Kungumam column – அற்ப விஷயம் -21
இது கார்ப்பரேட் சிக்கனங்களின் காலம். இதுகாறும் பணத்தைத் தண்ணீர் போல் அல்லது அரபு நாட்டில் பெட்ரோல் போல் கைக்கு வந்தபடி செலவழித்த பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்கள் பைசா சுத்தமாகக் கணக்குப் பார்த்து வெட்டிச் செலவுக்குக் கத்தரிக்கோல் போடுவதில் மும்முரமாகி இருக்கின்றன. உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்போது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள கஞ்சத்தனம் அவசியம் தேவை என்கிறார்கள் கோடி அசுரத் தொழிலதிபர்கள்.
முன்பெல்லாம், அதாவது நாலைந்து மாதம் முந்தி, உள்ளூர் கம்ப்யூட்டர் கம்பெனி எதிலாவது நுழைந்துவிட்டால், நாம் இருப்பது இந்தியாவா இல்லை வெள்ளைக்கார தேசமா என்று பிரமிப்பாக இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும் ஒரு விளக்கு விடாமல் பிரகாசமாக எரியும். துருவப் பிரதேசத்துக்கு அடுத்த நாடு மாதிரி கிட்டத்தட்ட எலும்பு உறைய வைக்கும் குளிரை ஏர் கண்டிஷன் யந்திரங்கள் ஆபீஸ் முழுக்கப் பரத்திக் கொண்டிருக்கும். வெளியே கத்தரி வெய்யில் அடித்தாலும் உள்ளே கம்பளி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு இளைய தலைமுறை ஊழியர்கள் பரபரப்பாக நடமாட, கொஞ்சம் மூத்த நடுவாந்திர வயது தலைமுறை மூக்கு உறிஞ்சி மருந்தும், கோடாலித் தைலமுமாகத் தும்மிக் கொண்டு, டை கட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் திரையை வெறிப்பார்கள். ஐம்பது வயசுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாத புண்ணிய பூமி அது. அங்கே, வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு விடிகாலையில் வந்து இறங்கிய கஸ்டமர்களான துரைமார்கள் கண்ணில் படக்கூடும். இவர்கள் மினரல் வாட்டர் போத்தல்களோடும், கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும், நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டோடும் இலக்கில்லாமல் திரிந்து கொண்டிருப்பார்கள். அன்னார் வந்து இறங்கியதுமே வாசலில் ஐந்து திரி குத்துவிளக்கை ஏற்ற வைத்து, நெற்றியில் சந்தனம் பூசி பூ மாலை போட அழகான பெண்கள் எல்லாக் கம்பெனிகளிலும் இருப்பது வாடிக்கை.
அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஜெர்மனியும் பிரான்சும் கிடுகிடுத்துப் போனதில் தொடங்கியது சனிதசை எல்லோருக்கும். சனி வக்கரித்தது முதலில் அமெரிக்காவில்தான். வங்கி வங்கியாகப் போண்டியாக, திவாலான கம்பெனிகளை அமெரிக்க அரசு தத்தெடுப்பது இன்னும் முடிந்தபாடில்லை. இது முடியும்போது உலகத்தின் பரம ஏழை நாடுகள் பட்டியலில் அமெரிக்கா கட்டாயம் இடம் பிடித்திருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இரண்டு வருடத்தில் அங்கே உணவுக்காக அடிபிடி நடக்கக் கூடும் என்று ஒரு மகான் நல்ல வார்த்தை சொல்லியிருக்கிறதாகப் போனவாரம் படிக்க நேர்ந்தது. இது குருப்பெயர்ச்சி ராசிபலன் இல்லை. எகனாமிக் ஃபோர்காஸ்டிங் என்ற பொருளாதாரக் கண்ணோட்டம். ஆட்டையும் மாட்டையும் கடித்து அமெரிக்காவுக்கு வலங்கை, இடங்கையான சகல நாடுகளையும் பாதிக்கிற இந்த நெருக்கடி நிலையில் உலகம் முழுக்க கம்பெனிகள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. வெளியே போகச் சொல்லாதவர்களுக்கு செலவு கணக்கு எழுத ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் செயலாக்கப்படுகின்றன. துரைகளும் துரைசானிகளும் கீழைநாட்டு கம்ப்யூட்டர் தொழிலாளிகளுக்கு அவ்வப்போது தரிசனம் தர புஷ்பக விமானம் ஏற முதல் தடை. இங்கேயிருந்து தொண்டர்கள் சேவகம் செய்ய அங்கே வரவேண்டாம் எனவும் உடனடி உத்தரவு.
வெள்ளைக்காரன் வராவிட்டால் இங்கே நம்ம ஆளுகள் மட்டும்தானே? இவங்களுக்கு எதுக்கு ராஜபோகம் எல்லாம்? அடுத்த கம்பெனியில் இலவசமாக தினந்தோறும் கணக்கு வழக்கின்றி குளிர்பானமும், ஐஸ்கிரீமும் வேலை பார்க்கிறவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று ஊழியர் கூட்டத்தில் யாராவது சொன்னால், இந்தக் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுத் துறை, அதான், எத்தனை தலை என்று எண்ணி மேய்ப்பவர்கள் வேலை போகும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு இங்கே முதலில் அதெல்லாம் வழங்காத திறமையின்மைக்கான தண்டனை. நாலு மாசத்துக்கு முற்பட்ட பொற்காலத்தில் நடந்தது அது. இப்போது மனித வளத்துறையினர் எல்லாக் கம்பெனிகளிலும் ராப்பகலாகப் பட்டியல் தயாரிப்பது யார்யாரை அடுத்து வெளியே அனுப்புவது என்று. இது தயாரித்து முடித்ததும், அந்த மேய்ப்பர்களின் சீட்டும் கிழியும். ஐஸ்கிரீம்? அட போங்க, கழிவறையில் துடைத்துப் போட காகிதம் வைக்கிறதில் கூட கோடிக் கணக்கில் பணம் புரளும் நிறுவனங்கள் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்கின்றன. பேப்பர் எதுக்கய்யா? குழாயில் காற்றும் தண்ணியும் வர்றது இல்லே? போதாதா?
இலவசமாக நாலு வேளையும் போஷாக்கான ஆகாரம், பானம், மாதாமாதம் கம்பெனி செலவில் விருந்து, ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஓசி சினிமா, எல்லோருடைய பிறந்த நாளளயும் கேக் வெட்டிக் கொண்டாடுவது இப்படி சலுகைகள். இதோடு கை நிறையச் சம்பளம், கூடவே தினசரி பன்னிரெண்டு மணி நேரம் வேலை என்று இருந்தவர்கள் இப்போது ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் அனுபவிக்கிறார்கள். வேலை நேரம் அதிகமாக, லிஸ்டில் கண்ட மற்ற ஐட்டங்கள் அம்பேல். வேலையும் சம்பளமுமே போதும் என்று இருந்தவர்களை இந்த சிக்கன நடவடிக்கைகள் அதிகம் பாதிக்காவிட்டாலும், தினசரி வீட்டுக்குப் போகும்போது இவர்கள் கேட்காத கேள்வி ஒன்று உண்டு. நாளைக்கு ஆபீஸ் உண்டா – எனக்கு?