Snippet of translation from the Malayalam novel #Lanthan_Batheriyile_Luthiniyakal by Mr.N.S.Madhavan
(Expected date of completion :10th August 2917)
வெய்யில் ஏறத் தொடங்கியபோது ஒன்பதாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் படித்த எங்களை விட மூத்த மாணவர்கள் ‘விமோசன சமரம் ஜிந்தாபாத்’, ‘கம்யூனிஸ்ட் சர்க்கார் முர்தாபாத்’ போன்ற முழக்கங்களோடு மல்லாந்து தெருவில் படுத்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட மணி முழங்கி அன்றைக்குப் பள்ளிக்கூட நேரம் முடிந்ததாக அறிவித்தது. எல்லா மாணவர்களும் தெருவில் முழக்கமிட்டுப் படுத்திருப்பவர்களைப் பார்த்தபடி சுற்றிலும் நின்றார்கள். நடாஷா என்னிடம் சொன்னாள், “இதுதான் ஜெசிகா, மறியல்”.
மறியலில் ஈடுபட்டுத் தரையில் கிடக்கிறவர்கள் எழுந்து நிற்கக் கூடாது. அவர்களை எழச் செய்து அந்த இடத்திலிருந்து அகற்ற எரணாகுளம் கஸ்பா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீஸ்காரர்கள் படகில் வரவேண்டும். அன்றைக்குப் பல பள்ளிக்கூடங்களிலும் மறியல் நடந்ததால் எங்கள் பள்ளிக்குப் போலீஸ் வரமுடியவில்லை. நடுப்பகல் ஆனபோது போராட்ட வீரர்கள் தாமே எழுந்து போனார்கள்.
அன்று இரவு சேவியரும், சந்தியாகுவும், பீட்டர் நொரஞ்ஞயும் எரணாகுளம் கஸ்பா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் சப் இன்ஸ்பெக்டர் பிலிப் மத்தாயியைச் சந்தித்தார்கள். சந்தித்தது மட்டுமில்லை, ஒரு சிறு தொகை கையூட்டு கொடுத்ததாகவும் லந்தன்பத்தேரியில் பேச்சு எழுந்தது. என்றாலும், அடுத்த நாள் காலையில் பள்ளிக்கூட வாசலில் ஆல்ஃபியும் சக மாணவர்களும் மறியல் செய்ய ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் போலீஸ் வந்தது. போலீஸைப் பார்த்ததும் மாணவர்கள் கோஷம் எழுப்பினார்கள், “போலீஸ் எங்களுக்குப் புல் மாதிரி”.
“போகலாம் வாங்க, இந்தப் பசங்க இங்கேயே கிடக்கட்டும்”, பிலிப் மத்தாயி தன்னோடு வந்த போலீஸ் கோஷ்டியிடம் சொன்னார்.
சேவியரும், சந்தியாகுவும், பீட்டர் நொரஞ்ஞவும் போலீஸ்காரர்கள் பின்னால் போய் அவர்களைத் திரும்பி வரச்சொல்லி வேண்டினார்கள். ஏற்கனவே கொடுத்ததற்கு அதிகமாக இன்னும் கொஞ்சம் கையூட்டு கொடுக்க வேண்டி இருந்தது என்று நடாஷா என்னிடம் சொன்னாள்.
போலீஸ்காரர்கள் திரும்ப வந்தபோது மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கோஷம் எதுவும் போடாமல் நல்ல பிள்ளைகளாகப் படுத்திருந்தார்கள். அவர்களைப் போலீஸ்காரர்கள் தொட்டதும் துள்ளி எழுந்து படகுகளில் போய் இருந்தார்கள். கைது செய்த மாணவர்களை போலீஸ் படகில் கூட்டிப் போய் கிழக்கு ஆற்றுக்கு அக்கரையில் வடுதலையில் இறக்கி விட்டார்கள். சேவியரும் சந்தியாகுவும் போய் அந்த மாணவர்களை லந்தன்பத்தேரிக்குக் கூட்டி வந்தார்கள். மறியல் செய்து போராட்டம் நடத்திக் கைதாகித் திரும்ப வந்த பிள்ளைகளை வரவேற்க லந்தன்பத்தேரி படகுத்துறையில் பெரிய ஜனக்கூட்டம் காத்திருந்தது. பிலாத்தோஸ் பாதிரியார் வகையில் கூடியிருந்த எல்லோருக்கும் பௌலோஸ் கடையில் இருந்து உழுந்து வடையும், பன்னும் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ்காரர்களின் சௌகரியத்தை அனுசரித்து லந்தன்பத்தேரி ஸ்ரீராமவர்மா உயர்நிலைப் பள்ளியில் மறியல் நடத்தப்பட்டது. தீவுகளில் போராட்டம் நடத்துவது எளிய காரியமில்லை.