இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 4
1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை
கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் விளக்கு ஏற்றி விட்டு நடக்கிற வேலைக்கார மனுஷனாக இருக்கட்டும். அட, வேறே எதுவுமே வேணாம், தெருவில், கோவில் குளத்துப் பக்கம் நின்று ரெண்டு சல்லியும் ஒரு சல்லியும் யாசிக்கிற நித்ய யாசகனாகவே இருக்கட்டும். இந்தப் பட்டணத்தை ஒரு தடவை வந்து தரிசித்தாலே புளகாங்கிதம் சித்தமாகிறது. இங்கேயே ஏதாவது கொழுகொம்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒண்டிக் கொள்ளச் சொல்கிறது. பட்டிணப் பிரவேசம் செய்து, ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இருந்து விட்டு, என்னத்துக்காகவோ வெளியில் போய் காலம் கடத்தி விட்டு திரும்ப வரும்போது மலைத்துப் போக வைக்கிறது.
பட்டணம் ரொம்பவே மாறிடுத்து.
இன்னும் எத்தனை நூறு நூறு வருஷம் மதராஸ் இருந்தாலும் இந்த வாக்கியத்தை லட்சம் கோடி பேர் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். நானும் சொன்னேன்.
பிராட்வேயிலும் ஐகோர்ட் எதிரிலும் குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஜனத்தொகையை ஏற்றி இறக்கி சலிப்பே இல்லாமல் அததுக்காக ஏற்படுத்திய வழியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. தலையில் முளைத்த கொம்பு பாதைக்கு மேலே இழுத்த எலக்டிரிசிட்டி கம்பியைத் தொட்டு முன்னாலே செலுத்த தபால்காரன் நடக்கிற வேகத்தில் ஊர்ந்த அவற்றைப் புளி மூட்டை போல நிறைத்துக் கொண்டு அடை அடையாக மனுஷர்கள், ஸ்திரிகள். அலிகள்.
முன்னைக்கிப்போ பெருகியிருக்கிற அதிகமான ஜனம். அதிகமான டிராம் கார்கள். டிராமில் ஏறிப்போக எந்த நேரத்திலும் காத்திருக்கும் கூட்டமும் அதிகம். அவர்கள் துப்புகிற எச்சிலும், சொல்லி மகிழ்கிற சுப வார்த்தைகளும் வெகு திவ்யம். இதெல்லாம் போக, தெருவிலும் அறுபத்து மூவர் உற்சவம் போல வருவானும் போவானுமாக தொடர்ந்து ஆள் நடமாட்டம்.
கொத்தவால் சாவடியில் காய்கறி ஏற்றி இறக்கி வெளியே கட்டி வைத்திருந்த மாட்டு வண்டிகள் ஒரு நூறோ இருநூறோ சாவடியைச் சுற்றி நுகத்தடியை மேலே ஓங்கிக் கொண்டு ஒயிலாக நிற்கிற காட்சியும், சாவடிக்குள்ளே கடை கடையாக காயும் கனியும் கிழங்கும் இறக்கி விட்டு நடக்கிற கூலிகளின் புளித்து நாறும் வசவும் இருபது வருஷத்துக்கு முன்னால் அனுபவப்பட்டதை விட இன்னும் மோசமாகப் போயிருந்தது. சுதேசித் துணிப் பையில் ராட்டினமும், மகாத்மா காந்தியும் எழுதின படத்தோடு சாவடிக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து டிராமுக்காகக் காத்திருக்கும்போது அந்தப் பையெல்லாம் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.
கண்ணில் தட்டுப்படுகிற கடையில் பத்துக்கு ஒண்ணாவது சாப்பாட்டுக் கடை. அதிலும் பிராமணாள் ஹோட்டல்களே அதிகம். மைசூர் ஓட்டல், உடுப்பி ஓட்டல் என்று கன்னடக் காரர்களோ அவர்கள் பெயரை திருடிக் கொண்டு உள்ளூர் குப்பன்களோ ஊர் முழுக்க உப்புமா கிண்டிப் போட்டுக் காப்பி கலந்து கொடுத்து காசை வாங்கி வாங்கிக் கல்லாவில் ரொப்பிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
இந்த டிராமில் எது எங்கே போகும்? டெர்மினஸ் என்று பலகை எழுதின வண்டிகள் எங்கே இருந்து வருது, எங்கே போகிறது என்று ஒரு மண்ணும் புரியவில்லை. யாரையாவது கேட்கலாம் என்று யோசிப்பு. ஒரு மாச தாடியும், கடல் காற்றில் உலர்ந்து பொருக்குத் தட்டிப் போன உடம்புமாக நான் முன்னால் போய் நின்றால், குப்பாயத்தில் தடவிப் பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்பான்கள் தடியன்கள். நான் உடுத்தி இருந்த வஸ்திரமும் சொல்லும் தரத்தில் இல்லை.
ஐகோர்ட் தெருமுனை திரும்பி வடக்கே நடந்தேன். வெய்யில் உறைக்க ஆரம்பித்து, கழுத்தில் பிசுபிசு என்று வியர்வை. நுங்கம்பாக்கம் போறது இருக்கட்டும். மைலாப்பூர் போய் சித்திரக் குளத்தில் குளித்து விட்டு மேலே செய்ய வேண்டியதை எல்லாம், எது எல்லாம்னு தெளிவில்லை, செய்ய வேண்டியதை எல்லாம் கவனிக்கலாமே. தாடியையும் தலையையும் மழித்து வீபுதியைக் குழைத்துப் பூசிக் கொண்டால் சிராங்காய் மரியாதையாவது கிட்டும்.
செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கடியாரப்படி காலை ஏழு மணி தான் ஆனது என்றாலும் நெரிசலும் ஜன நடமாட்டமும் உச்சத்தில் இருந்தது. தோளில் மாட்டிய பையும் ரெண்டு கையிலும் ரெண்டு கப்பல் பையுமாக நான் நடக்கும்போது பக்கத்தில் நடந்து போகிறவன் கவனமெல்லாம் என் கையில் பிடித்த பையில் இருந்ததைக் கவனித்தேன்.
ஆயுசு வருமானமாக நான் பெண்ட்வில் ஜெயிலில் சம்பாதித்த இருநூறு சில்லறை பவுண்டு, கப்பலில் வேலை பார்த்த வகையில் கேப்டன் கொடுத்த நூற்றுப் பத்து பவுண்டு. இப்படி பத்திரமாக மாட்டுத் தோல் சஞ்சியில் வைத்து தோள்பைக்கு உள்ளே வெகு ஜாக்கிரதையாக வைத்திருந்தேன். அதோடு கூட துரை கொடுத்த ரெண்டு பொட்டலம் அபின்.
கையில் பிடித்த பையிலோ என் வஸ்திரமும், கப்பலில் தரித்த கால்சராய்களும், பூட்ஸும் இன்னும் லண்டனில் இருந்து கொண்டு வந்த பழைய குப்பாயம், தொப்பி, கம்பளிச் சட்டை இத்யாதியும். இதோடு தரகு துரைக்கு முதல் ஈடாக விற்றுத் தர வேண்டிய சோப்பும் சீப்பும் கண்ணாடியும் மண்ணாங்கட்டி தெருப்புழுதியும். கப்பல் குசினியில் மிச்சம் இருந்த ரெண்டு பொட்டலம் ரொட்டியையும், அரிசி, பொரிகடலையையும், அஸ்கா சர்க்கரையையும் மூட்டை கட்டிப் போட்டிருந்தேன். விற்க ஏற்பட்டதில்லை. எனக்கு அவசரத்துக்குக் கைகொடுக்க.
எனக்கு பத்து தப்படி முந்தி கனவான் தோரணையோடு தொப்பையும் தொந்தியுமாக ஒருத்தன் உருண்டு கொண்டு போனான். சரிகைத் துணி வைத்து அரிசி மூட்டையை நெட்டுக்குத்தாக நிறுத்தினதுபோல் அவனில் கால்வாசி உசரத்துக்குத் தலையில் ஏறி இருந்த தலைப்பாகையும், புகையிலைக்கடை நிர்வாகி ராவ் போல அல்பாகா கோட்டும், இடுப்பில் தொங்குகிற கடியாரமும் வசதியான வெளியூர் மனுஷன் என்று சொல்லாமல் சொல்ல, அவன் எதிர் வசத்தில் ஆஸ்பத்திரியைப் பார்த்து நின்றான். அந்தக் கட்டிடம்தானா போக வேண்டியது என்றோ என்னமோ கோட்டுக்குள் இருந்து காகிதத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க நாலைந்து உள்ளூர் நோஞ்சான்கள் நீலமும் பச்சையுமாக சாரம் உடுத்திக் கொண்டு கூட்டமாக அவனைக் கடந்து போனார்கள். இப்படி நெருக்கமாக ஏன் ஈஷிக் கொண்டு போகணும் இவன்கள் என்று நான் அதிசயப்பட்டுக் கொண்டு நடக்க, அந்த கனவான் திடீரென்று உச்சத்தில் அலறினான்.
ஐயோ என் கடிகாரம் காணலியே.
எனக்கு சமமாக நடைபாதையில் கொஞ்சம் போல் இடம் விட்டு நடந்து வந்த மனுஷன் என்னிடம் சிநேகமாகச் சொன்னான் –
இப்படி நாலு பேர் கூட்டமா அவர் மேலே மோதினதுமே நினைச்சேன். கோட்டுக்குள்ளே பர்ஸாவது இருக்கா அதுவும் கோவிந்தாவா?
பறிகொடுத்த கனவானைச் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தில் அவனும் கலக்க, நான் ஜாக்கிரதையாக இதையெல்லாம் தவிர்த்து விட்டு முன்னால் போனேன். தோள் சஞ்சி பத்திரமாக இருக்கா என்று சோதித்தேன். இருந்தது.
முன்னே எல்லாம் அங்கே இங்கே வழிப்பறி செய்து கொண்டு ஓடுவார்கள். கன்னக்கோல் போட்டு பூட்டின வீட்டிலே பாத்திரம் பண்டம் களவாடுவார்கள். இப்போ நடந்து போகும் போதே நோகாமல் தெரியாமல் கைக்குக் கிடைத்ததை நாசுக்காக அறுத்து எடுத்துக் கொண்டு ஜன சமுத்திரத்தில் கலக்கிறவர்கள் காலம் போலும்.
பார்க் ஸ்டேஷன் வாசலில் ஒரு சின்னக் கூட்டம். பணப்பையைப் பறி கொடுத்தவனா என்று ஒரு நிமிஷம் நின்று பார்த்தேன். அதிசயமான அதிசயம். புஸ்தகம் விற்கிறவன்.
மதிமோச விளக்கம். மதிமோச விளக்கம். ஒரே ரூபாய்தான். திருட்டு புரட்டு ஜேப்படி கேப்மாரித்தனம் மொல்லமாரி வேலை, எத்தர்கள் ஏமாற்றுகிற ரகசியங்கள், குருக்கள் கொள்ளையடிக்கும் வழி, வைத்தியன் காசு பிடுங்கும் வழிமுறை. இருநூற்று முப்பது பக்கத்துக்கு டெம்மி சைசிஸ் உன்னதமாக அச்சுப் போடப்பட்ட அரிய புஸ்தகம். வாங்கிப் படித்து பத்திரமாக இருக்க வாங்க வாங்க.
அவன் கூவல் வழியோடு போகிறவன் எல்லோரையும் அங்கே இழுத்தது.
குப்பாயத்தில் பார்த்தேன். கப்பல் சம்பளம் கொடுக்கும்போது இருபது பவுண்ட் தொகைக்கு ஈடாக ரூபாயாகக் கொடுத்திருந்தது, ஐம்பது சில்லறை இருந்தது. ஒத்தை ரூபாய் ராஜா தலைக் காசைக் கொடுத்து நானும் ஒரு மதிமோச விளக்கம் வாங்கினேன். ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள் கழித்து தமிழில் ஒரு புஸ்தகம் படிக்கக் கிடைத்திருக்கு. ஆற அமர உட்கார்ந்து படிக்க வேணும்.
புஸ்தகத்தை தோள் பையில் திணித்துக் கொண்டு ஜட்கா வண்டி கிடைக்குமா என்று பார்த்தேன். இரண்டு வண்டி மாறி மைலாப்பூர் போய்ச் சேரலாம் என்று வண்டிக்காரர்கள் புகையிலைக் கட்டையை மென்று கொண்டு ஒட்டு மொத்தமாகச் சொன்னார்கள். ஒரே வண்டி போகாதா என்ன?
பட்டணக் குதிரை சாமி. நம்மள மாதிரித்தான் சோதா உடம்பு. ரொம்ப தூரம் இசுத்தா மூச்சு வாங்கி பட்டுனு பூடும்.
நான் மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. கோவில் பூட்டி இருந்தது. சித்திரக் குளம் முன்னளவுக்கு ஸ்படிகம் போல நீரோடு இல்லாமல் ஜலத்தில் அங்கங்கே திட்டுத் திட்டாகப் பாசி படர்ந்திருந்தது. ஆனாலும் விடாப்பிடியாகக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தொகையும், ஓரமாக குளப்படியில் ஈரமாக்கி அடித்து அடித்து உடுதுணி துவைத்துக் கொண்டிருந்த சத்தமும் அதிகமாகத்தான் இருந்தது. உதய காலத்தில் வந்திருந்தால் லட்சணமான ஸ்திரிகளும் கூட இருந்திருப்பார்கள். அவர்கள் நாசமாகப் போக. வேணாம். சர்வ மங்களத்தோடும் இருக்கட்டும். நான் முதலில் நரகம் போறேன்.
குளக்கரைப் படியில் முடி திருத்துகிறவனைத் தேடிக் கண்டு பிடிக்கிறதுக்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. கோவிலை ஒட்டி சந்துக்குக் குடிபெயர்ந்திருந்த ஒரு நாவிதன் முகம் மழித்து விட்டதோடு நான் கேட்காமலேயே தலையில் சாஸ்திரிகள் போல குடுமி வைத்து மற்றபடிக்கு சுத்தமாக வழித்து விட்டபோது பாதி மகாலிங்கய்யன் திரும்ப வந்திருந்தான். சித்திரக் குளத்தில் குளித்து விட்டு ஓர மனையில் இருந்த புரோகிதனுக்கு ஓரணா தட்சணை கொடுத்து எட்டுப் பிரியாக இருந்த ஒரு பூணூலை வாங்கி மாட்டிக் கொண்டதும் அவன் முழுசாக உருவம் எடுத்தான்.
கப்பலில் பூணூல் கழண்டு போச்சு என்று புரோகிதனிடம் சொல்ல, சீமைக்குப் போய்வந்த தீட்டு கழிய குறைந்த செலவில் ஹோமம் பண்ணி விடலாமா என்று விசாரித்தான். வேண்டாம் என்றேன். இருபது வருஷ குண தோஷம், மன தோஷம், வார்த்தை தோஷம், காரிய தோஷம் எல்லாத்துக்கும் சேர்த்து ஹோமம் பண்ணினால் ஹோம குண்டம் நாள் கணக்கில் மாசக் கணக்கில் எரிய விட வேண்டி இருக்கும். உள்ளே இருந்து கூஜாவில் பாயசத்தோடு பூதம் கூட பிரத்தியட்சம் ஆகி விடும்.
கோவில் பூட்டி இருந்தது. சாவகாசமாக வந்து ஒரு கும்பிடு போட்டுக்கலாம். மூட்டை முடிச்சோடு கோவிலுக்குள் போகிறது சரியாகப் படவில்லை. இதுகளைத் தூக்கிக் கொண்டு படித்துறையில் வைத்து விட்டு ஸ்நானம் செய்கிறது கூட கஷ்டமான வேலை. அவிழ்த்துக் கசக்கிப் பிழிந்து வைத்த கோமணத்தையே தூக்கிக் கொண்டு ஓடுகிறவன் மூட்டையை சும்மா விட்டு வைப்பானா? நல்ல வேளை அங்ஙனம் ஆகாமல் தப்பினேன்.
கோவிலை ஒட்டின தெருவில் கண்ணாடி அலமாரிக்குள் லட்டு உருண்டை அடுக்கிய தட்டு எல்லாம் வைத்து ஒரு ஓட்டல் ஆரம்பமாகி இருந்தது. காந்தி படமும் சக்கரவர்த்திகள் படமும் மாட்டி வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது என்று கண்டிப்பாக எழுதி வைத்த இடம். பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று ஒரு இருட்டுக் கிடங்கு தெரிந்தது. அங்கே போய்ச் சாப்பிட ஆசைதான். ஆனால் சாப்பாட்டோடு கரப்பானும் பாச்சையும் கலந்து வயிற்றில் போய் ஜீவ சமாதியாகும் என்று தோணவே, மற்ற ஜாதியாரோடு உட்கார்ந்து சாப்பிடும் விஸ்தாரமான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அண்ணா டிபன் எல்லாம் தீர்ந்துடுத்து. அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தா சுடச்சுட சாதம் வடிச்சு மத்யான சாப்பாடே தயாராயிண்டு இருக்கு.
பரிமாறுகிற பிள்ளை முன்னால் நின்று பவ்யமாகச் சொன்னான்.
இன்னிக்குக் காலையில் நேரே அன்னலட்சுமியம்மாள் முகத்தில் முழிக்கணும் என்று பிரம்மா என் உச்சிக் குடுமித் தலைக்கு உள்ளே எழுதி வச்சிருந்தா யாரால் மாற்ற முடியும்?
சரி, காத்திருக்கேன் என்று வாசல் பக்கம் போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தோள் சஞ்சியில் வைத்திருந்த மதிமோச விளக்கம் புஸ்தகத்தை எடுத்தேன்.
அச்சு எழுத்தைப் படிக்க மசமச என்று இருந்தது. கண்ணில் கோளாறு. சாளேஸ்வரமோ என்னமோ. ஜார்ஜ் டவுனில் மூக்குக் கண்ணாடி வாங்கி மாட்டினால் சொஸ்தமாகும். அதுக்கென்ன இப்போ அவசரம்?
புத்தகத்தைக் கண்ணுக்குக் கொஞ்சம் நெருக்கமாக வைத்துக் கொண்டு புரட்டினேன். திறந்த பக்கத்தில் மோசடி வழிமுறையாக இந்தக்கால பட்டண ஓட்டல்கள் பற்றி ஆதியோடந்தமாக எழுதியிருந்தது.
முந்தின நாள் மீந்த சரக்கு எல்லாத்தையும் அரிசியும் உளுந்தும் அரைக்கிற போது கூடவே கலந்து அரைத்து இன்னிக்கு உண்டான பலகாரம் செய்கிற நடைமுறை பற்றி வர்ணனை.
நல்ல வேளை. கொஞ்சம் முன்னால் வந்திருந்தால் முந்தாநாள் உளுந்துவடை நூல் இழுக்க அரைத்து வேகவைத்த இட்டலியோ வேறே எதோ சாப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டாகி இருக்கும்.
அண்ணா சாப்பாடு ரெடி. வாங்கோ.
பையன் வந்து சத்தமாகச் சொன்னபடி ஒரு மரப் பலகையில் எழுதியும் வைத்தான்.
இன்னிக்கு சமைச்சது தானேடா கண்ணா?
நான் அவனைப் பரிகாசமாகக் கேட்டபடி உள்ளே போனேன்.
—— —— —-
—— —— —-
காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது.
—- —— ————
—— —- ———
நான் நிமிர்ந்தே பார்க்காமல் இலையில் விழுந்த ரசம் தரைக்கு வழியாமல் சாதத்தைப் பரப்பி விட்டு, கூடுதலாக ஒரு சிராங்காய் ரசத்துக்கு உள்ளங்கையைக் குவித்தேன். சுடச்சுட விழுந்த தக்காளி அமிர்தத்தை ஆசமனீயம் போல உறிஞ்சி… ..
…………. ……………….
……………. ……………….
ஒரு குத்து காரம் வழிகிற எலுமிச்சங்காய் ஊறுகாயை வாங்கி பட்சணம் மாதிரி சாப்பிட்டு விட்டு தயிர் சாதத்தைத் தொட்டேன். ஓட்டல் வைத்த புண்ணியவான் மதிமோசம் பண்ணி போன வருஷம் போட்ட ஊறுகாயை வைத்து ஒப்பேத்தினவனாக இருந்தாலும் சரிதான். அவனுக்கு சகல சுகமும் கிட்டட்டும்.
இலையை எடுத்துண்டு போய்ப் போட்டுடுங்கோ அண்ணா. நம்ம பக்கத்து ஆசாரம் இன்னும் மாறலியே. அண்ணா சீமைக்குப் போய்ட்டு வந்தாலும் அதானே ஸ்திதி?
மோர் வாளியை பக்கத்தில் வைத்து நசுங்கின பித்தளை லோட்டாவில் ரெண்டு கரண்டி பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை கிள்ளிப் போட்டு கடுகு தாளிச்சு விட்ட மோரை வார்த்தபடி சொன்னான் பையன்.
இவ்வளவு திவ்யமான மோர் கொடுத்தால் என்னோட எச்சல் இலை மட்டும் என்ன, அங்கே உட்கார்ந்து கொட்டிக் கொண்ட அத்தனை சும்பன்களின் எச்சலையும் வாரி வழித்துப் போய்ப் போட்டிருப்பேன். கப்பலில் மாசக் கணக்கில் எச்சல் தட்டு அலம்பின கையில்லையா இது ரெண்டும்.
இந்த மூட்டை முடிச்சை எல்லாம் ஒரு நிமிஷம் பாத்துக்கோடா குழந்தை.
பையனை ஏவி விட்டு கையில் மடக்கிப் பிடித்த எச்சில் இலை காலில் வழியாமல் பின்கட்டுக்குப் போனேன்,
தொட்டியில் இலையை விட்டெறிந்து விட்டு இரும்பு வாளியில் நிறைத்து வைத்திருந்த அசுத்த ஜலத்தில் கையும் வாயும் கழுவுகிறதாக பாவனை செய்து விட்டு உள்ளே வரும் வரை மனசு பை பை என்று பரபரத்துக் கொண்டிருந்தது.
மோர் வாளியோடு காவலுக்கு நின்ற பையனுக்கு பையில் தேடி நாலணா தட்சணை கொடுத்தேன். வெகு சந்தோஷமாக வாங்கி குப்பாயத்தில் இடது கையால் முடிந்து கொண்டு, ராத்திரி பலகாரம் பண்ண வருவேளா அண்ணா என்று பிரியத்தோடு விசாரித்தான். ராத்திரிக்கு அடை, பூஷணிக்காய் சாம்பார், பீர்க்கங்காய் சட்னி.
அவன் சொன்னபோதே நாக்கில் எச்சில் ஊறினது. கர்ப்பிணிப் பொண்ணு போல நிறைந்து புரண்டு கொண்டிருந்த வயிறு பாதகா சண்டாளா கொஞ்சம் என்னை சும்மா விட மாட்டியா என்று தீனமாக ஓலமிட்டது.
திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து ரெண்டு வெத்திலை மென்று விட்டு கிளம்பலாம் என்று நினைத்தேன்.