A snippet from the Malayalam novel “Lanthan Batheriyile Luthiniyakal” of Shri M.S.Madhavan I’m currently translatig
வேலிக்கு அப்புறம் அவர்கள் மூவரையும் பார்த்து வலிய மத்தேவுஸ் ஆசாரி ஓடி வந்தார். “வரணும், வரணும் சந்தியாகு மேஸ்திரி. பிராஞ்சி, மிக்கூ நீங்களும் வாங்க. உள்ளே வாங்க எல்லோரும்”.
”வலிய மத்தேவுஸ் ஆசாரியாரே, நீங்க நினைக்கற ஆளுங்க இல்லே நாங்க. நான் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி காரல்மான். இந்த இளையவர் ரோமாபுரியிலே டயோக்ளீஷன் சக்கரவர்த்தி”. சந்தியாகு சொன்னான்.
“நான் துருக்கியிலே முஸ்லீம்களோட சுல்தான் அல்பிராந்து. இஜ்ஜ, இபிலீஸ், பத்ரீங்கள்”. பிரான்சிஸ் சொன்னான்.
“மூணு சக்கரவர்த்திகளும் சேர்ந்து எழுந்தருளினதுக்கு நன்றி”, என்றார் வலிய மத்தேவுஸ் ஆசாரி.
“வராம முடியுமா? நாங்க மூணு சக்கரவர்த்திகளும் சேர்ந்து இங்கே வந்தது உங்க கிட்டே துக்கம் கேட்கத்தான்” என்றான் சந்தியாகு.
“துக்கமா? எனக்கென்ன துக்கம்?” மத்தேவுஸ் ஆசாரி கேட்டார்.
“யாருக்கும் விபத்து எதுவும் நடக்கலியா?” சந்தியாகு கேட்டான்.
“என்ன விபத்து, சந்தியாகு மேஸ்திரி?”
“காரல்மான்னு கூப்பிடணும் வலிய ஆசாரி. உங்க வீட்டு மேலெ பெருமழை போல சடசடன்னு எரிநட்சத்திரம் விழறதை நான் பார்த்தேன்”, என்றான் சந்தியாகு.
”அதோ, அந்தத் தென்னை மரத்தோட உச்சியிலே தீப்பிடிச்சுது”, என்றான் பிரான்சிஸ்.
“நாங்க யாரும் பார்க்கலியே”, என்றார் மத்தேவுஸ் ஆசாரி.
“அப்போ இங்கே எதுக்கு கூட்டமா நிக்கறாங்க?” என்று கேட்டான் சந்தியாகு.
”மடில்டாவுக்கு குழந்தை பொறந்திருக்கு. உள்ளே வாங்க. அவல் உருண்டையும்,
சுக்கு காப்பியும் வந்துக்கிட்டிருக்கு, சாப்பிட்டுட்டு, குழந்தையைப் பார்த்துட்டு போகலாம்”, வலிய மத்தேவுஸ் ஆசாரி அழைத்தார்.
”அல்பிராந்தே, நாம வலிய மத்தேவுஸ் ஆசாரியோட குழந்தையைப் போய்ப் பார்க்கலாம்” என்று பிரான்சிஸிடம் சொன்னான் சந்தியாகு.
”வேணாம், காரல்மானே. குழந்தையைப் பார்க்க ராஜாக்கள் வெறும் கையோடு போக முடியுமா?” பிரான்சிஸ் கேட்டான்.
“புனித ரோமானியப் பேரரசில் பிறந்த புதுப் பிரஜைக்குக் கொடுக்க பரிசுகள் என்கிட்டே உண்டு அல்பிராந்தே”. கம்புக்கூட்டில் இடுக்கியிருந்த பையைக் காட்டியபடி சந்தியாகு சொன்னான்.
வலிய மத்தேவுஸ் ஆசாரி அவர்களை உள்ளே கூட்டி வந்தார். நானும் அம்மாவும் படுத்திருந்த அறைக்கு வந்தபோது ஆசாரி உள்ளே பார்த்துச் சொன்னார் : “ஆனியம்மா, கிழக்கே இருந்து படகிலே மூணு சக்கரவர்த்திகள் எழுந்தருளியிருக்காங்க. அவங்களுக்கு சிசுவைக் காட்டுங்க”.
சந்தியாகுவும் கூட வந்தவர்களும் துணி கொண்டு சுற்றப்பட்டிருந்த என்னைப் பார்த்தார்கள். சந்தியாகு கட்கத்தில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு சிறிய கட்டி ஹமாம் சோப்பை எடுத்து பிரான்சிஸுக்குக் கொடுத்தான். ஒரு சிறு குப்பி யூதிகோலனை எடுத்து மைக்கேலுக்குக் கொடுத்தான். தன் கையில் ஒரு சிறு குப்பி தலைக்குப் பூசும் வாசனைத் தைலத்தையும் எடுத்து வைத்துக் கொண்டான். இவை எல்லாமே டாட்டா கம்பெனி சாம்பிளாகத் தரும் பொருட்கள். அவர்கள் மூவரும் ஒருமித்துக் குனிந்து, பரிசுகளை என் தொட்டிலில் வைத்தார்கள். அம்மாவையும் நர்ஸ் ஆனியம்மாவையும் பார்த்துத் தலையசைத்து விட்டு அவர்கள் திரும்பிப் போனார்கள். வாசல்படியில் அவர்கள் நின்றார்கள். என் பக்கம் திரும்பி வந்தார்கள்.
“கேட்க விட்டுப் போச்சு. குழந்தை ஆணா, பெண்ணா?” சந்தியாகு கேட்டான்.
“பெண்”, என்றாள் ஆனியம்மா.