மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ

 

Kungumam column – அற்ப விஷயம் 23

இரா.முருகன்

கூட்டம் நடத்துவது என்ன மாதிரியான சங்கதி என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை. அரசியல் கூட்டங்களைப் பற்றிய அங்கலாய்ப்பு இல்லை இது. அரசியல் போக, வேறே இலக்கியம், கலை, நற்பணி மன்றம் தொடங்கி, வைதேகி ப்ளாட்ஸ் கட்டிடக் குடித்தனக்காரர்கள் சங்கக் கூட்டம் வரையான பல தரப்பட்ட இனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறும். கூட்டங்கள் நடக்க என்ன காரணம்?

இம்மாதிரியான யோசனைகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினத்தில் உருவாகும். மதியம் வீட்டில் வைத்த வெங்காய சாம்பாரையும் உருளைக்கிழங்கு ரோஸ்டையும் ஒரு பிடி பிடித்துவிட்டு தூக்கத்துக்கும் முழிப்புக்கும் நடுவே இன்பமாக அல்லாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் யார் மனதிலாவது கூட்டத்துக்கான பொறி தட்டும். அப்போது, உடனடியாக மல்லாந்தோ குப்புறப் படுத்தோ தூங்கி மாலையில் காப்பி சாப்பிட எழுந்திருப்பது நலம். பொறியை வளர்த்து, நேரில், தொலைபேசியில் ஏழெட்டுப் பேரைத் தொடர்பு கொண்டு, மேற்கொண்டு நடக்க வேண்டிய வேலைகளுக்காகத் திட்டம் போடத் தொடங்குவது தொல்லைகளில் தொடக்கம். குறிப்பாக, சிலபல மற்றவர்களுக்கு.கூட்டம் நடத்த நாள், இடம் பார்ப்பது முதல் வேலை. ஆடி, மார்கழி போன்ற மாதங்கள் சிறப்பானவை. கல்யாண சீசன் முடிந்து டல் அடித்துக் கிடக்கும் திருமண மண்டபங்கள் குறைந்த வாடகைக்குப் படிந்து வரும். அங்கே இருபது ட்யூப் லைட்டில் இரண்டாவது எரிந்தால் உங்கள் அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் கிட்டத்தட்ட இருட்டில் கூட்டம் நடத்தப்படும். இலக்கியக் கூட்டம் என்றால் இது வசதி. விவாதம் முற்றிக் கைகலப்பு ஏற்பட்டால் உள்குத்து விடச் சாலச் சிறந்தது.

கூட்டத்துக்கு ஒலிபெருக்கி வசதி வேண்டுமா என்று அடுத்து தீர்மானிக்க வேண்டும். இருபது பேருக்குக் குறைவாக ஆள் போக்குவரத்து உள்ள கூட்டத்துக்கு மைக் நிச்சயம் தேவை. வெளியிலே சத்தம் கேட்டால் இன்னும் நாலைந்து பேர் உள்ளே வந்து ஜோதியில் கலக்க இது வழிசெய்யும். மேலும், சில பேச்சாளர்களுக்கு தங்களுக்கு முன்னால் மைக்கையோ மைக்கண் சுந்தரிப் பெண்குட்டிகளையோ பார்த்தால்தான் பேச வாய் திறக்கும். அதிலும் மைக் மூலம் ஒலிபரப்பாகிற தன் குரலைத் தானே கேட்பதில் இருக்கும் போதை தனியானது.

அடுத்து முடிவு செய்யப்பட வேண்டியது, வந்தவர்களின் செவிக்கு மட்டும் ஈந்து அனுப்பிவிடலாமா அல்லது வயிற்றுக்கும் கொஞ்சம் தரலாமா என்பது. தட்டில் வைத்து எடுத்து வந்து கொறிக்க நீட்டப்படும் சிறு தீனி உகந்தது. எனினும், பொரிவிளங்காய் உருண்டை போன்ற அபாயகரமான பொருட்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். வந்தவர்களின் பல், ஆவேசமான பேச்சாளர்களின் தலை இன்னபிற உறுப்புகளுக்கு ஊறு விளைவிக்க வல்லவை இவை. ஏழெட்டு இழை காராசேவு, உதிர்ந்த பக்கோடா போன்றவையும், நாலு ஸ்பூன் கொள்ளளவு உள்ள காகித கோப்பையில் ஆறி அவலாகிப்போன காப்பியும் வழங்குவதே உத்தமம்.

ஒரு தினப் பத்திரிகையிலாவது சகலபாடி, கூடப் படித்த சகபாடி இப்படித் தொடர்பு இருப்பது நல்லது. கூட்டம் பற்றி காசு செலவழித்து விளம்பரம் செய்வதென்றால் இதெல்லாம் வேண்டாம்தான். ஆனால், இலவசமாக ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பத்தியில் ஒரு வரி ரெண்டு வரி செய்தி வர இதில் வாய்ப்பு உண்டு. அலைபேசியில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் அன்பர்கள் சிலரையாவது பிடித்துப் போட முடியும். ஈமெயில் அனுப்பி இன்னும் கொஞ்சம் கும்பல் வரவழைக்கலாம்.

இத்தனை முக்கியமான ஏற்பாடுகள் செய்த பிறகு இதர இனங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும். எந்த விஷயமாக கூட்டம் நடத்துவது என்பது இதில் ஒன்று. கூட்டம் முடிந்த பிறகு போலீஸ் வீட்டுக் கதவைத் தட்டி விசாரிக்காத, வீட்டுக்காரி வாசலில் நிற்க வைத்தே அதை விடக் கொடூரமாக மிரட்டித் தகவல் பிடுங்காத எந்தப் பொருள் பற்றியும் கூட்டம் நடத்தலாம். கேட்க நாலு பேராவது உலகத்தில் உண்டு. அதில் ரெண்டு பேருக்கு நிச்சயம் காராசேவு பிடிக்கும்.

இண்டர்நெட் வந்தபிறகு கூட்டங்கள் களைகட்ட ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாகப் புத்தக வெளியீட்டு விழாக் கூட்டங்கள். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தினாலும் இம்மாதிரி கூட்டங்களுக்கு முப்பத்தேழு பேருக்கு மேல் வந்ததாகச் சரித்திரம் இல்லை என்பதால் பதிப்பாளர்கள் இணையத்தில் அழைப்பு விடுத்து, மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி அவரவர் ஆபீஸ் மொட்டை மாடியில் கூட்டத்தைக் கூட்டி விடலாம். மைக், காராசேவு. வெளியிடல். பெறுதல். பேச்சு. கலந்துரையாடல். அதையெல்லாம் ஒலிப்பதிவு செய்து இணையத்தில் வலையேற்றி விட்டால் தமிழ் கூறும் நல்லுலகமே கேட்க வாய்ப்பு உண்டு. புத்தகம் வாங்கவும் கூடும். தேடி வந்த கௌரவத்தில் அசட்டு எழுத்தாளன் மதிமயங்கி இருக்கும்போது அதே இணையத்தில் வைத்து அவன் டிரவுசரைக் கிழிக்கவும் சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்துப் பதிப்பகங்கள் இந்த தமாஷ் நாடகத்தை இன்னும் சுவையாக்கலாம். ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன