சுஜாதாவுக்கு அஞ்சலி – 1
விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ்.
சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கேரளப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே.
இரா.முருகன்
9 திசம்பர் 2008
888888888888888888888888
கேரளா டயரி
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1
அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.
சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.
எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.
சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.அவர் அலுத்துக் கொள்ளாத குறையாகத் திரும்பவும் பொறுமையாகச் சொல்லப் பயணச் சீட்டைப் பார்த்தேன்.
‘டிப்பார்ச்சர் ·ப்ரம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்’. பார்க்காதது என் குற்றம்தான்.
போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார் அதிகாரி. வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.
எம்பார்க்மெண்ட் கார்ட் எல்லாம் எதுக்கு சார்? இந்தோ இருக்கிற கொச்சிக்குத் தானே போறேன்?
இங்கேயும் நினைவூட்டல்.
இதைக் கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.
போகிறபோக்கில், ஆண்றணி பூமியில் போய் இறங்கவும் பாஸ்போர்ட், விசா சகிதம் பயணம் ஆரம்பிக்க வேண்டுமோ என்னமோ – இதை எழுதும் வினாடி வரை கருணாகரனும் அவர் மகன் கேரளா காங்கிரஸ் தலைவர் முரளீதரனும், திருவனந்தபுரத்தில் ஆண்றணி ஆட்சியைக் கெல்லிக் கிளப்பி அப்புறத்தில் எறிய விடாது பாடுபாட்டுக் கொண்டிருப்பது பலன் தரவில்லை.
ஆண்றணியுமாச்சு, கருணாஸ¤மாச்சு என்று பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம், ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டியவை.
கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா? முந்தாநாள் உமக்கு நீர்க்கடுப்பு ஏற்பட்டதா? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா? ஆணுறை அணிகிறீரா? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க என்றார்கள் வெள்ளையும் சள்ளையுமான துரைகள்.
என்னைப் போல் பொறுமையாகப் பாரம் பூர்த்தி செய்துகொண்டிருந்த நாலைந்து பேர் அவசரமாக நீட்டிய காகிதங்களைப் பார்க்காமலேயே இடது கையால் வாங்கி, இங்க் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தி ஓரமாக விட்டெறிந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
இந்தக் காகிதத்தை எல்லாம் அப்புறம் கழிப்பறையில் உபயோகப்படுத்துவார்களாக இருக்கும்.
********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 2
எரணாகுளம் நகரம் ராத்திரி எட்டு மணிக்கே சமர்த்தாகத் தூங்கப் போயிருந்தது.
சனிக்கிழமை இல்லியா, அதான் சீக்கிரமாக் கடையை எல்லாம் எடுத்து வச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க.
சகாவு டாக்சி டிரைவர் சொன்னார்.
வார நாள்லே எப்படியோ?
விடாமல் பிடித்தேன்.
எட்டரை ஆயிடும் சேட்டா.
சென்னை அண்ணாசாலையை அகலத்தைக் குறைத்து தெற்கு வடக்காக இழுத்து வைத்து நீட்டினாற்போல் எம்.ஜி.ரோட் என்ற மகாத்மா காந்தி வீதி. நாலு கடைக்கு ஒரு கடை ஆலப்பாட் ஜுவல்லரி. ரெடிமேட் துணிக்கடை. பேக்கரி. அழுக்குக் கட்டடமாக ஒரு தியேட்டர். பானரில் மோகன்லால் சிரிக்கிறார் – படம் ‘ஹரிஹரன் பிள்ள ஹாப்பியாணு’.
லாலேட்டன் ஹாப்பியல்லா. துக்கத்திலாணு.
டிரைவர் சகாவு சொன்னார். படம் ஊத்திக்கிச்சாம்.
ஹோட்டலில் டி.வியைப் போட்டதும், கிரேனின் உச்சியில் உட்கார்ந்து காமரா கீழே பார்க்க, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டை போடத் தயாராக மம்முட்டி. சரசரவென்று கீழே வந்து கிரேனை விட்டிறங்கி, காமிராவைத் தூக்கிக் கொண்டு பச்சையிலைக் காட்டுப் பிரதேசத்தில் வளைந்து வளைந்து கேமிராமேனும் உதவிகளும் ஓட, முன்னால் மம்முட்டி யாரையோ புரட்டி எடுத்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறார். மூணு நிமிஷத்துக்கு மேலே நீளும் ஒற்றை ஷாட் மம்முட்டி நடித்து வெளிவர இருக்கும் புதுப்படத்துக்காம்.
மம்முட்டி காட்டிலும் சென்னைப் பருவ மழைதான் என்று சாரதி சொன்னது நினைவு வர, சானலை மாற்றியதில் கைரளி டிவி. மார்க்சிஸ்ட்கள் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனம் என்று கேள்வி.
கைரளியில், அவர்களின் தற்போதைய சூப்பர் ஸ்டார் காங்கிரஸ்காரர் கருணாகரன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரரான ஏ.கே.ஆண்றணியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கேரளத்தின் கஷ்டம் எல்லாம் விடியும் என்பதே அவருடைய உக்ரன் பிரசங்கத்தின் சாராம்சம்.
அயர்ந்து தூங்கிவிட்டுப் பாதி ராத்திரியில் எழுந்து பார்க்க, அணைக்காமல் விட்ட டி.வியில் திரும்பக் கருணாகரன். ஆண்றணியை இறக்கி வீட்டுக்கு அனுப்பாமல் இவர் கண் துஞ்சுவார் என்று தோன்றவில்லை.
பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது கருணாகரனைக் காணவில்லை. மார்க்சிஸ்ட் தினப்பத்திரிகை தேசாபிமானிக்காக ஸ்டைலாயிட்டு ஒரு விளம்பரம்.
தமிழ் எழுத்துக்காரன் அசோக் மித்ரா.
செய்தி வாசிக்கும் புஷ்டியான பெண்ணின் சோனியான குரல்.
தெருவில் தீயணைப்பு வண்டிகள் மணிச்சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறதாகத் தோன்றுகிறது.
இந்தியன் ஏர்லைன்ஸில் கொடுத்த சைவ சாசேஜ் போன்ற நூதன வஸ்துக்களைச் சாப்பிட்டு, பிளாஸ்டிக் போத்தலில் வழங்கப்பட்ட மூணேகால் டீ ஸ்·பூன் மினரல் வாட்டர் குடித்தால் அஜீர்ணத்தால் இப்படி அபத்தக் கனவு வரும் போல.
டிவியை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.
******************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 3
அப்பமும் ஸ்ட்யூவுமாகக் காலையில் பசியாறினேன். ப்ரேக்·பாஸ்டை மலையாளத்தில் ப்ராதல் என்கிறதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை – தகரம் மிகாமல் படிக்கவும்.
இந்துவும், எக்ஸ்பிரஸ்ஸ¤ம் இல்லாதபோது மலையாள மனோரம ஈயப்படும் என்பதால் அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரிக்க முதல் பக்கத்தில் நேற்று ராத்திரி எரணாகுளம் நேப்பாளி மார்க்கெட்டில் தீப்பிடித்தம். கடைகள் கத்திச்சு சாம்பலாயி.
எம்.ஜி.ரோட் நடைபாதைக் கடைகளை ஒழித்துக்கட்டி, கொஞ்சம் ஓரமாக அங்காடி ஏற்படுத்தி அங்கே நிறைய நேப்பாளிகளை, தமிழன்மாரைக் குடியேற்றிவிட்ட இடத்தில் தீவிபத்து.
நேப்பாளிகள் இல்லாத எரணாகுளம் மகாத்மா காந்தி வீதி ஏற்ற இறக்கங்களும், சிமிண்ட் பலகை அங்கங்கே நடுவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நடைபாதையுமாக உயரந் தாண்டலும் நீளந்தாண்டலும் பழகத் தோதாக விரிந்து கிடந்தது.
பலகை இருக்கும் இடத்தில் புதுசாகத் துணிக்கடை பரத்திக் கொண்டிருக்க, டவுண்பஸ்ஸில் எடுபிடியாள் கூவியழைத்துக் கூட்டம் சேர்க்கிற சத்தம். மலை கயறி வந்த அய்யப்ப சாமிகள் எல்லா மொழிகளிலுமாக தாண்டிக் குதித்து நடந்து கொண்டிருந்தார்கள்.
கடைகளைக் காரியம் ஒன்றுமில்லாமல் பார்த்தேன். அதெல்லாம் மாக்சி விற்கிறவை. சேச்சிகளுக்கு மாக்சியில் வல்ய இஷ்டம் வரக் காரணம் என்ற யோசனையோடு திரும்ப ஓட்டல் படியேறியபோது ‘வை(கி)ட்டு ஆறு மணிக்கு டாக்சி எத்தும்’ என்றார் வரவேற்பாளர். ஆலப்புழை போகத்தான்.
அவ்வளவு தாமதமானால் வேண்டாம். நாளைக்கே போயிக்கறேன்.
மலையாள மனோரமாவின் மற்ற பக்கங்களை மேய்ந்தபோது, தொண்ணூற்று மூன்று வயதான மூத்த மலையாளக் கவிஞர் பாலா நாராயணன் நாயருக்கு மாத்ருபூமி விருதாக இரண்டு லட்சம் ரூபாயும், தந்தப் பேழையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார் பிரசித்த தமிழ் எழுத்தாளர் அசோக் மித்ரன்.
சுந்தர ராமசாமியைச் சேர்த்து சுந்தரராமசாமி என்று எழுதுவது எவ்வளவு தப்போ அதைவிடத் தப்பு அசோகமித்திரனைப் இரண்டாக்கிப் பொட்டும் வைத்தது. ஆனாலும் இது அசோக் மித்ராவைவிட எவ்வளவோ பரவாயில்லை.
மலையாள எழுத்தாளரைக் கவுரவிக்கப் பிறமொழி எழுத்தாளரை நீங்கள் அழைப்பது போல் எங்கள் ஊரில் நடக்காது என்று அ.மி சேட்டன்மாரைப் புகழ்ந்து சொன்னதாகப் பத்திரிகைக் குறிப்பு.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இலவச இணைப்பும் உண்டு. மகா சோனியான அந்தப் பதினாலு பக்க இணைப்பில் பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு தொழிற்சாலையில் வாட்ச்மேனான கோபி மேனோனோடு பேட்டி. என்ன விசேஷம் என்று கேட்டால், புள்ளி ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். 1970களின் இறுதியில் வன்விஜயம் நேடிய தெலுங்குப் படமான ‘டைகர் ராணி’ மூலம் வெற்றியைக் குவித்து, அடுத்து மலையாளத்தில் ‘இனி அவன் உறங்கட்டே’ என்று இளைஞர்களைத் தூங்கவிடாமல் அனுராதாவை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து கமலஹாசனை நாயகனாக்கி ‘மற்றொரு சீத’ எடுத்து, அப்புறம் அடுத்த படங்களில் கைக்காசு எல்லாம் இழந்து இப்போது காக்கி யூனிபாரத்தோடு காவல் காரனாக நிற்கிறார், பாவம்.
போதாக்குறைக்கு இவர் தற்போது வேலை பார்க்கும் ·பாக்டரியில் ஏதோ படப்பிடிப்பு என்று அண்மையில் ஒரு கோஷ்டி வந்திறங்கியபோது, ‘சேட்டா, வாட்ச்மேன் வர்றதுபோல ஒரு சீன் இருக்கு. நடிக்கிறியா?’ என்று கேட்டு இவருடைய பூர்வகதை தெரியாதவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்களாம்.
‘முப்பத்தஞ்சு எம்.எம் பாக்யம், எழுபது எம்.எம் நிர்பாக்யம்’ என்று சாதுவாகத் தலைப்புப் போட்டு மனோரமா பிரசுரித்திருந்த செய்தி, தமிழ்ப் பத்திரிகைக்குக் கிட்டியிருந்தால் தலைப்பு என்னவாக இருக்கும்?
‘கமலஹாசன் படத் தயாரிப்பாளர் காவல்காரனானார்’.
***********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 4
‘கனவான்களே, சீமாட்டிகளே, அவரை(அவனை)ப் பிடித்து விட்டோம்.’
சாயந்திரம் எல்லாச் சானலிலும் சதாம் ஹ¤சைன். மாட்டுத் தரகன் போல அவர் பல்லைப் பிடித்துப் பார்த்து, தலையில் பேன், பொடுகு இருக்கா என்று தடவினதை விடாமல் லூப்பில் போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தில் யாருமே ‘சதாம் கிடைச்சாச்சு, சரி. வெப்பன்ஸ் ஓ·ப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் எங்கேப்பா?’ என்று கேட்காதது ஆச்சரியம் தான்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதால் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லி ஈராக்கில் நுழைந்து, இப்போது சதாமைப் பிடிக்கத்தான் அங்கே போனதாக பி.பி.சி, சி.என்.என் தொடங்கி உள்ளூர் சானல் வரை நீளும்படியான ரீல் விடுவதைப் பத்து நிமிடத்துக்கு மேல் பார்க்கப் பொறுமையில்லாமல், வெளியே வந்தேன்.
அந்த மனுஷர் தான் ஆகட்டும். இப்படிப் பசுமாடு போலவா தேமேன்னு நிப்பார்? கைத்துப்பாக்கியை எடுத்துப் பொட்டில் வைத்துச் சுட்டுக்கொண்டு பரலோகம் போகவேண்டாமோ? அதுதானே வீரத்தின் லட்சணம்?
ஓட்டல் ரிசப்ஷனில் டி.வி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதானே.
திரும்பத் தெருவில் இறங்க, ஒரு புத்தகக்கடை கண்ணில் பட்டது. கூட்டமும் இருந்தது. கிறிஸ்துமஸ், புதுவருட வாழ்த்து வாங்க நிற்கும் கூட்டம். டி.சி புக்ஸ், கோட்டயம் பிரசுரித்த ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்த அலமாரிகளின் பக்கம் தப்பித் தவறிக்கூட எந்த மலையாளியும் போகவில்லை.
மலையாளம் அகராதி புதுசா வந்திருக்கு சார்.
கடைச் சிப்பந்தி காட்டிய இடத்தில் 2003 செப்டம்பரில் புதுப்பதிப்பு வெளியான மலையாளம் – ஆங்கிலம் அகராதி.
இதே அகராதியின் 2001 பதிப்பு என்னிடம் இருக்கிறது. இதில் ‘முத்தமிழ்’ என்பதற்கு ‘தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்ற மூன்றும் சேர்ந்த மொழி’ என்று அபத்தமாக விளக்கம் எழுதியிருந்ததைப் படித்துக் கடுப்பாகி, முத்தமிழ் என்றால் என்ன என்று டி.சி புக்ஸ், கோட்டயத்துக்கு விவரமாக எழுதிப் போட்டேன். அது போன வருடத் தொடக்கத்தில். அவர்களும் ஏகத்துக்கு வருந்தி, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம் என்று வாக்களித்திருந்தார்கள்.
புதிய பதிப்பிலும் முத்தமிழ் அப்படியே தான் இருக்கிறது.
******************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 5
புத்தனங்காடி. ஆலப்புழைக்குத் தொட்டடுத்த இடங்கழிப் பிரதேசம். தென்னை மரங்கள் அடர்ந்த பரம்பு. நடுவில் ஒரு பதினாலு கெட்டு வீடு. என்றால் பதினாலு கோணம். அதாவது சின்னதும் பெரிசுமாகப் பதினாலு மாடங்கள். தேக்கு மரத்தால் செய்து தச்சு சாஸ்திரப்படிக்கு உருட்டி அமைத்துத் தூக்கி நிறுத்தியவை. மரமும், ஓடும், சுண்ணாம்புமாக எது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று புரியாதபடிக்கு இழைத்து இழைத்துக் கலந்து சேர்த்துக் கட்டிய இருப்பிடங்கள்.
தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் வாசல் நிலை. ஏறிச் செல்ல நயமான மரப்படிகள். பாதி வரைக்கும் அறுத்து ஒரு கதவும், மேல் பாகம் இன்னொரு பகுதிக் கதவும். கீழ்க் கதவை அடைத்து, மேலே உள்ளதை அடுத்துச் சாத்தி, மணிச் சித்திரத் தாழை இழுத்துச் செருகினால் உள்ளே ஈசல் கூட நுழைய முடியாது.
இந்தத் தரவாட்டின் காரணவராக, மருமக்கள் தாயம் மரபாகிப் போன வீட்டோடு இருக்கப்பட்ட மூத்த மருமகனாக, அனந்திரவர்களான வீட்டுப் பிள்ளைகளை அதிகாரம் செய்துகொண்டு, குடை பிடித்தபடி படகில் போய், பக்கத்துக் கிராமத்தில் பச்சைக் கறிகாயும், மீனும் வாங்கி வந்து, நெல் பாட்டத்தில் முண்டு வலித்துக் குத்தி நடந்து விதைப்புப் பணி நோக்கியிருந்து, சாயந்திரம் குளித்து அம்பலத்தில் தொழுவதற்கு நெற்றியில் சந்தனமும் மேலே வெற்றுடம்போடும் நாலு முழ முண்டுடுத்தி நடந்து தேய்ந்து ஒரு நாள் மூச்சு நின்று இங்கேயே பலா மரத்தின் சுவட்டில் தகிக்கப்பட்டு இடிந்து போன நினைவு மண்டபமாகப் போனவன் நானாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் அந்தக் கூட்டில் புகுந்து கொள்ள ஒரு சிரமமும் இல்லை. அவ்வளவுக்கு இந்தச் சூழல் மனதிலோ மரபணுவிலோ ஆழமாகப் பதிந்திருக்கிறது.
எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிகிற வேம்பநாட்டுக் காயல். அந்தி வண்ணம் பூச ஆரம்பித்திருக்கும் வெள்ளப் பெருக்கில் அங்கங்கே மீனுக்காகத் தண்ணீரில் மூழ்கும் பறவைகள் கும்க் கும்க் என்று மெல்லச் சத்தம் கூட்டுகின்றன. முக்குளித்து அலகில் மீனோடு மீண்டும் எவ்விப் பறக்கின்றன. நீர்த் தாவரங்கள் நீரோடு மிதந்து அங்குமிங்கும் ஒரு நிமிடம் ஒதுங்கி, அது நிலையான இடமில்லை என்று படத் திரும்ப நகர்கின்றன.
டப்டப் என்று பக்கத்தில் எங்கேயோ மோட்டார் படகு சத்தம். கையால் துழைத்துப் போகிற படகில் ஒருத்தன் வாழைக் குலைகளை ஏற்றிக் கொண்டு, வேகவேகமாகத் துடுப்புப் போட்டுப் போகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்து பீடி வலிக்கிற கிழவருக்கு அருகே கிடைமட்டத்தில் ஒரு பழைய சைக்கிள். அக்கரையில் ஏதோ ஒரு கிராமத்துக்கு இன்னும் அரை மணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ போய்ச் சேர்வார்கள். போனதும் அங்கே மண்தரையில் அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவார். வாழைக்குலை பின் சீட்டில் அப்படியும் இப்படியுமாக ஆடித் தரையைத் தொட்டுக்கொண்டு நகரும். படகுக்காரன் தன் வள்ளத்தைத் தன் கிராமத்துப் படகுத்துறையில் சேர்த்துக் கட்டிவிட்டு கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வீட்டுக்கு நடப்பான். அது படகுத் துறைக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.
குளிர் மணக்கும் காயல் பக்கம் மெல்லிய கீற்றாக டீசல் வாடை. படகின் எஞ்ஜின் அணைக்கப்பட்டு திரும்ப உயிர் பெற்றுப் புகையை உமிழ்கிறது. கடல் பறவை போல் இரைகிற படகின் அழைப்புச் சத்தம். தூரத்தே சீன வலைகள் தண்ணீரில் குனியத் தயாராக நிற்கின்றன.
வன்னு கேரு சாரே. நமுக்கு ஒண்ணு காயலில் கெறங்ஙி வராம்.
படகுக்காரன் இடுப்பு லுங்கியை முட்டுக்குக் கீழே தழைத்துக் கொண்டு அன்போடு விளிக்கிறான்.
ஏறி உள்ளே போகிறேன். மீன் வாடை. இப்போதுதான் கூடை இறக்கி இருக்க வேண்டும்.
மேல் தளத்தில் ஓய்வாக உட்கார்ந்து கேம்கார்டரை எடுக்கிறேன்.
தூரத்தில் தெரியும் தென்னந்தோப்புகளை நோக்கி நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு படகு முன்னேறுகிறது. மேற்கே இறங்கிக் கொண்டிருக்கும் சூரியன். மேலே வட்டம் போட்டு நகரும் ஒற்றைப் பருந்து. சீரான கதியில் சஞ்சரிக்கும் காற்று.
அப்புறம் கிராமங்கள். கரைக்கு இரண்டு பக்கத்திலும். ஒரு சாட்டம் சாடினால் அங்கே போய் யார் வீட்டு வாசலிலாவது விழுந்து விடலாம்.
எல்லா வீட்டிலும் மாக்சி அணிந்த பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் காயலில் சமையல் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முண்டும் ப்ளவுஸ¤ம் உடுத்திய நாடன் மலையாளிப் பெண்ணை இனிமேல் செம்மீன் டி.வி.டியிலும் கள்ளி செல்லம்ம வி.சி.டியிலும் தான் ஷீலா உருவத்தில் பார்க்க வேண்டும்.
பல வர்ணத்தில் லுங்கி அணிந்து முழங்காலுக்கு வெகு மேலே உயர்த்திக் கட்டி பீடி பிடித்தபடி நடக்கிற ஆண்கள் தான் கேரளத் தனிமையைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம்.
பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சூடிதார் கன்னியர் சைக்கிள் மணி ஒலித்துக் கொண்டே வருகிறார்கள். ஒருத்தி வெள்ளையாகச் சிரித்துக் கையை அசைக்கிறாள். மகள் நினைவு வரத் திரும்பக் கையசைக்கிறேன்.
கரையில் வேகமாகப் போகிற டெம்போ பெட்டிக்கடையில் நிற்கிறது. கால்கேட் விளம்பரமும், ஒருவருக்காக உருவாக்கப்பட்ட மற்றவர் பற்றிய வில்ஸ் சிகரெட் விளம்பரமும் (சிகரெட்டும் புற்றுநோயும் போல) எழுதிய கடை. நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் அலமாரியிலிருந்து டிடர்ஜெண்டோ சோப்போ எடுத்துத் தருகிற மாக்சிப் பெண் ஒரு வினாடி என் படகை அசிரத்தையாகப் பார்த்துவிட்டு வியாபாரத்தைத் தொடர்கிறாள்.
பக்கத்து வீடுகளில் மின்சார விளக்கு அணைத்து, நிலவிளக்கேற்றி நாம ஜபம் செய்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது.
அந்த விளக்குகள் தவிர வெளிச்சம் இல்லை. கருப்புத் திரவமாக இருட்டில் மினுமினுக்கும் காயல். தூரத்தில் சீன வலைகளை மீன் பிடிக்கத் தாழ்த்திக் கொண்டிருக்கிறவர்களின் சத்தம் காற்றில் கலந்து வருகிறது.
திரும்பலாம் என்கிறேன்.
********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 6
கேரளத்தில் சர்வசாதரணமாகப் பார்க்கவும், கேட்கவும் கிடைக்கும் இரண்டு வார்த்தைகள் – ‘கள்ளு’ மற்றும் ‘பணிமுடக்கு’.
தலை குளிக்காத மலையாளிப் பெண்ணைக்கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், கள்ளுக்கடையில்லாத கேரள கிராமத்தைப் பார்க்க முடியாது.
பணிமுடக்கு என்ற வேலை நிறுத்தம் அதே போல் வருடம் முழுக்க நடக்கிற விஷயம். யார் ஆண்டாலும், யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பணிமுடக்கு இல்லாமல் ஒரு மாதமும் கழியாது.
வேம்பநாட்டுக் காயல் பக்கம் கால் வலிக்க நடந்து விட்டுப் புட்டும் கடலையுமாகக் காலைச் சாப்பாடும், இன்னும் நாலு வருஷத்துக்குச் சேர்த்து வைத்து மிக நீண்ட குளியலும் முடித்து ( இந்தச் சுகானுபவம் சென்னை நண்பர்களுக்குச் சொல்லாமலேயே புரியும்) டபுள் முண்டான எட்டு முழ வேட்டியும் ஷேர்ட்டுமாய் அம்பலப்புழைக்குப் புறப்படத் தயாராக இறங்க, பணிமுடக்கு குறுக்கே புகுந்து ஓடியது.
டாக்சி ஓட்டிக்கான் பாடில்ல. கல்லு கொண்டு எறியும்.
யாரு?
