இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறிய பகுதி
1964 ஏப்ரல் மாதத்தில் ஒரு ராத்திரி, படகுப் போக்குவரத்து அன்றைய சேவை முடிந்ததற்குப் பிறகு, அரண்மனைப் படகுத்துறைக்கு ஒரு படகு வந்தது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் மக்கள் மனம் கவர்ந்தவராக இருந்த ஏ.கே.ஜி என்று விளிக்கப்பட்ட ஏ.கே.கோபாலன் படகு விட்டு இறங்கி மலாகா ஹௌஸுக்கு நடந்தார். பங்குனி மாதத்தின் அதிகமான வெப்பம் காரணமாக லந்தன்பத்தேரிவாசிகள் ராத்திரி நேரம் சென்றே உறங்க இருந்தார்கள். அவர்கள் உறங்குவதற்கு முன் வழக்கமாகச் சொல்லும் பிரார்த்தனைகளை இன்னும் சொல்லத் தொடங்கவில்லை. ஏ.கே.ஜி வந்திருக்கும் விவரம், அப்பம் செய்ய அரைத்த மாவையும் கள்ளையும் புளிக்க வைக்கும் பாக்டீரியா போல எங்கும் பரவியது.
சந்தியாகுசேட்டன் வீட்டு வாசலில் வெளிச்சத்தைப் பார்த்து அப்பனும் நானும் அங்கே போனோம். சேவியர்சேட்டனும், சாராசேச்சியும் எங்களுக்கு முன்பே அங்கே வந்திருந்தார்கள். அப்பன் கேட்டார் : “என்னாச்சு? எல்லாரையும் கூட்டி நடுராத்திரி மாநாடு நடத்திட்டிருக்கீங்களே?”.
“ஏ.கே.ஜி லந்தன்பத்தேரிக்கு வந்திருக்கார்”, என்றார் சந்தியாகுசேட்டன். அவரோட கம்யூனிஸ்ட் கட்சி ரெண்டா உடைஞ்சிடுத்து. தான் இருக்கற சீனா ஆதரவுக் கட்சிப் பிரிவுக்கு ஆதரவு திரட்டத்தான் வந்திருக்கார்”.
“நீங்க யாராவது ஏ.கே.ஜியை பார்த்திருக்கீங்களா?” சில்வியாசேச்சி கேட்டாள்.
“எரணாகுளம் ராஜேந்திரா மைதானத்துலே கூட்டம் போட்டு அவர் பிரசங்கம் பண்றதை நான் பார்த்திருக்கேன்” என்றார் சந்தியாகுசேட்டன்.
“அரைக்கை ஷர்ட், நடுவிலே வகிடு எடுத்து சீவின தலைமுடி, கன்னத்திலே குழந்தை மாதிரி சிரிச்சா குழி விழும். ஆனா கண்ணு, குளவிக் கண்ணு மாதிரி பளபளன்னு இருக்கும்”.
“குளவிக்கண்ணா? அது எப்படி இருக்கும்?” சேவியர்சேட்டன் கேட்டார்.
“குளவி இரையைத் தேடிப் பிடிச்சு எடுத்து தன்னோட கூட்டிலே கொண்டுபோய் வைக்கும். வச்சுட்டு அதைப் பார்க்கும், பார்த்துப் பார்த்தே இரையா வந்த அந்தப் புழுவை குளவி ஆக்கிடும். அதுபோல ஏ.கே.ஜி, பார்த்து பார்த்து பார்த்து ஆளுங்களை கம்யூனிஸ்ட் ஆக்கிடுவார்”.
ஏ.கே.ஜி வந்து ஒரு மணி நேரத்துக்குள் கொட்டாரம் படித்துறையில் குக்கூவென்று யாரோ கூவி விளிப்பது கேட்டது. சில்வியாசேச்சி தயாரித்துக் கொடுத்த பால் சேர்க்காத கட்டன் காப்பி குடிப்பதை நிறுத்தி நாங்கள் காதுகளைக் கூர்மையாக்கி இருந்தோம். சந்தியாகுசேட்டன் சொன்னார் :” நம்மாளு திரும்பிப் போகறார். குஞ்ஞூஞ்ஞோட படகை வரச்சொல்லிக் கூவறாங்க. நம்ம ஊர் கம்யூனிஸ்ட்கள் அத்தனை பேரையும் வெறும் நாப்பத்தஞ்சே நிமிடத்திலே ஏ.கே.ஜி சீனா ஆதரவு கம்யூனிஸ்கள் ஆக்கிட்டார். ஏசுவே, அந்தாளு எமகாதகன்”.