ஒரு தடவை, சொர்க்கத்தில் இருக்கும் பிதாவே சொல்லு. அதுதான் பிராயச்சித்தம்

Excerpts from translation y’day
“சொல்லு ஜெசிக்கா”, பாவமன்னிப்புக் கூண்டின் உள்ளே இருந்து பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னார்.

”என் சரீரத்தில் பாவம் நடந்துச்சு”

“ஙூம்”

“எனக்கு பெரிசா பிராயச்சித்தம் சொல்லுங்க சாமி”.

“என்ன பாவம் செஞ்சே ஜெசிக்கா?”

“நாலஞ்சு மாசம் முந்தி நான் டியூஷன் படிக்க மலாக்கா ஹௌசில் புஷ்பாங்கதன்மாஸ்டர் ரூமுக்கு போயிருந்தேன். நான் கணக்குலே வீக்”.

“அதனாலே?”

“புஷ்பாங்கதன்மாஸ்டர் என்னைத் தொட்டார்”, நான் சொன்னேன். பிலாத்தோஸ் பாதிரியார் மௌனமாக இருந்தார்.

“முதல்லே கால் விரலைத் தொட்டார். அப்புறம் அவரோட கை மேலே மேலே ஏறி வந்துச்சு”.

“நீ சம்மதிச்சியா?”

“”எனக்கு ஒண்ணும் புரியலே. நான் உறஞ்சு போயிருந்தேன். புஷ்பாங்கதனை பிடிச்சு தள்ளிவிடாம நான் அசிரத்தையா இருந்தேன்”.

“ஙூம்”, பிலாத்தோஸ் பாதிரியார் சத்தமாக முனகினார்.

“கடைசியா எனக்கு நடுக்கம் போனபோது, அவரோட கை மேலே ஏறியிருந்தது”.

“நீ சம்மதிச்சியா?”

”இல்லே, நான் சட்டுனு அவருக்குள்ளே சாத்தானைக் கண்டேன். போ சாத்தானேன்னு சத்தம் போட்டுட்டு, அவர் மேஜை மேலே வச்சிருந்த மசி போத்தலைத் தட்டி விட்டுட்டு நான் ஓடினேன்”.

“குட்”.

“ஃபாதர் நோயல், என் சரீரத்துலே பாவம் நடந்தது. என் சரீரத்தை நான் வெறுக்கிறேன். என் மாமிசம் பலவீனமானது. அதனால் தான் எனக்கு டைபாயிட் வந்தது”.

“ஜெசிக்கா, உளறாதே. டைபாயிட் தண்ணியாலே பரவும் நோய்”, என்றார் பிலாத்தோஸ் பாதிரியார்.

“சாமி, நான் எப்பவும் குடிக்கிற தண்ணியைத்தான் அன்னிக்கும் குடிச்சேன்”.

“பாவசங்கீர்த்தனம் முடிஞ்சுதா?”

“ஙூம்”

“ஆகையால்”

“ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாயையும் அதிதூதரான புனித மிக்கேலையும் ஸ்னாபகரான புனித அருளப்பரையும் அப்போஸ்தலரான புனித இராயப்பர், சின்னப்பரையும், புனிதர் எல்லோரையும், தந்தையே உங்களையும் நம் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன், ஆம்மென்”, நான் சொன்னேன்.

“சரி, ஜெசிக்கா, நீ போகலாம்”.

“அய்யோ, பிராயச்சித்தம்?”

“பிராயச்சித்தம் ஒண்ணுமில்லே”

“அதெப்படி?”

“ஜெசிக்கா பாவம் செய்யலே”

“ அப்போ, பாவம் செஞ்சது யாரு?”

“மிஸ்டர் புஷ்பாங்கதன். வேறே யாரு?”

“புஷ்பாங்கதனோட பாவத்துக்கு பிராயசித்தம் என்ன?”

“இங்கே கிறிஸ்துவர்களோட பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் இருக்கு”, பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னார்.

அவர் கை கழுவப் போகும் அவசரத்தில் இருந்தார் என்று எனக்குத் தோன்றியது.

“அப்போ, கிறிஸ்துவர் இல்லைங்கறதாலே புஷ்பாங்கதன் தப்பிச்சாரா?”, நான் கேட்டேன்.

“பிறப்பாலும், ஞானஸ்நானம் வாங்காததாலும் புஷ்பாங்கதனோட ஆத்மா இறந்து போனது. அவர் ஒரு பாவி. அந்தப் பாவத்துக்கான தண்டனை இறுதித் தீர்ப்பு நாளில் புஷ்பாங்கதனுக்குக் கிட்டும்னு தெரிஞ்சா ஜெசிக்காவுக்கு சந்தோஷமா இருக்குமா?”

“சாமி, இறுதித் தீர்ப்பு நாள் வரைக்கும் நான் காத்திருக்கணும்னு சொல்றது சரிதானா?”, நான் கேட்டேன்.

“ஒரு சொர்க்கத்தில் இருக்கும் பிதாவே”

“ஒரு சொர்க்கத்தில் இருக்கும் பிதாவா?”

“ஒரு தடவை, சொர்க்கத்தில் இருக்கும் பிதாவே சொல்லு. அதுதான் பிராயச்சித்தம்”

“பிராயச்சித்தமா? நான் பாவம் செய்யலேன்னு நீங்க தானே சொன்னீங்க?”

“இப்போ பாவம் செஞ்சுட்டே. உனக்கு பொறுமை இல்லாம போனது” என்றார் பிலாத்தோஸ் பாதிரியார்.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன