லந்தன்பத்தேரிக்கு போர்த்துகீஸ் கக்கூஸ் வந்து ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டு கடந்திருந்தது என்றாலும் லந்தன்பத்தேரிவாசிகள் அண்மைக்காலம் வரை, அதிகாலையில், கிழக்கே ஆற்றில் முதல் படகு ஓடுவதற்கு முன்பு, பரங்கி ஜபக்கூடத்தின் அருகில் சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தில் தான் காலைக்கடன் கழித்து வந்தார்கள். சுகாதாரத்தில் அக்கறை கொண்டவரும், தண்ணீர்ப் பிசாசு பிடித்து அடிக்கடி கை கழுவுகிறவருமான பிலாத்தோஸ் பாதிரியார் போஞ்ஞிக்கரை திருச்சபைக்கு உத்தியோக மாற்றத்தில் வந்ததும் அந்த நிலத்தில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டது : “இங்கே சிறுநீர், மலம் கழிக்கக் கூடாது”. இப்படி எழுதி வைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று புரிந்த பாதிரியார், அதிகாலையில் எழுந்து போய், அங்கே மணிக்கணக்காக, கை கழுவாமல், காவலுக்கு நின்றார். உத்தரவை மதியாமல் அசுத்தம் செய்த சாயக்கடை பௌலோஸை திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப் பாதிரியார் நடவடிக்கை எடுத்தார். இந்துக்களான மீனவர்களைத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்க முடியாததால் அவர்களுக்காக மேற்கு ஆற்றை நோக்கி நிற்கும் மரக் கழிப்பறை அமைத்துக் கொடுத்தார்.
பிலாத்தோஸ் பாதிரியார் காவல் காக்க ஆரம்பித்தது முதல் லந்தன்பத்தேரிவாசிகள் தங்கள் காலைக்கிரமத்தை மாற்றிக் கொண்டார்கள். வெய்யில் ஏறும்போது தங்கள் முகங்களைத் துணியால் மறைத்துப் படகுகளில் போகிறவர்களின் கண்ணை ஏமாற்றி சர்ச் நிலத்தில் ஆண்களும் பெண்களும் குனிந்து குந்தியிருந்து காலைக்கடன் கழித்தார்கள். அப்புறம் அங்கே பகல் நேரக் காவலுக்கு, சர்ச் கல்லறை வளாகத்தில் சவக்குழி வெட்டும் பாப்பி வந்தான். ஏதாவது சாவு விழுந்து சமாதியில் வைக்க பாப்பி நகர்வதற்காகக் காத்திருந்து மல, மூத்திரம் போக வேண்டிய சூழ்நிலை. இறுதியாக டச்சுக்காரர்களுக்கு முடியாததை பிலாத்தோஸ் பாதிரியார் சாதித்தார். லந்தன்பத்தேரி வீடுகளுக்கு வெளியே காயலை நோக்கி நிற்கும் கழிவறைகள் அமைக்கப்பட்டன.