எழுதியதில் இருந்து ஒரு சிறிய பகுதி
செண்ட்ரல் மார்கெட்டில் நுழைந்ததுமே இடது வசத்தில் பஞ்சாபி தாபா மற்ற எந்த நேரத்தையும் விட அதிகக் கூட்டத்தோடு காணப்பட்டது. ராத்திரி பத்தரை மணிக்கு விழுங்கிய விஸ்கி உடம்புக்குள் ஏதேதோ ரசாயனங்களைக் கட்டவிழ்த்து விட்டு என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. மிகச்சிறந்த அழகியாக நான் கருதும் பாயல் அஹுஜாவைப் பற்றிய சீரிய சிந்தனை ஒன்றை எல்லோரும் அறிந்து கொள்ள ஏதுவாக சத்தமாகச் சொல்ல, ஜகதீஷ் அவசரமாக என் வாயைப் பொத்தினான். சீஃப் மேனேஜர் ஜெய்ராம்ஜிகோ என்று உரக்கச் சொல்லியபடி இரண்டு பெஞ்ச் பின்னால் போய் உட்கார்ந்து கொண்டார். என்னிடம் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் அவர்.
“எமெர்ஜென்சி டைம். அதுவும் இது டில்லி. ஆபாசமா பேசினா செண்ட்ரல் மார்க்கெட்டை சுத்தி ஓட வச்சுடுவாங்க. மொட்டைக் கட்டையா ஓடணும்”
ஆக, போதை தலைக்கேறிய ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரியில், பரபரப்பான லாஜ்பத் நகர் செண்ட்ரல் மார்க்கெட் நுழைவாயிலில் பெரிய சூளைகளில் கோழியும் உருளைக் கிழங்கும் ஆட்டு மாமிசமும் வெந்து கொண்டிருக்கும் பஞ்சாபி தாபா என்ற சாப்பாட்டுக்கடை மர பெஞ்சில் எமெர்ஜென்சி என்னிடம் திரும்ப வந்து சேர்ந்தது.
“படுத்துக்கணும்னா தப்பா? எந்த ஊரிலே?” நான் கேட்டேன்.
லட்சுமண் கௌடா முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு ஜகதீஷிடம் அதை விசாரிக்க, அவன் என் தோளில் தட்டிச் சொன்னான் :
“தனியா படுத்துக்கணும்னா பிரச்சனையே இல்லே”.
விசிறியடித்து ரூமாலி ரொட்டி சுட்டுக் கொண்டிருந்த அழுக்கு சிவப்பு ஸ்வட்டர்காரன் கச்சிதமான பச்சை ஸ்வெட்டரில் சிரிக்கும் பாயல் ஆகி, “சாப்பிட்டு படுத்துக்கலாம்” என்றாள்.
“இவன்களை அனுப்பிச்சுடு”.
நான் தலையாட்டியபடி உட்கார்ந்திருந்தேன்.
“போத்தி முழு மப்புலே”, ஜகதீஷ அறிவிக்க விவஸ்தையே இல்லாமல் எல்லாரும் கைதட்டினார்கள். நானும்.
****** *** **** *** ***
இரண்டு லிட்டர் பெட்ரோல் மட்டும் பகட்கஞ்சில் ஷீலா தியேட்டர் பக்கம் பெட்ரோல் பங்கில் போட்டு வண்டியைக் கிளப்பினோம். ஆச்சரியகரமாக இரண்டே உதையில் வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. நான் ஓட்ட ரெடியாக நின்றேன்.
“வேணாம். நீ மெட்ராஸ்லே ஓட்டி யிருக்கலாம், இங்கே ட்ராபிக்கே வேறே மாதிரி. ஓரமாப்போனா பின்னாலே வந்து மோதிடுவாங்க. முன்னாலே இருந்து குறுக்கே வந்து முட்டிடுவாங்க”.
“பின்னே எப்படித்தான் போக?”
டவுண் பஸ் ஒன்று மோதுவது போல் வளைவு திரும்பி வேகமாக வந்து பின்னால் உரசிக் கொண்டு போனது.
“பார்த்தியா, நிக்கற போதே இப்படி, ஓட்ட ஆரம்பிச்சா?”
ஜஸ்பீர் முன்னால் உட்கார்ந்து என்னைப் பின்னால் பில்லியனில் அமரச் சொன்னான். எப்படித்தான் ஓட்டறதாம்? தள்ளிக்கிட்டே லாஜ்பத்நகர் போயிட வேண்டியதுதானா?
”ஒரே வழி நட்ட நடு ரோடுலே ஓட்டறதுதான். சிகப்பு விழுந்தா முன்னாலே போறவன் நின்னா மட்டும் நின்னா போதும். மஞ்சள் எல்லாம் கணக்கிலேயே வராது. நடுவிலே போனாத்தான் நீ வந்துட்டிருக்கேன்னு தெரியும். அப்புறம் ஜாக்கிரதையா இருப்பான் எதிரே ராங்க்லே வர்றவனும் பின்னாலே தொரத்தற பஸ்ஸும். இன்னொண்ணு, எவ்வளவு ஹாரன் சத்தம் கேட்டாலும் கவலையே படக்கூடாது. நம்ம கிட்டே ஹாரன் இருந்தா நம்மளும் அடிப்போம் இல்லே. அவனுக்கு இருக்கு, அடிக்கறான். அம்புட்டுத்தான்”.