அன்பு மனுஷ்
இது communication gap காரணமாக நிகழ்ந்த ஒன்று
சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவரைப் பற்றி இரண்டு வாரம் முன்பு தான் வாசகசாலை கூட்டத்தில் விரிவாகப் பேசியதால் இங்கும் அதே உரையை நிகழ்த்த விரும்பவில்லை. சுஜாதா பற்றிப் பேசப் போவதில்லை என்று தொடக்கத்திலேயே அறிவித்தது அதனால் தான்.
பரிசு பெற்ற என் நண்பர்கள் சி.எஸ்,கே, ஷான் இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லித்தான் தொடங்கினேன். மனதில் இருந்து வரும் வாழ்த்து பத்து வினாடி நிகழும்போது இயல்பாகவும், முனைந்து பத்து நிமிடம் நீட்டப்படும்போது செயற்கை தொனிக்கவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?
ஒரு நாவலையோ, சிறுகதையையோ, கவிதையையோ பற்றிப் புரிந்து கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் முறையில் வலைப்பூக்கள் பற்றிப் பேசிப் போவது கடினம். அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம், இந்த எல்லைக்கல்லுக்கு இணையமும், தமிழும் வந்துள்ளது குறித்த பார்வை, இனி எங்கே போக வாய்ப்பு உண்டு என்ற நோக்கு இவற்றைச் சுட்டிக் காட்டி, சிலர் சொல்வது போல் வலைப்பூ இறந்தொழியப் போவதில்லை, அதற்கு எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை பரிசு பெற்ற நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அளித்து விடைபெற்றேன்.
சி.எஸ்.கே, ஷான் இருவரும் வலைப்பூ தவிரவுமான இதர வெளிப்பாட்டு வடிவங்களிலும் தொடர்ந்து பெருவெற்றி பெற வாழ்த்துகள். As usual, my greets and best wishes to you.
————————————————–
Abdul Hameed Sheik Mohamed – ஃபேஸ்புக்கில் எழுதியது
கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?
……………………
நேற்றைய சுஜாதா விருதுகள் பரிசளிப்பு விழா என்றும் நினைவில் நிற்கும் இனிய தருணம். சுஜாதாவின் மீது பேரன்பு கொண்ட அவரது வாசகர்கள், விருது பெற்றவர்களின் தோழர்கள், உயிர்மையோடு என்றும் உடன் நிற்கும் நண்பர்கள் என அன்பின் பெருவெள்ளம் அரங்கு நிறைந்து கவிக்கோ மன்றத்தின் படிக்கட்டுகள்வரை நீண்டிருந்தது. வார நடுவில் நடக்கும் ஒரு கூட்ட்த்திற்கு எத்தனைபேர் வருவார்கள் என்று எனக்கு தடுமாற்றம் இருந்தது. பல்வேறு நெருக்கடிகளால் வழக்கமாக உயிர்மை வாசகர்களுக்கு அனுப்பும் அழைப்பிதழ்கூட அனுப்ப முடியவில்லை. ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்று இவ்வளவு பேர் வந்து கூடி நின்று இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கித்தந்த அனைவர் மீதும் நன்றியை விடவும் மேலான உணர்ச்சி ஒன்று எங்களை ஆட்கொண்டிருந்த்து.
பேசிய ஆளுமைகள் அனைவரும் சுஜாதாவையும் விருது பெற்றவர்களையும் உணர்வுபூர்வமாக கொண்டாடினார்கள். வாழ்த்தினார்கள். அந்த உணர்வில் பார்வையாளர்கள் முழுமையான பங்கேற்றார்கள். கரகோஷங்கள், விசில்கள், ஆராவாரங்கள் என முழு நிகழ்வும் விழாக்கோலம் கொண்டிருந்தது. சுஜாதா வாழ்நாளெல்லாம் சிறந்த எழுத்துக்களை இனம் கண்டு அடையாளப்படுத்தினார். நேற்றைய நிகழ்வும் அதையே செய்தது
இந்த விருது தொடர்பான சர்ச்சைகள் திட்டமிட்டு உருவாக்கபட்டவை என்பது எனக்குத் தெரியும். அதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதும் தெரியும். பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு சர்ச்சையை இப்போது மேலே கொண்டுவந்து அதை இந்த விருது சர்ச்சையோடு இணைத்து சேற்றை வாரி இறைத்தார்கள். நான் தமிழ் நாடு முழுக்க செல்லும் கவிதைப்பயிலரங்குகளில் சுகிர்தராணி, மாலதி மைத்ரி முதலானோரின் கவிதைகளை நான் சொல்லாத அரங்குகள் இல்லை. இருந்தும் என்னை பெண் வெறுப்பாளன் என்று முத்திரை குத்த முயன்றார்கள். என்னுடைய கவிதைகளும் இலக்கிய செயல்பாடுகளும் உயிர்மையின் செயல்பாடுகளும் நாங்கள் பெண்களின் உலகின் பால் கொண்ட நேயம் என்னவென்பதை அறியும்.
அடுத்ததாக ஒரு நபரை பொறுக்கி என்று நான் சொன்னதை பிடித்துக்கொண்டு தொங்கினார்கள். அந்த நபர் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு அருவருக்கதக்க வகையில் என்மீது கீழ்த்தரமான தாக்குதலை நடத்திவந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதெல்லாம் ஒருவர்கூட நீ ஏன் இதை செய்கிறாய் என்று அவரை கேட்ட்தில்லை. பொறுக்கிதனத்தை சகித்துக்கொள்பவர்களால் பொறுக்கி என்ற வார்த்தையை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் வினோதம். ஒருவர்மீது செய்கிற வன்முறை அல்லது அவதூறையும் விமர்சனம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது அதையும் கருத்து ரீதியாக நாகரிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ என்ன அவசியம் என்று புரியவில்லை.
சவால்விட்டவர்கள், நேரில் வந்து தீக்குளிப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் நேற்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்குத்தர தனியாக டீயும் வடையும் கடைசிவரை எடுத்துவைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். முகநூல் குட்டிசுவரில் சொறிந்துகொள்வது போல நேருக்கு நேர் வருவது அத்தனை எளிதல்ல. அதற்கு மனவலியும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
நேற்றைய நிகழ்வில் சில குறைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் இருந்தன. உரைநடை விருது பெற்ற அ.ராமசாமி குறித்து பேசுவதாக இருந்த ஜென்ராம், இமையம் இருவருமே கடைசி நிமிட்த்தில் வர முடியாமல் போயிற்று. ஜென்ராமிற்கு ஊடகவியலாளர்களுக்கே உரிய நெருக்கடி. இமையத்தின் மகனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு அவரை வரவிடாமல் செய்துவிட்ட்து. ஆனால் அ.ராமசாகி அவர்களுக்கு அதைப்பற்றி எந்தப் புகாரும் இல்லை.
தலைமை ஏற்பதாக இருந்த பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. இரா. முருகன் இணையப்பிரிவில் தேர்வுக்குழுவில் இருந்தார். அப்பிரிவில் தேர்ந்தெடுக்கபட்ட இருவர் குறித்தும் அவர் பேசியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அவர் கணிணி தொழில் நுட்பம் குறித்த ஒரு பொதுவான் உரையை நிகழ்த்தினார். நம் இளம் படைப்பாளிளைப் பற்றி நாமே சொல்லாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? அதற்காகத்தானே அந்த அரங்கம்? நண்பர் இரா. முருகன் என் கருத்தை சிந்திப்பார் என்று நம்புகிறேன்
சுஜாதா விருதுகள் அறிவிக்கபட்ட தினத்திலிருந்து உருவாக்கபட்ட சர்ச்சைகளுக்கு தர்க்க ரீதியான பதில்களை தொடர்ந்து எழுதிய சரவண கார்த்தியேனுக்கு என் அன்பு. நான் வன்முறைக்கு ஆளாக்கபடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது நியாயங்களுக்காக நிற்கும் யுவ கிருஷ்ணா, விநாயக முருகன், பிரபுகாளிதாஸ் உள்ளிட்ட நண்பர்களை நான் மிகுந்த நன்றியுடன் இந்த சந்தர்ப்பத்தில் நினைக்கிறேன்
ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். எங்களை அன்பினால் வெல்லலாம். அவதுறுகளால் வெறுப்பினால் ஒருபோதும் வெல்ல முடியாது.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
– மனுஷ்ய புத்திரன்