“மோளே, வாசல்லே என்ன ரெண்டு ஜோடி பிஞ்ச செருப்பு கிடக்கே”, வாசலில் எங்கள் காலணிகளைப் பார்த்து விட்டு கூப்பிட்டபடி உள்ளே வந்த நாயர் நாங்கள் தேன் வளர்க்கும் இடத்தில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் திரிந்து கொண்டிருந்ததைக் கூர்ந்து பார்த்தார். அடுத்து கூடத்தில் துணி போட்டு நிறுத்தியிருந்த கருப்பு வடிவங்களையும் நோக்கினார். “வாங்க, வாங்க” என்றபடி அந்தக் களிமண் சிலைகளை நடுவாக நகர்த்தினார்.
“இது என்னங்க?” நான் கேட்டேன். “காவுலே நாகர் சிலையெ அடுத்து வைக்கறது. இங்கே ஐயனார் கோவில்லே மண்குதிரை வைக்கற மாதிரி” என்றார் அவர். குதிரை என்றால் குறைந்த பட்சம் நாலு காலாவது இருக்க வேண்டாமோ? இப்படி அடர்கறுப்பில் இவர் என்ன பிடித்து வைத்திருக்கிறார்?
அவர் முழுப் பாதுகாப்பாக ஜமுக்காளத்தைப் போட்டு அவற்றை மூடிவிட்டு எங்கள் பக்கம் அசட்டுச் சிரிப்போடு வருவதற்குள் காப்பி கொண்டு வரப் போன யட்சி, அம்மாவுக்கு இடுப்புப் பிடிப்பு, நானே போட்டேன் என்றபடி இரண்டு காப்பி டம்ப்ளரோடு மறுபிரவேசம் செய்தாள்.
குடித்துப் பார்த்தேன். அவளோடு நாளை மறுநாள் சாயந்திரம் ஊருணிக்கரையில் சிட்டை ஸ்வரம், கல்பனா ஸ்வரத்தோடு வசந்தா ராகத்தில் குதித்துக் குதித்துப் பாடியபடி காதலிக்கும் கற்பனைக்கு உடனடியாகத் தடைச் சட்டம் கொண்டு வந்தேன். முட்டை வாடையடிக்கும் குவளையில் அவள் கொண்டு வந்ததற்கு என்ன பெயர் வேணுமானாலும் சூட்டலாம், காப்பி என்பது தவிர.
“அச்சா, எவ்வளவு ரூபாய் லோன் கேட்கலாம்? ஒரு அஞ்சு லட்சம்? அவங்க தரத் தயாரா இருக்காங்க”.
கேஷியர் நாங்க நாங்க என்று நடுங்கியபடி ஸ்வரம் இழுத்தார். இதேது, வேறு மாநிலக்காரர்கள் தடாலடியாகச் சேர்ந்து விட்டார்கள், இந்த மெட்றாஸிலிருந்து வந்த ஒல்லிப்பிச்சான் பையனையும் சேர்த்து. குட்டிச்சாத்தானை எல்லாம் மந்திரம் போட்டு வீட்டிலேயே உக்கார்த்தி வைத்திருக்கிறார்கள். கடன் சிபாரிசு பண்ணாவிட்டால் ரத்தம் கக்கிப் போய்விடுவோமோ என்ற சாவுபயம் அவர் கண்களில் தெரிந்தது.
”இதை எல்லாம் விஸ்தரிச்சு சொல்லிட்டே தானே பொடி மோளே” கேளு நாயர் பிரியமாக மகளைக் கேட்க ஆச்சு என்றாள் அவள்.
“என்ன பாலிலே காப்பி போட்டே பொடிமோளே?” என்று கேஷியர் தேனீ வளர்ப்பைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தபோது கேட்டேன். “ஆட்டுப்பால் இருந்துச்சு. மூலிகை போட்டுக் காய்ச்சினது. தொண்டை கட்டினா எடுத்து விடும். அதுலே தான் காப்பி டீகாஷன் ஊத்தினேன்”. தொண்டையில் ஆயிரம் வாத்துகள் புகுந்து பாடச் சொல்லி வற்புறுத்தின. இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம் நம் இந்தியர்க்கு மட்டும் இனி இன்ப வாழ்க்கை கிட்டும்.. அஞ்சு அம்சத் திட்டம் இது அம்மாமகனின் கொட்டம்”.
“எத்தனை தேனீன்னு கணக்கு சொன்னியாம்மா?” கேளு நாயர் கேட்க, “ஓ, அன்ஞூறுன்னு சொல்லிட்டேன்” என்று மூஞ்சூறு போல மூக்கைச் சுளித்தாள். “அஞ்ஞூறா, பாக்கி எங்கே போச்சு? போன வாரம் கீழ்ப் பெட்டியில் வச்சதும் சேர்த்தா ஆயிரத்தய்ஞூறு” அவர் புதுக் கணக்குச் சொன்னார். அந்த நேரம் பார்த்து கரண்ட் போனது. “இதோ வந்துடும், டிரான்ஸ்பார்மர் மாத்தறாங்க” என்றார் கேளு நாயர். அவருக்குத் தெரியாத துறை எதுவும் இல்லை போல.
“அவ்வளவு இருக்குமா என்ன?” கேஷியர் பெட்டியின் மேல் கை வைத்தபடி சொன்னவர், கை வழுக்கி ஓரமாக எதையோ தட்டி விட, மேலே கூரை ஒன்று ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கப்பல் போகத் தூக்கித் திறப்பது போல் திறந்தது. அவ்வளவுதான். ஒரு மேகக் கூட்டம் போல உள்ளே இருந்து தேனீக் கூட்டம் எழுந்து ஜிவ்வென்று பறந்து ரீங்காரமிட்டபடி வெளியே வந்தது.
“படு, படு” என்றபடி பாரு தரையில் படுத்து, என்னையும் இழுக்க நான் அவளோடு பாதுகாப்பாகத் தரையில் புரண்டேன். கேளு நாயரின் அன்புப் பிடியில் சிக்கி இன்னொரு ஓரம் கிடந்த கேஷியர் அடுக்கடுக்காகத் தும்மினார். பட்டணம் பொடியில் அடித்த உடம்பு கேளு நாயருக்கு. நியாயமாகப் பார்த்தால் பாரு அழுது கொண்டில்லாமல், தும்மிக் கொண்டேதான் பிறந்திருக்க வேணும்.