“எல்லோரும் போய் உட்காருங்க. இப்போ ஃபைட்டிங் சீன், சண்டைக் காட்சி”. சந்தியாகு சொன்னான்.
அவர்கள் விலகிப் போக, வெறுமையான அரங்கில் நின்று சந்தியாகு பாடினான் : “துப்பாக்கி எடுத்தான் துஷ்டன் கோட்ஸே”.
சந்தியாகு இடப்பக்கம் சாடிக் குதித்துக் குனிந்து நின்று பாடினான்: “தன்னைத் தான் காப்பாற்ற தள்ளி நின்றார் காந்தி மகான்”
பின் வலது பக்கம் அடியெடுத்து வைத்து அவன் பாடினான்: “துப்பாக்கியால் சுட்டான் துஷ்டன் கோட்ஸே”
சந்தியாகு இடது பக்கம் நீளத் தாண்டிக் குதித்துப் பாடினான்: “உயரப் பறந்தார் காந்தி மகான்”.
வலது பக்கம் சாடி, அவன் பாடினான் : “துப்பாக்கிக் குண்டுகள் சுட்டுத் தீர்த்தான் துஷ்டன் கோட்ஸே”.
”அப்போதான் தடியெடுத்தார் காந்தி மகான்”.
“வேண்டாம் வேண்டாமய்யா காந்தி அய்யா என கெஞ்சினான் துஷ்டன் கோட்ஸே”.
“ரெண்டாக அவன் மண்டையை உடைத்தார் காந்தி மகான்”.
“செத்து போனான் துஷ்டன் கோட்ஸே ”.
“ஹே ராம் சொன்னார் காந்தி மகான்”.
கள்ளுக்கடையில் கைதட்டலுக்கு நடுவே, நம்பிக்கை இல்லாத ஒருத்தன் கேட்டான் : நிஜத்துலே செத்தது காந்தி இல்லையோ மேஸ்திரி?”
“அது உன்னோட கதையிலே. காந்தி மகானைக் கொன்னுட்டு என்னை ஒப்பாரிப் பாட்டு பாட வைக்கலாம்னு நினைச்சியா? ஆறாம்புரைக்கல் காரங்க யாரும் இதுவரைக்கும் தோத்துப் போய் ஒப்பாரி வச்சதில்லே. இனி எழவுப் பாட்டு பாடவும் போறதில்லே”