வார்த்தை தவறி விட்டாய்

 

Kungumam column – அற்ப விஷயம் -25 இரா.முருகன்

புத்தாண்டு பிறப்பது எந்தக் காலத்திலும் பரபரப்பான விஷயம். கால் நூற்றாண்டு முன்புவரை இந்தப் பரபரப்பு ஊரெல்லாம் திரிந்து ஓசி காலண்டர் சேகரித்து சுவர் முழுக்க ஆணியடித்து மாட்டுவதில் ஆரம்பமாகும். அது தொடர்வது வார்னிஷ் வாடை தூக்கலாக அடிக்கும் வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக அலைவதில் இருக்கும். வாழ்த்து அட்டை ஓசியாக யாரும் தரமாட்டார்கள் என்பதால் இது தவிர்க்க முடியாத செலவு இனத்தில் மனசில்லாமல் சேர்க்கப்படும்.

இருபத்தைந்து வருடத்தில் காலண்டர் கிட்டத்தட்டக் காணாமல் போய்விட்டது. வீட்டுச் சுவரில் தொங்கவிட முடியாத அற்புத அழகு பொங்கிப் பூரிக்கும் காலண்டர் தேவதைகளைக் கண்குளிரக் கண்டு களிக்கவே தலைமுடி குறைந்தவர்கள் கூட சலூன்கடைகளுக்கு மாதாந்திர விசிட் அடிப்பது அப்போது வாடிக்கை. முடி திருத்தகங்களும் காலண்டர் கன்னியரைக் கைவிட்ட காரணத்தால் சௌந்தர்ய உபாசகர்கள் இப்போது செல்போனில் படம் அனுப்பி, வாங்கி அழகை ஆராதிக்கிறார்கள். வாழ்த்து அனுப்பவும் குறுஞ்செய்தியே வசதி.
எந்தக் காலத்திலும் தொடரும் ஒரு சங்கதி புத்தாண்டு வாக்குறுதி. ஆண்டு பிறந்த நாள் காலையில் சுத்த பத்தமாகக் குளித்து விட்டு புதுக் காலண்டரில் அருள் பொழியும் அம்மன் சாமியையோ தகப்பன் சாமியையோ மனதாரத் தொழுது மேற்படி வாக்குறுதிகள் எடுத்துக் கொள்ளப்படும். இனிமேல் சிகரெட் புகைக்க மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், இரண்டு கோப்பைக்கு மேல் காப்பி குடிக்க மாட்டேன், காப்பி குடித்து விட்டு சிகரெட் புகைத்துக் கொண்டே பொய் சொல்ல மாட்டேன் என்று ராகம் தானம் பல்லவியாக இந்த வாக்குறுதி ஆலாபனைகள் நீளும்.

இப்போதைய வாக்குறுதிகள் குளியலோடு ஆரம்பிப்பது கிடையாது. சொல்ல வெட்கப்பட வேண்டியதே இல்லை. ஊரோடு, நாட்டோடு குடி மும்முரம். புது வருடத்தை வரவேற்க முந்தின நாள் ராத்திரி நடுநிசிவரை குளிர் பானம், சோம பானம், சுரா பானம் பருகி அதிகாலையில் படுக்கையில் விழுந்தவர்கள் எழுந்திருக்கும்போது கிட்டத்தட்ட நடுப்பகல். ஹேங்க் ஓவர் தலைவலிக்கு ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை விழுங்கி விட்டு பல் கூடத் துலக்காமல் படுக்கையில் உட்கார்ந்து எடுக்கும் முதல் புத்தாண்டு வாக்குறுதி ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’. சும்மா இண்டெர்நெட்டில் மணிக்கணக்காக மேய்ந்து வெட்டிப் பொழுது போக்க மாட்டேன், செல்போனில் அரட்டை போட மாட்டேன், இப்படி காலத்துக்குத் தகுந்த மாதிரி மற்ற வாக்குறுதிகளும் அநேகமாகப் பட்டியலாகும்.

நொறுக்குத் தீனியை ஒதுக்குவது, உடற் பயிற்சியாக சைக்கிள் மிதித்து ஆபீசுக்குப் போவது, கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் எம்.பி.ஏ பட்டப் படிப்பு அட்மிஷன் வாங்குவது என்று சிறப்பு வாக்குறுதிகளும் தாராளமாக தனக்குத்தானே வழங்கப்பட்டும். வக்கீல் நண்பர் ஒருத்தர் தினசரி ஒரு மணி நேரம் தலைகீழாக நிற்பது, மொட்டை மாடியில் ஓடிக் கொண்டே விலாநோக நகைப்பது (சிரிப்பு வைத்தியமாம்), டைட்டிலில் இலக்கணப் பிழை இருக்கிற தமிழ் திரைப்படங்களை தவிர்ப்பது என்று வித்தியாசமான வாக்குறுதிகள் எடுத்திருப்பதாகச் சொன்னார்.

இருபத்தைந்து வருடத்தில் வாக்குறுதிகள் மாறியது போல் அவற்றைக் கடைப்பிடிப்பதிலும் நிறைய மாற்றம். முந்திய தலைமுறை காலண்டர் சாமிமேல் சத்தியம் செய்து காப்பி சிகரெட்டை நிறுத்துவது ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மொத்தமாக அம்பேல் ஆகிவிடும். இந்தத் தலைமுறையின் உணவுக் கட்டுப்பாடு, பியரே நீ போ, இண்டர்நெட் செல்போன் துறவு, உடலினை உறுதி செய் தீர்மானங்கள் வருடம் முழுவதும் நடைமுறைக்கு வரும், போகும்.

கடைப்பிடிக்க முடிகிறதாக நம்ம தரப்பிலும் இரண்டு வாக்குறுதிகள் எடுக்கப்பட்டன. புது வருடத்துக்கு அன்பளிப்பாக வருகிற டைரிகளை முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்பது முதலாவது. எதையும் எழுதாமல் வருடக் கடைசியில் வெற்று டைரியைத் தூக்கிப் போடுவதை நிறுத்தியாகி விட்டது. வந்த ஒற்றை டைரியும் மறு அன்பளிப்பு செய்யப்பட்டு வேறு யாரோ இந்த வருடக் கடைசியில் குற்ற உணர்வில் குமைந்து போக வழிவகை செய்யப்பட்டது.

அடுத்த வாக்குறுதியாகப் புத்தகக் கண்காட்சியில் முப்பது கிலோ புத்தகம் வாங்கி வந்து புரட்டிக்கூடப் பார்க்காமல் அலமாரியில் அடுக்குவதற்கும் முற்றும் போட்டாகி விட்டது. ரெண்டு வாரக் கதாநாயகர்களாக ஹைட்ரஜன் பலூன் மாதிரிப் பெருமையில் ஊதி உப்பித் தரைக்கு நாலு செண்டிமீட்டர் உயரே பறந்து கொண்டிருந்த எழுத்துச் சிற்பிகளையும், லைப்ரரி ஆர்டரே குறிக்கோளான பதிப்பகத்தாரையும் சந்திக்காமல் கண்காட்சிக்கு வெளியே கடலைப் பருப்பு கொறித்து விட்டுத் திரும்பியதில் காசு மிச்சம். வெளியே யாரோ கையில் திணித்த ‘தமிழில் சட்டம் புத்தகம்’ நோட்டீசை வக்கீல் நண்பரிடம் காட்டப் போனால், அவர் தலைகீழாக நின்றபடி மும்முரமாக டைரி எழுதிக் கொண்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன