Excerpt from the novel ‘1975’ being written
உள்ளே மாஜி கவுன்சிலர் மேனேஜரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
“அதென்ன பாரதப் பிரதமர் பெயர் வச்சிருந்தா லோன் கொடுத்திடுவீங்களா? அதுவும் எப்படி? லேபில் நம்ம பிரஸ்ஸிலே தானே அச்சுப்போட வந்தாங்க. இந்திரா நல்லெண்ண, அதுவாவது பரவாயில்லே, சஞ்சய் விளக்கெண்ண. நம்ம தேசத் தலைவர்களை, சுதந்திரம் கிடைக்க செக்கிழுத்த மக்கள் தலைவர்களை அவமதிக்கிறது இது. ஒரு பெட்டிஷன் போட்டேன்னா நீங்க கூண்டோட ட்ரான்ஸ்பர் ஆகிடுவீக. நல்ல வேள, புரூப்பு பாத்தபோதே அந்தக் கண்றாவியை எல்லாம் மாத்தச் சொல்லி எல்லோரையும் காப்பாத்தினேன். புதுசா பேரு நான் தான் வச்சேன். இந்தியா வெளக்கெண்ணெய், இமயம் நல்லெண்ணெய். சரிதானே?”
மேனேஜர் நடுங்குவது தெரிந்தது. அக்கவுண்டட்டும். மற்றபடி எல்லோரும் உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ என்று வீராப்பாக நின்றோம். எல்லோரையும் காப்பாற்ற இவரென்ன மகாவிஷ்ணுவா? அப்புறம், பிரதமரோ இளவலோ சுதந்திரம் கிடைக்க செக்கிழுத்ததாக எனக்கு நினைவில்லை.
”வீட்டுக்குள்ளே விளக்கெண்ணெய் விக்கறதுக்கு நாட்டு வரிப்பணத்தை கடனா வாரிக் கொடுப்பீங்க நான் தேசிய அளவிலே மலிவு விலையிலே சலவை சோப் செய்யறதுக்கு கடன் கேட்டேன்.அது வெறும் சலவை சோப் இல்லே. சஞ்சய் சலவை சோப். என் சவுக்காரம் மார்க்கெட்டுக்கு வந்தா, சன்லைட், செல்லம் சோப், சர்ப் இதை எல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். வெறும் இருபத்தையாயிரம் தான் கேட்டேன். உங்க ரீஜனல் ஆபீசுலே லோன் தரமாட்டேனுட்டாங்க. ஆயிரத்தைநூறு ரூபா லோன் தரோம். புண்ணுக்கு போடற போரிக் பவுடர் பண்ணுங்கன்னு ஐடியா வேறே தராங்க.”
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்து விட்டு சிவந்து வழிந்த முகத்தை மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்.
******************* ********************* **************
சாயந்திரம் ரவீந்திரன் அறைக்கு நடந்து போகும்போது வரதராஜன் கடையில் கலக்கி சர்பத் குடித்தேன். சர்பத் அடித்துக் கொடுத்த நாயுடு முகம் வாடி இருநதது. ஏகாதசி, விரதம் என்றார். நாளைக்கு இல்லையோ ஏகாதசி? போத்தி நாலு தலைமுறையாக சோழியை உள்ளங்கையில் வைத்துக் குலுக்கி விசிறிப் போட்டு ஜோசியம் பார்த்த குடும்பத்தில் பிறந்து விழுந்தவனாக்கும். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் திதி, நட்சத்திரம் பிசகில்லாமல் சொல்வேன் தெரியுமோ.
நாயுடு ஒன்றும் தோன்றாமல் நெற்றி நாமம் சுருங்கச் சிரித்தார். எனக்குள் இருந்த பேங்க் ப்ரபேஷனரி ஆபிசர் உஷாராகி விட்டான். கேட்டேன்.
”உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன தம்பி? ரெண்டாயிரத்துலே ரொக்கமா ஆயிரம், டிராப்டா ஆயிரம் கொடுத்தீங்களே, அதுலே பணத்தை மலேரியாக்காரர் எடுத்துக்கிட்டார். அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை இருந்தது. நீங்க கவலைப்பட வேணாம். நான் பேங்குக்கு எப்பாடும் பட்டு மாசாமாசம் கட்டிடறேன்”.
“இதான் இந்திரா வியாபார முன்னேற்றமா?” அவர் வெறுமனே சிரித்தார்.
இதைத் தெரிந்து நான் ஒன்றும் செய்ய முடியாது. மேனேஜரிடம் சொன்னால், ’அவங்க தொழில் முன்னேற்றத்துக்குன்னு வாங்கின லோன் பணத்தை செலவழிச்சது எப்படின்னு நாம் கேட்க முடியாது. ரொம்ப நோண்டினா, ட்ரான்ஸ்பர்லே தூக்கி அடிச்சுடுவாங்க. விடுங்க’ என்பார். கண்டும் காணாமல் போகிற சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.
