புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.

எழுதி நிறைவு செய்த என் அடுத்த நாவலான ‘1975’, எடிட்டிங்கில் இருக்கிறது. மூன்றாம் முறையாக முழுக்கப் படித்து, கதைப்போக்கு, எழுத்து, சொல், வாக்கிய அமைப்பு போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், நீக்கம், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல், இணைத்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.

என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெறும் எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றிருக்கிறார்கள். தகவல், ஒருங்கமைதி சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். நாவலில் இந்த நண்பர்களைப் பெயர் குறிக்கப்பட்டு நன்றி தெரிவிக்க உத்தேசம்.

படிக்கப் படிக்கக் கருத்துகளை எழுதி அனுப்பியும், அழைத்துப் பேசியும் இதுவரை நிகழ்ந்த உரையாடலில் இருந்து –

1) //அவருடைய மூக்கு இந்திரா காந்தி, நாசர் போல நீளம்.

1975-ல் நாசரா?

இவர் பழைய எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர்

(சற்றே மாற்றி, விரித்தெழப்படுகிறது இந்தப் பத்தி)

2 // பிரிட்டீஷ் பிரதமர் ஜிம் கேலகன்

கேலகன் 1976-ல் தான் பதவிக்கு வந்தார். இந்த அத்தியாயம் 1975 ஜூனில் நிகழ்கிறது

(பிரிட்டீஷ் பிரதமர் ஹெரால்ட் வில்சன் என்று பத்தி மாற்றப்பட்டது)

3)//சுப்ரீம் கோர்ட் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பைத் தொடர்ந்து எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டு..

அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தானே எமர்ஜென்சி?

ரெண்டும் தான். அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பை ஸ்டே வாங்க அரசு கோரியபோது, சுப்ரீம் கோர்ட் வெகேஷன் ஜட்ஜ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நிபந்தனைக்குட்பட்ட ஸ்டே கொடுத்தார். அது 1975 ஜூன் 24-ஆம் தேதி. அடுத்த நாள் எமர்ஜென்சி வந்தது

4 லாஜ்பத் ரோடு கோல்ப் லிங்க்ஸ் பக்கம் எங்கே வந்தது? ஆர்.கே.புரம் – லாஜ்பத்நகர் டெர்மினஸ் பஸ் எண் சரிபார்க்கவும்…

லாலா லாஜ்பத் ராய் ரோடு; பஸ் ரூட் 611

5. //பருப்புப் பொடியும் நெய்யும் பெரிய விழுதாக காரமான கோங்குராவும் தான் இரைவணக்கம் பாடி ராச்சாப்பாட்டைத் தொடங்கி வைக்கும்//

இரைவணக்கமா? ஆமாம், இரைவணக்கம் தான். மேன்ஷன் வாழ் இளைஞர்களின் அக்கால சொல்லாட்சி
———————————————————

நாவல் தலைப்பு? 1975-சங்கரன் போத்தியின் உலகம், 1975, பத்து வருடக் கணக்கை எடுத்துப் பட்டியல் போடுகிறோம் (எமர்ஜென்சி காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் அடிக்கடி ஒலித்த எமர்ஜென்சி ஆதரவுப் பிரச்சாரப் பாடல் தொடக்க்ம்).

நேற்று என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் ஹரன் பிரசன்னாவும், மருதனும் நாவல் தலைப்பு 1975 என்றே அமையட்டும் என்று கருத்து சொன்னார்கள்.

என் எல்லா நூல்களையும் போல், இந்த நாவலும் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளிவரும். 350 பக்க அளவில் அமைந்தது இந்நூல்.

2 comments on “புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.
  1. mohan rangachary சொல்கிறார்:

    அருமை படித்த வரை….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன