1975 நாவல் -முன்னுரையிலிருந்து ஒரு பகுதி
தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், வரலாற்றின் நிகழ்ந்ததை நிகழ்ந்ததாகக் காட்டும் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது.
வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில் நடந்து, என்னோடு சென்னை மேன்ஷனிலிருந்த நண்பர்கள் நினைவு வைத்திருக்கும் நிகழ்ச்சி அது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினத்தில் நிகழ்ந்தது. மேன்ஷன் அறைக்கு எங்கள் யாருக்கும் பரிச்சயமில்லாத ஒரு இளம் பெண் வந்து, வெளியே போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
அந்த வினோதமான அல்லது அபத்தமான சூழலை, நான்கு அரசூர் நாவல்கள் எழுதித் தீர்த்தபின் சாவகாசமாக ஒரு சிறுகதையாக எழுத உத்தேசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனை, அந்தக் காலத்தில் தானே எமர்ஜென்சி நடப்புக்கு வந்தது? எமர்ஜென்சி காலத்தில் நடப்பதாக ஒரு நாவல் எழுதினால் என்ன? 1975 நாவலின் எழுத்து மூலம் இதுதான்.
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. போத்தியைச் சுற்றிச் சுழலும் உலகத்தில் இன்னார் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றோ, இயக்கம் எல்லாம் தன்னையே மையமாகக் கொண்டு நிகழ வேண்டும் என்றோ விதி செய்ய அவனால் முடியாது. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.
Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.