கு நிறைந்தும் இருந்தன. சூப்பர் ஸ்டார் பட்டம் அருணா சாயிராமிடமிருந்து இவருக்கு இப்போது கைமாற்றி விட்டதாகத் தெரிகிறது.சுதா ரகுநாதனுக்கு அடுத்து பத்திரிகைகளில் ப்ரொஃபைல் புகைப்படங்களாகத் தம்பூரா மீட்டிக் கொண்டு அதிகம் தட்டுப்பட்டது பாம்பே ஜெயஸ்ரீ. அவர் திரையில் தோன்றி எல்லாக் கோணத்திலும் அமைதியான அழகோடு மணிக்கணக்காக பாடி அசத்தும் ‘மார்கழி ராகம்’ இசைத் திரைப்படம் இந்த சீசனுக்கு ரிலீஸ் ஆகி சுமாராக ஓடியது. இதைப் படிக்கும்போது மோசர் பேயர் முப்பத்தைந்து ரூபாய் டி.வி.டி சினிமாவாக ஜெயஸ்ரீயும் சஞ்சய் சுப்ரமண்யனும் பாடிக் கொண்டிருப்பார்கள்.
ஓவரான ஒப்பனை ஒரு பக்கமும், ஊதிப் போன உடம்பு இன்னொரு பக்கமுமாக அறுபது கடந்த அப்சரஸ்கள் பரத நாட்டியம் ஆடத் தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் மனுப்போட நமக்கு உரிமை இல்லை. கண்ணியமாக முதுமையடையும் பெண்மணிகளின் நளினமான நடனம் சந்திரலேகாவோடு மறைந்து விட்டதற்காகப் பெருமூச்சு விடலாம். அவ்வளவே.
888888888888888888888888888888888888888888888888888888888888888
இந்த வருடத்துக் கச்சேரிகளுக்காக மியூசிக் அகாதமிக்குள் நுழைய கவர்னர் மாளிகைக்குள் பிரவேசிக்கிறது போல் கெடுபிடிக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. போதாக் குறைக்கு கார்ப்பரேட்கள் சப்ஜாடாக சீசன் டிக்கட்டுகளைக் கைப்பற்றி விட்ட படியால் – ரெசஷன், பொருளாதார நெருக்கடி என்று ஏதோ சொன்னார்களே, சந்திர மண்டலத்திலா அது என்று தெரியவில்லை – தினசரி காட்சி டிக்கெட் எடுக்க பின்னும் கஷ்டம் பெருங்கஷ்டம். சாயந்திரக் கச்சேரிக்கு காலையிலேயே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில இடங்களே பாக்கி இருப்பதால் முந்திப் போனால்தான் டிக்கெட் கிடக்க வாய்ப்பு.
விடிந்ததும் அகதாமி காண்டீனில் வயிற்றுக்கு வஞ்சனையில்லாம் ஈந்து விட்டு சாயந்திரம் செவிக்கு உண்டக்கட்டி வாங்கப் போய் நின்றால், பேங்க் டோக்கன் மாதிரி நம்பர் போட்ட அட்டையைக் கொடுத்து உட்கார்த்தி விட்டார்கள். அப்புறம் ஒவ்வொரு டோக்கனாகக் கூப்பிட்டு மூஞ்சி பிடித்திருந்தால் காசு வாங்கிப் போட்டுவிட்டு ஒண்ணு ரெண்டு டிக்கெட் போனால் போகிறதென்று கிழித்துக் கொடுக்கப்பட்டது. மினிஹால் சங்கீத வித்வத் சபை கூட்டங்களும் நிறைந்து வழிந்த படியால் வெளியே நின்று உள்ளே எட்டி எட்டிப் பார்க்க வேண்டிய நிலை. அங்கேயும் வழியை அடைத்துக்கொண்டு ஏகப்பட்ட நந்திகள் நின்ற திருக்கோலத்தில் இசைச் சர்ச்சையில் மூழ்கி இருந்தார்கள். சென்னையில் சங்கீத ஞானம் வருடா வருடம் கணிசமாக ஏறிக் கொண்டு போகிறதாகத் தெரிகிறது. லண்டன் ஆல்பர்ட் ஹாலில் கிட்டத்தட்ட இதே நேரத்தில் நடக்கும் பிபிசி ப்ரமோனேட் மாதிரி நின்ற படிக்கே கச்சேரி கேட்கிற விதத்தில் முழு அரங்கமுமே மாற்றி அமைக்கப்பட வேணுமோ என்னமோ.
நாரதகான சபா ஏமாற்றி விட்டது என்பது கீழ் வார்த்தை, அதான், அடக்கி வாசிக்கும் அண்டர் ஸ்டேட்மெண்ட். எல்லா வருஷமும் போல் ஞானாம்பிகா கேட்டரிங்க் சோத்துக் கடை போடாமல் கச்சேரி எல்லாம் நிறக்கவே இல்லை. தஞ்சாவூர் டிகிரி காப்பியை வைக்க வேண்டிய இடத்தில் ஆறிப்போன இன்ஸ்டண்ட் காப்பியை வைத்த மாதிரி ஞானாம்பிகா இல்லாத வெற்றிடத்தில் உட்லண்ட்ஸ்காரர்கள் கீரைவடை போட்டு ஒப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.
மியூசிக் அகாதமியில் உள்ளே நுழைய கவர்னர் மாளிகை மாதிரி கெடுபிடி என்றால் இங்கே கவர்னரே கச்சேரி கேட்க வந்து உட்கார்ந்ததால் வேறு மாதிரி பாதுகாப்பு வளையம். டி.வி.சங்கரநாராயணன் அவர் மாமா ‘மதுர மணி’யாகப் பாடி முடிந்து கணேஷ் குமரேஷ் வயலினோடு மேடைக்கு ஏறுவதற்குள் ஒரு பெரிய காவல்படையே நாரதகான சபா விஐபி வாசலில் ஜீப்பை, வேனை, காரை வரிசையாக நிறுத்தி உள்ளே நுழைந்தது. உச்ச பட்ச பாதுகாப்போடு ஜார்க்கண்ட் கவர்னர் நரசிம்மனும் குடும்பமும் அடுத்து வர அரங்கின் முதல் வரிசையிலும் மூன்றாம் வரிசையிலும் படை வீரர்கள் துப்பாக்கியோடு உட்கார்ந்து விட்டார்கள். நடு வரிசையில் ஜார்க்கண்ட் கவர்னர் அட்டகாசமாக வயலின் சகோதரர்களின் ‘குடும்பப் பாட்டு’ ஆன (குமரேஷ் அப்படித்தான் மைக்கில் சொன்னார்) பஞ்ச ரத்ன மாலையை ரசித்துத் தாளம் போட்டுக் கொண்டிருக்க ரெண்டு வரிசை தள்ளி நான் தும்மலை அடக்கிக் கொண்டு பயந்தபடிக்கு அமர்ந்திருந்தேன். தும்மல் சத்தம் கேட்டுத் துப்பாக்கி எடுத்துச் சுடப்படலாம். கறுப்புச் சட்டை எல்டிடீஈ ஆதரவாளர் கச்சேரியில் தப்புத் தாளம் போட்டுப் பயமுறுத்தியதால் சுட்டு கொல்லப்பட்டார் என்று இந்து பத்திரிகை ஈவிரக்கமில்லாமல் செய்தி வெளியிடும்.
ரொட்டீன் செக் அப் என்று பாதி கச்சேரிக்கு நடுவில் போலீஸ் நாய் உள்ளே புகுந்து மேடையில் வீணை, வயலினை முகர்ந்து காலைத் தூக்கலாம் என்ற பயம் கணேஷ் குடும்பத்துக்கு வராமல் குடும்பப் பாட்டு காத்திருக்கும்.
கணேஷோடும் குமரேஷேடும் சேர்ந்து வெகு அனுசரணையாக வீணை வாசித்த ஜெயந்தி குமரேஷின் விரல்கள் வீணையில் விளையாடிய நேர்த்தி பார்த்து அனுபவிக்க வேண்டியது. அதுவும் வீணையில் எட்டவே முடியாத மேல் ஸ்தாயி பிரயோகங்களை வயலினில் அநாயசமாக உதிர்த்துவிட்டு குமரேஷ் குறும்பாக சவால் பார்வை பார்க்க, ஈடுகொடுக்க முடியாமல் ஜெயந்தி உதிர்த்த நாணப் புன்னகை கோடி பெறும்.
கச்சேரி நடந்த ரெண்டரை மணி நேரமும் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி பெற்ற பத்து கமாண்டோக்களும் கவர்னருக்கு முன்பாரா பின்பாரா காவலாக கச்சேரி மேடையைப் பார்த்தபடி தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஜார்க்கண்ட் கவர்னருக்கான ஸ்பெஷல் கச்சேரியை அடுத்த வருஷம் கணேஷும் குமரேஷும் சிபு சோரன் செலவில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலேயே நடத்தினால் சென்னை இசை ரசிகர்களுக்கு நிம்மதி கிடைக்கும். சோரனும் நரசிம்மன் பாட்டுக்குத் தாளம் போட ஆரம்பித்துவிடுவார்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888
கௌரி ராம்நாராயணின் இந்து பத்திரிகை கட்டுரைகள் அலாதியானவை. அருண் கொலாட்கரின் நேர்காணல் என்றாலும், கங்குபாய் ஹங்கலின் இந்துஸ்தானி சங்கீதம் பற்றியோ அல்லது ஜாபர் சேத்தின் மராத்தி நாடகங்கள் பற்றியோ கௌரி எழுதினாலும் ஒன்றுக்கு இரண்டு தடவை படிப்பது எனக்கு வழக்கம். முதலாவது அவருடைய லாகவமான மொழிநடைக்காக. அப்புறம் எழுதிய விஷயத்துக்காக.
