எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் ஒரு சிறு பகுதி இது –
ரவீந்திரன் கையில் பெரிய ரசீது புத்தகத்தை வைத்துக் கொண்டு வாங்கோ என்று வரவேற்றார். நன்கொடை வசூலா என்று விசாரித்தேன். அது எதுக்கு நன்கொடை, இது பிக்ஸட் டெபாஸிட் ரசீது புத்தகம்”. அதை எதுக்கு எடுத்து வந்தீங்க என்று புரியாமல் கேட்க, “கல்யாண அன்பளிப்பு பணமா வந்திருக்கு இல்லே. அதை பேங்குலே மாப்பிள்ளை – பொண்ணு பெயர்லே பிக்சட் டெபாசிட் போட்டுடுவாங்க. அந்தப் பணத்தை எண்ணி வாங்கி கேஷியர் கருப்பையா ஸ்ட்ராங்க் ரூம்லே வச்சுட்டு வீட்டுக்கு போவார், நாம ரசீது எழுதி, மேனேஜர் கையெழுத்தோடு கொடுத்துட்டு எல்லாருமா சாப்பிட்டு வருவோம்”, அவர் பொறுமையாக விளக்கினார். ஆபீஸும், சமூக வாழ்க்கையும், தனியார் குடும்பத் தோழமையும் ஒன்று கலந்த சூழ்நிலை அது. தெற்குச் சீமைக்கே சொந்தமான அக்கறையும், பிரியமும் சேர்ந்தது.
“அவங்களும் வந்திட்டிருக்காங்க” என்று போட்டி பேங்க் பெயரைச் சொன்னேன். “அவங்களுக்கும் இதே மரியாதை எல்லாம் உண்டு. நீங்களே பார்க்கலாம்” என்றபடி மேனேஜர் உள்ளே போனார். யாராரோ சலிக்காமல் ஒவ்வொருத்தராகப் பார்த்து, சிரித்து “வாங்க” என்று வாசலில் நுழையும் ஒவ்வொருத்தரையும், குழந்தைகள் உட்பட் தனித்தனியாக வரவேற்றார்கள். மேனேஜர் அப்படி அழைத்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு தடவை “ஆமா” என்று வரவேற்பை அங்கீகரித்தார். நாங்களும் ஆமா சொல்லியபடி உள்ளே போனோம்.. மகிழ்ச்சியோடு புன்சிரித்து, கை கூப்பி நின்று பொறுமையாக வரவேற்று வந்ததற்கு நன்றியும் சொல்லும் சமூகம் அது.
போட்டி பேங்க் சகாக்களும் நாங்களும் ஒரே பந்தியில் இருந்து சாப்பிட்டோம். சாயந்திரம் நாலைந்து இனிப்பும், வெள்ளையப்பம், சொதி, இட்லி, பிரியாணி என்றும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்க, பசியாறிய பிறகு பூவும் மஞ்சள் அரிசியும் இரைந்து கிடந்த பெரிய ஹாலில் நாலைந்து பெரிய பத்தமடைப் பாய்கள் விரிக்கப்பட்டன. நாங்கள் ஒரு பக்கமும், எதிரில் மற்ற பேங்க் கூட்டமும் உட்கார்ந்தோம். சம்பந்திகள், கல்யாண தம்பதி அடுத்து வந்து நடுவே உட்கார்ந்தார்கள். ஒரு நாற்காலியும் மருந்துக்கும் இல்லாத சூழல் அது. எல்லோரும் தரையில் தான் கால் மடித்து உட்கார்ந்திருந்தோம்.
மணமக்களுக்கு வாழ்த்து, நன்றி என்று சாங்கோபாங்கமாக பத்து நிமிடம் முன்னால் போக, மேனேஜர்கள் இரண்டு பேரும் கொண்டு வந்த பரிசுப் பொருட்கள் அவர்களுக்குத் தரப்பட்டன. இரண்டு மேனேஜர்களுமே ஆளுக்கு ஐநூற்று ஒரு ரூபாய்க்கு கிப்ட் செக் உருட்டி உருட்டி எழுதி பெரிய கட்டைப் பேனாவால் கையெழுத்து போட்டு மங்கிய பூப்போட்ட கவர்களில் பேங்க் முத்திரையோடு எடுத்து வந்திருந்தார்கள். அங்கே குவிந்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்க்க, இது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.
மரியாதையோடு எழுந்து நின்று எங்கள் கைதட்டலுக்கு இடையே மணமக்கள் கிப்ட் செக்குகளை வாங்கி, முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டி, பெரியவர்களிடம் கொடுத்து விட்டு திரும்ப வணங்கி உள்ளே போனார்கள்.
“ இனிமேல் தான் விசேஷம்” என்றார் கேஷியர் கருப்பையா. ’சோ. நா. அரு. தங்கநகை வியாபாரம், கோலாலம்பூர்’ என்று போட்ட மஞ்சள் துணிப்பைகளோடு உள்ளே இருந்து இரண்டு வீட்டு மூத்த பெண்மணிகளும் வந்தார்கள். நிறைந்து வழிந்த துணிப்பைகள் அவை.
பொதுவில் அந்தப் பைகளைக் கவிழ்த்துக் கொட்டி ஆளுக்குக் கொஞ்சமாக எண்ணி தொகை சொல்லி வீட்டுப் பெரியவர் ஒருவரிடம் ஒப்படைத்தோம். ஐந்தே நிமிடத்தில் அதெல்லாம் எண்ணப்பட்டு மொத்தத் தொகை கணக்கிடப்பட்டட்டது. சரிசமமாக இரண்டாக அது பிரிக்கப்பட்டது.
“இப்பதிக்கு ஒரு வருஷம் ரெண்டு பேரும் பிக்சட் டெபாசிட்லே போட்டுக்குங்க”.
மேனேஜர் கேஷியரிடம் “கல்யாணப் பத்திரிகை கொண்டு வந்திருக்கீக தானே” எனக் கேட்க, நான் விழித்தேன். கல்யாண வீட்டுக்குப் போக கல்யாணப் பத்திரிகை எதற்கு அட்மிஷன் கார்டு போல. அதற்குள் போட்டி பேங்க் மேனேஜர் அவர் கைப்பையில் இருந்து ஒரு அழைப்பைக் கொடுத்தார். மேனேஜர்கள் மேனேஜர்கள் தான். யாருடைய நிர்வாகியானால் என்ன?
முப்பத்துரெண்டாயிரத்து முன்னூற்று ஏழு ரூபாய் புது மணத் தம்பதிகளின் பெயரில் ஒரு வருடம் நிரந்தர வைப்புக் கணக்கில் ஏற்றி நான் ரசீது எழுதினேன். மேனேஜர் கையொப்பம் இட, பிளாஸ்டிக் உறையில் வைத்து அதை மேனேஜர் மரியாதையோடு அவர்களிடம் நீட்டினார். “இன்னும் நிறைய வரணும்” என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. இன்னொரு ப்ளாஸ்டிக் உறை. இன்னொரு ‘இன்னும் நிறைய வரணும். நாங்கள் எழுந்தோம். இரண்டு கேஷியர்களும் தோல்பையில் பத்திரமாகப் பணத்தை எடுத்து வைத்தபடி சிரித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள்.
வேறே பேங்க் வந்துதுன்னா மூணா பிரிப்பாங்களா? நான் ரவீந்திரனைக் கேட்டேன். “இங்கே இந்த ரெண்டு பேங்க் தான் ரெண்டு தலைமுறையா தொழில் நடத்தறது. இவங்களைத் தவிர வேறே யாருக்கும் டிபாசிட் இல்லே”.
“தாம்பூலம் வாங்கிட்டுப் போகலாம், வாங்க” ஒருத்தர் வந்து அழைத்தார். உள்ளே ஆளோடியை ஒட்டி இருந்த பெரிய ஒரு அறைக்கு எல்லோரும் போனோம். அங்கே பாத்திரக்கடை போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாளிகளை வரிசையாக வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு லிட்டராவது பிடிக்கும் எவர்சில்வர் பக்கட்கள் அவை. அம்மா, பாட்டி போன்ற குடும்பப் பெண்களின் பிரியத்தைக் கவர இப்படி மாதாமாதம் ஒரு வாளி வாங்கிக் கொடுத்தால் போதும். அவர்களுக்கு அடுத்த தலைமுறைப் பெண்கள் எங்கள் வயது உள்ளவர்களான அவர்களுக்கு பாத்திர மோகம் எதுவும் கிடையாது. நல்ல பட்டு, வாயல் புடவைகள், கேசட் டேப் ரிக்கார்டர், இளையராஜா இசையமைத்த பாட்டுகள் அடங்கிய கேசட், குட்டி கத்தரிக்கோல் இப்படியான சமாசாரங்கள் இருந்தால் பிரியம் கிடைக்கும்.
ஆளுக்கு ஒரு பக்கெட் கொடுக்கப்பட்டது. என் கையில் வந்ததைத் தூக்கவே முடியவில்லை. அவ்வளவு கனம். உள்ளே லட்டு, அதிரசம், முறுக்கு என்று தின்பண்டங்கள். பெரிய கொப்பரைத் தேங்காய். வெற்றிலை, பாக்கு பிஸ்கெட் பாக்கெட். ஒரு செலபோன் பையில் பாரீஸ் தேங்காய் சாக்லெட்கள்.
நான் வாசலுக்குப் போக, மற்ற பேங்க் தோழர் சொன்னார், “பஸ் இறங்கி நீங்க விரசா போயிடுங்க” என்றார். “ஆமா, கையிலே வாளியைப் பிடிச்சுக்கிட்டு வரிசையா நடந்தா, அவனவன், என்ன காலையிலே போக மறந்துடுச்சான்னு கேப்பான் நக்கலா.” என்றார் கேஷியர். நான் ஸ்கூட்டரில் வந்திருக்கிறேன். நக்கல், பிக்கல் பிடுங்கல் ஏதுமில்லை.