பணிமுடக்குக்கார் தன்னே.
அதான்பா, யாரு ஸ்டிரைக் செய்யறது?
சிவசேனா, சாரே.
பால் தாக்கரேயின் சிவசேனை ஆள் பலமுள்ள கட்சிதான். அது மராத்திய மாநிலத்தில். இந்த நிமிடத்தில் ‘சாம்னா’ படித்துக் கொண்டு, ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ் கி ஜெய்’ சொல்லிக் கொண்டு அங்கே லட்சக் கணக்கில் சைனிக்குகள் வெப்ப மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கேரளத்தில்? இருக்கப்பட்ட சிவசேனைக் காரர்களை நாலு மடேடார் வேன்களில் அடைத்துக் கொண்டு வந்துவிடலாம். அதிலும் இரண்டு வேன் மும்பை ரிஜிற்றேஷனோடு, பதினெட்டுப் படி ஏற வந்த மராத்திச் சாமிகளாயிருக்கும்.
என்ன போச்சு? நீர்க்கோலி (தண்ணீர்ப் பாம்பு) நினைத்தாலும் அத்தாழம் (ராச்சாப்பாடு) முடக்கும் கேரளத்தில், சிவசேனை நினைத்தாலும் ஜாம்ஜாமென்று பணிமுடக்கலாம். யார் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தாலும் உடனே அன்போடு ஆதரித்து அதை வெற்றிகரமாக்கக் கேரளீயர் கொடுக்கும் ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்ல முத்தமிழில் (டி.சி.புக்ஸ், கோட்டயம் பதிப்பித்த மலையாள அகராதிப்படியான பொருள் கொள்க) வார்த்தை இல்லை.
விஷயம் இதுதான். சபரிமலை யாத்திரைக்கு, ஆன்றணியின் ஜக்ய ஜனாதிபத்ய முன்னணி அரசு பஸ் டிக்கட்டுக்கு மேல் சர்சார்ஜ் விதிக்க, மந்திரிசபையில் கதாகத வகுப்பு (போக்குவரத்து) மந்திரி பகுமானப்பட்ட பாலகிருஷ்ண பிள்ளை அதை நடப்பாக்க, போராட்டம் என்று மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சபரிமலை போகக் கிளம்பிய சிவசேனைக் காரர்கள் வண்டியோடு பத்தனந்திட்ட பஸ் ஸ்டாண்டில் அதிரடியாகப் பிரவேசிக்க, பொலீஸ் தடியடியில் மனுஷரும் மாடும் எல்லாம் காயம் அடைய, அடுத்த நாள் தென் மாவட்டங்களில் சிவசேனா பந்த் அறிவிப்பு.
இவ்வளவுக்கும் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழை வட்டத்தில் முந்திய நாள்தான் ஏதோ உள்ளூர் விஷயமாகச் செறிய தோதில் ஒரு ‘பந்த்’. கடையடைப்பு. ஆனால் என்ன? இன்னொரு நாள் பணிமுடக்கு என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?
சாயந்திரம் ஐந்து மணிக்குப் பணிமுடக்கு முடிந்ததும் அம்பலப்புழை போகலாம் என்று தள்ளிப்போட்டு, காயலைப் பார்க்க பிரம்பு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கரிக்கயும், சம்பாரமும் குடித்தபடி (என்றால் இளநீரும், மோரும்) கையில் எடுத்துப் போயிருந்த குந்தர் கிராஸின் ‘கிராப் வாக்’ நாவலை முழுக்கப் படித்துத் தீர்த்தேன்.
அப்புறம் எடுத்தது சில மலையாள வாரப் பத்திரிகைகளை. பாதிப் பக்கம் கருணாகரன் வெர்சஸ் ஆன்றணி. முன் முக்ய மந்திரி தோழர் நாயனார் தில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயன்ஸ் இன்ஸ்ற்றிட்யூட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கருணாகரனும், மார்க்சிஸ்ட் நேதாவு அச்சுதானந்தனும் அன்போடு கைகுலுக்குகிறார்கள். மார்க்சிஸ்ட் நட்பைக் கொண்டாடுவதற்காக, கருணாகரனின் மகனும் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான முரளீதரன் லண்டனுக்கு அவசரமாகப் புறப்பட்டுப்போய், கார்ல் மார்க்ஸ் சமாதியில் மலரஞ்சலி செலுத்தி ஸ்வெட்டரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
கருணாகரன் ஆதரவாளர்களும், ஆன்றணி ஆதரவாளர்களும் தில்லிக்குக் குளிரில் நடுங்கிக் கொண்டு படைபட்டாளமாகக் கிளம்பிப்போய் கதவிலக்கம் பத்து, ஜன்பத் வீட்டு வாசலில் சோனியா காந்தியிடம் புகார், பதில் புகார் என்று பட்டியல் கொடுக்க ம·ப்ளரைத் தலையில் சுற்றிக் கொண்டு தேவுடு காக்கிறார்கள். ‘அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார் – நாளைக்கே ஆன்றணியை அம்பேலாக்கிடுவார்னு புரிஞ்சு போச்சு’ என்றோ, ‘அம்மா கருணாகரன் பேரைக் கேட்டதுமே மூக்கை உறிஞ்சினார். அந்த ஆள் அரசியல் ஆட்டம் க்ளோஸ் இனிமே’ என்றோ சந்தோஷத்தோடு உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருகிறார்கள்.
கேரளா காங்கிரஸ் மாணி குழு, கேரளா காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை குழு, இடது சாரியிலிருந்து வெள்ளை சாரியுடுத்து வலம் தாவிய முன்னாள் மார்க்சிஸ்ட் கௌரி அம்மாளின் கட்சி, லீக், தேசலாகிப் போன சி.பி.ஐ என்று ஏகப்பட்ட கட்சிகள், குழுக்கள், தலைவர்கள். நம்மூர்ப் பத்திரிகைகள் சினிமாக்காரர்களைப் பிடித்துத் தொங்க, மலையாளிகளுக்குச் செய்தித் தீனி போடுவது இந்த அரசியல் தான்.
இதற்கு இடையே கேரளச் சட்ட மன்ற உறுப்பினர்கள் காடு மலையெல்லாம் கஷ்டப்பட்டு ஏறி, அவர்கள் பிரதேசத்து நதிகளிலிருந்து தமிழகம் தண்ணீர் திருடுகிறதா என்று துப்பறியத் தொடங்கி வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்கள். தண்ணீர் திருட்டெல்லாம் ஒன்றுமில்லை, நதி போகிற திசையே தமிழகம் நோக்கித்தான் என்று ஈன சுவரத்தில் காலைப் பிடித்தபடி சொல்ல, அதிகாரிகள் ‘அன்னிக்கே இதானே சார் சொன்னோம்’ என்று முணுமுணுக்கிறார்கள்.
ஆன்றணியோ பரப்பிரம்மமாக ‘சதாம் உசைனைக் கவுரவமாக விசாரிக்க வேண்டும்’ என்று ஜார்ஜ் புஷ்ஷ¤க்குக் கோரிக்கை தெரிவித்து அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்.
பத்திரிகையில் வாசகர் கடிதம் பகுதியில், அமெரிக்காவில் சிக்காகோவில் உட்கார்ந்து கொண்டு சாக்கோ கணியாலில் என்ற மலையாளி இன்னொரு டிபிக்கல் மலையாளி நடப்புக்காகக் கவலைப்பட்டு எழுதியிருந்தார். அது திடீர் விடுமுறை பற்றியது.
கேரளத்தில் எந்த மாஜி மந்திரிக்குச் சிவலோக பதவி கிடைத்தாலும், உடனே சர்க்கார் விடுமுறை. ·பைலை மூடி வைத்துவிட்டு, சேட்டரும், சேச்சிமாரும் குடையோடு வீட்டுக்குப் பகல் தூக்கம் போடத் திரும்ப, அரசு ஊழியர்க்குச் சம்பளப் பணம் போன்ற வகையில் இருபது கோடி ரூபாய் தண்டத்துக்குச் செலவு.
கிட்டத்தட்ட அறுபது மாஜி மந்திரிகள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கு இப்பவோ அப்பவோ என்று நிற்கிறது. கேரளம் தாங்குமா இதை என்ற சிக்காகோ சாக்கோச்சனோடு நானும் நொந்து நூலாகிப் போனேன்.
திரும்பவும் டி.வி. திருவனந்தபுரம் திரைப்பட விழா.
சோமரத்ன திஸ்ஸநாயகா என்ற இலங்கை இயக்குனர் எடுத்த ‘லிட்டில் ஏஞ்ஜல்’ படம் பற்றிய உரையாடல். மலையகத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த ஒரு தமிழ்ச் சிறுமிக்கும், தோட்ட முதலாளி மகன் சிங்களச் சிறுவனுக்கும் நடுவே இயற்கையாக ஏற்படும் நட்பு பற்றிய அழகான அந்தப் படத்தை யார் பார்க்கிறார்களோ இல்லையோ, சுஜாதாவும் மணிரத்தினமும் கட்டாயம் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து, முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்களும் ஆங்கில, சிங்கள சப் டைட்டில்களுமாக, ‘இன் தி நேம் ஓ·ப் புத்தா’ என்ற இலங்கைப் படம் பற்றி அதைத் தயாரித்த மிஸ்டர் டச்வாட்டரோடு பேட்டி. டச்வாட்டர் சரளமாக மலையாளத்தில் சம்சாரிக்க ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்புறம் தான் மனதில் ஒரு பளிச். புள்ளிக்காரன் மலையாளிதான். தொடுப்புழ என்ற குடும்பப் பெயர். அதை அதிரடியாக மொழிபெயர்த்து டச்வாட்டர் ஆக்கி விட்டார்.
லண்டனில் தன் ஈழத் தமிழ் நண்பர்கள் விவரித்த சோகங்களைக் கேட்டு அதிர்ந்து போய், அனுதாபம் கொண்டு அவர்கள் நாடு விட வேண்டி வந்த காரண காரியங்களைச் சித்தரிக்கும் இப்படத்தை உருவாக்கியதாகச் சொன்னார் ராஜேஷ் டச்வாட்டர். லோ பட்ஜட் படம் இல்லை என்பதால் விவரணையோடு கூடிய காட்சிச் சித்தரிப்புகள். மலையாள பூமியிலேயே இலங்கைச் சூழ்நிலையைத் தத்ரூபமாகப் பதிவு செய்த படத்தின் காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். சொந்த பூமியை விட்டுச் சாரி சாரியாக நடக்கும் குடும்பங்கள், நடைக்கு இடையே ஓடி வந்து மகனின் கல்லறையில் அழும் அன்னை, கொட்டும் மழையில் கையில் இறந்த மகனின் சடலத்தோடு புரட்சிப்படைத் தலைவன் முன்னால் நடந்து சடலத்தைக் கிடத்தி, ‘நாம் இப்படி வித்துக்களையே பறிகொடுத்திட்டு இருக்கோம். அப்புறம் அறுவடைக்கு என்ன மிஞ்சும்?” என்று கதறும் தந்தை..
மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கண்ட சில காட்சிகளிலேயே தெரிந்து போனது.
லண்டனில் அரங்கு நிறைந்து படம் ஓடியதாகப் பேட்டியில் சொன்னார் ராஜேஷ். தமிழ்நாட்டில் இப்படம் பார்க்க வாய்ப்புக் கிட்டுமா என்பது தெரியாது. ஆனால், தமிழ் டிவி சானல்களிலும் இது பற்றிப் பேசப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரியும்.
நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோச·ப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப் படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்.
சிவசேனைக்கு நன்றி. ஒரு பகல் பொழுது உருப்படியாக இப்படிக் கழிய எனக்கு வசதி செய்து கொடுத்ததற்கு.
சேட்டா, அம்பலப்புழ போகான் கார் வன்னெத்தி.
*********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 7
கோயில் வாசல் கடைகளுக்கு என்று ஒரு பொதுத்தன்மை உண்டு.
பிஸ்லரி மினரல் வாட்டர் பாட்டில், கோலக் குழல், பிளாஸ்டிக்கில் சிறைப்பிடித்த தெய்வத் திருப்படங்கள், பாசிமணி மாலை, இரண்டாவது தடவையாக டேப் ரிக்கார்டரில் போட்டால், யேசுதாஸ் உள்ளே சிக்கி அழும் பக்தி கேசட்டுகள், அமிர்தாஞ்சனம், கொண்டை ஊசி, பம்பரக் கயிறு, சீசனில் நூல் கயிற்றில் தூக்குப் போட்டுப் பாம்புப் பஞ்சாங்கம். அடுத்த வருஷத்துத் தினசரிக் காலண்டர்.
அம்பலப்புழை கோயில் வாசல் கடைகளில் மலையாளத்தில் மாத்ருபூமி காலண்டர். மற்றது முன் பத்தியில் உள்ளவை.
சேட்டா செருப்பு ஊறிப் போகணும். ஷேர்ட் இட்டுப் போகான் பாடில்யா.
கடைக்காரர்களின் கரிசனத்துக்கு நன்றி சொல்லி நடந்தேன்.
கடைகளைக் கடந்து இடது புறம் திரும்பினால் பொந்து போல் சிறிய வாசல்.
ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர் ஆக்ரஹிக்குன்னது முழுவன் நேரத்தே கிட்டும். ஸ்வர்ணமோ, ஸ்த்ரியோ, பின்னெ லோட்டரியில் வல்ய பம்பர் பிரைஸோ.
ஒண்ணும் வேணாம்ப்பா. கோயில் வாசல்லே விட்ட செருப்பு காணாமல் போகாமல் இருந்தால் போதும்.
பதில் சொல்ல வாயை எடுத்தால், அம்பல வாசலில் மோதிரக் கடை பரத்தியிருந்தவன் டியூப் லைட் வெளிச்சத்தில் ‘வெள்ளி நக்ஷத்ரம்’ சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் டேப் ரிக்கார்டரில் ‘ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர்.. கேவலம் நூறு ரூபயாணு’.
கேவலம் நூறு ரூபாய் கொடுத்து நவரத்தின மோதிரத்தை வாங்கி விரலில் போட்டுக் கொண்டு, தோளில் துணி சஞ்சியில் தங்கக் கட்டிகளும், கூடவே ஒரு தலை குளித்த ஸ்திரியுமாகச் சென்னையில் வீட்டுப் படியேறத் துணிச்சல் இல்லாததால், சாதுவாக அம்பலத்தின் உள்ளே நடந்தேன்.
முணுக் முணுக் என்று ஏழெட்டு ட்யூப் லைட் வெளிச்சத்தில் நிழலாட்டம் காட்டும் கம்பீரமான அம்பலத்தின் மரக் கூரை. சுற்றம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீபங்கள். ஒலிபெருக்கியில் பி.லீலாவின் குரலில் ஒழுகி வரும் நாராயணீயத்தில் பாதாதிகேச வர்ணனை.
எதிர்பார்த்ததுபோலவே வெள��