எங்கே சுற்றி என்ன எழுதினாலும், கர்னாடக சங்கீதத்தைப் பற்றி எழுதுவது அதுவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிப் பகிர்ந்து கொள்வது கௌரி ஆத்மார்த்தமாகச் செய்யக் கூடிய ஒன்று. ‘Past Forward’ என்ற சிறு நூலில் எம்.எப்.ஹுசைன், ஆர்.கே.லக்ஷ்மண் போன்று அவரைப் பாதித்த ஆறு கலைஞர்களைப் பற்றி நுணுக்கமாகப் பதிவு செய்திருப்பார் கௌரி. அதிலும் எம்.எஸ் பற்றிய கட்டுரை வீட்டுச் சாப்பாடு மாதிரித் தனித்துவமாக இருக்கும். கிட்டத்தட்ட எம்.எஸ் எடுத்து வளர்த்த குழந்தை என்பதால் கட்டுரை முழுக்க அடிநாதமாக ஒரு பாசமும் நெகிழ்ச்சியும் இழையோட்டிக் கொண்டிருக்கும். நல்ல கர்னாடக சங்கீதக் கலைஞரான கௌரி எம்.எஸ்ஸோடு சேர்ந்து நிறைய இசை நிகழ்ச்சிகள் அளித்தவரும் கூட. ‘குறையொன்றும் இல்லை’ பாடலை எம்.எஸ்ஸும் அவரும் பாடும் கச்சேரி தூர்தர்ஷனில் இன்னும் அடிக்கடி ஒளிபரப்பாகிற நிகழ்ச்சியாகும். இந்த குரு சிஷ்யை உறவும் அதற்கான மரியாதை கலந்த அன்பும் கௌரியின் எம்.எஸ்.கட்டுரையை மேலோட்டமாகப் படித்தாலும் மனதில் படாமல் போகாது.
உடல் நலக் குறைவு காரணமாகக் கொஞ்ச நாட்களாக அதிகம் எழுதாதிருந்த கௌரி அண்மையில் எழுதி வெளிவந்திருக்கும் நூல் ‘எம்.எஸ் அண்ட் ராதா’. எம்.எஸ் பற்றியும் ராதா விஸ்வநாதன் பற்றியும் கௌரி எழுதிய இந்தப் புதுப் புத்தகத்தைப் பற்றி கௌரி அனுப்பிய மின்னஞ்சல் மூலம் தான் தெரியவந்தது. இந்திய ஜனாதிபதி வெளியிட்ட புத்தகத்தில் அபூர்வமான பழைய புகைப்படங்கள் நிறைய உண்டு என்று செய்தியோடு இந்து பத்திரிகையில் புத்தகத்திலிருந்து ஒரு துக்கடாவை எடுத்துப் போட்டிருந்தார்கள். கௌரி எம்.எஸ் பற்றி உணர்வு கலந்து எழுதிய பழைய கட்டுரைகளைப் படித்திருந்த காரணத்தால் இந்தத் துணுக்கு வெகு சாதாரணமாகத் தெரிந்தது. ஆனாலும் டைம்ஸ் ஓஃப் இந்தியாவில் கௌரியின் புதுப் புத்தகத்தை ‘காபி மேசைப் புத்தகம்’ என்று மேட்டுக்குடியினர் காசு கொட்டிக் கொடுத்து வாங்கி, காப்பி சாப்பிடும் நேரத்தில் சும்மா புரட்டுகிற வகையில் சேர்த்திருந்ததைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.
அண்மையில் புத்தகம் கையில் கிடைத்தது. நம்பத்தான் முடியவில்லை. அருமையான இதுவரை பார்க்காத கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். சாதாரணமான அச்சடிப்பு. எழுத்தில் ஏதோ ஒரு சிறு அலுப்பு. இதெல்லாம் தான் சொல்லியாச்சே, இன்னும் எத்தனை தடவை சொல்வது என்று யாரோ கட்டாயப்படுத்தி எழுதச் சொன்னதால், நடுத் தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து எழுதினதுபோல் அங்கங்கே ஒரு தோற்றம். பின் அட்டையில் விலையைப் பார்த்தேன். எழுநூற்றுச் சில்லறை ரூபாய். மலிவுப் பதிப்பு கட்டமைப்பில் காப்பி டேபிள் புத்தகம் தான். கௌரி எழுதியிருக்க மாட்டார் என்று மனது நம்பச் சொல்கிறது. முடியவில்லைதான்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888