”லோன் டிராப்டை மாத்தி ஒண்டிப்பிலி எசென்ஸ் வாங்கிட்டீங்களா?”, என்று கேட்டேன். எனக்குள் இருந்த பேங்க் ப்ரபேஷனரி ஆபிசர் உஷாராகி விட்டான். .
“ஓ, மதுரையிலே போய் வாங்கி வந்துட்டேன்”.
எங்கே அது? கடைக்குள் சுட்டிக் காட்டினார். எலுமிச்சம்பழம், வெட்டிவேருக்கு இடையிலே ஒரு பாட்டில். அவ்வளவுதானா ரெண்டாயிரம் ரூபாய்க்கு வரும்?
”ஒண்டிப்பிலி எசன்ஸ் மீதி ஆயிரத்துக்கு வாங்கினது இதுதானா?”
அவர் தயங்கி கடைக்குள் நிறுத்தி இருந்த பழைய அலமாரியைத் திறந்து காட்ட, அட்டைப் பெட்டியில் ஐந்து பாட்டில் எசன்ஸ்.
“டிராப்டை மாத்தி ஐநூறு ரூபாய்க்கு கொள்முதல் செஞ்சேன். மீதி காசு கையிலே இருக்கு”. அவர் தயங்கினார்.
”காலையிலே சர்பத் குடிக்க வந்திருந்தீங்கன்னா இந்த பாட்டிலும் இருந்திருக்காது”.
“ஏன், வீட்டுலே வச்சிருப்பீங்களா?”
இல்லே, மலேரியாக்காரர் வீட்டுலே. சீனுவாசன் அங்கே இருந்து பகல்லே தான் எடுத்து வந்து தந்தார்” என்றார் நாயுடு.
சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. மெல்ல நிலைமை அர்த்தமானது.
பேங்க் லோன் தொகை ஆயிரத்தைப் பிடுங்கிக் கொண்டதோடு, ஒரிஜினல் நன்னாரி ஒண்டிப்பிலி எசன்ஸ் பாட்டில்களையும் கோவிந்தன் நாயுடுவிடம் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்துப்போய் வீட்டு எண்ணெய் கோடவுன் ஆக நாமகரணம் செய்யப்பட்ட உக்கிராணத்துக்குள் வைத்திருக்கிறார். டிராப்ட் மாற்றியதில் பாக்கி இருக்கும் ஐநூறைக் கேட்டு நச்சரித்திருக்கிறாராம். கொடுத்தால் தான் எசென்ஸைத் திரும்பத் தருவேன் என்று பிடிவாதமாம்.
சரிதான், எசென்ஸ் எப்படி திரும்ப உங்க கிட்டே வந்தது? கேட்டேன்.
அது ஒரு சுவாரசியமான கதை.
பகலில் சின்ன விளக்கெண்ணெய் பீப்பாய் சாலாச்சி அம்மாளுக்கு டெலிவரி கொடுக்க நான் அனுப்பிய கோடவுண் கீப்பர் சீனுவாசன் டெலிவரி கொடுத்த கையோடு அங்கே வேறே என்ன எல்லாம் பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று பார்த்திருக்கிறார். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய். அப்புறம் சம்பந்தமில்லாமல் மேஜை அடியில் வைத்திருந்த ஒண்டிப்பிலி எசன்ஸ். இங்கே எதுக்கு அது? தடதடவென்று அட்டைப்பெட்டியை பழநி குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு யாருக்கும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து திரும்பியிருக்கிறார். நேரே நாயுடு சர்பத் கடைக்கு சவாரி.
”ஒண்டிப்பிலின்னா நீங்க மட்டும் தானே? வெளக்கெண்ணெய்க் கடையிலே அது எதுக்குன்னு தான் எடுத்து வந்துட்டேன் நாயுடு. பிடியுங்க” என்று குதிரை வண்டியில் இருந்தபடிக்கே நாயுடுவைக் கூப்பிட்டுக் கொடுத்து விட்டுப் போய்விட்டாராம் சீனுவாசன். திருடனுக்குத் தேள் கொட்டியது போல கோவிந்தன் துடிப்பது அதனால் தான்.
”வெயிட், எண்ணெய் வச்ச கோடவுன் உள்ளே ஒண்டிப்பிலி எசன்ஸ் பெட்டியை வச்சிருந்தாரா முத்துகிட்டு அண்ணன்? அந்த ரூமுக்கு, அதான் கோடவுனுக்கு சாவி பேங்கிலே தானே இருக்கு. கதவை எப்படி திறந்து பெட்டியை வச்சாராம்?”.
நாயுடு மீசையை நீவிக்கொண்டு சிரித்தார்.
“போங்க தம்பி. சிரிக்க வக்காதீங்க. உங்களுக்கு இந்த ஊர் மனுசங்களையும் தெரியாது, மரக்கதவையும் தெரியாது”.