பின்கதையில் இருந்து
சங்கரன் போத்தி 1990 டிசம்பர் வரை டெல்லியில் வங்கி அதிகாரியாகப் பதவி வகித்தான். மே 1977-ல் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான். பாயல் மேல் அவன் வைத்த பொருந்தாத மையல் சற்றே அடங்க, அவனுடைய கல்யாணம் ஜூன் 1977-ல் நடந்தேறியது. அதன் பிறகு உலகம் எப்படிப் போகிறது என்பதில் அவ்வளவாகச் சிரத்தை இல்லாத இல்லறத்தானாக புதுடில்லி லாஜ்பத் நகரிலும், கிரேட்டர் கைலாஷிலும் யமுனா நதிக்கரையில் மயூர் விஹாரிலும் இரண்டு அறை அபார்ட்மெண்ட்களில் அடுத்த பதின்மூன்று வருடம் குடும்பம் நடத்தினான்.
சங்கணாசேரிக்கு பணி மாற்றம் கிடைத்து தில்லி மாநகரைப் பிரிய மனமே இல்லாமல் போத்தி குடும்பம் குடிபெயர்ந்தபோது நான்கு பேர் கொண்டதாக இருந்தது அது. போத்தியின் பள்ளிக்கூடம் போகும் எட்டு வயது மகனும் ஐந்து வயது மகளும் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களாகி இருந்தார்கள்.
—- —- —–
தஞ்சம்மா தன்முயற்சியால் தமிழ் கசடறக் கற்று பிற்பகலில் ட்விட்டரில் ‘தஞ்சம்மா கற்ற தமிழ்’ என்று ஈற்றடி வரும் பலவிகற்ப பஃறொடை வெண்பா எழுதுகிறாள். போத்தி அவளிடம் படிக்க ஆரம்பித்த கன்னடமோ ஆட்ட, ஊட்டா, ஆஹாராவைத் தாண்டி அப்பால் போகவில்லை
—- —– —–
சங்கணாச்சேரி, ஆலுவா, காலடி, சாவக்காடு, எரணாகுளம் என்று, இட மாற்றமும், அக்கௌண்டண்ட், மேனேஜர், சீஃப் மேனேஜர் என்று அடுத்தடுத்த பதவி உயர்வும் பெற்ற போத்தி அப்புறம் எதுவும் எழுதவில்லை. போத்தியின் குழந்தைகளுக்கு எமர்ஜென்சி என்றால் என்ன என்று தெரியாது. போத்தியின் தலைமுறையும் கூட அதை மறந்து விட்டது.
—- — —- —-
இடைக்காலத்தில் நடந்த சில சிறு நிகழ்வுகள் –
ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 24 மார்ச் 1977 அன்று பதவி ஏற்று 15 ஜூலை 1979 வரை ஆட்சியில் இருந்தது. உட்கட்சிப் பூசல்களால் அந்த அரசு கவிழ்ந்த பிறகு சௌதிரி சரண் சிங்கின் தலைமையில் 28 ஜூலை 1979 முதல் வரை பிளவு பட்ட ஜனதா கட்சி தலைமையில் கூட்டணி அரசு பதவியில் இருந்தது. இந்திராவின் காங்கிரஸ் கட்சி அந்த ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. எனினும் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்ள 1979 டிசம்பரில் சரண்சிங் அரசு கவிழ்ந்தது.
ஜனவரி 14, 1980- பழையன கழிய, புதியன புகும் போகிப் பண்டிகைக்கு அடுத்து வந்த தைப்பொங்கல் தினத்தில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
—————————————-