எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி
நான் யோசித்துவிட்டுச் சொன்னேன் – இங்கே ரயில்வே கேட் பக்கம் பொறம்போக்குலே குடிசை போட்டு சில தமிழ்க்காரங்க இருக்காங்க. முந்தியெல்லாம் சேலம் பக்கம் இருந்துதான் இப்படி புறப்பட்டு வருவாங்க. இப்போ தெற்கிலே எங்கெல்லாமோ இருந்து வர்றவங்க.. முக்கியமா பொம்பளை ஆளுங்க வீட்டு வேலை செய்வாங்க, ஆம்பிளைங்க ரயில்வே கேங்க் கூலி, இல்லே சின்னச் சின்னதா உதிரி வேலை. இந்தி சரளமா பேசுவாங்க. வந்து ஒரு வருஷத்திலே பேசக் கத்துக்கிடுவாங்க. கையிலே பணம் அதிகம் புழங்கினா, செலவும் அதிகம் தான். செண்ட்ரல் மார்க்கெட் ஓட்டல்லே இருபது ரூபாய் கொடுத்து மசாலா தோசை வாங்கித் தின்ன நாம யோசிப்போம். பக்கத்துலே உக்காந்து அவங்க சர்வ சாதாரணமா சாப்பிட்டு பார்சலும் வீட்டுக்கு வாங்கிப் போவாங்க. அவங்க இடத்துலே தெருவிலேயே காடா விளக்கு வச்சு நம்மூர் சீவல் பாக்கு வித்திட்டிருக்கறதை பார்த்திருக்கேன் என்றேன். அங்கே கடா மார்க் சாராயமும் ரொம்ப தெரிந்தவர்கள் என்றால் உள்ளே இருந்து எடுத்துக் கொடுப்பார்கள் என்று நண்பன் சாமிநாதன் சொல்லியிருக்கும் விஷயம் நினைவு வந்தது. அதை இவரிடம் சொல்லவேண்டாம் என்று தீர்மானம் செய்திருந்தேன்.
பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க, அவர் லுங்கியும் செருப்பும், மேலே யாரோ யாருக்கோ எப்போதோ போர்த்திக் களைந்த பொன்னாடையுமாக படி இறங்கிப் போனதைப் பார்த்தேன். பேண்ட் போட்டுப் போகச் சொல்லலாமா? லுங்கியை மட்டமாகப் பார்க்கும் ஊர் இது. வேண்டாம். பக்கத்தில் தானே, கூப்பிடு தூரத்தில் லஜ்பத்நகர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்து ரயில் கேட்டுக்குத்தான் போகிறார். கடந்து போனாலும் ஈராஸ் தியேட்டர். அதுக்கு மேலே ஞாயிற்றுக்கிழமை ராத்திரி குளிரில் பார்க்க என்ன இருக்கிறது? மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடத்தில் திரும்பி விடப் போகிறார்.
வரவில்லை. பதினைந்து நிமிடம் அரை மணியாகி, அது ஒரு மணி நேரமாக நீண்டு கழிந்து போனது. வழி தப்பிப் போய் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்கிறாரா? நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட், செண்ட்ரல் மார்க்கெட், மூல்சந்த், ஜங்க்புரா, ஹஸ்ரத் நிஜாமுதீன் என்று சுற்றுவட்டாரம் முழுக்கப் போய் வந்தேன். மிக நிதானமாக வண்டி ஓட்டிப் போய் தெருவில் நடந்து போகிற எல்லோரையும் நின்று நின்று பார்த்துப் போனேன். அவரைக் காணோம்.
ஒரு மணி நேரத்தில் வீடே வேறே மாதிரி ஆகிவிட்டது. சவுந்தரம்மா பெரிதாக அழ ஆரம்பித்து அடக்கிக் கொண்டு விசும்பினார். வீட்டில் இருந்த மற்றப் பெண்கள் ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்து பாதியில் விசித்தழத் தொடங்கினார்கள். குழந்தைகள் நிறுத்தாமல் உச்சத்தில் குரலெடுத்தன.
கருப்பையா பிள்ளை எங்கள் சீப் மேனேஜரிடம் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அவர் வீட்டு போன் நம்பர் எங்கள் யாருக்கும் தெரியாது. கீழே வாஸ்வானியிடம் கேட்கலாம் என்று போய் வாசல் அழைப்பு மணியை ஒலித்தேன். அது வேலை செய்யவில்லை. நடு ராத்திரியில் கதவைத் தட்ட மனம் இல்லாமல் திரும்பி வந்தேன். எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தெருவில் சுஷ்மா சர்மா என்று அரசியலில் ஈடுபடும் சுப்ரீம் கோர்ட் வக்கீலும் மாணவர் இயக்கமான வித்யார்த்தி பரிஷத்தில் முக்கிய ஆளுமையான அவருடைய கணவரும் இருப்பதாக ஜஸ்பீர் ஒரு குடிமும்முர ராத்திரியில் சொன்ன நினைவு. எமர்ஜென்சியில் அவர்கள் வீடு காலி செய்து கொண்டு கண்மறைவானதாகவும் கேட்ட நினைவு.