கணக்கு களவாடிய வீட்டு மார்க்கோஸ் லூயி திமிங்கில வயிற்றிலிருந்து திரும்பி வந்தபோது


லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் (என்.எஸ்.மாதவன்) மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு (இரா.முருகன்) – இன்று மொழியாக்கிய ஒரு சிறு பகுதி

”மரியா, வா. உன்னைப் பலதடவை தொட்ட இந்தக் கை இன்னொரு முறை உன்னைத் தொடட்டும்”.

“நீங்க யாரு?”, அப்பன் கேட்டார். அப்போது சந்தியாகுசேட்டனும், அவர் கூட டாட்டா கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர்களும், சேவியரும் வந்து சேர்ந்தார்கள். “கோட்டும், பாபாஸ் ஷூவும் மாட்டி, கையிலே வெள்ளைப் பிரம்போட வந்திருக்கற பேண்ட் மாஸ்டர் யார், வல்ய ஆசாரி?”.

“எங்களுக்கு தெரியலே. நீங்க யாரு அய்யா?”

“பைப்பின்லேருந்து வந்த, கணக்கு களவாடிய வீட்டு வலிய லூயி ஆசாரி போய்ச் சேர்ந்தாச்சு தானே?”

“ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டுலே, தொண்ணூறு வயசுலே இறந்து போனார் அவர்”, அப்பன் சொன்னார்.

”கணக்கு களவாடிய வீடு வலிய மார்க்கோஸ் ஆசாரி?”

“முப்பது நாப்பது வருஷம் முந்தி கடலுக்கு போயி இறந்துடார்”, அப்பன் சொன்னார்..

“வலிய மார்க்கோஸ் ஆசாரி வீட்டுக்காரி மரியாகொரத்தி?”. கிழவர் கேட்டார். அரவிந்தாட்சனோடு வந்திருந்த கூலிக்காரன், கிழவர் கொண்டு வந்த பெரிய, கருப்பு ஸ்டீல் ட்ரங்க் பெட்டியை எங்கள் வீட்டு வெராந்தாவில் இறக்கி வைத்தான், “அவங்க, மார்க்கோஸ் ஆசாரி கடல்லே போனதுக்கு அப்புறம் ரொம்ப நாள் உயிரோடு இருக்கலே”. எட்வின்சேட்டன் கிழவரிடம் சொன்னார். “நீங்க யாரு? பெட்டியோட வந்து போலீஸ்காரங்க ரிப்போர்ட் எழுதற மாதிரி கேள்வி மேலே கேள்வியா கேட்டுக்கிட்டிருக்கீங்க”

கிழவர் போ-டையை அவிழ்த்தார். கோட்டையும் கழற்றி வைத்தார். வராந்தாவில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அழத் தொடங்கினார். சந்தியாகு சேட்டனும், எட்வின்சேட்டனும், அப்பனுமாகச் சேர்ந்து அவரை எழ வைத்து நாற்காலியில் அமர்த்தினார்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் கூட்டம் கூடியது. அதில் பரிச்சயமில்லாத முகங்களும் இருந்தன.

“வல்ய லூயி ஆசாரியோட பெண்டாட்டி திரேசா போய்ச் சேர்ந்துட்டாங்க தானே?” கிழவர் அழுவதை நிறுத்திக் கேட்டார்.

“மகனும், வீட்டுக்காரரும் இறந்து அதிக காலம் அவங்களும் உயிரோடு இருக்கலே”, எட்வின்சேட்டன் சொன்னார்.

“என்னது இது? கிழவர் வந்ததுலே இருந்து அவங்க செத்தாச்சா இவங்க செத்தாச்சான்னு சாவு வார்த்தை மட்டும் சொல்லிட்டிருக்கார்”. அம்மா வீட்டுக்குள் இருந்து கேட்டாள். கிழவர் கால்சராயின் பையிலிருந்து ஒரு கைக்குட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார், அவர் உரத்த குரலில் கேட்டார் :” நவம்பர் ஒண்ணாம் தேதி ஆல் செயிண்ட்ஸ் டே அன்னிக்கு ஆத்மாக்களோட அமைதிக்கு பிரார்த்தனை செய்ய இந்த வீட்டுப் பட்டியல்லே யார்யார் பெயர் எல்லாம் இருக்கு?”. அவர் குரல் உயர்ந்து வர, கூடி இருந்தவர்கள் நிசப்தமாக நின்றார்கள்.

“கணக்கு களவாடிய வீட்டு லூயி லூயி ஆசாரி, அவரோட பெண்டாட்டி திரேசா லூயி, அவரோட மருமகள் மரியகொரத்தி மார்க்கோஸ் இந்த மூணு பேருக்கும் தான் இங்கே இருந்து பிரார்த்தனை செய்யறோம்”, அப்பன் சொன்னார்.

”அப்போ, கணக்கு களவாடிய வீட்டு வலிய மார்க்கோஸ் ஆசாரி பெயர் அந்தப் பட்டியல்லே இல்லேன்னா சொல்றீங்க?”, கிழவர் கேட்டார்.

“அந்தப் பெயருக்கு விலக்கு உண்டு. அதைச் சொல்லி இறந்தவங்களுக்கான பிரார்த்தனை செய்யக்கூடாதுன்னு என் தாத்தன் லூயி ஆசாரி சொல்லியிருக்கார். மார்க்கோஸ் ஆசாரி சாகலையாம். பழைய ஆகமத்திலே வர்ற யோஹனன் மாதிரி கடல்லே திமிங்கிலம் வயத்துலே உசிரோடு இருக்கார்னு சொன்னார் அவர்”, அப்பன் சொன்னார்.

“நீ யாரு பையா?”, அப்பனிடம் கிழவர் கேட்டார்.

“இது என்ன கேள்வி? வலிய மத்தியாவுஸ் ஆசாரி வீட்டு முற்றத்திலே நின்னுக்கிட்டு அவர் யாருன்னு அவரையே கேக்கறீங்க?”, எட்வின்சேட்டன் கிழவரிடம் சொன்னார்.

“அப்படீன்னா நீ இன்னிக்கு முதல், கணக்கு களவாடிய வீட்டு சின்ன மத்தியாவுஸ் ஆசாரிதான். ஆப்பிரிக்க யானைகள் சாகறதுக்குன்னு ஒரு இடம் இருக்கு. எங்கே இருந்தாலும், சாகற நேரம் வந்தா யானை எல்லாம் அங்கே போகும். அதே போல நான் சாகறதுக்காக லந்தன்பத்தேரிக்கு வந்திருக்கேன். நான், கணக்கு களவாடிய வீட்டு வலிய மார்க்கோஸ் ஆசாரி. மத்தேவுஸே, நான் உன் அப்பன்’டா”.

என் தாத்தன் தன்னை யாரென்று வெளிப்படுத்தியபோது நானும் ஜான்சனும் பயந்து போய் ஒருவர் கையை மற்றவர் பற்றிக்கொண்டோம். ‘அய்யோ’ என்று அலறி அம்மா மூர்ச்சையாகித் தரையில் விழுவதற்கு முன் விக்கி பெரியம்மா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். “இறுதித் தீர்ப்பு நாள் வந்தாச்சு. செத்தவங்க எல்லாரும் கல்லறையை பிளந்துக்கிட்டு வெளியே வராங்க” என்று உரக்கக் கூவிக்கொண்டு சந்தியாகுசேட்டன் ஓடிப்போனார். முற்றத்தில் நின்றவர்கள் எல்லோரும் பயம் காரணமாகத் திரும்பி ஓடினார்கள். அவர்களை அடுத்து, அம்மாவும், விக்கி பெரியம்மாவும், ரோஸிசேச்சியும் வீட்டுக்குள் ஓடினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன