பூச்சிகளின் சொர்க்கம்

 

Kungumam column – அற்ப விஷயம் -15

பண்டிகை காலத்தில் வெளிப்பட்ட பட்டணத்தின் முகம் நிச்சயமாக அழகாக இல்லை. தினசரி ஒரு மணி நேரம் மின்சார வெட்டு வந்தபோது ‘என்னய்யா பெரிய தொந்தரவாகப் போச்சு’ என்று அலுத்துக் கொண்ட அந்த முகம் மின்சாரத்தைப் பயன்படுத்த வரம்பு என்று பேச்சு எழுந்தபோது உருட்டி விழிக்க ஆரம்பித்தது. இதோடு கூட சில கோர லட்சணங்களும் அங்கங்கே தட்டுப்படத் தொடங்கின.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவி அங்கலாய்த்திருந்தது இந்தப்படிக்கு இருந்தது – ‘ அறுநூறு யூனிட் தான் செலவு செய்யணுமா? எங்க வீட்டுலே டிவி, பிரிட்ஜ், வென்னீர் போட கீஸர், ஏர்கண்டிஷன் இப்படி ஏகப்பட்டது இருக்கு. வீட்டிலே ஒருத்தர் விடாமல் எல்லாருக்கும் ஞாபக மறதி. குளிச்சுட்டு கீஸரை அணைக்க யாருக்கும் நினைவு வர்றதே இல்லே. லைட் அது பாட்டுக்கு ராப்பகலா எரிஞ்சிட்டுக் கிடக்கும். ஏசியும் இதே கதைதான். இப்படி இருக்கறபோது வெறும் அறுநூறு யூனிட் கரண்டை வச்சுக்கிட்டு எப்படி டீசண்டாக மிடில் கிளாஸ் குடித்தனம் நடத்தறது?’. அதானே, எப்படி முடியும்?

கிராமத்தில் விவசாயி பம்ப் செட்டுக்கு கரண்ட் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தால் நமக்கு என்ன போச்சு? கொஞ்சம் நினைவு மறதி, ரொம்பவே அலட்சியம், ஆடம்பரம் காரணமாக நகரத்தில் மின்சாரத்தை வீட்டுக்கு வீடு, பேட்டைக்குப் பேட்டை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் மட்டுமா?

வெளிநாட்டுப் பெயர் வைத்து, வெள்ளைக்காரன் படம் போட்டு சட்டையும் பேண்டும் விற்கிற பெரிய கடைகளில் தீபாவளிக்கு கூட்டம் அலைமோதியது. அங்கே ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய சட்டையைப் பெருமையோடு போட்டுக் கொண்டு ‘பேஷன் ஸ்டேட்மெண்ட்’ விடுகிற வருத்தப்படாத வாலிப, வயோதிக அன்பர்களைக் குறை சொல்லப் போவதில்லை. இதே மாதிரி துணி, இதே கலர், டிசைனில் இந்த விலையில் பத்தில் ஒரு பங்கு கூட வராத செலவில் கைத்தறிச் சட்டை கிடைக்கும். அதை வாங்கினால் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒரு நெசவாளி குடும்பத்தோடு மனநிறைவாக உண்டு, காலாட்டிக் கொண்டிருப்பார். தறியில் வைத்த அந்தக் கால் ஆடுவது முக்கியமில்லை. தண்டச் செலவு செய்தாவது எக்காலமும் நம் அந்தஸ்தைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.

வீட்டில் விசேஷம் என்றால் அடுப்பங்கரைப் பக்கம் போவதை இப்போது எதிர்பார்க்க முடியாது. ‘எங்களுக்கு மட்டும் என்ன, நாள் முழுக்க உழைச்சுக் கொட்ட உடம்பு இரும்பாலேயா அடிச்சுப் போட்டிருக்கு?’ தாய்க்குலம் கேட்கும். ஆண்கள் சமையலறையில் நுழைந்து அரைத்துக் கரைத்துக் கொடுத்து உதவி செய்யலாகாது என்பது எழுதாத விதி. இரண்டு தரப்புக்கும் தொல்லையில்லாமல், தொலைபேசியிலோ அலைபேசியிலோ அழைத்து விஷயத்தைச் சொன்னால், என்ன மாதிரி சாப்பாடு, எத்தனை பிளேட் என்று மட்டும் கேள்வி கேட்கப்படும். அடுத்த மூன்று மணி நேரத்தில் வீடு தேடிவந்து ஐட்டம் ஐட்டமாக இறக்கி விட்டுப் போவார்கள். வீட்டுச் சமையல் மாதிரி ருசி. வீட்டுச் சமையலுக்கான உழைப்பையும் செலவையும் விட வாங்கிய உணவின் விலை மதிப்பு அதிகம்தான். வயிறு நிறைந்து, சாப்பிட முடியாமல் இலையோடு எறிந்த ஆகாரத்துக்கும் சேர்த்துத்தான் அந்த விலை. தொலையுது, தூக்கிக் கடாச வேண்டியதுதான். செலவு செய்யாவிட்டால் கௌரவம் அழிந்து காணாமல் போய்விடுகிற அபாயம்.

‘இலையில் மிச்சம் வச்சுத்தான் வெளியில் போடணும். அதுக்காகக் காத்திருக்கிற மனுஷ, மிருக ஜன்மங்களுக்கு அன்னதானம் செய்யற பலன் அப்போ தான் கிடைக்கும்னு கிரந்தத்திலே எழுதியிருக்கு’ என்றார் சகலமும் படித்த பண்டிதர் ஒருத்தர். மண்ணெண்ணெய் வீணானாலும் பரவாயில்லை, அந்த கிரந்தத்தை கொளுத்திப் போடுங்க என்று சொல்லவேண்டி வந்தது. அளவாகச் சாப்பிட்டு மிச்சமானதை இல்லாதவர்களுக்குப் கண்ணியத்தோடு வழங்கச் சொல்லாமல், அன்னதானம் செய்ய எச்சக்கலை வழியை எந்த முன்னோன் கற்பித்தான்?

மோட்சத்துக்கு சுகமாகப் போய்ச்சேர பல வருடம் முன்னால் வடக்கத்திப் பணக்காரர்கள் கடைப்பிடித்த பாதை போன்றது இது. அவர்கள் வீட்டு வாசலில் தினசரி ராத்திரி க்யூ நிற்கும். தலைக்கு ஒரு ரூபாய் கூலி. வேலை? ராத்திரி இந்தப் புண்ணியவான்களின் வீட்டுத் தோட்டத்தில் போட்ட கயிற்றுக் கட்டில்களில் படுத்துத் தூங்க வேணும். இது ஒரு வேலையான்னு கேட்க வேணாம். கட்டில் நிறைய மூட்டைப் பூச்சி. ராத்திரியெல்லாம் கடிக்கும். அதெல்லாம் குடிக்க ரத்த தானம் செய்யவே இரவு முழுக்கக் கட்டிலில் படுத்துக் கிடப்பது. மூட்டைப் பூச்சிக்கு உணவு கொடுத்தால் சொர்க்கம் நிச்சயம். ஐந்தோ, பத்தோ ரூபாய் விட்டெறிந்தும் அதை வாங்கலாம். பூச்சியை மருந்து அடித்து ஒழித்துவிட்டு, ஏழையைப் படுக்கச் சொல்லாமல் சொந்தக் காலில் நிற்க உதவி செய்யும்படி உபதேசம் எதுவும் எங்கேயும் எழுதியிருக்காதுதான். மூட்டைப் பூச்சிகள் சொர்க்கம் போக என்ன செய்ய வேண்டும் என்றாவது எழுதி வைத்திருக்கிறதா?

(Published in Kungumam last week)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன