A snippet from the Malayalam novel I’m currently translating
கொட்டாரம் படகுத்துறையை அடைந்தபோது தூண்டில்காரர்களின் வரிசை முடிந்திருந்தது. பந்தம் கொளுத்திப் பிடித்துக்கொண்டு ஒருத்தன் தூரத்தில் வருவதை அவர்கள் பார்த்தார்கள். “நம்ம முதல் குடிமகன்”, என்றான் சந்தியாகு
“அது பென்ஹர்சேட்டன். ரொம்ப கோபக்காரன்”, பிரான்சிஸ் சொன்னான்.
பென்ஹரைத் தடுத்து நிறுத்தி சந்தியாகு சொன்னான்: “நான் காரல்மான் ச்க்கரவர்த்தி. இது துருக்கி சுல்தான் அல்பிராந்த்”.
“மேஸ்திரி, குறுக்கே நின்னு வழி மரிக்காம, விஷயம் என்னன்னு சொல்லு”, பென்ஹர் சொன்னான்.
“நீ யாரு? ரோமானியனா, பிரஞ்சுக்காரனா, இல்லேன்னா துருக்கனா?”
தடுத்து நிறுத்திய சந்தியாகுவின் கையைத் தட்டிவிட்டு, ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பென்ஹர் வேகமாக நடந்தான்.
“பென்ஹர் சொன்னதை கேட்டியா? கள்ளு சாராயத்தை தடை செய்யணுமாம். கள்ளுக்கடை அடைக்கறதுக்கு முன்பு, உசிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு அங்கே ஓடறபோது குடிகாரப் பயலுங்க கள்ளு குடிச்சுட்டு வழி மறிச்சு நிக்கறாங்களாம்”
அவர்கள் மூவரும் தரையில் உட்கார்ந்து புல்தரையைக் கையால் தட்டிச் சிரித்தார்கள். ”நம்ம குடிமக்கள் எல்லோரும் ஒருமாதிரிப் பட்டவங்கதான்” என்றான் சந்தியாகு.
கொட்டாரம் படகுத் துறையில் இருந்து மேற்கு நோக்கி வழி திரும்பும் வரை அவர்கள் எதுவும் பேசவில்லை. திடீரென்று மைக்கேல் சொன்னான், “காரல்மேன் திருமேனி, இந்த அல்பிராந்த் சுல்தான் என் பின்னம்பக்கத்திலே தடவறான் ”.
“அல்பிராந்தே, உனக்கு எப்பவும் இதான் வேலையா?”, சந்தியாகு கேட்டான். “எல்லாம் பண்ணிட்டு ஒரு ஞாயித்துக்கிழமை விடாம மாதாகோவிலுக்குப் போய் பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேப்பே. சாமி, நான் கை ………, சாமி, நான் பையன்களை ….. ஒருக்கா பிலாத்தோஸ் பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கறபோது பொங்கிட்டார் : “என்ன நினச்சுட்டிருக்கே நீ? இது என்ன, வாராவாரம் வந்து லைசன்ஸ் புதுப்பிக்கிற இடமா?”
Litanies of Dutch Battery