New: இரா.முருகன் குறுநாவல்கள் – மதிப்புரை


இரா.முருகன் குறுநாவல்கள் நூலுக்கு நண்பர் சுரேஷ் கண்ணன் எழுதி, உயிர்மை மே 2017 இதழில் பிரசுரமாகியுள்ள மதிப்புரை.

நன்றி சுரேஷ் கண்ணன், உயிர்மை

இரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி

– சுரேஷ் கண்ணன்

மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியான இலக்கிய வடிவங்களுள் ஒன்று குறுநாவல். வெகுசன இதழ்களின் உபகாரத்தில் சிறுகதை என்பது மெல்ல மெல்ல சுருங்கி ஸ்டாம்ப் அளவிற்கு மாறி விட்ட அவல சூழலில் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களின் தயவால்தான் அந்த வடிவம் இன்னமும் சற்றாவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. நாவலின் வளர்ச்சி இதற்கு நேர் மாறானது. தலையணை அளவிற்கு எழுதினால்தான் அது நாவல் என்று தொன்னூறுகளில் எவரோ அவசர சட்டத் திருத்தம் கொண்டு வந்தது போல கனமான புத்தகங்கள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாவலின் நூறு பக்கங்களை புரட்டி வாசித்து முடிப்பதற்குள் அந்த ஆசிரியரின் அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதாக திகைப்பூட்டும் தகவல் வந்து சேருகிறது.

வாசிப்பவர்களை விட எழுதுபவர்கள் பெருகி விட்டார்கள் என்று நகைச்சுவையாக ஒரு காலத்தில் சொல்லப்பட்டவையெல்லாம் உண்மையாகிக் கொண்டு வருகிறது. எவை இலக்கியம், எவை அது அல்லாதது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எவருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. கவிதை நூல்களுக்கு மட்டும் என்றும் அழிவில்லை. விற்பனையாவதில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்தாலும் கூட தமிழகத்தில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு கவிதையும் பத்து மணி நேரத்திற்கு ஒரு கவிதை நூலும் பிறப்பதாக ஓர் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில் குறுநாவல் என்கிற வடிவம் யாராலும் போஷிக்கப்படாமல் அநாதையாக நின்று கொண்டிருக்கிறது. வளவளவென்று நீண்டு விட்ட சிறுகதையையும் குறைப்பிரசவமாக முடிந்து விட்ட நாவலையும் குறுநாவல் என்று நம்பிக் கொண்டிருந்த கெட்ட வழக்கமும் நம்மிடம் இருந்தது. அது அவ்வாறல்ல. குறுநாவலுக்கென்று ஒரு பிரத்யேகமான வடிவமும் துல்லியமான வரையறையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெக்கமரான் கதைகள் இந்த வகைமைக்கான முன்னோடி. ‘குறுநாவல் தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய வடிவம்’ என்று தனது குறுநாவல்கள் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார் ஜெயமோகன்.

தமிழிலும் பல உன்னதமான குறுநாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அசோகமித்திரனின் ‘இன்ஸ்பெக்டர் செண்பகராமன்’. தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களுள் ஒன்று. தி.ஜா.வின் நினைவாக,கணையாழி இதழ் ஆண்டு தோறும் குறுநாவல்களுக்கென ஒரு போட்டி நடத்தியது. இன்றைக்கு முன்னணி எழுத்தாளர்களாக விளங்கும் பலர் தங்களின் துவக்க கால கணக்குகளை இதில்தான் துவங்கினார்கள். குறுநாவல்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தை உருவாக்கித் தந்தது கணையாழி.

***

எழுபதுகளில் எழுதத் துவங்கியவர் இரா.முருகன். துவக்க கால எழுத்தில் இருந்த தேசலான வாசனை காரணமாக சுஜாதாவின் நீட்சி என்று பரவலாக மதிப்பிடப்பட்டார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, கமல், கணினிவியல், சினிமா வசனம் என்று இருவரின் கலைப்பாதையில் உள்ள தற்செயல் ஒற்றுமைகள் காரணமாக அப்படி கருதப்பட்டாலும் சட்டென்று வேறு திசையில் திரும்பியது இரா.முருகனின் எழுத்து.

இரா.முருகன் இதுவரை எழுதிய குறுநாவல்கள் அனைத்தும் ஒரு தொகுப்பாக கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. ஏழு படைப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றின் துவக்கத்திலும் நூல் ஆசிரியரின் முன்குறிப்புகள் உள்ளன. எந்த ஆண்டில், இதழில், எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பது போன்ற அத்தியாவசியமான குறிப்புகள். ஏழு படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியிலான வாசிப்பனுபவத்தை தருகின்றன. திண்ணை இதழில் வெளியான ‘வாயு’, அவல நகைச்சுவையில் அமைந்த, தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களில் ஒன்று. இந்தத் தொகுப்பில் அது சேர்க்கப்படாத காரணத்தை முருகன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் தற்காலிகமாவாவது ‘கறாரான இலக்கியவாதி’யாக’ இருந்து அதை பிடிவாதமாக இந்த தொகுப்பில் இணைத்திருக்கலாம். தனிப்பட்ட அளவில் எனக்கு மிகவும் பிடித்த குறுநாவல் அது.

லத்தீன் அமெரிக்க இலக்கிய வகைமையான மாய யதார்த்த பாணி என்பது தமிழிற்கு இன்னமும் கூட பிடிபடாத நிலையில் அதன் துவக்க காலத்திலேயே சில பரிசோதனைகளை முயன்று பார்த்த முன்னோடிகளுள் ஒருவர் இரா.முருகன். வாசகனுக்கு புரிந்து விடவே கூடாது என்று திட்டமிடப்பட்டு செய்த சதி போல இந்த முயற்சிகளுள் சில பல போலிகளும் உற்சாக வீழ்ச்சிகளும் கலந்திருந்த சூழலில் அந்நிய பின்புலத்தை அப்படியே அபத்தமாக நகலெடுக்காமல் தமிழ் மரபுடன் இணைத்து அந்த வகையை முயன்று பார்த்த வகையில் இரா.முருகனின் எழுத்து தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது எனலாம். இன்னொன்று முருகனின் மொழியில் இருக்கும் வசீகரம். கடப்பாரையை முழுங்கும் சிரமம் ஏதுமில்லாமல் மிக இயல்பாக வழிந்தோடும் சுவாரசியம் காரணமாக ஏறத்தாழ ஒரே மூச்சில் படித்து விடலாம்.

கலைடாஸ் கோப் வழியாக காணும் மாயக்காட்சிகள் போல முருகனின் உரைநடை கண்ணெதிரேயே சட்சட்டென்று மாறுகின்றன. ஆனால் இந்த பாணி வாசகனை ஈர்க்கும் வெற்று சுவாரசியமாக சுருங்கி விடாமல் இலக்கியமாகவும் உருமாறுவதே முருகனின் வெற்றி. ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இரண்டாம் பக்கத்தில் சித்தரிக்கப்படும் ஒரு காட்சியின் கீற்று, ஐந்து பக்கங்கள் தாண்டி வேறொரு கண்ணியில் இணைக்கப்படுவதில் முருகனின் எழுத்து திறனையும் திட்டமிடலின் பிரக்ஞையையும் பிரமிக்க முடிகிறது.

***

முதல் குறுநாவலான ‘விஷம்’ 1991-ல் எழுதப்பட்டது. கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானது. முதல் குறுநாவல் என்பதால் போகிற போக்கில் எழுதியதாக முருகன் தெரிவித்தாலும் அந்த அலட்சியம் மிக கவனமாகவும் திறமையாகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தன் காதலி பற்றிய சுவாரசியமான கனவுடனும் மூத்திரம் முட்டும் அவஸ்தையுடனும் உறங்கிக் கொண்டிருக்கும் கதைசொல்லியை கலைத்து எழுப்புகிறது வாசலில் ஒலிக்கும் அழைப்பு மணி. சக பணியாளனான போத்தி விஷம் குடித்திருக்கிறான். அவசர உதவி தேவை. அரும்பும் மீசையுடன் போத்தியின் மகன் வாசலில் நின்று கொண்டிருக்கிறான். இப்படி துவங்கும் இந்தக் குறுநாவல் சுவாரசியமான விவரணைகளைத் தாண்டி சில பக்கங்கள் தாண்டி சட்டென்று ஓர் எதிர்பாராத தருணத்தில் போத்தியின் கதையாக மாறுகிறது. பிறகு அங்கிருந்து தாவி சேகரனின் கதைக்கு. பிறகு இந்த வட்டம் முடிந்து போத்தி அருந்தியது விஷமும் இல்லை மண்ணுமில்லை என்கிற அவல நகைச்சுவையுடன் முடிகிறது.

இது போன்ற நான்-லீனியர் கதை கூறல் இன்னமும் கூட நமக்குப் பழக்கமாகவில்லை. உலக சினிமாக்கள் மெல்ல பரிச்சயமாகிக் கொண்டிருக்கும் சமகாலத்தில்தான் திரையில்தான் இந்த பாணி சற்றாவது பிடிபடுகிறது. ஆனால் தொன்னூறுகளின் எழுத்திலேயே இதை பிரமாதமாக முயன்ற காரணத்திற்காக முருகனை வியக்கலாம்.

அடுத்த குறுநாவலான ‘மனை’ மலையாள தேசத்தில் உலவுகிறது. ‘புதிய பார்வை’ குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. சமூக படிநிலையின் உச்சத்தில் இருந்த நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை பற்றி கடந்த நூற்றாண்டின் பின்னணியில் சித்தரிக்கிறது. ஒரு நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் மட்டும் திருமணம் செய்யலாம். முதல் மனைவி அலுக்கத் துவங்குவதற்கு முன்பே இன்னொரு இளம் பெண்ணைத் தேடி கூடுதல் திருமணங்கள் செய்யலாம். இளையவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. சொத்துரிமை பாதுகாப்பிற்கான ஏற்பாடு அது. இளைய நம்பூதிரிகள் எத்தனை நாயர் சமூகப் பெண்களுடன் கூடிக் கொள்ளலாம். கேள்வி கேட்பாரில்லை. நாயர்களுக்கும் இப்படியொரு சம்பந்தம் கிடைப்பது பெருமையே. பிராமணர்கள் எதிரே வந்தால் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை விலக்கிக் கொண்டு நிற்க வேண்டியிருந்த அவலமான காலக்கட்டம்.

இந்த பிற்போக்கு சூழலில் இருந்து தப்பிப் பிறந்தவன் சீதரன். நம்பூதிரி குலத்தின் வழக்கத்திலேயே இல்லாதபடி இளையவனாக இருந்தாலும் தன் ஒரே காதல் துணையை கண்டடைந்து மணம் புரிந்தவன். அவனுடைய துணைவியான பகவதியும் இவனைப் போலவே முற்போக்காக சிந்திப்பவள். மூத்த நம்பூதிரியின் எச்சில் இலையில் முதலில் சாப்பிட்டு தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள அடித்துக் கொள்ளும் மனைவிகளின் போராட்டத்தைக் கண்டு மனம் கூசுபவள். யட்சியுடன் அந்தரங்கமாக உரையாடுபவள். மற்றொரு இளைய நம்பூதிரியான நீலகண்டனின் காம விளையாட்டால் கைவிடப்பட்டு அபலையாக வீட்டு வாசலில் வந்து நிற்கும் கார்த்தியாயினிக்கும் அவளது சின்னஞ்சிறிய மகளுக்கும் எதிர்ப்பையும் மீறி ஆதரவளிக்கிறாள். மூத்த நம்பூதிரி ஆத்திரத்தில் எகிறிக் குதிக்கிறார். பகவதியின் புரட்சிக்கு சீதரனும் ஆதரவாக துணை நிற்க, கார்த்தியாயினியின் பிணத்திற்கு அவனே எரியூட்டுகிறான். அவளது மகளுடன் இவர்கள் ஊரைவிட்டு கிளம்பும் காட்சியுடன் இந்தக் குறும் புதினம் நிறைகிறது.

முருகனின் துல்லியமான விவரணைகளால் கடந்த கால சமூகம் நம் கண் முன் அசலாக வந்து நிற்கிறது. உரத்த குரலில் அல்லாமல் ஆண்களின் மேலாதிக்க சமூக இழிவுகளும் சாதியக் கட்டுமான அட்டூழியங்களும் இயல்பாக ஆனால் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. நூற்றாண்டு கழிந்தாலும் இன்னமும் கூட பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தாத்ரிக் குட்டியின் மீதான ஸ்மார்த்த விசாரம் பற்றிய குறிப்பு இந்தக் குறுநாவலின் இடையில் வருகிறது. கேரளப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கான குறியீட்டுடன் இந்தப் படைப்பு நிறைவது சிறப்பு.

***

மூன்றாவது படைப்பான ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப்படம்’, இந்த தொகுப்பின் சிறந்த அடையாளம் எனலாம். இந்தக் குறுநாவலின் மூலம், மாய யதார்த்த கதையாடல் நோக்கி தன்னுடைய முதலடி அமைந்ததாக முருகனின் குறிப்பு சொல்கிறது. திருமணம் கைகூடாத ஒரு பேரிளம் பெண்ணின் பெருமூச்சுகளும் தகிப்புகளும் பாலியல் விழைவுகளும் அது சார்ந்த கற்பனைகளும் இந்தப் புதினத்தின் வரிகள் முழுவதிலும் பொங்கி வழிகின்றன. சட்சட்டென மாறும் காட்சிகள். முன்னும் பின்னுமாக நகரும் காலம். புகைப்படத்திலிருந்து உரையாடும் பெற்றோர். முத்தம்மா டீச்சரின் உடமையைக் கைப்பற்ற ஆவேசமாக செயல்படும் தம்பியும் அவனது மனைவியும். உரிமையாக கைபோடும் மாப்பிள்ளையும் கதிரேசன் சாரும்.

முந்தைய புதினத்தில் திருமணம் ஆகாமல் தனிமையறையில் தன் உடல் சார்ந்த கொதிப்புகளை காலம் பூராவும் அடக்கிக் கொண்டு கனவுகளில் அதை நிறைவேற்றிக் கொண்டு வாழ வேண்டியிருந்த நம்பூதிரிப் பெண்களின் துயரம் ஏறத்தாழ முத்தம்மா டீச்சரின் மீதும் அப்படியே படிந்திருக்கிறது. சமூகத்தின் நிறைவேறாத காமத்தின் வடிகாலாக சினிமாக் காட்சிகளும் பாடல்களும் எவ்வாறு விளங்குகின்றன என்பது தொடர்பான விவரணைகள் இதில் நிறைந்திருக்கின்றன. மூத்த பிராயத்திலும் டூயட்களை கைவிடாத தமிழ் சினிமா நாயகர்கள் நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறார்கள். அபாரமான குறுநாவல்.

நான்காவது குறும்புதினம் – ‘பகல் பத்து ராப்பத்து’ – தனித்தனியாக நிகழும் வெவ்வேறு துணைக் கதைகள் மாறி மாறி பயணிக்கும் நான்-லீனியர் கதையாடல் முறை. ஒரு நல்ல குறும்படமாக இது ஆகக்கூடும் என்கிற எண்ணத்தை உற்பத்தி செய்கிறது. வைணவ சமூகத்தில் பெருமாளைக் கொண்டாட பத்து நாட்கள் நிகழும் உற்சவமான ‘பகல் பத்து ராப்பத்து’ நிகழ்வை தலைப்பு நினைவுப்படுத்தினாலும் மும்பையின் நவீன பின்னணியில் காலை பத்து முதல் இரவு பத்து வரும் நிகழ்ச்சிகளின் கோர்வை இது.

புளியோதரை அஜீர்ணத்தோடும் கோயில் கும்பாபிஷேக கலெக்ஷன் கவலையோடு மும்பையின் லோக்கல் டிரெயின் கூட்ட இம்சையில் பயணிக்கும் ராம்பத்ரன் அய்யங்கார். சாலையோரத்தில் கோலக் குழல் விற்கும் சாந்தாபாய். கூடியிருக்கும் காமாந்தகாரர்களின் பார்வையிலிருந்து தன் கற்பையும், உடல் ஊனமுற்று வீட்டில் முடங்கியிருக்கும் கணவனையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். மும்பையில் ஒரு பிளாட்டை வாங்குவதற்காக சோரம் போகவும் தயக்கத்துடன் தயாராக இருக்கும் மாடலிங் பெண் ப்ரீதி. இந்த மூன்று நபர்களின் ஒருதின வாழ்வில் நிகழும் சம்பவங்கள், வெவ்வேறு கவலைகள்.

அவல நகைச்சுவையுடன் நிறையும் ப்ரீதியின் பகுதி. கணவனின் துரோகத்துடன் முடியும் சாந்தாபாயின் பகுதி. நடுத்தர வாழ்வின் சலிப்புடன் நிறையும் ராமபத்ரனின் பகுதி. ஆர்வமும் கலையுணர்வும் உள்ள எந்த குறும்பட இளைஞனாவது இதை டிஜிட்டல் வடிவமாக சாத்தியப்படுத்தலாம்.

***

‘ராத்திரி வண்டி’ – கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்வானது. காலம் ஒரு தூலமான பரிணாமாகக் கதையில் முன்னும் பின்னும் சதா இயங்கிக் கொண்டே இருக்கும் இந்த எழுத்து நடைதான் பின்னர் நிகழ்ந்த அரசூர் வம்சத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்கிறார் முருகன். நகுலனால் பாராட்டப்பட்ட படைப்பு. ரயிலை தவறுதலாகவோ திட்டமிட்டோ அலட்சியமாகவோ தவற விட்டு இறங்கி விடும் ஓவியன். இளைஞன். நிர்வாணமான உடல்களை வரைவதில் ஆர்வமுள்ளவன். ‘ச்சீ என்ன கருமம்’ என்று இகழும் சுற்றியுள்ள கூட்டம் அதே சமயம் ரகசியமான கண்களால் ஓவியத்தை தடவுவும் தவறுவதில்லை. தன் சகோதரனின் ஜாடையில் இருப்பதால் இவனை அழைத்து வந்து உபசரிக்கும் ஸ்டேஷன் மாஸ்டர். இருவரின் நினைவுகளின் மூலமாக இந்தப் புதினம் மாறி மாறிப் பயணிக்கிறது. விநோதமான, சுவாரசியமான வாசிப்பவனுத்தை தரும் படைப்பு.

அடுத்தது ‘விஷ்ணுபுரம்’ என்று தலைப்பிடப்பட்டு கணையாழியில் வெளியானது. ஜே.டி.சாலிங்கரின் ‘The Catcher in the Rye’ போல ‘Coming-of-age’ வகைமைப் புதினங்கள் தமிழில் அரிதானது. விடலையில் இருந்து இளைஞர்களின் உலகத்தில் குதிக்கும் அந்த மாற்றம் எப்போது நிகழ்கிறது என்பதை யூகிக்கவே முடியாத அந்த தன்மையின் வசீகரப் பின்னணியில் தமிழில் வெளியாகியிருப்பவை எவை என்று யோசித்துப் பார்த்தால் அசோகமித்திரனின் ’18வது அட்சக்கோடு’ சுஜாதாவின் ‘நிலா நிழல்’ போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன. இதே கணையாழி குறுநாவல் வரிசையில் வெளியான, ‘கர்னல் தோட்டக் கணக்கு’. இந்த வகைமையில் எழுதப்பட்ட மிகச் சிறந்த குறுநாவல் எனலாம். நமது பள்ளிக்கூட காலத்தின், விடலை மனங்களின் அறியாமைகளை, குறும்புகளை மிக அழுத்தமான நினைவுகூர வைக்கும் படைப்பு.

இதே வகைமையில் இரா.முருகன் முயன்ற குறும்புதினம்தான் ‘விஷ்ணுபுரம் தேர்தல்’. ஏதோவொரு கடந்த காலத்தில் சிற்றூர் ஒன்றில் நிகழும் உள்ளூர் தேர்தல். அந்த ஊரின் விடலைகளின் பார்வையில், சம்பவங்களின் கோர்வையில் இந்தப் புதினம் நகர்கிறது. இந்தச் சிறுவன்களில் ஒருவன் பலகாலம் கழித்து இதே ஊருக்குத் திரும்பி வருகிறான். அப்போது நிகழும் ஒரு தேர்தல் பற்றி ரிப்போர்ட்டிங் செய்வதற்காக. புறவயமாக நிறைய மாற்றம் நிகழ்ந்தாலும் அகவயமாக காலம் அப்படியொன்றும் மாறி விடவில்லை. தேர்தல் கலாட்டாக்களும் குளறுபடிகளுமாக அப்படியே உறைந்திருக்கிறது.

வெளிநாட்டுத் தூதகரங்களுக்கு கடிதம் எழுதி புரியாத மொழியில் இருந்தாலும் பளபள காகிதத்தில் வண்ணப்புகைப்படங்களுடன் வரும் புத்தகங்களைக் கண்டு குதூகலிக்கும் சிறுவர்களின் குறும்பு துவங்கி பல்வேறு சுவாரசியமானன சம்பவங்கள், விவரணைகள் இந்த நாவலின் வாசிப்பை சுவாரசியப்படுத்துகின்றன.

இந்த தொகுப்பின் இறுதியான படைப்பு ‘தகவல்காரர்’. ‘முத்தம்மா டீச்சர்’ போல இன்னொரு மாய யதார்த்த பாணி படைப்பு. அரசூர் வம்ச முத்தொகுதியின் முன்னோடி விதை. அபாரமாக எழுதப்பட்ட ஒரு கவிதையுடன் துவங்குகிறது. சுருங்கிப் போகும் சமூகங்களுக்காக ஜாதி, இனப் பத்திரிகை நடத்துவதால் ஜீவிக்கும் ஒரு முதியவர். அதுவும் சுருங்கி எழுபது குடும்பங்களின் சாவுச் செய்திகளை பரப்பும் அலுப்பான பணி. வழியில் இடர்ப்படும் ஒரு சாமியாரின் மூலம் அவர் எதிர்கொள்ளும் மாயவிநோத சம்பவங்கள். சாவுக்களையும் அது சார்ந்த தத்துவமும் பரிபூர்ணமாக படிந்த படைப்பு. இதுவே இதற்கு ஒரு பிரத்யேகமான ருசியை அளிக்கிறது.

இரா.முருகனின் இந்த ஏழு குறுநாவல்களும் வெவ்வேறு விதமான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன. இவரது எழுத்திலுள்ள சுவாரசியத்தின் தன்மையால் இந்தப் பரிசோதனை முயற்சிகளில் விதவிதமான அலைச்சல்கள் நிறைந்திருந்தாலும் ஒருகணம் கூட அலுப்பு தட்டுவதில்லை. இளைய தலைமுறை வாசகர்களுக்கு ஓர் உறுதியான, உபயோகமான பரிந்துரையை முன்வைக்க விரும்புகிறேன். முருகனை அவசியம் வாசியுங்கள்.

***

இரா.முருகன் குறுநாவல்கள்
கிழக்கு பதிப்பகம்
300 பக்கங்கள் – விலை ரூ.250/-

sureshkannan2005@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன