எழுதவும் மிஞ்சும் இந்நாள்

நாள்

தெருவுக்கு இணைகோடாக
முதுகு வளைந்து வீடுதோறும்
ஆவின் வழங்கும் முதுபெண்ணும்

நிறம் கொண்டு முகமெழுதிய
திருஷ்டிப் பூசணியும்
கறிவைக்க அடர்சாம்பல்
படர்ந்த வெறும் காய்களும்
அடுத்தடுத்து அடுக்கிய
நடைபாதைக் கடையில்
விலை குறித்து விசாரமோ
வாங்க வந்தது எதுவென மறந்தோ,
பார்த்து நிற்கும் புது ஸ்கூட்டர்காரரும்

பூங்கா சுற்றி நடை
இடமிருந்து வலமா
வலமிருந்து இடமா
முடிவுக்கு வராத
முன்னாள் நடிகையும்

காலி சவப்பெட்டியோடு
மடடார் வேன் நிறுத்தி
கையில் காகிதம் பார்த்து
டீக்கடையில் விசாரிப்பவனும்

எடுத்துக் கொண்டது போக
எழுதவும் மிஞ்சும் இந்நாள்.
(இரா.முருகன் 23 ஜுன் 2017 வெள்ளிக்கிழமை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன