Puthagan – New Short story : Era.Murukan – Published in Theeranadhi August 2017
(தீராநதி ஆகஸ்ட் 2017 இதழில் பிரசுரமானது)
நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நூல்நிலைய வாசலில் சிறகுகள் இறைந்து கிடந்தன. நூலகத்தை ஒட்டியிருந்த வீட்டில் ஒரு பெண்குரல் பக்திப் பாடல் ஒன்றை சினிமா மெட்டில் பாட, ஏழெட்டுக் குழந்தைக் குரல்கள் ஒவ்வொரு அடியாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. நூலகக் கதவு அடைத்திருந்தது.
‘நகரசபை உறுப்பினர்கள் வந்து விட்டார்கள்’. எங்களைப் பார்த்து வழியோடு போகிற யாரோ சொல்லியபடி பொன் நிறத்திலும் சிவப்பிலும் வண்ணம் பூசிய வான்கோழியை வயிற்றோடு அணைத்துச் சுமந்து போனார்கள்.
நாங்கள் சைக்கிள்களை நிறுத்தியபோது அண்டை வீட்டில் இருந்து வந்த முதுபெண், இதுவும் நடக்குமா என்பது போல கைகளை விரித்துக் காட்டி இறக்கையில் இருந்து சிறகு உதிர நடந்து வந்தாள். அவள் குடும்பம் நூலகத்தை அடுத்த வீட்டில் ஒரு வருடமாக நிற்கிறது. நாங்கள், நகரசபையில் இருக்கப்பட்ட எல்லோரும் சம்மதித்து ஓட்டுப் போட்டுத் தீர்மானம் நிறைவேறித்தான் ஆணும் பெண்ணுமாக அந்த முதியவர்கள் வந்தது. நைந்த லேசாக வாடை பரத்தும் சிறகுகள் கொண்டவர்கள். பறக்க, அதாவது தரைக்கு மேல் ஆறு அடிக்குக் குறைவாக எழுந்து சற்றே மிதந்து இறங்கக் கூடியவர்கள். அருமையாகப் பனை ஓலை கொண்டும், மூங்கில் கொண்டும், தென்னை ஓலை கொண்டும் குடலையும், குடுவையும், கொட்டானும், கூடையும், கடகமும் பின்னக் கூடியவர்கள். சுற்று வட்டாரத்தில் முடையத் தெரிந்த யாரும் இல்லாததால் ஊருக்கு அவர்கள் சேவை வேண்டி இருந்தது.
பறக்கும் குடும்பம் பொதுவான ஊர்ச் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் சிறு பிள்ளைகள் நிலாச்சோறு உண்ணும் ராக்காலங்களில் அவர்களை மருட்டி கொழுமோர் காய்ச்சிக் கொடுத்தால் மட்டும் தணியும் பயத்தோடு உட்கார வைக்கக் கூடும் எனவும், தரைக்கு ஆறடிக்கு மேல் பறக்கிறவர்களைக் கீழே இருந்து பார்க்கிறவர்கள் மனதில் அருவறுப்பு ஏற்படலாம் என்பதாலும், எல்லாவற்றுக்கும் மேல், மத்திய சர்க்காருடைய லைசன்ஸ் வாங்காமல் யாரும் பறக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரிந்த சட்டம் என்பதாலும் அந்தக் குடும்பத்துக்கு ஊரில் வந்து இருக்க அனுமதி தரக்கூடாது என்று பொதுக் கருத்து நிலவியது.
ம-வரிசையில் வரும் சினிமாப் பாடல்களைப் பற்றிய மும்முரமான தர்க்கம் நகரசபைக் கூட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு மழை பெய்த பிற்பகலில், தேநீர் இடைவேளைக்கு ஐந்து நிமிடம் முன்பு, காரமும் சூடும் மிகுந்த வடைகளுக்காக உறுப்பினர்கள் காத்திருந்த போது நேரத்தை வீணாக்காமல், பறக்கும் வயதானவர்களை ஊரில் வசிக்க அனுமதிக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது. மனிதாபிமானமும் வேணுமன்றோ.
நகரசபை எழுத்தர் இந்த சங்கதியால் உற்சாகம் மிகுந்துவர, எழுதிக் கொண்டிருந்த அவருக்கே சரிவரத் தெரியாத கணக்குகளை நிறுத்தி வைத்து வெளியே போய் வந்தார். சிறிது நேரத்தில் ஆணும் பெண்ணுமாக இரண்டு முதியவர்கள் நகரசபையின் அடைத்த கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே தாழப் பறந்தபடி உள்ளே பார்த்துக் கையசைத்து நகரசபை உறுப்பினர்களுக்கு நன்றி சொன்னபோது உறுப்பினர்கள் அதைக் கவனியாது, த-வரிசைப் பாடல்கள் பற்றிய சர்ச்சையில் மூழ்கினார்கள்.
