‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது
இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன்.
பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய கையில் இனிப்பையோ பழத்தையோ வைத்து சாப்பிடச் சொல்லி திரும்பி வரும்போது ஆத்மார்த்தமாக ஒன்றி சில மணிநேரம் கடந்து போயிருக்கும். காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் மறைகிறார்கள். சிலர் புதிதாக வருகிறார்கள். இந்த ஆகஸ்டில் தான் ஓணத்தை ஒட்டி விஷ்ராந்தி போயிருந்தேன். அப்போது அங்கே ராஜம் கிருஷ்ணன் இல்லை.பாட்டியம்மா எல்லோரும் ப்ரேயருக்குப் போயிருக்காங்க சார், கொஞ்சம் உட்காருங்க என்கிறார் வரவேற்பறையில் இருந்த இளம்பெண். இரண்டு மாதத்துக்கு முன்னால் இவளைப் பார்த்த நினைவில்லை. காப்பகத்தில் பொறுப்பாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் எல்லோருக்கும் அன்பாகப் பேசத் தெரிந்திருக்கிறது. வயதானவர்களோடு நாள் முழுக்க இருக்க நேரும்போது இந்த அன்பும் சிரிப்பும் இல்லாவிட்டால் இரண்டு தரப்புக்குமே நரகமாகிவிடும். விஷ்ராந்தி மூதாட்டிகளில் பலரும் இந்த நரகத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அவர்களுடைய கடைசி தினங்களில் மறுபடி அங்கே போகமுடியாது.
ராஜம் கிருஷ்ணன் புனே கிளம்பிப் போய்ட்டாங்களா? நான் கேட்ட உடன் அந்தப் பெண் சட்டென்று நிமிர்ந்து பார்த்து இல்லை என்று தலையசைக்கிறாள்.
முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தற்போது விஷ்ராந்தியிலே இருக்காங்க. முந்தாநாள் தான் சந்தித்துவிட்டு வந்தேன். அநேகமாக இந்த வாரக் கடைசியிலே விஷ்ராந்தியை விட்டுப் புறப்பட்டு புனே போறாங்க. உறவுக்காரர் கூட்டிப் போறாராம். நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அளித்த தகவல் அது.
இதமான குரலுக்கு இன்னொரு நல்ல உதாரணம் திருப்பூர். எழுத்து போல அவருடைய பேச்சும் குரலும் ஆளுமையும் மனதுக்கு எப்போதுமே அலாதியான அமைதியையும் நிறைவையும் கொடுக்கக் கூடியது. திருப்பூர் கிருஷ்ணன் போய்ப் பார்த்துவிட்டு வந்தார் என்பதே எனக்கு ஆறுதலான செய்தி. ராஜம் கிருஷ்ணன் பற்றிய பத்திரிகைத் தகவல் பெரும்பாலும் உண்மை என்று உறுதி செய்தார் அவர். அந்தப் புரட்சிப் பெண்மணி எந்த அரசாங்க, தனியார் உதவியையும் எதிர்பார்த்துக் கைகட்டி நிற்க மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னதாகவும் திருப்பூர் சொல்லியிருந்தார். ராஜம் கிருஷ்ணன் வேறே எப்படியும் சொல்லியிருக்க மாட்டார்தான்.
ராஜம்மா புனே போகலேன்னா, அவங்க இங்கேதான் இன்னும் இருக்காங்க, இப்போ ப்ரேயர் போயிருக்காங்க, சரிதானே?
வரவேற்பறைப் பெண்ணிடம் விசாரிக்க அடுத்த சிரிப்போடு அவள் சுபாவமாகச் சொல்கிறாள் – அவங்க இங்கே தான் சார் இருக்காங்க. ஆனா இப்போ பார்க்கறது கஷ்டமாச்சே. ஓய்வெடுத்துட்டு இருக்காங்க. உடல் நலமில்லே.
ஒரு வாரமாக இதே ரொட்டீன் பதிலை எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாளோ. திருப்பூர் கிருஷ்ணனுக்கும் இந்த மறுமொழி கிடைத்திருக்கும். தீபாவளி நேரத்தில் வாரப் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு விஷ்ராந்திக்குத் தொலைபேசியும், நேரில் சென்றும் ராஜம் கிருஷ்ணனைப் பற்றி சில பேராவது விசாரித்திருக்கலாம். சாகித்திய அகாதமி பரிசு பெற்ற, தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரும், பெண் விடுதலைக்கான போராளியுமான ராஜம் கிருஷ்ணன் தன் எண்பத்து மூன்றாம் வயதில் விஷ்ராந்தியில் வந்து சேர்ந்திருப்பதாகப் பத்திரிகையில் வந்த செய்தி திருப்பூரைப் போல், என்னைப் போல் பலரையும் பாதித்திருக்கக் கூடும்.
தம்பி இங்கே அடிக்கடி வர்றவரு. பிரேயருக்குத் தாமதமாகக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி என் அருகில் வந்து கண்ணுக்கு மேலே ஷேடு கட்டிப் பார்த்துவிட்டு அடையாளம் கண்டுகொண்ட சந்தோஷத்தில் மலர்ந்த முகத்தோடு சொல்கிறாள். குழந்தைச் சிரிப்பு கூடவே இழைந்து கொண்டு வருகிறது.
அந்த முதிய குழந்தை சிபாரிசில் ராஜம் கிருஷ்ணனை சந்திக்க உடனே அனுமதி கிடைக்கிறது.
சீக்கிரம் வந்துடுங்க சார். பிரேயர் முடிஞ்சு பாட்டியம்மா எல்லாம் உங்களுக்காகக் காத்திருப்பாங்க.
வரவேற்பறைப் பெண் என் கையிலிருந்து இனிப்புப் பொதியை வாங்கி ஓரமாக வைத்தபடி சொல்கிறாள். நான் வழக்கமாக வாங்கிப் போகிற லட்டு உருண்டைகளை விஷ்ராந்தியில் ஒவ்வொரு பாட்டி கையிலும் கொடுக்கும்போது சுதந்திரதினக் கொடியேற்றி இனிப்பு மிட்டாய் பெற்ற பள்ளிக்கூடப் பிள்ளைகள் போல் அந்த முகங்களில் தென்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. கடுமையான சர்க்கரை வியாதி இருக்கிற சில பாட்டிகள் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த சோகங்களில் லட்டு வாங்க முடியாத இந்த சோகம்தான் மகத்தானது என்று தோன்றப் பரிதாபமாகப் பார்க்கும்போது எனக்கே அம்பலப்புழை மேல்விலாசம் சாட்சாத் கண்ணன் மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வரும் (வேறு யார் பேரில் கோபப்பட?). தீபா மேத்தாவின் ‘தண்ணீர்’ படத்தில் லட்டுக்காக உயிரையே விடும் பாட்டி இந்தக் கூட்டத்தில் இருந்துதான் போயிருப்பாள்.
லட்டு நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காப்பகப் பொறுப்பாளரான இன்னொரு இளம்பெண்ணோடு நடக்கின்றேன். காம்பவுண்ட் கடைசியில் மருத்துவ விடுதி.
அம்மா, உங்களைப் பார்க்க உங்க நண்பர் வந்திருக்கார். பார்க்கலாமா?
கதவு அருகில் இருந்தே இவள் சொல்ல, உள்ளே இருந்து ஈன சுவரத்தில் பதில். வரச் சொல்லும்மா.
சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க. காத்திருப்பாங்க.
நினைவூட்டிய திருப்தியில் திரும்பப் போகும் இந்தப் பெண்ணுக்கும் மறக்காமல் இனிப்புக் கொடுக்க வேண்டும். செருப்பை வெளியே விட்டுவிட்டு நுழைகிறேன்.
வரிசையாகக் கட்டில்கள். கடைசிக் கட்டிலில் உடல் தளர்ந்து ராஜம் கிருஷ்ணன். முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் பட்டியலை யார் எப்போது தேர்ந்தெடுத்தாலும் தவறாமல் இடம் பெறும் பெயர் அவருடையது. சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்தாலும் அவர் பெயர்ச் சீட்டு நிச்சயம் வரும். அவரா இவர்?
மெல்ல எழ முயன்று திரும்பத் தலையணையில் சாய்கிற போதும் தொடரும் நட்பான சிரிப்போடு எப்படி இருக்கீங்க என்கிறார். பெண்மைக்கே உரிய கம்பீரத்தோடு அவரும், எப்போதும் நிழலாகத் தொடர்ந்து அவருக்கு வலிமை தந்த அன்புக் கணவருமாகச் சிலகாலம் முன்பு வரை இலக்கிய விழாக்களில் தவறாமல் பார்த்த ராஜம் கிருஷ்ணன் எங்கே? ஒரு சின்னச் சிரிப்பு மாத்திரம் பாக்கி இருக்க அந்த அந்நியோன்யமான தம்பதி எந்த வெளியில் கரைந்து போனார்கள்?
கடைசியா இலக்கியச் சிந்தனை விருந்துலே பார்த்தோம். பத்து வருடம் முந்தி.
நினைவு படுத்துகிறேன். ராஜம் கிருஷ்ணன், மகா ஸ்வேதா தேவி, தோப்பில் முகம்மது மீரான், மாலன். இவர்களோடு அந்த ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனைச் சிறுகதை விருது பெற்றவன் என்ற முறையில் குட்டப்பன் கார்னர்ஷோப் காரனும் கலந்து கொண்ட பகல் விருந்து அது. இலக்கியச் சிந்தனை அறங்காவலரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களின் குடும்ப இல்லத்தில் நடைபெற்றது.
ஆமா, நினைவு இருக்கு. ராஜம் திரும்பப் புன்னகைக்கிறார்.
மகாஸ்வேதாதேவி. அவங்க முற்போக்கு முகாம்.
மெல்லச் சொல்கிறார்.
நீங்க மட்டும் என்னவாம்? நான் திரும்பக் கேட்கிறேன். இவரிடம் இனியும் பகிர்ந்து கொள்ள எந்த சோகமும் இல்லை. நானும் அவரும் பத்து வருடம் முன்பு விட்ட இடத்தில் இருந்து உரையாடலைத் தொடரப் போகிறோம். அவ்வளவுதான்.
எளிதில் உடையக் கூடிய கற்பிதம் இது. ஆனாலும் அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆசுவாசம் அளிக்கக் கூடும். அப்போது எனக்கும் அதேபடிதான்.
நானா, முற்போக்கா? சரி. பெண்ணுரிமை பேசுகிற எல்லா இயக்கத்திலேயும் என்னைத் தீவிரமா இணைச்சு இயங்கியிருக்கேன். ஆனால் அங்கேயும் பெண்ணுரிமை எந்த அளவு இருந்தது?
எனக்குத் தெரியலை என்கிறேன்.
தேசியப் பெண்கள் மாநாட்டுக்கு இவங்களா போகணும்? என்ன படிச்சிருக்காங்க? என்னத்தைப் பேசுவாங்க? இவங்களுக்கு என்ன தெரியும்னு முட்டுக்கட்டை போட்டாங்க. ஆனாலும் போனேன். பேசினேன். முற்போக்கு.
அந்த அமைப்பின் பெயரைச் சொல்லிவிட்டு சாந்தமாக மறுபடி சிரிக்கிறார். நான் படுக்கைக்கு அருகே நிறுத்தியிருந்த வாக்கரைப் பார்க்கிறேன்.
இதப் பிடிச்சுட்டுத்தான் கொஞ்சம் நடமாட முடியுது. அவர் தொண்ணூறு வயசுவரைக்கும் எனக்கு எல்லாமுமாக இருந்தார். போன அப்புறம் ஆக்சிடண்ட்.
கணவரின் நினைவில் ஒரு கணம் அமைதியாக இருந்து, தொடரும்போது குந்தா அணைக்கட்டு கட்டுமானப் பணி நிறைவேறும் மலைச் சரிவில் இருந்தார் ராஜம் கிருஷ்ணன். ஐம்பது வருடம் முந்திய, ஜவஹர்லால் நேருவின் ஆதர்சம் நிறைவேறத் தொடங்கியிருந்த இந்தியா அது. பொறியாளரான கணவரோடு அணைக்கட்டு பகுதியில் குடித்தனம் நடத்த இளம் பெண்ணாக ராஜம் புறப்பட்டுப் போனபோது எழுத ஆரம்பித்திருந்தார். கலைமகள், கல்கி மூலம் தெரிய வந்த ராஜம் அவர்.
நாத்திமார், மைத்துனர்கள் என்று ஏகப்பட்ட பேர் இருந்த அன்பான கூட்டுக் குடும்பத்தில் ராஜம் கிருஷ்ணன் மருமகளாகப் புகுந்தபோது அவருக்கு பதினாறு வயதும் திகையவில்லை.
அந்தக் காலக் கல்யாணத்துக்கு இப்போ எங்கே ப்ரூப் தேடி நிரூபிக்கறது?
நான் விழித்தேன். வாக்கரை வெறித்தபடி அவர் நிகழ்காலத்துக்கு வந்திருந்தார்.
அரசு ஊழியராக இருந்து ரிடையர் ஆனவரின் மனைவி. குடும்ப பென்ஷன் சாங்ஷன் பண்ண நான் எங்க வீட்டுக்காரருடைய சட்டபூர்வமான மனைவின்னு நிரூபிக்கணும்னாங்க. அறுபது வருஷம் முந்திய கல்யாணத்துக்கு ஏது சாட்சி?
நண்பர்கள் உதவியால் தற்போது பென்ஷன் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். வயதான காலத்தில் உறுதுணையாகத் தாங்கப் பிள்ளைச் செல்வமோ, சேர்த்து வைத்த சொத்தோ இன்றி நிர்க்கதியாக நின்ற ராஜத்தின் பெயரில் கடவுளுக்குக் கொஞ்சம் போல இரக்கம் இருக்கிறது. நன்றி கிருஷ்ணா.
குந்தா அணைக்கட்டு போனபோது யாரை முதல்லே பார்த்தேன் தெரியுமா?
அவர் நினைவுகளுக்குத் திரும்பி விட்டார். மறுபடியும் கசியும் ஆசுவாசம்.
மலை உச்சிக்கு ரெண்டு பேரும் ஜீப்புலே போய் இறங்கறோம். அணைக்கட்டுக்கு நேர்கீழே. படகர் இன மக்கள் வாழும் பகுதி அது. இயற்கையோடு அந்த அளவு நெருக்கமான இனம் வேறே எத்தனை இருக்கு? அவங்க வாய்மொழி இலக்கியம் ஒண்ணே போதும். ஐரோப்பிய மொழிகளில் பழைய கதைப்பாடல் (ballad) மாதிரி வளமான படைப்புகள் அதெல்லாம். தேடித்தேடிச் சேர்த்து வச்சேன். இப்போ எங்கே போச்சோ தெரியலை.
திரும்ப ஒரு வினாடி மௌனம். நான் வாக்கராக ஒத்தாசை செய்து அவரை மறுபடி குந்தா அழைத்துச் செல்கிறேன். அங்கே போய்ச் சேர்ந்ததும் பார்த்தது யாரை?
என் கணவருக்கு வணக்கம் சொல்லி பின்னால் இருந்து ஒரு குரல் கூப்பிட்டது. திரும்பிப் பார்த்தேன். நான் தான் ஜவஹர் என்றார். இந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்து இப்போ இந்த அணைக்கட்டு திட்டத்தில் வேலை செய்யறேன்னார்.
நான் எழுதப் போற நாவல்லே கதையை இவர்தான் நடத்திப் போகப் போறார்னு அப்பவே முடிவு செஞ்சேன்.
நாவலுக்கு முன் கதாநாயகன் பிறந்த கணத்தில் ஆழ்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
அறுபது வருடம். குறிஞ்சி பூக்கிற ஐந்து காலத்தில் நிகழ்கிற நாவல் குறிஞ்சித் தேன். படகர் இனத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம், முன்னேற்றம்னு மத்தவங்க சொல்றதோடு அவங்க அந்நியப்பட்டுப் போறது எல்லாத்தையும் பற்றி அந்த மக்களோடு நிறையப் பேசி, கலந்து பழகி அப்புறம்தான் நாவல் உருவானது. மேதா பட்கர் இப்போ சொல்றதை படகர்கள் அப்பவே எடுத்துக் காட்டினாங்க.
ராஜம் கிருஷ்ணனில் எல்லாப் படைப்புகளுக்கும் பொதுவானது இப்படியான கலந்து பழகுதலும் கள ஆய்வும். கரிப்பு மணிகள், அமுதமாகி வருக, வளைக்கரம். சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லுகிறார். நேரம் மெல்ல ஊர்கிறது.
கள ஆய்வோடு கூட நிறையப் புத்தகங்களைப் படிக்கறதும் அவசியம். சென்னை மத்திய நூலகத்தில் புத்தகம் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. சாகித்ய அகாதமி பரிசு பற்றிக் கூடச் சொன்னேன். அது எல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை. ஆனா, தில்லியிலே விஷயம் வேறே. லைபிரரியில் புத்தகம் கேட்டபோது அப்ளிகேஷன் கொடுத்தாங்க. கட்டம் கட்டமாகப் பூர்த்தி செஞ்சுட்டுப் போனா, ஒரு இடத்திலே, தொழில்னு கேட்டிருக்கு. அதிலே பட்டியல் போட்டிருந்த எதுவுமே நான் செய்யாதது. ஒட்டுமொத்தமா அடிச்சுட்டு ரைட்டர்னு எழுதிக் கொடுத்தேன். உடனே அவங்க பார்வையே மாறிப் போச்சு. கடைநிலை ஊழியர் என்னை உட்காரச் சொல்லி, மின்விசிறியைப் போட்டு தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். மத்த எல்லா இடத்திலேயும் எழுதறவங்க மேலே கரிசனம் உண்டு.
ராஜம் சொல்லி நிறுத்துகிறார்.
இத்தனை உழைச்சு மணிமணியாகப் படைப்புகளை உருவாக்கிவிட்டு அதையெல்லாம் ஏன் தீவச்சுக் கொளுத்திட்டு இங்கே வந்தீங்க?
நான் கேட்கிறேன். அவர் இல்லை என்று கையை அசைத்து மறுக்கிறார்.
அந்தப் பத்திரிகையிலே தவறாகப் போட்டிருக்காங்க. நான் அப்படிச் சொல்லலே.
விபத்துலே அடிபட்டு ஒதுங்கி வசதி குறைந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தபோது அதை எல்லாம் விட்டுட்டு வரவேண்டிப் போச்சு. அங்கே இருந்து என் நண்பர்கள் பாரதி சந்துருவும் திலகவதியும் தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது.
வார்ட் உள்ளே யாரோ ரேடியோவை உச்சகட்ட ஒலியில் வைக்கிறார்கள். குத்தாட்டப் பாட்டு ஒன்று இரைச்சலாக ஒலிக்க அதை மீறிப் பேச முயல்கிறார். வேண்டாம் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.
திலகவதியை முதல்லே பார்த்தபோது என்ன சொன்னாங்க தெரியுமா? ராஜம் என்னை விசாரிக்கிறார்.
உங்க கதையைப் படிச்சுத்தான் எழுத்தாளராக உத்வேகம் வந்ததுன்னு சொல்லியிருப்பாங்க. சரியா?
இல்லே. என் கதையைப் படிச்சுத்தான் போலீஸ் அதிகாரியாக முடிவு செஞ்சதாகச் சொன்னாங்க.
ராஜம் திரும்ப மறுத்தபடி சிரிக்கிறார்.
அவர் முதுகுப் பக்கம் காகிதம் கோர்த்த ஒரு அட்டை தட்டுப்படுகிறது. நான் பார்ப்பதைக் கவனித்து அதை மெல்லத் தடவி எடுத்து என்னிடம் காட்டுகிறார். பாதி எழுதிய கட்டுரை ஒன்று. எழுத்து தெளிவாக இருக்கிறது.
ஊஹூம், இது கிறுக்கித்தான் வந்திருக்கு. பத்திரிகை பத்தி எழுதறேன்.
இன்னொரு தடவை என்னை மறுத்து அதே பிரியத்தோடு புன்னகைக்கிறார்.
தொலைபேசி ஒலிக்கிறது. எனக்குத்தான் என்று தெரியும். லட்டுக்காகக் குழந்தைகள் காத்திருக்கின்றன. விடைபெற்று நடக்கிறேன். கரிப்பு மணிகள் மனதில் இனிப்போடு படிகின்றன. கடல் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது.
(Vaarthai – Dec 08)