வார்த்தை பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் 1ப்
அவசியம் இதைப் பாருங்க. அப்புறம் படியுங்க.
மர்மயோகி ஒரு குறுவட்டையும், கூடவே புத்தகத்தையும் நீட்டினார். இயக்குனர் பிரதியாக ஓர் ஆங்கிலத் திரைப்படம். பெயர் மேக்னோலியா. அதோடு இணைப்பாகப் படத்தின் திரைக்கதை புத்தக வடிவத்தில். பால் தாம்சன் ஆண்டர்சன் எழுதியது. படத்தை இயக்கியதும் ஆண்டர்சன் தான். இளைஞர்.
வழக்கம் போல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்ட ஆரம்பித்தேன்.
மொதல்லே சி.டியைப் பார்க்கச் சொன்னேன். அப்புறம் படிக்கலாம்.
அன்பான கண்டிப்பு. தட்ட முடியாது. தட்டுகிற தச்சர்களுக்குத் தெரியாது. அவங்க இங்கே எங்கே வந்தாங்க? கேட்கக் கூடாது. எல்லாமே லாஜிக்குக்கு உட்பட்டது. கொஞ்சம் தற்செயலானதும் கூட.
வீட்டு கம்ப்யூட்டரில் குறுவட்டைச் சுழல விட்டபோது கீழ்ப் போர்ஷனில், எதிரே குடியிருப்பில், போதாக்குறைக்கு அடுத்த வீட்டில் எங்கும் சென்னைத் தச்சர்கள் மாநாடு கூட்டி பகவந்தம் தெருவில் ஒட்டுமொத்தமாக வேலைக்கு வந்ததுபோல் இழைக்க, அறுக்க, குடைய, அடிக்க, தட்ட ஆரம்பித்திருந்தார்கள். தெரு முழுக்க நடக்கும் சத்த சம்மேளனத்தில் மேக்னோலியாவும் ஆச்சு புடலங்காயும் ஆச்சு.
கை போன போக்கில் மவுஸை க்ளிக்க, ஃபிலிப் பேக்கர் ஹால் இருண்ட படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார். வெளியே இழைப்புளி, மின்ரம்பம் ஒரு வினாடி அமைதியாகின்றன. திரையில் ஃபிலிப் அழைப்பு மணியை அழுத்துகிறார். பதில் வராமல் மறுபடி அழுத்த, நடுத்தர வயதில் ஒருத்தன் கதவைத் திறந்து அண்டர்வேரோடு எட்டிப் பார்க்கிறான். க்ளாடியாவுக்கு பாய் பிரண்டா நீ? ஃபிலிப் கேட்கிறார். இந்த வினாடியில் எப்படி செயல்படுவது என்று புரியாதவனாக, வெறும் ப்ரண்ட் தான் என்கிறான் அவன். நீங்க என்ன வேணும் அவளுக்கு? அவளோட தகப்பன் நான். சொல்லியபடி ஃபிலிப் சற்றே நிலைதடுமாறி, திரும்ப நேராகி உள்ளே நடக்கிறார். கீழே மடார் மடார் என்று மறுபடி சம்மட்டி சத்தம்.
என்னமோ சுவாரசியமாகப் பட, பார்க்க ஆரம்பித்தேன். தச்சர்கள் பின்னணி, முன்னணி என்று கூட்டணியாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது திரையில் கிளாடியாவாக மெலோரா வால்டர்ஸ். ஃபிலிப் படுக்கை அறையில் தயங்கி நிற்க, மெலோரா அவரை வெளியே போகச் சொல்லிக் கூப்பாடு போடுகிறார். வாய் அசைவில் இருந்து நிமிடத்துக்கு நாலு f*ck உதிர்ந்து கொண்டிருப்பது புரிந்தது. நடுநடுவே வசனமும். இயர் போனைத் தேடிக் காதில் மாட்டிக் கொண்டு அடுத்த மூன்று மணி நேரம் மேக்னோலியாவின் அற்புத உலகத்தில் ஆழ்ந்து போனேன். மாய யதார்த்தம் இப்படியும் இருக்கலாம் போல.
மேக்னோலியா திரைக்கதையை மூன்று வரிகளில் சொல்ல வேண்டும் என்று நிர்பந்தம் ஏற்பட்டால் இந்தத் தோதில் இருக்கும். ஒரு பத்து கதாபாத்திரங்கள். எல்லோரும் சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு பிரதேசத்துக்காரர்கள். ஒரு மழை நாளில், ஏதோ ஒரு விதத்தில் பின்னிப் பிணைந்த கிட்டத்தட்ட தற்செயலான, அசாதாரணமான நிகழ்ச்சிகளால் இவர்கள் எல்லோரும் இணைக்கப்படுகிறார்கள். அந்த இருபத்து நாலு மணி நேரத்தில் அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அலசுகிற கதை இது. டாம் க்ரூய்ஸ், ஃபிலிப் செய்மோர் ஹாஃப்மேன், ஜேசன் ரோபார்ட்ஸ், ஃபிலிப் பேக்கர் ஹால், மெலோரா வால்டர்ஸ் என்று ஹாலிவுட்டின் குறிப்பிடத்தகுந்த நட்சத்திரங்கள், அதில் நடிக்கும் பலரும்.
சிக்கலான ஆனால் குழப்பமில்லாத திரைக்கதைகளை ரசிக்கக் கற்றது யோகியின் பரிச்சயத்துக்குப் பின்னரே. புனுவல், சத்யஜித்ராய், அடூர், அரவிந்தன், ரோசலினி என்று ஆழமாக மட்டும் தேர்ந்தெடுத்து ரசித்தவனுக்கு, இம்மாதிரிக் கதைகளின் கலை நேர்த்தியை அனுபவிக்கச் சொல்லிக் கொடுத்தது அவர்தான். க்ராப்ட் என்று சொன்னாலும் தப்பு இல்லை. அதற்கும் நிறையத் திறமை தேவை.
சிரியானாவில் தொடங்கியது இந்த பாலபாடம். மகாபாரதம் மாதிரி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் திரையில் குறுக்கும் நெடுக்குமாகக் உலகம் முழுக்க ஊர்ந்து கொண்டிருக்கும் அரசியல் திகிலர் (பொலிட்டிகல் த்ரில்லர்) அது. சிரியானா திரைக்கதையை ஆங்கிலத்தில் எழுதுவதை விட, கம்ப்யூட்டர் பரிபாஷையில் ரேஷனல் யூனிஃபைட் பிராசஸ் (ஆர்.யூ.பி) வாயிலாக யூஸ் கேஸ், சீக்வென்ஸ் டயகிராம் என்று வரைந்து மளமளவென எழுதி முடித்து விடலாம். அ-கணினியர் மன்னிக்க. மேக்னோலியாவுக்கு, இன்பத் தமிழுக்கு இதோ திரும்பியாகி விட்டது.
கையில் உயர்த்திப் பிடித்துப் படம் பிடிக்க வாகான ஸ்டடிகாம் காமிராவை மேக்னோலியா அளவு சிறப்பாகப் பயன்படுத்திய திரைப்படத்தை அண்மையில் பார்த்ததாக நினைவு இல்லை. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ க்விஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வரும் சிறுவனும் அவன் தகப்பனும் மழையில் காரை விட்டு இறங்கி கட்டிடத்துக்குள் போவதில் தொடங்குகிற காட்சி, அடுத்த மூன்று நிமிடம் காமிரா அதே சீரான வேகத்தோடு வளைந்து படியேறி இறங்கித் திரும்பி விரைகிற நேர்த்தி பார்த்து அனுபவிக்க வேண்டியது. படம் முழுக்க லாங் ஷாட்களின் சலிப்பில்லாத தொகுப்புகளாகத் தொடரும் பார்வை அனுபவமும்கூட.
ஒலியைப் பயன்படுத்தி இருக்கும் திறமையும் இதே ரகம் தான். புற்றுநோய் முற்றி மரிக்கும் நிலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஜேசன் ரோபார்ட்ஸ் பேச ஆரம்பித்ததும் காட்சி முடிகிறது. அடுத்த நான்கு காட்சிகளிலும் அந்தப் பேச்சு தொடர்ந்து வருகிறது. அந்தக் காட்சிகளில் வெவ்வேறு சூழல்களில் மற்ற கதாபாத்திரங்கள் இயங்குவது ஜேசன் ரோபர்ட்ஸின் பேச்சோடு ஏதோ ஒரு விதத்தில் பொருந்தியோ மாறுபட்டோ ஒரு விநோத ஒளி-ஒலிக் கலவையை உருவாக்கி விடுகிறது. திரைப்படம் என்ற ஊடகத்தில் மட்டுமே சாத்தியமாகும் அதிசய கொலாஜ் இது. ஆண்டர்சன் அநாயாசமாகக் கையாள்கிறார்.
மேக்னோலியா படம் வெளியாகிப் பத்து வருடமாகி விட்டாலும் இன்னும் பரவலாகப் பேசப்படுகிறது. அதிலும் முக்கியமாக, உச்சகட்டத்தில் நிகழும் தவளை மழை. வேறொண்ணுமில்லை. வானத்தில் இருந்து மழைத் தண்ணீரோடு சேர்ந்து தவளைகளும் ஆயிரக் கணக்கில் விழுந்து மடிகின்றன. பைபிளில் எக்சோடஸ் பகுதியில் துர்நிமித்தமாகக் காட்டப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இது. நடக்க சாத்தியம் உள்ளதும் கூட. ஏரி குளத்தில் உள்ள நீர் ஆவியாகிப் போகும்போது தவளைக் குஞ்சுகளும் அதோடு மேகத்தில் கலந்து மேலே போய், அப்புறம் மழையோடு மழையாக வந்து விழுவது நிஜமாகவே நடந்திருக்கிறது. சிறிய நிலப் பரப்பில் பெய்த தவளை மழையை சினிமாவுக்காக பெரிய அளவில் பெய்ய வைத்து கதையை புத்திசாலித்தனமாக நகர்த்திப் போகிற இந்தக் காட்சி வந்தபோது சி.டி இயங்காமல் நின்று விட்டது. புணர்ச்சித் தடங்கல் மாதிரி.
சி.டியோடு இன்னொரு இணைப்பும் உண்டு. நாள் வாரியாக ஷூட்டிங் நடப்பதைப் படமாக்கி அதையும் அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும் இன்னொரு சி.டி. கதாபாத்திரங்களை இயங்க வைத்துவிட்டு காமிரா கோணத்திலோ எதிர்க் கோணத்திலோ தவழ்ந்தும் உருண்டும் நெருங்கி வந்து உற்றுப் பார்த்து, ரசித்து, உடனே விலகி, திருத்தி ஆண்டர்சன் ஈடுபாட்டோடு செய்கிற டைரக்ஷன் போல இங்கே யாராவது செய்தால் டைரக்டருக்கு மரை கழண்டு விட்டது என்று ஒட்டு மொத்தமாக முடிவு கட்டி விடுவார்கள். எனக்கே சமயத்தில் காதலிக்க நேரமில்லை நாகேஷ் நினைவு வந்தார். அயம் நாட் செல்லப்பா, ஆண்டர்சன்’பா.
மாக்னொலியாவின் திரைக்கதை பற்றி ஒரே வரியில் சொல்வதானால், புத்திசாலித்தனம் முந்தி நிற்கிறது. கலைத்தன்மை அடுத்து வெளியாகிறது. கண்டிப்பாக இந்த வரிசையில் தான். யார், என்ன, ஏன், எங்கே, எப்போது என்ற ஐந்து கேள்விகளுக்கு விடை காணுகிற திரைக்கதை உருவாக்கத்தின் அடிப்படையைச் சொல்லும் சிட் ஃபீல்டின் பாடப்புத்தகத்தை உருப்போடுவதை விட மேக்னோலியா பார்ப்பதும் படிப்பதும் மேல். புத்தகத்தைப் புரட்டுகிறேன். இயக்குனர் ஆண்டர்சனின் பேட்டி வெளியான பக்கங்களில் ஒன்று விரிகிறது.
மேக்னோலியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பு வந்ததும் உங்கள் மனதில் தோன்றிய முதல் காட்சி எது? பேட்டியாளர் கேட்கிறார்.
ஃபிலிப் பேக்கர் ஹால் இருண்ட படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார். அழைப்பு மணியை அழுத்துகிறார். பதில் வராமல் மறுபடி அழுத்த, நடுத்தர வயதில் ஒருத்தன் கதவைத் திறந்து அண்டர்வேரோடு எட்டிப் பார்க்கிறான். க்ளாடியாவுக்கு பாய் பிரண்டா நீ? ஃபிலிப் கேட்கிறார். இந்த வினாடியில் எப்படி செயல்படுவது என்று புரியாதவனாக, வெறும் ப்ரண்ட் தான் என்கிறான் அவன். நீங்க என்ன வேணும் அவளுக்கு? அவளோட தகப்பன் நான். சொல்லியபடி ஃபிலிப் உள்ளே நடக்கிறார்.
நான் பார்க்க ஆரம்பித்த அதே காட்சி. சி.டி இயங்கும் மெல்லிய கரகர ஒலி. கம்ப்யூட்டர் திரையில் ஏதோ அசைவு. வானத்தில் இருந்து ஒரு பச்சைத் தவளை ஓடுகிற காரின் விண்ட்ஷீல்டில் விழுகிறது. ஒன்றும் இரண்டுமாக உதிரத் தொடங்கி, திரை நெடுக தவளைகள் விழுகின்றன. பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வெகு இயல்பாகச் சொல்கிறான் – இப்படி நடப்பது உண்டுதான். இப்படித்தான் நடக்கும். தச்சர்களின் இழைப்புளிகள் சுருதி சேர்க்க தவளை மழை உக்கிரமாகப் பெய்து கொண்டிருக்கிறது. எல்லாமே தற்செயலானது தான்.
(Magnolia – The movie and shooting script by Paul Thomas Anderson)
8888888888888888888888888888888888888888888888888888888888888888
இது தற்செயலான நிகழ்ச்சிகளின் காலம் – column. கவிஞர் வைதீஸ்வரனின் புதிய கவிதைத் தொகுதி கிடைக்கப் பெற்றது அதில் சேர்த்தி இல்லை என்றாலும். அந்தப் புத்தகம் வந்து சேர்ந்த அன்றைக்கு சென்னையில் நிஷா புயல், மழை, வெள்ளம். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் மும்பை துயரச் சம்பவங்களின் அணிவகுப்பு. ஒரு பத்து தீவிரவாதிகள் ஒரு மாநகரை, நாட்டை விரல் நுனித் துப்பாக்கி விசைக்கு முன் நிற்க வைத்து உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நடப்பது உண்டுதான். இப்படித்தான் நடக்கும். நம்பிக்கையின்மையும், விரக்தியுமாக எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். எதுவும் செய்ய இயலாத பேடிமையோடு இதை எத்தனை நாள் சொல்லவும் எழுதவும் போகிறோம்? யோசித்தபடி வைதீஸ்வரனின் புத்தகத்தைப் பிரிக்கிறேன்.
வன்முறை
கைத் தடி முனைக்குப் பாய்ந்த
அவன் கோபத் தழல் கூர்மையாகி
மூலைக்கு மூலை தாவித் துரத்தி
மாறி மாறி அறைந்தது
அந்த சுண்டெலிக் குஞ்சை.
பிறந்து கண் திறந்ததும்
பூமியை முகர்ந்து
காற்றில் காதுகளை சிலிர்த்து
ஆடிக் குதித்ததைத் தவிர
அதன் குற்றம் எதுவுமில்லை.
அச்சமும் தந்திரமும் துளிராத
சில நிமிஷ வாழ்வுக்குள்
மருண்டு மல்லாந்தது குஞ்சு.
சிதறிய தன் மூளைப் பிசுக்கில்
வாலெனத் துடிக்கிறது
ஒரு கேள்வி.
‘இம் மண்ணில்
அடிப்பட்டு சாவதற்கு
உயிரோடு இருந்தாலே போதுமா?’
போதும் போல் இருக்கிறது, வைதீஸ்வரன் சார். இந்த அவலத்தின் சுமை நெஞ்சில் அழுத்த, இது இன்னும் தொடராமல் நிற்க, இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். பதில்கள் கிடைக்கும் வரை கேட்போம். பதில் வரும்போது நாம் இல்லாமல் போனாலும் கேட்டுக் கொண்டே இருக்க, உங்கள் கவிதை உயிரோடு இருக்கும்.
(‘கால் – மனிதன்’ – வைதீஸ்வரன் – சந்தியா பதிப்பகம், சென்னை 600 083; தொலைபேசி 24896979)