அந்த முதுபெண் தான் இங்கே எங்களைப் பார்த்ததும் கைகளை விரித்தபடி வந்து கொண்டிருந்தது.
’எப்போதிலிருந்து’? எங்கள் நகரசபைத் தலைவர் அவளைக் கேட்டார். ’நேற்று ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு அவர் எழுந்து நடந்த போது சுவரிலும் கதவிலும் மோதிக் கொண்டார். போக வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல் வெளியே போகும் போது, புத்தகங்கள் காத்திருக்கின்றன என்று முணுமுணுத்தபடி இருந்தார்’, முதுபெண் சொன்னாள்.
’அவர் நிறையப் படிக்கக் கூடியவரா?’, நகரசபைத் தலைவர் கேட்டார். ’சினிமா பாட்டு புஸ்தகங்கள் எத்தனை அவரிடம் உண்டு?’. தலைவர் வீட்டில் பத்தாயிரத்துக்கு மேல் பாட்டு புத்தகங்கள் உண்டு.
’என் வீட்டுக்காரர் கூடை முடைவதல்லாமல் வேறு எதுவும் தெரியாதவர். இப்போது நான் சொல்லிச் சொல்லித்தான் ராத்திரிப் பள்ளியில் அரிச்சுவடி கற்றுக் கொள்ள கல் சிலேட்டும் பலப்பமுமாகப் போய் வருகிறார்’.
”நீங்கள் பாடல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பீர்கள் தானே?”
”’ஆம், ஐம்பது வருடத்துக்கு முற்பட்ட சினிமா பாடல்கள் எல்லாவற்றையும் முறைப்படி கற்றிருக்கிறேன். அவற்றின் மெட்டில் எழுதவும் செய்வேன். இவருக்கு அதில் ஒன்றிரண்டைக் கற்றுக் கொடுக்க பல வருடமாக முயற்சி செய்தேன். பல பகல் பொழுது முழுக்க சண்டையிட்டும் இருக்கிறேன். இங்கே நூல் நிலையம் பக்கத்தில் வீடு இருந்தால் புத்தக வாசனை அவரையும் கற்க வைக்குமென்று சமாதிகளிலிருந்து எழுந்து வந்தவர்கள் கருப்பட்டிக் காப்பி கேட்டுக் காத்திருக்கும்போது சொன்னதாலேயே இங்கே வந்தோம்’.
நூல்நிலையத்தின் அடைத்திருந்த கதவுகள் மேல் உள்ளிருந்து பலமாக மோதுகிற சத்தம் விட்டு விட்டுக் கேட்டது.
’அவர் தான். உள்ளே இருக்கிறார். ராத்திரி முழுவதும் ஏதேதோ சத்தம் கேட்டது. அவர் புத்தக அலமாரிகளைச் சுற்றிப் பறந்தபடி இருக்கிறார் போல’.
கிழவி சொல்லிக் கொண்டிருக்க தலைவர் சுற்றுச் சுவர் மேல் ஏறி நிற்க வாகாக, நூலக வளாகத்துக் குழாயடியில் கவிழ்த்திருந்த பிளாஸ்டிக் வாளியைக் குப்புறக் கவிழ்த்தபடி உடுப்பை வாரிச் செருகிக் கொண்டார்.
’நீங்கள் ராத்திரி அவருக்குக் கொடுத்த சாப்பாடு தான் இந்த கூறுகெட்ட தனத்துக்குக் காரணம்’ என்று எண்ணெய் வணிகர் தெரு உறுப்பினர் சொன்னார். ’என்ன சாப்பிட்டார்?’ என்று கேட்டேன். ’சோளத் தோசை’, என்றாள் கிழவி. ’அது காலை உணவு. ராத்திரியில் உண்டது சட்டரீதியாகத் தவறு’, என்றார் வணிகர் தெரு உறுப்பினர். ’சட்டம் எல்லாம் இப்போது பேச வேண்டாம். உள்ளே இருப்பவரை வெளியே கொண்டு வராவிட்டால் புத்தகங்களும் அலமாரிகளும் கட்டிடமுமே சேதமாகும்’, என்றார் தலைவர்.
அவர் சுவரில் நின்று எவ்விக் கதவின் மேற்பகுதியில் திரும்பத் திரும்ப ஓங்கித் தட்டக் கதவு திறந்து கொண்டது. ’நகரசபை உறுப்பினர்கள் மட்டும் உள்ளே போகலாம்’, என்றார் தலைவர். அல்லாதவர் என்று கணக்கு எடுத்தால் அந்தக் கிழவியும், காலைக் கடன் கழிக்கக் கண்மாய்க் கரைக்குப் போய்க் கொண்டிருக்கும் சில ஊர்ப் பெரிசுகளும் தான் மிஞ்சுவார்கள்.
’நீங்களே போய்ப் பார்த்து அனுபவியுங்கள்’, என்று சொல்லிப் பெரிசுகள் அந்தாண்டை போக, கிழவியை மட்டும் வெளியே நிறுத்தி நாங்கள் உரிமையோடு உள்ளே போனோம். கதவைப் பத்திரமாக மூடினார் தலைவர்.
எதிர்பார்த்ததுபோல் உள்ளே சிறுநீர் வாடையோ வேறே மனிதக் கழிவின் துர்நாற்றமோ இல்லை. மின்விசிறி மேல் உட்கார்ந்திருந்தது கிழவன் இல்லை என்பது தவிர ஆச்சரியப்பட வேறு எதுவும் கட்டிடத்துக்குள் இல்லை.
அங்கே இருந்தவன் பொன் நிற இறகுகளும், கழுகு போன்ற முகமும் கொண்ட ஒரு இளைஞன். தாடை உயர, மெல்லிய குரலில் அவன் பாடிக் கொண்டிருந்தான். நான் புத்தகங்களுக்கான தேவன் என்றான் அவன். நாங்கள் பதிலேதும் சொல்லாமல் கிழவனைத் தேடி உள்ளே போக முற்பட்டோம். அவன் கிடைத்த பிறகு இவனைக் கவனிக்கலாம் என்று ஒரு சேர நினைத்தோம். ம-வரிசைப் பாடல்கள் போன்ற தீவிர விவாதங்கள் எங்களைப் பிரித்து வைப்பதில்லை. மேலும் ஐக்கியப்படுத்துகின்றன.
அலமாரி அலமாரியாக நேர்த்தியாக அடுக்கு வைத்த எல்லா மொழி சினிமாப் பாடல் புத்தகங்களின் ஒருமித்த ’மற்றதை வெள்ளித் திரையில் காணுங்கள்’ என திடீரென்று முடிந்த கதைச் சுருக்கப் பக்கங்கள் தரும் கடும் ஏமாற்றம் அவற்றை விலக்கி நிறுத்த வைத்தது. அடுத்து வரும் பக்கங்களில் வரும் பல கானங்களைப் பாட மெட்டுத் தெரியாத காரணத்தால் நிராசையும் ஏற்படுத்தும் புத்தகத் தொகுப்பு அது. நகரசபையில் நிகழும் அகர வரிசை சினிமாப் பாட்டு விவாதங்களுக்கு அவற்றைப் படித்திருக்க வேண்டியதில்லை. அதற்கான அறிவு தலைமுறைகள் வழியே தானே வருவது. பயன்படுத்தாவிட்டாலும் பாரம்பரியச் செல்வங்களைப் பராமரிக்க வேண்டும் என்பதை நகரசபை உறுப்பினர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு அது வாய்க்காததால், கிழவன் போல் ஏறுக்கு மாறாக ஏதாவது செய்து வைக்க வாய்ப்பு உண்டு.
கிழவனை நூல்நிலையத்தில் எங்குமே காணவில்லை. புத்தகங்களின் ஒட்டுமொத்தமான வாடையும், தேவதையின் சிறகு வீசும் நறுமணமும் தவிர வேறு வாடை உள்ளே இல்லை.
வெளியே கிழவி அரற்ற ஆரம்பித்திருந்தாள். ’சிறகுகளைப் பிய்த்து எடுத்துப் போட்டிருக்கலாம் அவர்’ என்றாள் அவள். சிறகு போனதும் சாவும் அடுத்து ஏற்படும் என்றவள், கிழவன் அலமாரிகளுக்குப் பின்னால் இறந்துபோய்க் கிடக்கலாம் என்று சத்தம் போட்டுப் பிரலாபித்தது எங்கள் காதில் விழத்தான்.
”நமக்கு நகரசபை வேலைகள் நிறைய பாக்கி உண்டு. ஆயிரம் பாடல்களையாவது இந்த வாரக் கடைசியில் தொகுத்து முடித்தாக வேண்டும். தேவதைகளும், நூல்நிலையமும், பறக்கத் தெரிந்த முதியவர்களும் நேரத்தைப் பாழ் செய்வதை அனுமதிக்க முடியாது”. ஒற்றை வரிசையில் வீடுகள் அமைந்த தெப்பக்குளத் தெரு உறுப்பினர் சொன்னார். விவாதங்களில் ஈடுபடும்போது இல்லற சுகம் அனுபவிக்கும் கிளர்ச்சி காட்டும் முகமும் உடல்மொழியுமாக அவற்றை அணுகுகிறவர் அவர். அந்த இன்பத்தை மேலும் தள்ளிப்போட முடியாது என்பதால் வரும் பதட்டம் அது.
அவர் அவசரமாகக் கைகாட்ட, மின்விசிறி மேலிருந்து அந்தத் தேவன் கீழே வந்தான். உடனே மின்விசிறி சுழல ஆரம்பித்தது. அவனை அங்கே மறுபடி போகமுடியாமல் செய்த பெருமையோடு வணிகர் தெரு உறுப்பினர் இரண்டு நிமிடங்களில் தான் யாரென்று சொல்லும்படி அவனிடம் கோரினார்.
இம்மாதிரியான கேள்விகளுக்குத் தங்கள் நாட்டு வளம், நகர வளம், குலப் பெருமை எல்லாம் ஆதியோடந்தமாகச் சொல்லித்தான் விஷயத்துக்கு வருவது வழக்கம். எனில், அவசரப்படுத்தியதால், நேற்று இரவில் இங்கே இருந்து சத்தம் கேட்டதால் அனந்தபுரம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த தான் கீழிறங்கி நூல்நிலையத்துக்குள் நுழைந்ததாகச் சொன்னான் அவன். தன் பெயராக ஒரு பனிரெண்டு இலக்க எண்ணைச் சொல்லி அது எந்த எண்ணாலும் வகுக்கப்பட முடியாத தனியன் என்று ஒரு வினாடி பெருமை பாராட்டினாலும், கணிதம் போன்ற கவைக்குதவாத சமாசாரங்களை உரையாடலாக நாங்கள் வளர்த்தியெடுக்க இணங்கவில்லை. ஒரு சேரத்தான்.
அலமாரிகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்த கிழவன் நேற்றிரவு தனக்கு அந்தப் புத்தகங்களில் ஒன்றைக்கூடப் படிக்க முடியாத நிராசையைப் பற்றிப் பிரலாபித்தபோது, அவனுக்குப் புதிய சிறகுகளையும், வாசிப்பு அறிவையும் தரத் தான் தயாராக இருப்பதாகச் சொன்னதாகத் தேவன் கூறினான்.
’அந்த அறிவு சினிமாப் பாடல் புத்தகங்களில் அமிழ இல்லை. நூல்நிலைய உள் அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிற பத்து தலைமுறைக்கு முன் வழக்கொழிந்து போன எல்லா நூல்களும் தரும் தரிசனம் தான் அது’.
தேவன் சொன்னதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. இவன் பாட்டுக்கு வந்து அவனுக்கு சம்பந்தமே இல்லாதவனும், நேர்த்தியாகக் கூடை முடைபவனுமான ஒரு கிழவனுக்கு யாரும் படிக்க எடுக்காத புத்தகங்களில் அறிவு பெற வைத்தால், ஊரில் அவன் பறந்து இன்னும் பத்து பேருக்கு அதைப் பற்றிச் சொல்லுவான். நகரசபை நூலகத்தின் உள்ளறைப் புத்தகங்களை வெளியே கொண்டு வருவதின் விளவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. இறகு உதிர்ந்து, இறந்து போகும் நிலையில் இருக்கும் கிழவனுக்குப் புதுச் சிறகு தருவதே லைசன்ஸ் இல்லாமல் புவியீர்ப்பு விசையை விட்டு மேலெழும்பும் செயலுக்கான சட்டவிரோதமான ஆதரவு. தேவர்களுக்கு சட்டம் வேறுபட்டது இல்லை. இம்மாதிரிச் செயல்களை அனுமதிக்கக் கூடாது.
இவனோடு இன்னும் நேரம் வீணடிக்க விரும்பாமல், ’கிழவன் எங்கே போனான், அதை மட்டும் சொல்லு’ எனத் தேவனைக் கேட்டோம்.
அவன் பாட்டுப் புத்தகங்கள் நிறைந்த இந்தப் புத்தக அலமாரிகளை இரவு முடிவதற்குள் ஆயிரம் முறை சுற்றி வந்தால் வாசிக்கும் அறிவும் இந்தப் பாட்டுகளை அததற்கான மெட்டில் பாடும் திறமையும் ஏற்படும் என்று நகரத்தில் சூதாட்டக்கடை வைத்திருக்கும் சித்த புருஷர் சொன்னபடி பறந்து சுற்றி வருவதாகக் கூறிய அவன் தேவனை வெளியே போகச் சொன்னான். அவன் வழியை தேவன் பறந்தும் நடந்தும் மறித்தபோது, அறிவும், அருளும் தனக்கு மயிர் போல என்று தேவனின் முகத்தில் உமிழ்ந்தபடி பறந்தானாம் கிழவன். கதவு காற்றில் மூட, அவனும், தேவனும் வெளியே வர முடியவில்லை.
’பிறகு’? உடுப்பை தளர்த்தி, தரையில் பரத்தியிருந்த 1943-ம் வருட திரைப்பாடல்களின் மேல் உட்கார்ந்தபடி நகரசபைத் தலைவர் கேட்டார்.
’அவன் என் பிடிக்கு அகப்படாமல் ஓடி உள்கதவைத் திறந்தான். யாரும் படிக்காத புத்தகங்கள் வைத்திருந்த அலமாரிகளைச் சுற்றி குறுகலான இடைவெளியில் வலம் இடமாக, சாத்தானிய நிகழ்வு போல, பர்ர்ர்ரென்று அபானவாயு உதிர்த்தபடி அவன் ஓடிக் கொண்டிருந்தான்’.
’பிறகு’? ’பிறகு என்ன, அவனை அங்கே ஒரு புத்தகமாக்கினேன். உயிருள்ள, தொட்டால் நகரும், கண் விழித்துப் பார்க்கும் புத்தகம். கைக்கடக்கமாக அலமாரியில் உட்கார்ந்திருக்கும் புத்தகம். ஓரத்தில் மடியாது, முரட்டுத்தனமாக யாரும் வரிகளுக்குக் கீழ் பென்சிலால் கோடு கிழிக்காத புத்தகம். மைவாடை உலராது தேவதைகளின் இறக்கையும் குனேகா செண்டும் கலந்த ரம்மியமான வாடை அடிக்கும் புத்தகம். பெர்மாவின் கடைசி தியரத்துக்கு சுலபமான நிரூபணமும், சிந்து சமவெளி முத்திரைகளுக்கு விளக்கமும், இறந்து போன காப்பியத்தின் அனைத்துப் பகுதிகளும் கொண்டதாகவும், அணுத்துகளியலும் கடவுள் துகள் பற்றிய இயற்பியலுமாக ஒவ்வொரு தடவை எடுத்துப் புரட்டும்போதும் ஒவ்வொரு துறை பற்றியதாகத் திகழும் ஒப்பற்ற புத்தகமானான் கிழவன்’.
நான் உள்கதவைத் திறந்து பார்த்தேன். அறையின் அந்தக் கோடியில் இருந்து ஒரு புத்தகம் மெல்ல என்னை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அதன் கண்களில், போகாதே என்று என்னைக் கெஞ்சும் பரிதவிப்பு தெரிந்தது.
நான் உள்கதவை அடைத்து விட்டு வெளியே வந்தேன். ’அங்கே ஆயிரம் புத்தகங்கள் செம்மையாக அடுக்கப்பட்டு உறக்கத்தில் உள்ளன. கிழவனோ வாலிபனோ சிறுவனோ யாரும் அங்கே இல்லை’. பொதுவாகச் சொன்னேன்.
தேவன் காற்றில் குணேகா செண்ட் வாடையைப் பரத்தியபடி தெருமுனைக்கு நடந்து போனான். பின் பறந்தான். நாங்கள் வாசலுக்குப் போக, கிழவி தன் வீட்டு வாசலில் கூடை முடைந்தபடி இருந்ததைக் கண்டோம்.
த-வரிசைப் பாடல்களைப் பட்டியலிடும்போது நேரம் கிடைத்தால் அவளுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்க மசோதா நிறைவேற்ற வேண்டும். ஒரு மனதாக அது நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
இரா.முருகன்