Kungumam column – அற்ப விஷயம் -22 இரா.முருகன்
எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும் விநியோகிக்க முந்தாநாள் போட்ட இனிப்பும் வாங்கப் பக்கத்து ஹோட்டலுக்கு நடக்கும்போது மனசை அலைக்கழிக்கும் விஷயம், பெயர் வைப்பது. நம்முடைய இலக்கிய, சமூக, அரசியல் சார்புகளின் பின்னணியில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கயல்விழியும், கல்பனாவும், ஜீவபாரதியும் சகலராலும் நிராகரிக்கப்பட, பிறந்திருக்கிற குழந்தை ஸ்வப்னா ஆகிறது. சந்தோஷ் ஆகிறது.‘சந்தோஷ் அம்மா, சத்மா ஆஷாத்திரி ஸ்கூல்லே நர்சரி கிளாஸ் அப்ளிகேஷன் பாரம் நாளைக்குத் தராங்களாம்’. பக்கத்து ஃப்ளாட் அம்மா அடுப்பில் கடுகு வெடிக்கவிட்டு பாதி சமையலுக்கு நடுவே ஓடிவந்து தகவல் அறிவிக்க, ராத்தூக்கம் அம்பேல். ‘என்னது, நாளைக்கு அப்ளிகேஷன் வாங்க, காலையிலே காப்பி குடிச்சுட்டுக் கிளம்புவீங்களா? எந்த உலகத்திலே இருக்கீங்க? இப்பவே போய் வரிசையிலே நின்னாத்தான் காலையிலே கவுண்டர் திறந்ததும் கிடைக்கும். மசமசன்னு சோம்பல் முறிக்காம அங்கே போய் நில்லுங்க. பிள்ளை நல்ல ஸ்கூல், காலேஜ்லே படிச்சு முன்னுக்கு வரவேண்டாமா?’ சந்தோஷ் அம்மா துரத்துகிறார்.
‘பகல் சாப்பாடை மறந்துட்டுப் போயிட்டா உங்க பொண்ணு. ஆபீஸ் போற வழியிலே ஸ்கூல்லே கொடுத்திட்டுப் போங்க. பத்து நிமிஷம் தாமதமாகப் போனா, ஆகாசம் தலையிலே விழுந்துடாது. ஆடிட்டாவது வெங்காயமாவது. கிளம்புங்க’. சரி, எனக்கு சாப்பாடு? ‘ஆபீஸ் கேண்டீன்லே பாத்துக்குங்களேன் ஒரு நாளைக்கு’.
‘ஸ்வப்னாவுக்கு பரத நாட்டியம் கற்றுக் கொள்ளணும். சந்தோஷுக்கு கிரிக்கெட் கோச்சிங் போகணும். இஞ்சினியரிங் காலேஜ் அட்மிஷனுக்கு இப்பவே கோச்சிங் ஆரம்பிச்சுடணும். ஆறாம் கிளாஸ் வந்துட்டானே. அவங்க அவங்க பாபா ப்ளாக் ஷீப் சொல்ல ஆரம்பிச்சதுமே பிதகோரஸ் தியரம் கத்துக் கொடுக்க சுறுசுறுப்பா ஏற்பாடு பண்றாங்க. உங்களுக்குப் போதாதுங்க. சொன்னா கோபம் வரும்.’ வராது.
ஐ.ஐ.டி தவிர மாநிலத்தில், தேசம் முழுக்க இஞ்சினியரிங், மருத்துவம் படிக்க எத்தனை காலேஜ், எங்கெங்கே இருக்கு, நன்கொடை எவ்வளவு தரணும், எப்படி அணுகினால், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும்? இவிடம் விவரம் கிடைக்கும். ‘இந்தக் காலேஜா? இன்னும் கொஞ்சம் பரபரன்னு ஓடியாடியிருந்தா, எதிர் வீட்டுப் பையன் போற காலேஜ்லே அட்மிஷன் கிடைச்சிருக்குமே. சொன்னேனே, நீங்க..’
‘நாளைக்கு காலேஜ் டெர்ம் ஃபீஸ் கட்ட கடைசி நாள். மறந்திட்டீங்களா? ஃபோன் பில் கட்ட நேத்தே டைம் முடிஞ்சிடுத்தே. சின்னக் குழந்தையா, ஒண்ணொண்ணா ஞாபகப்படுத்த? அப்படியே கேபிள் டிவிக்கு கொடுத்துட்டு வந்திடுங்க. ஆவின் முந்தாநாள் போனீங்களா, இல்லியா?’ போனேன், என் அன்பே. காப்பி எங்கே? ‘காபிப் பொடி வாங்கிட்டு வராம உசிரை வாங்கறீங்களே. டீதான் இன்னிக்கு’.
‘உங்களைத்தானே. ஸ்வப்னாவுக்கு விசா வாங்க தூதரக வாசல்லே போய் நிக்கணும். ஆமா, ராத்திரியே போய் நின்னாத்தான் காலையிலே உள்ளே நுழைய டோக்கன் கிடைக்கும். ஸ்கூல் அட்மிஷன் மாதிரித்தான். அப்ப முடிஞ்சது. இப்ப வயசாயிடுத்தா. இந்த சாக்கு போக்கெல்லாம் வேணாம். புறப்படுங்க. குட் நைட்’.
‘தை மாசத்துலே சந்தோஷ் கல்யாணம். பெங்காலி பொண்ணு, லவ் மேரேஜ்னா என்ன? மண்டபம், விருந்து, ரிசப்ஷன், கச்சேரின்னு அதது குறைவில்லாமே நடக்க வேணாமா? இப்பவே போய் ஏற்பாடு பண்ணலேன்னா மார்கழி முடிஞ்சு அல்லாடணும். போய்ட்டு வாங்க. கல்யாணப் பத்திரிகை டிசைனை என்கிட்டே காட்டிட்டு அச்சடிக்கக் கொடுங்க. இல்லேன்னா தத்துப் பித்துன்னு வந்துடும்’.
‘ஹலோ, சந்தோஷ் எடின்பரோவிலேருந்து ஃபோன் பண்ணினான். எல்லாம் நல்ல செய்திதான். மருமகள் முழுகாம இருக்காளாம். அவ அம்மா வரமுடியலியாம். என்னை வரமுடியுமான்னு கேக்கறான். விசா வாங்க ஏற்பாடு பண்ணுங்க. நீங்களும் வரப் போறீங்களா? என்னத்துக்கு வீண் செலவு? ஆபீஸ்லே ஆடீட் அப்படீன்னு சொன்னீங்களே. ரிடையர் ஆகற வரைக்கும் உத்தியோகமும் பார்க்கணுமே.’
எடின்பரோவில் தினசரி பேப்பர் கிடைக்குமா? சந்தோஷ் அதை வரி விளம்பரம் ஒன்று விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்து விசிறியபடி குறுக்கும் நெடுக்குமாக நடக்க பிரசவ ஆஸ்பத்திரி வாசல் விசாலமாக இருக்குமா?
‘அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது’.