செருப்பு விடு தூது

 

Kungumam column அற்ப விஷயம் -26 இரா.முருகன்

பாதுகைகள் நடக்க ஆரம்பித்துப் பல காலம் ஆகிறது. இராம பிரான் காலடியில் இருந்து பரதனின் தலையேறிய காலணிகள் அடுத்து அரியணையும் ஏறின. அந்த ஒரு ஜோடி பாதுகைகளைத் தைத்துக் கொடுத்த புராணகாலத்து அயோத்தி நகரத் தொழிலாளி கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்துப் பெருமிதப்பட்டிருப்பான். அவன் உழைப்புக்குக் கிடைத்த மறைமுகமான அங்கீகாரம் அது.

கொடுமையின் மொத்த உருவமாக வேடம் புனைந்து மேடையில் வலம் வந்த நாடகக் கலைஞன் மேல், நாடகத்தில் லயித்துப்போன ரசிகன் ஒருவன் கோபத்தோடு செருப்பைக் கழற்றி வீசியதாகப் பழங்கதை உண்டு. பாத்திரமாகவே மேடையில் வாழ்ந்த நடிகன் செருப்பை நெஞ்சோடு அணைத்து, ‘எத்தனையோ மேடைகளில் யார் யார் கையில் இருந்தோ எல்லாம் கிடைத்ததை விட உன்னதமான பரிசு’ என்று கண்ணீர் விட்டானாம். பாராட்டிய பாதுகை இது. ஆனால் எல்லாச் செருப்புக்களும் கௌரவிக்கப் படுவதில்லை. அலைந்து களைத்த சில புறக்கணிக்கப்படுகின்றன. வார் அறுந்து போய் வசவோடு தெருவோரம் அநாதையாக விடப்படுகின்றன. கடையில் இருந்து இறங்கிய வனப்பும் வாளிப்புமாக இன்னும் சில, கல்யாண மண்டப வாசல்களில் கொண்டவர்களுக்காகக் காத்திருக்கும்போது சொந்தமில்லாத கால்களுக்கு காந்தர்வ மணமாகி கண்காணாது ஓடிப் போகின்றன. இன்னும் சில செருப்புகள் பறக்கத் தொடங்குகின்றபோது பரபரப்பான இன்றைய செய்தி உருவாகிறது.

போன மாதம் வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையை விட்டுப் பெட்டி படுக்கையோடு வெளியேறும்போது எத்தனை நினைவுகளை மனதில் அடைத்து எடுத்துப் போனாரோ தெரியாது. எனினும் சைஸ் பத்து கருப்பு ஷூ, அதுவும் ஜோடியாக வந்து விழுந்த காலணிகளை இனி ஆயுசுக்கும் மறக்க மாட்டார் அவர். ஈராக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு அது. ஒரு நாட்டைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கியதற்காக புஷ்ஷுக்கு ஈராக்கிய செய்திப் பத்திரிகையாளர் அவசர அவசரமாக வழங்கிய அந்த நினைவுப் பரிசைக் கையில் கொடுக்க நேரமின்றி முகத்தில் விட்டெறிந்தார். பாதுகைகள் உலகம் முழுக்க செய்தியாக, புஷ் பழைய செய்திப் பக்கங்களுக்குள் மறைந்து கொண்டிருக்கிறார். விட்டெறிந்தவர் காலில் செருப்பின்றிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவமரியாதை செய்ததாக அவருக்குத் தண்டனை.

அந்த ஈராக்கிய ஷூவைத் தொடர்ந்து லண்டனில் காலணி மழை. நூறு வருடம் முன்பு வரை மொத்த உலகத்தின் பாதியைக் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த நாடு அது. பிரதமர் வசிக்கும் 10,டவுணிங் தெரு இல்லத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் வீசிய செருப்புக் குவியல், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை இங்கிலாந்து கண்டிக்காத காரணத்துக்காக வழங்கப்பட்டது. அந்த வெகுமதியை டவுணிங் தெரு இல்லத்தில் இனி குடியேறப்போகும் எந்த வருங்காலப் பிரதமரும் அமெரிக்க மாஜி அதிபரைப் போல மறக்க மாட்டார்கள்.

புஷ்ஷும் இங்கிலாந்தும் செருப்பும் கிடக்கட்டும். மரியாதையையும் அவமரியாதையையும் தீர்மானிக்கச் செருப்புக்களுக்கு உரிமை எங்கே இருந்து கிடைக்கிறது? புழுதியிலும் மணலிலும் கட்டாந்தரையிலும் உலா வரும் கால்கள் மூலம் கிடைக்கிற ஒன்று அது. காலில் விழுவதை கலாச்சாரமாக வளர்த்து எடுத்த நம்முடைய சமூகத்தில் செருப்பு அணிந்தாலும் அணியாவிட்டாலும் கால்கள் முழுமுதல் கடவுளாகின்றன. தலைமைப் பீடத்தை அலங்கரிக்கும் கால்களை பரிவார தேவதைகள் பல நூறு பேர் பார்க்கத் தொட்டு வணங்குவது தினசரி அரங்கேறிய நாட்களில், பயபக்தியோடு கும்பிடத் தாழ்ந்த கைகளை லட்சியம் செய்யாமல் தெய்வம் ஒரு முறை நகர்ந்தது. மண்டியிட்டுத் தவழ்ந்தபடி கால்களைத் தொடர்ந்து தொண்டரும் மேடையில் ஊர்ந்து போனது கண்கொள்ளாக் காட்சி.

ஒரு பிரபல நடிகரின் விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் தன் வழக்கப்படி கால் மேல் கால் போட்டு மீசை முறுக்கி அமர்ந்திருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு குரல் –‘டேய், காலைக் கீழே போடுடா’. விருந்தினரை அவமதித்துக் கூச்சல் போட்ட ரசிகன் மேடையில் உடனே ஏறி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நடிகர் மைக்கில் அறிவித்தார். ஐந்து நிமிஷம் சென்று குரல் வீசிய ரசிகன் மேடைக்கு வந்தான். கால்கள் சூம்பி ஊன்றுகோலைத் தாங்கி நின்று கும்பிட்டான் அவன். அவனால் எந்தக் காலத்திலும் காலையும் காலணிகளையும் நேசிக்கவே முடியாது.

ஈராக்கை நாசப்படுத்திய புஷ்ஷுக்கு எதிராக ஒரு ஜோடி ஷூ பறந்தால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் தமிழ் இனத்தையே வேரோடு வெட்டிச் சாய்த்த காடையர்களை நோக்கிக் கடல் கடந்து வீச எத்தனை செருப்பு தேவைப்படும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன