New: தீரர் இருந்த வீடு, இலக்கியம் வாழ்ந்த வீடு

New: தீரர் இருந்த வீடு, இலக்கியம் வாழ்ந்த வீடு

வாழ்ந்திருந்ததற்கான எல்லா அடையாளமும் சிதைக்கப்பட்டு, அங்கங்கே குட்டிச் சுவர்களாக, சூனிய வெளியில் திறக்கும் வாசலாக, பிடுங்கி எடுத்து இரும்புக் கிராதியில் சாத்தி வைத்த மரக் கதவாக, இன்னொரு வீடு இறந்து கொண்டிருக்கிறது.

தி.நகர் தணிகாசலம் வீதியில் இந்திப் பிரச்சார சபைக்கு எதிர்வசத்தில் நிமிர்ந்து கம்பீரமாக நின்ற வீடு அது. சற்றுமுன், இன்று காலை 7:00 மணிக்கு எடுத்த நிழற்படம் இது.

வாசலில் இன்னும் வீட்டுக்கு உரிமையாளராக இருந்தவரின் பெயர் பொறித்திருக்கிறது. திரு. எஸ். சத்தியமூர்த்தி.

ஆம், சுதந்திரப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசியல் குருவும், நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களோடு இந்திய விடுதலைப் போராட்ட அரங்கில் மகத்தான ஆளுமையாக வலம் வந்தவருமான தீரர் சத்தியமூர்த்தி வசித்த வீடு தான் இது.

அவருடைய புதல்வி திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ’வாசகர் வட்டம்’ நூல் வெளியீட்டு நிறுவனம் இங்கே இருந்து தான் இயங்கி வந்தது. தற்காலத் தமிழிலக்கியத்தின் மகத்தான படைப்புகளான கி.ராஜநாராயணின் ‘கோபல்ல கிராமம்’, நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ போன்ற நூல்கள் இங்கே தான் நேர்த்தியாக முதல் பிரசுரம் கண்டன. , சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும் காவிரியின் அடியொற்றி நடந்து ஐம்புலன்களில் காவிரிதீரத்தை அனுபவித்து, ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயத்தோடு எழுதிய பயண நூலான ‘நடந்தாய் வாழி காவேரி’ வாசகர் வட்ட வெளியீடாக இங்கிருந்து தான் வெளியானது.

தீரர் சத்தியமூர்த்தியும், வாசகர் வட்டமும், லட்சுமி கிருஷ்ணமூர்த்தியும் அவர்களுடைய விடுதலைப் போராட்ட, இலக்கியப் பங்களிப்பு மூலம் என்றும் நினைவு கூரப் படுவார்கள். இன்னும் ஒரு நாளோ, ஒரு வாரமோ இந்த வாசலும் வெட்டவெளியில் நின்றிருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன