பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய ரேடியோவைக் கொண்டு வந்த தினத்தில், மலாக்கா ஹவுஸின் மேல் கூரையில் இரண்டு மூங்கில் கழிகள் நிறுத்தப்பட்டன. அவற்றில், வலைவலையாக இருந்த பிரகாசமான செம்பு ஏரியலை பவுலோஸும் அவனுடைய ஆட்களும் இழுத்து நீட்டிக் கட்டினார்கள். தரையில் குழி தோண்டி மரத்தை எரித்த கரி நிரப்பி, எர்த் அமைக்கப்பட்டது. காகிதத் தோரணங்கள் கட்டிய பவுலோஸின் சாயாக்கடையிலும், மலாக்கா ஹவுஸின் நீண்ட வராந்தாவிலும் விருந்தாளிகள் ரேடியோ பாடுவதற்காகக் காத்திருந்தார்கள். அப்பனுடைய கையைப் பிடித்துக் கொண்டு நானும் அங்கே நின்றிருந்தேன்.
பிலாத்தோஸ் பாதிரியார் வந்ததும் ரேடியோவை ஆசீர்வதித்தார்: “அக்னி ஜ்வாலை கொண்டும், மேகங்களைக் கொண்டும், தீர்க்கதரிசிகளைக் கொண்டும் எம்மோடு பேசிய பரமபிதாவே, உம்முடைய திருவசனத்தை எடுத்துச் சொல்லவும், மனுஷருக்குள்ளே பிரியத்தை வளர்த்தெடுக்கவும், சகலரின் இருதயத்திலும் சந்தோஷத்தை உண்டாகவும், லந்தன்பத்தேரியில் முதலாவதும், பிலிப்ஸ் கம்பேனியாரால் ஹாலந்தில் செய்யப்பட்டதும், உம்முடைய ஊழியக்காரனான பவுலோஸ் பவுலோஸின் பெயரில் லைசன்ஸ் உள்ளதுமான இந்த ரேடியோவை ஆசிர்வதியும். கர்த்தரான கிறிஸ்து மூலம் இந்தப் பிரார்த்தனையை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென்”.
ஆசிர்வதிப்பு முடிந்ததும் இரண்டு மூங்கில் கூடைகளில் பப்பட வடையும் பழப்பொறியும் எடுத்து வந்து அங்கே கூடியிருந்தவர்களுக்கு விநியோகிக்கப் பட்டது. கில்பர்ட்டும், டச்சு அரண்மனையில் காவல் காரரான முகம்மதுவும், பிலாத்தோஸ் பாதிரியாரும் ரேடியோவைச் சுற்றி நின்றிருந்தார்கள். கில்பர்ட் ரேடியோவின் குமிழை வேகமாகத் திருப்ப, ஏதேதோ சத்தங்கள் கேட்டன. திடீரென்று கொரகொரவென்று சத்தம். கில்பர்ட் சொன்னார் : “ இதுதான் திருச்சூர் ரேடியோ ஸ்டேஷன். இன்னும் ஒலிபரப்பு ஆரம்பிக்கலே. தொடங்கும்போது கேட்டா, குழல் ஊதற சத்தம் பிரமாதமா இருக்கும்”.
“கில்பர்ட்சேட்டா, ஷார்ட் வேவ் வருதா பாருங்க”, ஜப் தின் பீட்டர் நரொஞ்ஞ சொன்னான். ஆகாயவெளியில் இருந்து வரும் ஒலிகளை சிற்றலையில் கேட்க நாங்கள் காதுகளைக் கூர்மையாக்கினோம். வெடிக்கும் மின்சாரக் குமிழ்களின் ஒலியும் சூறைக் காற்று ஊஊவென்று ஊளையிடும் ஒலியும் கேட்டது. திடீரென்று ஒரு குரல். வானத்தில் இருந்து ஏசு கிறிஸ்து மலையாளத்தில் பேசும் குரல் அது. உச்சரிப்பு தமிழ் வாடையோடு இருந்தது. ”நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்”.
“புதிய வேதாகமம் மத்தாயி பத்தாம் அத்தியாயம் முப்பத்திநாலு தொடங்கி முப்பத்தாறு வரையான திருவசனம் கர்த்தராகிய ஏசு கிறிஸ்து மொழிவதை நீங்கள் கேட்டீர்கள். இலவச பைபிள் பாடங்களுக்கு எழுத வேண்டிய முகவரி : பைபிள் செண்டர், கேர் ஆஃப் ரேடியோ சிலோன். தபால் பெட்டி ஒன்று ஒன்று ஆறு ஆறு . மந்தவெளிப்பாக்கம். மதராஸ்”.
Snippet of #Lanthan_Batheryil_LuthiniakaL translation as #பீரங்கி_பாடல்கள்