மினி லோன்மேளாவில் மொத்தம் பத்து கடனாளர்கள். எட்டு பெண்களுக்கு தக்ளி, ராட்டை வைத்து நூல் நூற்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய். மீதி இரண்டு பேர் சுபாஷ் பஜாரில் கடை வைத்திருக்கிறவர்கள். ஒருவர் ஒண்டிப்பிலி வரதராஜநாயுடு. காலை முதல் ராத்திரி வரை இவர் கடையில் சர்பத் பிரசித்தமானது. ஊற வைத்த சப்ஜா விதை, கடல்பாசி, வேகவைத்த சேமியா, கடையில் ஊர்கிற எறும்பு, தெருவோடு போகிற யானை என்று சகலமானதையும் போட்டு மேலே ஒரிஜினல் ஒண்டிப்பிலி சர்பத் ஊற்றி அவர் ‘அடித்துக் கொடுக்கும்’ கலக்கி சர்பத் அதுவும் நைட் எடிஷன், ஊரில் மக்கள்தொகைப் பெருக்கத்தை அதிகரிக்கத் தூண்டுதலாகச் செயல்படுவதாக ஒரு பொதுவான புகார் உண்டு. என்றாலும் அந்த ருசிக்காக புகாரைப் புறம் தள்ளி ஊர் மக்கள் மகத்தான ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கிய சேர்மானத்தின் சரியான பெயர் ஒண்டிப்பிலி சர்பத். விஷயம் தெரியாத யாராவது ஒண்டிப்புலி சர்பத் என்று ஏதாவது பேசும்போது சொல்லிவிட்டால் போதும், நாயுடு கண் சிவக்க ரௌத்ர பீமனாக கோபத்தைக் காட்டி சொன்னவரை நார்நாராகக் கிழித்து விடுவார்.
“அது புலி இல்லே. பிலி. நூறு புலி வலிமை அதுக்கு உண்டு. ஒண்டிப்பிலி சர்பத் தயார் செய்து அனுப்பறது சாதாரண குடும்பம் இல்லே. சேதுபதி ராஜா, மருது ராஜா காலத்துலே இருந்தே அரண்மனைக்கு சர்பத் கொண்டு போய் தினம் கொடுத்து வந்தவங்க. வெள்ளைக்காரன் எவ்வளவோ கெஞ்சியும் அவனுக்கு காளையார்பட்டியலே கொண்டு போய்த் தரலையே. ஒண்டிப்பிலி சர்பத்து செய்யற ரகசியம் தாயம்மா சாமி மேலே சத்தியம் செஞ்சு ரகசியமா வச்சு ஒரே குடும்பத்துக்குள்ளே தான் தலைமுறை தலைமுறையா வருது. அந்த எசன்ஸிலே இருந்துதான் நமக்கு புட்டியிலே அடைச்சு வர்ற சர்பத் அனுப்பறாங்க. எனக்கு கூடுதல் ஸ்ட்ராங்கா ஸ்பெஷல் சரக்கு வரும். ஓணரே போத்தல்லே போட்டுத் தருவார். நான் ஆகக் கொஞ்சமாத்தான் லாபம் வச்சு நம்ம மகாஜனங்களுக்கு சர்பத் அடிச்சு விக்கறேன். சேர்மானச் செலவு வேறே. ஒரு கிளாஸ் ஐம்பது பைசா வேறே எங்கேயும் கிடைக்காது.
********************* ******************************* *************************
நூல் நூற்க லோன் வாங்கிய பெண்களுக்கு பேங்க் சார்பில் கதர் வஸ்திராலயத்தில் தக்ளியும் வாங்கிப் பரிசாக அளிக்கப்பட்டது. ஒரு தக்ளி பதினாலே பைசா. அதற்கு நாலு இடத்தில் பில்லை சரிபார்த்து கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்தார்கள்.
கதர்க்கடை நிர்வாகி, அலுவலர்களும் லோன்மேளாவுக்கு வருகை புரிந்து லோன் கொடுத்தபோது கைதட்டி எங்களோடு காராபூந்தி சாப்பிட்டு காபி குடித்தார்கள்.
அந்தப் பெண்களை நான் கேட்டேன்: ”ஆயிரம் ரூபாயை வச்சுக்கிட்டு என்ன பண்ணுவீங்க”?
”நூல் நூத்து சிட்டம் போட்டு வேறே பேங்கிலே இருபதம்ச லோன் போட்டு வாங்கி இருக்கற தறியிலே நெய்து, புடவைகளை குஜராத்துக்கு அனுப்பி வித்து லாபம் கண்டு பங்கு பிரிச்சுப்போம்”. எம்மாடி.
இந்திராவின் அதிர்ஷ்டம் இப்படி ஊர் தோறும் திரளும், அவர்மேல் நம்பிக்கை மிகுந்த கூட்டம். அவர்களை அணிதிரட்டி பூஸ்டர் ஷாட்டாக தொடர்ந்து பொதுக்கூட்டம், ரேடியோ, பத்திரிகை மூலம் மேலதிக நம்பிக்கை அளிப்பது -இதெல்லாம் வேறே எங்கெல்லாம் எப்படியோ, இங்கே மிகச் சரியாக நடக்கிறது.
இந்திரா இந்தப் பெண்கள் எல்லோருக்கும் ஆதர்சமாகி இருந்தார் என்பது அவர் பெயரை கண்கள் பனிக்க இவர்கள் உச்சரித்துப் பேசுவதில் தெரிந்தது.
ஆறரை மணிக்கு விழா முடிந்து, நூற்கும் பெண்கள் போக ஏழெட்டு கைக்குட்டை டால்கம் பவுடர் வாசனையோடு நாற்காலிகளுக்குக் கீழே கிடந்ததைக் குனிந்து எடுத்தேன் அதென்னமோ பெண்கள் கைக்குட்டைகளைத் தவறவிடத் தவறுவதே இல்லை.
(எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி இது)