புதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்

மயில் மார்க் குடைகள் இரா.முருகன்

எட்டு மணிக்கே வந்தாகி விட்டது. ரிகார்டிங்க் ஸ்டூடியோ என்று விலாசம் கொடுத்திருந்தாலும் அது குடியிருக்கும் வீட்டில் திரை போட்டு மறைத்த, சுவரில் பஞ்சு ஒட்டிய அறைதான். மரத்தடுப்புக்கு அப்பால் பழைய க்ரண்டிக் ஸ்பூல் டேப் ரெக்கார்டரை நடுநாயகமாக வைத்து ஒரு மேஜை இருந்தது. துருப் பிடித்த மைக் ஒன்று தடுப்புக்கு இப்பக்கம் தரையில் நின்றது. மூடி வைத்த ஜன்னல் விளிம்பில் பழைய தெலுங்கு செய்தித்தாள் தூசி படிந்து அடுக்கியிருந்தது. சத்தம் எழுப்பிக்கொண்டு ஒரு ஃபேன் வெப்பத்தைப் பரத்திச் சுழன்றது. ரிகார்டிங்கின்போது அதை நிறுத்தி விடுவதாக இருக்கும்.

திரை அசைந்தது. பின்னால் இருந்து நைட்டி அணிந்து மேலே பச்சைத் துண்டு போர்த்திய ஒரு பெண் எட்டிப் பார்த்து, “இருக்கச் சொன்னார்” என்றாள். பார்கவி தலையாட்டினாள்.

”வாங்க, குருநாதன் அனுப்பிச்சாரா?”,

திரையை விலக்கிக் கொண்டு வந்தவன் கட்டை குட்டையாக, இடுப்பில் நிஜாரும் மேலே ஈரமான குற்றாலத் துண்டுமாகத் தலை கலைந்து இருந்தான். சந்தன சோப் வாடை அவனிடமிருந்து அறை எங்கும் சூழ்ந்தது. குருநாதன் தான் அனுப்பி வைத்ததாகச் சொன்னாள் பார்கவி. மேலெழுந்து வந்த இருமலை ஜாக்கிரதையாக அடக்கிக் கொண்டாள் அவள்.

“வயலின்காரருக்குச் சொல்லியிருக்கேன். வந்துடுவாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சுடுதண்ணி தரச் சொல்லட்டா?”

அவன் தலையத் துவட்டியபடி கேட்க, “வேணாம் சார்” என்றாள். சார் என்று சொல்லக் கேட்டு, பார்கவி எதிர்பார்த்தபடி அவன் முகம் மலர்ந்தது. “சாயா எடுக்கச் சொல்லட்டா”, அவன் திரைக்கு அந்தப் பக்க உலகத்தைக் கை சுண்டியபடி கேட்க, வேண்டாம் என்று மறுபடி புன்னகையோடு தலையசைத்தாள் பார்கவி. குரல் கரகரவென்று பிசிறு தட்டினாற்போல் தோன்றவே, பைரவி ராக ஸ்வரஜதியை மெல்லிய குரலில் பாடிப் பார்த்தாள். தொண்டை சரியாகவுமாச்சு, எதிரிலே நிற்கிறவனுக்கு தான் பாடத் தெரிந்தவள் என்று காட்டியதுமாச்சு.

பார்கவி பாடிக் கொண்டிருந்தபோது உள்ளே இருந்து இடுப்பில் துணி ஏதுமின்றி ஓடி வந்த ஒரு இரண்டு வயசுப் பெண் குழந்தை ஓவென்று சத்தம் போட்டுத் தரையில் எதையோ விட்டெறிந்தது. பாதி சாப்பிட்ட பொம்மை பிஸ்கட் அது. பார்கவி நாற்காலியில் இருந்து மறுபடி எழுந்து குனிந்து அந்த பிஸ்கட்டை எடுத்தாள். யானை உருவத்தில் செய்து தும்பிக்கை வரை சாப்பிடப்பட்ட அதை பத்திரமாகக் குழந்தையிடம் நீட்டினாள். அது பயத்தோடு வாங்கிக் கொண்டு பிக்கி என்றபோது ஆமாம் என்று தலையாட்டினாள் பார்கவி. நைட்டிப் பெண் உள்ளே வந்து புன்னகையோடு குழந்தையை அள்ளிக் கொண்டாள். அவள் மேலே போர்த்தியிருந்த துண்டைத்தான் தலை துவட்டக் கொடுத்திருப்பாள் போல.

“ரொம்ப அடம். அடுத்த வருஷம் ஸ்கூல்லே போட்டுட வேண்டியதுதான் இப்பவே எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும். மாட்டாங்களாமே”.

அவள் சிநேகத்தோடு பார்கவியிடம் சொல்லிச் சிரித்தபடி தோளில் சுமந்த குழந்தையை முத்தமிட்டுக்கொண்டு திரும்பவும் உள்ளே போனாள்.

வாசலில் நிழல் தட்டியது. அரக்கு குர்த்தாவும் தழையத் தழையக் கட்டிய ஜரிகை மங்கின வேஷ்டியுமாக ஒருத்தர் சந்தேகத்தோடு சிரித்தார்.

“நீங்க பாடறவங்க இல்லியோ?”

பார்கவிக்கு சந்தோஷம். இன்னும் தன்னைப் பாடகியாகப் பார்க்க யாராவது இருக்கிற சந்தோஷம் அது.

“நான் அண்ணாஜி ராவ். வயலின், வேணு, வீணை”.

அப்படியா என்று புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டாள் அவள். மயில் மார்க் குடை விளம்பரத்துக்கு முழுக் கச்சேரியே செய்ய வேண்டி வருமோ. அவளால் பத்து நிமிஷத்துக்கு மேல் ஸ்ருதி கலையாமல் பாட முடியாது. இருமல் வந்து விடும்.

“வாங்க, உக்காருங்க”.

பார்கவிக்கும், வந்த மனுஷருக்கும் பொதுவாக கைகூப்பியபடி திரை விலக்கி மறுபடி வந்தவன் ஜிப்பா அணிந்து கையில் தலை துவட்டிய துண்டைப் பந்து போல் சுருட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். அங்கே ஒரே ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி மட்டும் தான் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த பார்கவி சங்கடத்தோடு இன்னொரு முறை எழுந்தாள்.

திரைக்குப் பின்னால் இருந்து வந்தவன் வந்த சுருக்கில் உள்ளே போய் ஒரு பத்தமடைப் பாயோடு திரும்பினான். அதை விரித்தபோது உள்ளே இருந்து மார்க்கச்சை ஒன்று உருண்டதைக் காலால் எற்றிக் குனிந்த தலையோடு திரைக்குப் பின் தள்ளிவிட்டுச் சொன்னான :

“ரெண்டே வரி ஸ்பாட் ஜாப்”.

“என்ன மாதிரி?”

வயலின்காரர் தான் கேட்டார் துடிப்பாக. பார்கவி அவருக்கு ஆதரவாக ஜிப்பாவாலாவை நோக்கினாள். அவன் பாயில் சம்மணம் கொட்டி உட்கார்ந்து பாடத் தொடங்கினான் –

“மயில் மார்க் குடைகளை வாங்கிப் பயன் படுத்துங்கள்”.

பேச லாயக்கான குரல் அது.

“இவ்வளவுதான், நீங்க ரெண்டு முறை பாடணும். கூடவே அவர் வயலின்லே வாசிக்கணும். மயில் மார்க்குனு ஆரம்பத்திலே மட்டும் வயலின் வரட்டும்”.

“இல்லே இல்லே முழுசும் நான் பக்கவாத்தியமா இருக்கேன். கேட்க நல்லா இருக்கும்”.

வயலின்காரர் சொன்னபடி பார்கவியைப் பார்க்க அவள் சும்மா சிரித்தாள். இந்த இரண்டு வரியைப் பாடத்தான் ஒரு எலக்ட்ரிக் ரயிலும், ரெண்டு டவுண் பஸ்ஸும் பிடித்து வந்திருக்கிறாள் அவள்.

“நீங்க ஒரு தடவை பாடுங்க”.

ஜிப்பாவாலா கேட்டுக்கொள்ள சின்னதாக சுவரம் இழுத்தாள் பார்கவி.

“இல்லே இதெல்லாம் வேணாம், ஸ்ட்ரெயிட்டா பாட்டுக்குப் போயிடுங்க”,

ஜிப்பா சொல்ல, வயலின்காரர் பதிலாகச் சொன்னார் –

“இப்படி ஆயத்தப் படுத்திக்கிட்டுதான் பாட முடியும். வயலினும் அப்படித்தான், ஒரு பிட் வாசிச்சுட்டு உள்ளாற போகணும்”.

“மயில் மார்க் குடைகளை வாங்கிப் பயன் படுத்துங்கள்”

அவள் பாட, ஜிப்பா நிறுத்தச் சொன்னான்.

“கடைசியிலே படுத்துங்கன்னு தனியா வருது. அர்த்தம் தப்பாயிடும். மாத்திடலாம்”

அப்படிச் சொன்னபடியே “மயில் மார்க் குடைகளை வாங்கி உப யோகியுங்கள்” என்று உப-வுக்கும் யோகியுங்கள்-என்பதற்கும் நடுவே இடைவெளி கொடுத்துப் பாடினான் ஜிப்பாவாலா.

அவன் பாடிய அதே மெட்டில் உற்சாகமாக வயலின்காரர் வாசிக்க, தன் வாழ்க்கையே மயில் மார்க் குடைகளில் இருப்பதாக உணர்ந்து, இருமலை அடக்கிக் கொண்டு குரல் உயர்த்திப் பாடினாள் பார்கவி.

“சரியா இருக்குm. பாட்டு ஆரம்பிச்சதும் வயலின் சேர்ந்துக்கிட்டா போதும். கொஞ்சம் தள்ளி உக்கார்ந்து வாசியுங்க”.

பார்கவிக்கு ஆசுவாசமாக இருந்தது. பாட்டு தான் முக்கியம் என்று புரிந்து கொள்ளப்பட்டதில் ஏற்பட்டது அது.

திரையை விலக்கி உள்ளே போனான் அவன்.

”வேலை ஆரம்பிக்கப் போவுது. யாரும் சத்தம் போடக்கூடாது”.

அவன் உரக்கச் சொல்ல பாப்பா கிக்கிக் என்றது. ஒரு கரண்டியோ பெரிய ஸ்பூனோ நங்க் என்று தரையில் விழுந்து அவசரமாக எடுக்கப்பட்டது. அவன் திரும்பினான்.

போகலாம் என்றான். ரெக்கார்டிங் போகச் சொல்வதாக உணர்ந்து பார்கவி, ‘மயில் மார்க் குடைகளை’ என்று உருக்கமான சஹானா ராகத்தில் பாடும் முகபாவத்தோடு பாட, ‘கெடக்கு விடுங்க’ என்று வயலில் கூடவே நுழைந்தது.

படபடவென்று வாசலில் இருந்து சத்தம். சரியாக வந்திருக்க வேண்டியதை யாரோ வீட்டு வாசல் கதவைத் தட்டிக் கெடுத்துப் போட்டார்கள்.

”கூரியர் சர்வீஸ் வந்தாலும் வந்தது. நாள் முழுக்க டெலிவரிக்கு வந்துடறாங்க” அவன் போய்ப் பார்த்து வந்து சொன்னான். இது சந்தோஷப்படவேண்டிய விஷயமில்லையா? ஏன் அலுப்பு? பார்கவிக்குப் புரியவில்லை.

“நம்ம வீட்டுக்கு இல்லே, அடுத்த வீட்டுக்கு வந்திருக்கு”.

அவன் திரையைப் பார்த்துச் சொன்னபடி கை காட்ட, காத்திருந்த பார்கவி, ‘மயில் மார்க்’ என்று பாடினாள்.

திடீரென்று டேப் ரிகார்டர் விளக்கு துடித்து மின்னி, ஒரேயடியாக அணைந்து போனது. ஊய் என்று அலறிச் சுழற்சி நிறுத்தி ரிகார்டர் ஓய்ந்தது.

“போச்சு, கரண்ட் கட்”.

அவன் சுவரை முஷ்டி மடக்கிக் குத்தியபடி அலுத்துக் கொண்டான். திரைக்கு அப்புறம் குழந்தை சிணுங்கியது.

“கரண்ட் போனா சாயந்திரத்துக்கு முந்தி திரும்பற பழக்கமே இல்லை”.

திரை விலக்கி எட்டிப் பார்த்தவள் சொன்னாள். இனி ரெக்கார்டிங் இருக்காது.

வயலின்காரர் பெட்டியில் வாத்தியத்தை வைத்துக் கைக்குட்டையால் துடைத்து மூட, பார்கவி எழுந்து நின்று ரெக்கார்டரைப் பார்த்தாள். மேலே ரெக்சின் உரையை அந்த யந்திரத்துக்கு அணிவித்தபடி இருந்தவனிடம் தணிந்த குரலில் பேச ஆரம்பித்தாள் அவள். வாசலுக்கு நடந்த வயலின்காரரும் நின்றார். அவருக்கும் பேச வேண்டியிருந்தது.

“ஜிங்கிள் முடிச்சுக் கொடுத்தாத்தான் அவங்க பணம் தருவாங்க. இப்போதைக்கு ஐம்பது ரூபா தான் இருக்கு. உங்களுக்கு முப்பது, இவருக்கு இருபது தரேன். நாளைக்கு வந்து முடிச்சுக் கொடுத்துடுங்க”.

வாசலில் செருப்புப் போட்டுக் கொள்ளும்போது குழந்தையோடு இருக்கும் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கலாம் என்று பார்கவிக்குத் தோன்றியது. மொபெட்டை வாசலுக்குக் குறுக்காக நிறுத்தி வைத்துக் கொண்டு வயலின்காரர் எதற்கோ காத்திருக்கிறார். பார்கவி திரும்ப உள்ளே போனால், வேறு ஏதோ சலுகை பெறப் போவதாக அவர் நினைக்கலாம்.

“ஃபேன் சுத்தலயா, பாப்பா எழுந்துடுச்சு. இப்பத்தான் தூங்க வச்சேன்”.

அந்தப் பெண் தான். வீறிட்டு அழும் குழந்தையை முதுகில் தட்டியபடி சுமந்து, வெளியே வந்து பார்கவிக்கு சிநேகமாகக் கையசைத்தாள். ஏதோ ஒரு விதத்தில் நிறைவாக இருந்தது பார்கவிக்கு. நாளைக்கு வரும்போது குழந்தைக்கு பொம்மை பிஸ்கட் வாங்கி வர வேண்டும்.

“அம்மா, மாடவீதி போறேன். நீங்க அந்தப் பக்கம் போறதுன்னா எறக்கி விட்டுடறேன்”.

வயலின்காரர் சொன்னார். பார்கவி புன்சிரித்தாள். எதிர்ப்படுகிற எல்லோரும் எப்போதும் அவள் தன்பாட்டுக்கு ஏதோ ஓரமாக மூச்சு விட்டு ஜீவிப்பதை மல்லுக்கட்டி எதிர்த்து நிற்பவர்கள் இல்லை.

”இல்லே, நான் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போறேன். தேங்க்ஸ் சார்”,

அவள் சிரித்தபடி மறுத்து விட்டு நடந்தாள். பார்கவி இதுவரை இரண்டு சக்கர வாகனம் எதிலும் பின்னால் உட்கார்ந்து வந்தது இல்லை. கால்தேய நடையும், நெரிசலோடு நகரும் பஸ்ஸுமாக அவள் நாட்கள் கடந்து போகின்றன.

போன வாரம் தான் இந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் அவள். வெள்ளிக்கிழமையும் சரஸ்வதி பூஜையும் சேர்ந்து வந்த பொழுது அது. ஸ்கூல் டீச்சராக இருந்து பென்ஷன் வாங்குகிற பார்கவிக்கு அதுவும் மற்ற தினம் போலத்தான். வேலையில் இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். மூன்று நாள் லீவு கிடைத்த பெரிய குழந்தைகளாக நகரமே உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தது அப்போது. இதோ இங்கே, கடைத்தெருவில் இந்த ஓரத்தில் தான் பூமாலை வாங்கியபடிக்கு பார்கவியிடம் பாட்டு சொல்லிக் கொண்ட பெண்ணும் அவள் அம்மாவும் அவளை நிறுத்தினார்கள். பள்ளிக்கூடத்தில் அவளிடம் படித்தவள் இல்லை அந்தப் பெண். ரிடையர் ஆனதும் பாட்டு ட்யூஷன் எடுத்தபோது அவள் வீட்டுக்குப் போய் பார்கவி சொல்லிக் கொடுத்தாள். பக்கத்தில் தான் வீடு.

ஏழு படியாகக் கொலு பொம்மைகளை நிறுத்தி வைத்திருந்த வீட்டுக் கூடத்தில் தான் முன்பெல்லாம் அந்தப் பெண்ணுக்கு பார்கவி பாட்டுச் சொல்லிக் கொடுத்தாள். அவளுக்கு அடுத்த மாதம் கல்யாணமாம். அகமதாபாத்தோடு போய் விடுவாளாம் அப்புறம்.

”அடுத்த நவராத்திரிக்கு நான் தனி தான்”.

அம்மா ஏக்கமும் சந்தோஷமுமாகச் சொல்லி பார்கவியைப் பாடச் சொன்னாள். அவள் தொடங்க அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டாள்.

“ராகி தந்தீரா ராகி தந்தீரா” என்று அந்தப் பெண்ணுக்குப் பிரியமான புரந்தரதாசர் தேவர்நாமாவை ரேவதி ராகத்தில் பாட ஆரம்பித்து யோக்யராகி, போக்யராகி, பாக்யவந்தராகி என்று அடுக்கி மேலே எடுத்துப் போக, பாழும் இருமல் வந்து தொலைத்தது. ஒரு வினாடி நிறுத்தி இருமித் தொடர்ந்தாள் பார்கவி. அடுத்த வரியில் மறுபடி பிசிறல். இன்னும் இருமல். அவள் ஒரேயடியாக நிறுத்தி சோகமாகக் கொலுப்படியைப் பார்க்க, அங்கே கச்சேரி செட் பொம்மைகளில் பாடகருக்குப் பதிலாக மளிகைக்கடைக்கார பொம்மை கண்ணில் பட்டது. மளிகைக்கடைக்காரா, நீ பாடுவியோ? பாடுவான். பார்கவியைத் தவிர எல்லோரும் பாடுவார்கள்.

அந்தப் பெண் உற்சாகமாக முழுக்கப் பாடி முடிக்க, தாளம் போட்டபடி இருந்தாள் பார்கவி. அவளுக்குப் பத்து ரூபாயும் தேங்காய் பழமும், பிரசாதப் பருப்பு வடையும், ஒரு டூ பை டூ ரவிக்கைத் துணியும் வைத்துப் பெண்ணின் அம்மா கொடுத்தபோது அந்தப் பெண் பார்கவி காலில் விழுந்து கும்பிட்டாள்.

“நல்லா இரும்மா, எங்கே போனாலும் பாட்டை விட்டுடாதே”.

கல்யாணம் ஆகப் போகிறவளை வாழ்த்தி விட்டு நடந்தாள் பார்கவி அப்போது.

ஆனால் ரிடையர் ஆன பிறகு பார்கவி குடிபோன குச்சில் பாட முடியாது. பென்ஷன் தொகை சம்பளத்தை விட குறைவு என்பதோடு அதில் பாதி ஆஸ்பத்திரிக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எல்லாச் செலவும் சேர்த்துக் கணக்குப் பார்க்க, இந்த இருப்பிடம் தான் சரிப்பட்டு வந்தது. வீட்டு ஓரமாக மனித மலம், விலங்குக் கழிவு, எலி, பெருச்சாளி, சாக்கடை இவற்றோடு இருக்க மாட்டோம் என்று சங்கீத மும்மூர்த்திகள் தம்புராவோடு கிளம்பிப் போய்விட்டார்கள்.

“சும்மா பொழுதன்னிக்கும் ததரினன்னான்னு ராகம் இழுத்துட்டிருக்காதீங்க. அண்டை அயல்லே பேஜாராவுது”.

யாரோ வந்து புகார் செய்து அவ்வப்போது இருமலுக்கு நடுவே அவள் பாடுவதையும் நிறுத்திப் போட்டார்கள். ‘மயில் மார்க் குடைகள்’ பாடினால் கேட்பார்களோ.

பாடிப்பாடி இனி வேண்டாம் என்று தீர்மானித்தது அதற்கும் முந்திய இருப்பிடத்தில். அங்கே இரண்டு பேராக இருந்தார்கள். அவரும் அவளும். பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் அவர். உடற்பயிற்சி டீச்சர் அவரோடு ஆந்திராவில் குண்டூருக்கு ஓடினாள். அவள் திரும்பவில்லை. வேறே உடற்பயிற்சி டீச்சர் கிடைக்க ஒரு வருடம் ஆனது.

அவர் திரும்பி வந்தபோது புத்தி பேதலித்து வந்தது பார்கவிக்குத்தான் கஷ்டமானது. வேலைக்குக் குளித்து விட்டுக் கிளம்பினால் பாய்ந்து வந்து இழுத்துத் தரையில் படுக்க வைப்பார். பாடச் சொல்வார். பாடும் போது மேலே விழுந்து, தூரம் நின்றுபோன இந்த வயதிலும் அவளோடு கூடுவார். பக்தியோடு பாட வேண்டியதை எல்லாம் அவள் உடம்பில் ஆக்கிரமிப்பை சகித்துக் கொண்டு பாடிப்பாடி இனி ஏன் பாட வேண்டும் என்று வெறுத்துப்போன சூழலில் தான் சித்தப் பிரமை முற்றி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

நகைக்கடை வைத்துக் கை நிறைய சம்பாதிக்கும் சமண நகை வியாபாரிகள் ஏற்படுத்திய மனநல மருத்துவ மனை அது. எண்பது சதவிகிதம் சிகிச்சை செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ள மீதி பார்கவிக்கு. பாதி பென்ஷன் அதற்குத்தான் போகிறது. வாரம் இரு முறை அவரைப் பார்க்கலாம். இன்றைக்கு பார்கவி பஸ் பிடித்து வந்தது மயில் மார்க் குடைக்கு மட்டுமில்லை. மனநல மருத்துவமனைக்குப் போகவும் தான்.

பார்கவி நின்றாள். ஆஸ்பத்திரிக்கு வந்தாயிற்று. அழுக்கு வெள்ளைச் சுவர்களும், பினாயில் நெடியோடு நீளும் ஈரத் தரையுமாக இருந்தது ஆஸ்பத்திரி. நிதானமாக நடந்து போய்க்கொண்டிருந்த செவிலியர்களும் ஒன்றிரண்டு டாக்டர்களும் முகத்தில் தீராத அலுப்போடு தென்பட்டார்கள்.

போன வாரம் வந்தபோது பார்த்த பெண் தான் வாசலில் இருந்தவள். சங்கடமாகச் சிரித்தாள் பார்கவி. போன வாரம் வந்தபோது அவர் சாந்தமாக இருந்தார். பாட்டு சொல்லிக் கொடுத்த வீட்டில் தந்த வடையை பார்கவி ஊட்ட,, ரசித்துச் சாப்பிட்டார் அப்போது.

’பிஸ்கட் வாங்கிட்டு வா’ என்றார். ’மேரி பிஸ்கட். அதுதான் வேணும்’.

’சரி, அடுத்த வாரம் வரும்போது வாங்கிட்டு வரேன். வேறே என்ன வேணும்’?

அவர் வாசலில் உட்கார்ந்திருந்த பெண்ணைக் காட்டி, ‘அவளை இங்கே வந்து படுக்கச் சொல்லு. நான் அவளை..”.

அவர் கெட்ட வார்த்தை சொல்லும்முன் பதறிப்போய் அவர் வாயைப் பொத்த முற்பட வெடுக்கென்று கடித்தபடி, ‘நீ பாடு அப்போ’ என்றார். அவசர அவசரமாக, சன்னமாகப் .பாடினாள்.

“ராகி தந்தீரா. பிக்ஷைகெ ராகி தந்தீரா
யோக்யராகீ போக்யராகி பாக்யவந்தராகி நீவு
ராகி தந்தீரா பிக்ஷைகெ ராகி தந்தீரா”.

இருமல் வரவில்லை அப்போது. ரேவதி ராகம் பாதியில் இருக்கத் தூங்கிப் போனார் அவர். அந்தப் பெண் காதில் பேச்சும் பாட்டும் விழுந்திருக்கலாம். அவள் தலை குனிந்தபடி இருந்தாள் திரும்பப் போகும்போது. ‘சாரி’ என்ற பார்கவியிடம் ‘பரவாயில்லை’ என்றாள் பெருந்தன்மையோடு அப்போது.

“வாங்க, நேத்து எதிர்பார்த்தேன்”, அந்தப் பெண் பார்கவியை வரவேற்றாள். நேற்று வரவில்லை. பென்ஷன் வாங்கி வர கருவூலம் போய்த் தாமதமாகி விட்டது. அதை எதற்கு இங்கே சொல்லணும்?

“நேத்து முழுக்க கண்ட்ரோல் செய்ய முடியாதபடி இருந்தார். ரூம் முழுக்க..” அவள் நிறுத்தினாள். “முழுக்க.. சாரி, கழிஞ்சு வச்சு ஒரே நாத்தம். நர்ஸ் எல்லாரும் அடிக்கவே போய்ட்டாங்க”.

அதிர்ந்து போய்ப் பார்த்தாள் பார்கவி.

“அடிக்க எல்லாம் மாட்டாங்க. சும்மா பயம் காட்டறதுதான். இன்னிக்கு கரெண்ட் வைக்கணும்னு சொல்லியிருந்தார் டாக்டர்”.

அவள் மறுபடி நிறுத்தினாள். பார்கவிக்குக் கண் கலங்கியது.

“எல்லாம் ஏற்பாடு செஞ்சா கரெண்ட் போயிடுத்து. செடேடிவ் கொடுத்து தூங்க வச்சிருக்கு”.

“இப்போ பார்க்க முடியாதா?”

ஏக்கத்தோடு கேட்டாள் பார்கவி.

“பார்க்கலாம் ஆனா சாயந்திரம் தான் கண் முழிப்பார். அப்பவும் வயலண்ட் ஆக இருந்தா…”.

கைப்பையில் இருந்து எடுத்த மேரி பிஸ்கட் பொட்டலத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள் பார்கவி. முப்பது ரூபாய் சுருட்டி வைத்திருந்ததில் இருபது ரூபாயையும் கொடுத்து, ‘அவருக்கு கோமணம் மாதிரி கட்டிவிட அடல்ட் டயாபர் வாங்க வச்சுக்குங்க” என்றாள்.

”அடுத்த வாரம் வரேன்”

பார்கவி தெருவில் நடக்கும்போது எதிர்ப்பட்டவர்கள் எல்லோரும் ‘மயில் மார்க் குடைகளை வாங்கி உப-யோகியுங்கள்” என்று பாடிக் கொண்டு போனார்கள். அவளுக்குப் பின்னால் பெரும் சத்தம். திரும்பிப் பார்க்க அந்த ஆஸ்பத்திரியே ‘மயில் மார்க் குடைகளை” என்று பாடிக் கொண்டு இருந்தது.

இரா.முருகன்
(இந்தச் சிறுகதை சற்றே சுருங்கிய வடிவத்தில் 22.04.2018 காமதேனு வார இதழில் வெளியாகியுள்ளது)

ஓவியம் :நன்றி – பாலசுப்பிரமணியன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன