குமரேசனைக் காணவில்லை. இரண்டு நாளாக குமரேசன் சிகையலங்கார நிலையம் பூட்டு வைத்திருக்கிறது. நாலு நாள் பஞ்சு மிட்டாய்த் தாடியைத் தடவியபடி நிற்கிற கோவாப்பரேட்டிவ் சொசைட்டி பிரசிடெண்ட் காளைலிங்கமும், முக்கால் வழுக்கைத் தலையில் மீதி பயிர்செய்த பூமியில் அரை மில்லிமீட்டர் வளர்ந்த அதீத முடியால் அசௌகரியம் கொண்ட ராமுடு வாத்தியாரும், ஒட்ட வெட்டிவரும்படி கட்டளையிடப்பட்டு காசும் வெறுப்புமாக ஒதுங்கும் சின்னப் பசங்களுமாக குமரேசன் கடைக்கு வெளியே கல் படியில் உட்கார்ந்து காத்திருந்து திரும்பிப் போகிறார்கள்.
இந்தத் தகவலை நான் எதுக்காக மேனேஜரிடம் சொன்னேன் என்று தெரியவில்லை. “குமரேசனுக்கு சிறுதொழில் கடன் கொடுத்திருக்கோமா?” அவர் அவசரமாக விசாரித்தார். நாங்கள் எந்தக் கடனும் தரவில்லை. ஏனென்றால் அவர் போட்டி-நட்பு பேங்கில் சேவிங்க்ஸ் கணக்கு, அங்கேயே புதுக் கத்தரிக்கோல், கத்தி வாங்கி கடையை விருத்தி செய்ய கடன் என்று அனுபவிக்கிறவர். அங்கே இருக்கும் நண்பர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஊர்ஜிதமான செய்தி இது.
அந்த பேங்கில் புதுசாக மாற்றல் வாங்கி வந்த மேனேஜர் ஒருத்தர், குமரேசன் கடன் திரும்பக் கட்ட தாறுமாறாக காலம் எடுத்துக் கொள்வதால் அவரிடம் சரியான காலத்தில் திரும்ப செலுத்தும் சமூகக் கடமையைப் பற்றி சொற்பொழிந்தாராம், ”உங்களுக்கு செக்யூரிடி இல்லாம லோன் கொடுத்திருக்கோம். நினைச்சு பாருங்க. எவ்வளவு நம்பிக்கை உங்க மேலே”.
குமரேசன் கடைக்கு ஆள் வராத பிற்பகல் பொழுதில் அந்தப் பேச்சை கர்ம சிரத்தையாகக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, ஒரு கல்யாண தாம்பூலப் பை நிறைய எதையோ அடைத்து மேனேஜரிடம் நீட்டினாராம். ‘இதெல்லாம் வெளிநாட்டுக்கே ஏற்றுமதி செய்யற பொருள். நான் கடனைக் கட்டாமல் போகமாட்டேன். எதுக்கும் சந்தேகத்துக்கு இதை பத்திரமா வச்சுக்குங்க. விக்கணும்னா சொல்லுங்க, நான் ஆள் தேடித் தரேன்” என்றாராம் பெருந்தன்மையோடு குமரேசன். அந்தப் பை நிறைய நரைத்த, சிக்கு பிடித்த, எண்ணெய் காணாத, சொளசொள என்று கொழும்புத் தேங்காய் எண்ணெய் நெடியடிக்கிற என்று கடையில் வாடிக்கையாளர்கள் தலையில் வெட்டிப் போட்ட தலை முடிக் குவியல் தான் அடைத்து இருந்ததாம்.
குமரேசன் ஏற்றுமதிப் பொருளில் தான் தொழில் பண்ணுகிறார். ஆனாலும் மயிரே போச்சு என்று விட முடியாது என்று அந்த மேனேஜர் முடிப்பையை செண்ட்ரல் ஆபீசுக்கு அனுப்பி அவருடைய இந்த ஊர் வாசத்தை முடித்துக் கொண்டதாகக் கேள்வி. அப்புறம் யாரும் குமரேசனிடம் கடன் வசூல் என்று வாயைத் திறந்து கேட்கவில்லை இதுவரை.
இப்போது குமரேசனையே காணோம். ஒரு நாள், ஒரு மணி நேரம் கூட அவரால் எங்கேயும் தனித்து இருக்க முடியாது. கல்யாணம் கட்டாமலேயே நாற்பது வயது கடந்தவர் அவர். மஞ்சள் சில்க் சட்டையும், காக்கி நிஜாருமாக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உடுத்துத்தான் கத்தரிக்கோல் பிடிப்பார். அது தலையில் பேசத் தொடங்குவதற்குள் குமரேசன் வாய் பேச ஆரம்பித்திருக்கும். கூட இருந்து பேச ஆள் இல்லாமல் மூச்சு நின்றிருக்குமே!
இரண்டே நாளில் குமரேசன் இல்லாமல் போன செய்தி எல்லோரையும் பிடித்துக் கொண்டு பேச, அலச வேண்டிய அதி முக்கியமான சமாசரமாகி விட்டது. காலையில் டபுள் கோச் பேசஞ்சர் ரயிலில் மதுரை போக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் மதுரை கலெக்டர் ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள் ரயில்வே க்ளார்க்கோடு பேசிக் கொண்டிருந்தார் அதைப் பற்றி. ஆனந்த பவானில் சாதா தோசை கொண்டு வரும்போது சர்வரிடம் லேடஸ்ட் செய்தி இருக்கிறதா என்று வாடிக்கையாளர் கேட்டது குமரேசன் பற்றி. ஊருணியில் நல்ல தண்ணி தூக்கி வரப் போகும் பெண்பிள்ளைகள் கொலை, தற்கொலை, சாமியாராக மனம் பித்துப் பிடித்து அலையக் கிளம்பிப் போனது, பெண் சிநேகத்தால் வெளி நாட்டுக்கு, மதராஸுக்கு, பெல்லாரிக்கு ஓடிப் போனது, தீராத சீக்கு பிடித்து மதுராந்தகத்தில் ஆஸ்பத்திரி பெட் கிடைக்காமல் அங்கே தரையில் கிடப்பது என்று சகல விதமான வதந்திகளையும் சர்ச்சை செய்தார்கள். பேங்க் மேனேஜர், கடைக்கு சீல் வைக்கலாம் என்றார். எமர்ஜென்சி காலத்தில் அதெல்லாம் செய்தால் பேங்குக்கு சீல் வைக்கப்படும் என்று தாசில்தார் மிரட்ட இவர் அடங்கிப் போனார். தாசில்தார் மேன்மேலும் இப்படி தைரியமாகப் பேச மனத் தைரியம் அருளும்படி ஆபீஸில் படமாகத் தொங்கிய பிரதமரிடம் மனதில் விண்ணப்பித்தார்.