சென்னை – விஸ்வரூபம் நாவலில் இருந்து – 1
(ஏப்ரல் 8 1904 சோபகிருது பங்குனி 27 வெள்ளி)
மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான நல்லுலகத்தையும் உய்விக்க வந்த சாட்சாத் மகாவிட்டுணு அவதாரமான கவ்னர் துரையவர்கள்.
இந்த மேலோரின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹாரம் வைத்தியநாத சர்மன் புத்ரனும் மேற்படி பட்டணத்து உன்னத நியாயசபை ஏற்படுத்தியபடி தற்போது பிரதான காராக்ரஹத்தில் தெண்டனை அனுபவிக்கிற அடிமை ஸ்மார்த்த ப்ராமணனுமான மகாலிங்கய்யன், வயது இருபத்தொன்பது, சமர்ப்பிக்கிற கருணை மனு.
இது யாதெனில், இந்தப்படிக்கு நடந்தது நடந்த கிரமத்தில் இது எழுதப்பட்டது. என் புத்தியில் நினைக்கிறபோது மேலே கிளம்பி வரும்படியான ரூபத்தில், சபையில் சொல்லுந் தரமானதோ இதெல்லாம் என்று கிஞ்சித்தும் யோசிக்காது இந்த லிகிதம் அமைந்திருப்பதை பெரியோர் மன்னிக்க வேணும். இப்படி ஆதியோடாந்தமாக உள்ளது உள்ளபடி துரையவர்களின் திவ்ய சமூகத்தில் லிகிதம் சமர்ப்பித்து பாதம் தொட்டு வந்தித்தால், இகத்தில் காராகிரஹ முக்தியும் பரத்தில் கதி மோட்சமும் கிட்டும் என்று மேன்மை பொருந்திய வக்கீல் துரையவர்கள் கடாட்சம் காட்டி அருளியபடி இதை எழுதுவிக்கலானேன்.
ஐயன்மீர். என் தகப்பன் வைத்தியநாத அய்யன் சுய முயற்சியாலும் துரைத்தனத்து உத்தியோக பெலனாகவும் நொங்கம்பாக்கத்தில் கட்டி எழுப்பிக் குடி போந்த ரெட்டை மாடி கிரஹம் ஒன்று உண்டு. அன்னாரும் என் தாயார் மாதுஸ்ரீ கோமதியம்மாளும் கைலாச ப்ராப்தி அடைந்த பிற்பாடு எனக்கும் என் இளைய சகோதரன் நீலகண்டய்யனுக்கும் நடுவில் அந்த வீடு பற்றிய வியாஜ்யம் ஏற்பட்டு கோர்ட்டுக்குப் போனோம். கனம் கோர்ட்டார் விதித்தபடி பாகப் பிரிவினன செய்து வண்ணாரப்பேட்டை பச்சையப்ப முதலியிடம் ரூ மூவாயிரம் விலை பேசி விற்கப்பட்டது அந்த நொங்கப்பாக்கத்து வீடு. விற்ற தொகை கைக்கு வந்ததும் நாங்கள் ரெண்டு சகோதரர்களும் அதை சரிசமமாகப் பாகம் செய்து கொண்டோம்.
அப்பால், மகாலிங்கய்யனான நான் என் மனையாள் லலிதாம்பிகையம்மாள் சகிதம் ஏற்கனவே பிரஸ்தாபித்த மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் ஆயிரத்து இருநூறு சதுஸ்ர அடியில் மங்களூர் ஓடு வேய்ந்து, காரைச் சுவர் எழுப்பி ஒரு நூதன கிரஹத்தை ஏற்படுத்திக் கொண்டு அங்கே குடி போனது நாலு கார்த்திகை முந்தைய ஒண்ணாம் தேதி. மேன்மை பொருந்திய துரைத்தனத்து கேலண்டர் படிக்கு அது இங்கிலீசு வருசம் ஆயிரத்து எண்ணூத்துத் தொண்ணூத்தொம்பது. தேதி விவரம் தெரியாததற்கு சர்க்கார் இந்த எளியோனை மன்னிக்க வேணும்.
என் பிதா வைத்தியநாதய்யன் என்னையும் என் சகோதரனையும் மிஷினரி பள்ளிக்கூடத்தில் கிரமமாகப் படிக்க வைத்தும் பதினாலு வயசுக்கு அப்புறம் எனக்கு படிப்பு ஏறாத காரணத்தால் அங்கே நிறுத்திப் போட்டார். பிற்பாடு, எங்கள் பெந்துவும் என் தகப்பனாருக்கு தாயாதி வழியில் ஒண்ணு விட்ட சகோதரனுமான அரசூர் சங்கரய்யர் மதராஸ் கருப்புப் பட்டணத்தில் ஸ்தாபிதம் செய்த புகையிலைத் தூள் கலந்த நாசீகா சூரணம் மொத்தமாகவும் சல்லி துட்டுக்கும் விற்கிற கடையில் வேலை கற்றுக் கொள்ள என்னை சம்பளம் ஏதுமில்லாத எடுபிடியாளாக இருத்தினார்.
என் சகோதரனும் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டவனுமான நீலகண்டய்யன் மதராஸ் கலாசாலை ஏற்படுத்திய பி.ஏ பரீட்சை கொடுத்து எம் தகப்பனார் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கியாதியோடு வகித்து வந்த நாவிகேஷன் கிளார்க் உத்தியோகத்தில் அமர்ந்து தற்போது நொங்கம்பாக்கத்திலேயே நூதன கிரஹம் ஏற்படுத்திக்கொண்டு பெண்டாட்டி, குழந்தைகள் சகிதம் சுகஜீவனம் செய்கிறான்.
நானோ சொற்பமான பள்ளிக்கூடப் படிப்பும் பொடிக்கடை உத்தியோகமுமாக பிதுர் ராஜ்யமாக பாகம் பிரித்து வந்த சொத்தை வைத்து தரக்கேடு இல்லாமல் வெங்கடேச அக்ரஹாரம் மேலே குறிப்பிட்ட ரெட்டை மாடி வீட்டில் யார் சிரத்தையிலும் படாமல் என்னைக் கட்டிய பெண்டாட்டியான லலிதாம்பிகை சகிதம் சாமான்யமான கிரகஸ்தனாக ஜீவனம் நடத்தி வந்தேன்.
லலிதாம்பிகை சென்னை ராஜதானி காஞ்சிபுரம் தாலுக்கா திருக்கழுக்குன்றம் கிராமத்தில் புரோகிதம் செய்து வந்து அற்பாயுசில் உசிரை விட்ட ஒரு பிராம்மணோத்தமரின் புத்ரியாவாள். அன்னாருடைய பெயர் எத்தனை யோசித்தும் கிஞ்சித்தும் நினைவு வராமல் தலையில் லிங்கம் முளைத்து நடமாடுகிற விநோதமான ஒரு உருவம் தான் சதா மனசில் வந்து நிற்கிறது. இந்த துர்ஸ்மரணைக்காக துரைத்தனத்தார், தலையில் லிங்கம் உள்ள பெயர் தெரியாத அந்த பிராமணன் மற்றும் என் சகதர்மிணி லலிதாம்பிகை ஆகியோரின் மன்னிப்பை யாசிக்கிறேன்.
எட்டு வருஷம் முன்னால், ரிக் வேத ஆவணி அவிட்டத்துக்கு முந்திய ஒரு சுபயோக சுபதினத்தில் இந்த லலிதாம்பிகை என்ற ஸ்திரியை நான் மாங்கல்யதாரணம் செய்து மனையாளாக்கிக் கொண்டேன். வருஷக் கணக்காக சதிபதியாக ஜீவித்தும், எங்களுக்கு சந்ததி ஏற்படாது போன கவலையை பொடிக்கடையில் என் கூட அடிமை சேவகம் பார்க்கும் இதரரோடு பகிர்ந்து கொண்டபோது அதிலே ஒருத்தன் கொண்டித்தோப்பு கன்னையா நாயுடு வைத்தியரிடம் போய்க் கலந்தாலோசித்து அவர் சொன்னபடிக்கு மருந்தும் சூரணமும் லேகியமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை விரசாகத் தீர்ந்து விடும் என்று தெரிவித்தான். அவனுடைய சிநேகிதர்களில் சிலபேருக்கு இதேபோல் சந்ததி விருத்தியில்லாமல் கிலேசம் கொண்டு அலைந்து, மேற்படி வைத்தியர் சகாயத்தால் தற்போது வீடு நிறைய குஞ்சு குளுவான்களோடும் சதா வயிற்றைத் தள்ளியபடி சிரம பரிகாரம் செய்யும் பத்னியோடும் ஷேமமாக இருப்பதாகவும் அவன் சொன்னான்.
நான் சொல்லிக் கொண்டு வந்ததில் திரும்பிப் போய் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருக்கிறது. நீடித்த கலாசாலை அப்பியாசம் இல்லாத காரணத்தால் இப்படி முன்னாலும் பின்னாலும் முட்டி மோதி துரையவர்கள் சமூகத்துக்கு லிகிதம் எழுதி சிரமப்படுத்துவதற்காக இன்னுமோர் ஆயிரம் தடவை மன்னிப்பு வேணும்.
கருப்புப் பட்டணம் பொடிக்கடையில் உத்தியோக நேரம் போக, தங்கசாலை பள்ளிக்கூட தமிழ் வித்வானும் என் இளம் பிராய சிநேகிதனுமான செங்கல்வராய முதலியோடு நூறு இருநூறு வருஷம் முற்பட்ட தமிழ் கிரந்தங்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை பரிசோதனை செய்து அவற்றை புஸ்தகமாக்க அச்சு யந்திரத்தில் ஏற்றுகிற காரியத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தேன். பழைய ஓலையில் உலா, தூதுப் பிரபந்தம், மடல், குறவஞ்சி இப்படியான வகைகள் தட்டுப்படுவது உண்டு. கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் என்று அமைந்த இவை சிருங்கார ரசம் மிகுதியாகப் பாராட்டுகிற சமாசாரமாக அமைந்து போவது வாடிக்கை.
இத்யாதி விஷயங்களோடு நானும் முதலியும் ஆலோசித்து அங்கங்கே புதிதாகச் சேர்த்த காமரசம் சொட்டும் நூதனமான பாடல்களுமாக இந்தப் புஸ்தகங்களை சூளையில் அச்சுப் போட்டு வெளியே கொண்டு வந்தோம். ராஜதானியில் இவை கியாதியோடு விற்றது சகலரும் அறிந்ததே. இன்னும் பத்து புஸ்தகம் இதே ரீதியில் போட்டபின் முதலியோடு கூட்டு வைக்காமல் நானே இதையெல்லாம் புதுசாக இயற்றி அச்சுப் போட்டு விற்று மெச்சக்கூடிய தன ஸ்திதியை அடையலாம் என்று மனசில் திடமாக நம்பினேன். ஆனாலும் இதில் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது.
ஸ்திரி புருஷ தேக சம்பந்தம் பற்றிய இந்தப் பாட்டுக்களை எழுதும்போது தளை தட்டாமல் இருக்க ஏகப்பட்ட முஸ்தீபுகள் எடுத்தாலும் எங்கேயாவது ஒரு இடம் ரெண்டு இடத்தில் அதுகள் தாறுமாறாகிப் போனதால், மேற்படி முதலி என்னிடம் பிரஸ்தாபித்தது இந்தத் தோதில் இருந்தது.
ஏனடா மகாலிங்க அய்யனே, பெண்டாட்டி கூடப் படுத்து எழுந்து ஒரு சிசுவைப் பெற மட்டுமில்லை, சிரத்தையாக தளை தட்டாது சிருங்கார விஷயமாக பாட்டு எழுதக்கூட உனக்கு யோக்யதை இல்லை. இதையெல்லாம் திருத்தி ஒட்டுவேலை செய்வித்து அச்சேற்றுவதற்குள் எனக்கு பிராணன் போகிறது. தயவாக இந்த சங்காத்தத்தை நாம் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.
முதலிக்குத் தெரியாத ஒரு சங்கதியையும் இங்கே ஏற்கனவே உத்தேசித்தபடி மனசில் நினைவு வந்த தோதில் எடுத்துரைக்க சர்க்கார் உத்தரவு தயவாக வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால் முதலிக்காக இப்படியான பாட்டுக்களை நூதனமாக இயற்றிக் கொண்டிருக்கும்போது எனக்கு இந்திரிய ஸ்கலிதம் ஏற்பட்டு அரையை நனைத்துக் கொண்டதால்தான் அவற்றில் தளை தட்டிப் போனது. மற்றபடிக்கு எட்டு வகுப்பு முடிவதற்குள் கிரமமாகப் பாட்டெழுதக் கற்றவன் அடியேன். அது மட்டும் புத்தியில் படிய மற்ற எல்லாம் பிடிபடாமல் போனது என் கர்ம பெலன் தான் என்று இன்னும் திடமாக நம்புகிறேன்.
சிநேகிதன் யோசனைப்படி கொண்டித் தோப்பு வைத்தியரிடம் போய்ச் சேர்ந்து என் துக்கத்தை உரைத்தபோது அவன் சொன்னான் – பிராம்மணரே, உமக்கு வேண்டப்பட்டதுதான் என்ன? முற்றிலும் சரியான, இலக்கணத்துக்குப் பொருந்தி வருகிற பாட்டு எழுத வசதியாக உம் ஸ்கலிதம் நிற்க வழி செய்வதா இல்லை நீர் வீட்டுக்காரியோடு சுகித்து சந்ததி விருத்தி செய்ய வாகாக மருத்துவம் செய்வதா? ரெண்டும் வேணுமென்றால் அது என்னைக் கொண்டு சடுதியில் எடுத்து முடிக்கிற காரியமில்லை. யோசித்துச் சொல்லும்.
நான் எத்தனை யோசித்தும் புரிபடாது போக, வைத்தியனே உபகாரமாகச் சொன்னான். ஓய் அய்யரே, பாட்டு எழுதும்போது வெளிப்பட்டு வெளிப்பட்டு சுக்கிலம் நீர்த்துப் போவதால் தான் நீர் மற்றைய இடத்தில் ஜெயம் அடைய முடியாமல் போகிறது. இன்னும் ரெண்டு மூணு வருஷம் இப்படியான சிற்றின்ப சாகித்தியம் எழுதுவதை நிறுத்திப் போடும். மாத்திரமில்லை. தேமா, புளிமா இன்னும் ஏதேதோ கிரமப்படி எழுதுவதே புலவர்களுக்கு வழக்கமில்லையோ. அதை முழுக்க மறக்கப் பாரும். உம் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். எழுதித்தான் ஆகவேண்டும் என்று உச்சி மயிர் சிலிர்த்து நின்றால் வசனமாக அதைச் செய்து விடும். கூடவே நான் கொடுக்கும் இந்த மருந்துகளையும் ஒரு மண்டலம் சாப்பிட்டு வாரும். இந்த எண்ணெய் மயில் றெக்கையிலிருந்து இறக்கியது. ராத்திரி படுக்கப் போகும்முன் இதை அரையில் அழுந்தத் தேய்த்துக் கொண்டால் சீக்கிரம் பெலன் கிடைக்கும்.