Snippet from the translation I’m doing currently #Lanthan_Bathery
மறுநாள் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், ஸ்டாலின் ஆகியவர்களின் நீலம் கலந்த பச்சை வர்ணம் அடர்ந்த, ரஷ்யாவில் அச்சடித்த எண்ணெய்ச்சாயப் படங்களை ஷெனாய், எரணாகுளத்தில் இருந்து கொண்டு வந்தார். இந்தப் படங்களில் ஸ்டாலினுடைய படம் எல்லோரையும் பயமுறுத்தத் தொடங்கியது. பெரிய மீசையைப் பார்த்து ஏற்பட்ட பயம் இல்லை அது. உயிர்த்து, உற்று நோக்கும் கண்கள் ஏற்படுத்திய பயம்.
ஸ்டாலினிடமிருந்து தப்பி ஒளிந்து கொள்ள முடியாது. எங்கே போய் நின்று பார்த்தாலும் அந்தக் கண்கள் பின் தொடரும். மலாக்கா ஹௌசின் முதல் மாடித் தாழ்வாரத்தின் வழியே குந்தன் மியூசிக் கிளப்புக்குப் போகிறவர்கள் ஸ்டாலினுடைய பார்வையைத் தவிர்த்து வேகமாகக் கடந்து செல்வார்கள். சிலர் முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் அவர்களுடைய பின்கழுத்தை ஸ்டாலின் பொசுக்கினார்.
ஜனநாயக இளைஞர் சங்கக் கூட்டங்களில் யாரும் சத்தம் உயர்த்திப் பேசுவதில்லை. ஸ்டாலின் லந்தன்பத்தேரி மேல் ஒரு கண் வைத்திருந்தார்.